Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Minnalin Kathire - 1

  • Thread Author
மின்னலின் கதிரே – அத்தியாயம் 1​

புலரும் காலை பொழுது! சிங்கார சென்னையின் வீடுகளில் பாலும் செய்தித்தாளும் போடப்பட்டு, சூரியன் மெதுவாக மேலேழும்பி வரும் நேரம். ஆனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகளில் இன்னமும் விடியவில்லை.

எப்படி விடியும்? வாரம் முழுக்க ஓடி அலைந்த எல்லோரும் காத்திருக்கும் ஞாயிற்றுக்கிழமை ஆயிற்றே. அப்போதும் ஒரு சில வீடுகளில், காலை சிற்றுண்டி மணம் வர தொடங்கிற்று. அப்படி ஒரு வீடு தான் ராஜனின் வீடு!

அவர் இங்கே குடிபெயர்ந்து மாதம் ஒன்றிற்க்கும் மேலே ஆயிற்று. நல்ல விசாலமான அடுக்குமாடி குடியிருப்பு தான். எல்லா வகையான வசதிகளும் கொண்ட கேட்டட் கம்யூனிட்டி அடுக்குமாடி அது. அங்கே வீடு வாங்குவதே பெரிய விஷயம் தான். ஆனால், ராஜன் வாங்கியதோ தன் நண்பனின் இரண்டாம் கை மாற்றலாக வந்த மூன்று படுக்கையறை கொண்ட வீட்டை.

மூன்று படுக்கையறை முறையே அவரின் தந்தை நடேசனுக்கு, அவருக்கும் அவரின் மனைவி கவிதாவிற்க்கும் மற்றும் அவரின் மகள் கொடிமலருக்கும். இவரின் வீட்டில் இவர்கள் நால்வர் தாம்.

இப்போழுதோ ராஜன் அவரின் வீட்டின் சமையலறையின் உள்ளே தக்காளி சட்னி தாளித்துக் கொண்டிருந்தார். இட்லி ஒரு பக்கம் வெந்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அவரின் மனைவி கவிதா உள்ளே நுழைந்து, “என்ன பண்றீங்க? தக்காளி சட்னியா? சரி தள்ளுங்க, நான் செய்யறேன்.” என்று சொன்னார்.

“நான் தான் நேத்தே சொன்னனே, காலையில டிபன் நான் செய்யறேன், மதியம் சாப்பாடு நீ செய்னு. நீ காபி கலந்து குடி, நான் பார்த்துக்கறேன்” என்று ராஜனின் கூறுவதை ஆமோதிப்பது போல் கவிதாவும் தனக்கு காபி கலக்கத் துவங்கினார். அவருக்கு தெரியும், இதற்க்கு மேலும் கணவனிடம் பேசி தான் டிபன் செய்ய முடியாது என.

அவர் காபி கலக்கும் போது, கொடிமலர் சமையல் அறையின் நுழைவாயிலில் நின்று, “என்ன டிபன் இன்னிக்கு? இட்லியா?” என்று அப்பாவிடம் கேட்க, அவரோ “ஆமாம்டா, தக்காளி சட்னி தொட்டுக்க.” என்று பதிலளித்தார்.

“சரிப்பா, அம்மா காபி எனக்கும் கலங்கமா, நான் குடிச்சிட்டு கீழ கிளாஸ்க்கு போறேன். வந்து டிபன் சாப்பிடறேன்.” மலர் சொல்லியதை கேட்டு அவளுக்கும் சேர்த்து காபி கலக்கினார் கவிதா.

அம்மாவும் மகளும் காபி குடித்து முடிக்கும் போது, ஹால் சோபாவில் வந்து உட்கார்ந்த நடேசன் டிவியில் ஒடிக் கொண்டிருந்த செய்தியில் கவனத்தை செலுத்தினார்.

மாமனாரை பார்த்தவுடன் அவருக்கும் தன் கணவருக்கும் காலை சிற்றுண்டி எடுத்துக் கொண்டு சென்றார் கவிதா. அவர்கள் இருவரும் சாப்பிடும் போது, தன் அலைப்பேசியை கையில் எடுத்து மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.

“நேத்து நைட்டு தூக்கம் வரலை அப்போ மேட்டிரிமோனி ஆப்ல பார்த்துட்டு இருந்தேன். இந்த பையன் கொஞ்சம் செட் ஆகுற மாதிரி தோணுது. சாப்பிட்டுட்டு பாருங்க.”

மருமகளின் பேச்சை கேட்டு, “பையன் என்ன நட்சத்திரம், ராசிமா?” என்று வினவினார்.

“பூசம் நட்சத்திரம், கடகம் ராசி மாமா”

“அது இவ ராசிக்கு ஒத்து வராதேமா…. பொருத்தம் இருக்காது.”

நடேசன் சொன்னதை கேட்டு, “தாத்தா எப்போ நீங்க ஜோசியர் ஆனீங்க?” என்று குறிக்கிட்டாள் மலர்.

“இதுக்கு ஜோசியம் எல்லாம் தெரிய வேணாம். கையிலயே வெச்சுட்டு இருக்கியே ஃபோன், அதுல போட்டாலே எல்லாமே வந்துடுது. கவிமா, இதுக்குன்னு தனி ஆப் எல்லாம் இருக்கு. நீயும் யூஸ் பண்ணு, இவளுக்கு பொருந்துற ராசி நட்சத்திரம் தெரிஞ்சிடும்.”

நடேசன் சொன்னதை கேட்டு சோர்ந்து போனார் கவிதா. மனைவியின் முகத்தை கண்ட ராஜன், “விடு, இந்த பையன் இல்லனா என்ன? பார்க்கலாம், எந்த பையன் வரான்னு. அவனும் கொஞ்ச நாள் ஜாலியா இருக்கட்டும்.” என்று மனைவியிடம் ஆரம்பித்து மகளிடம் வேடிக்கையாக முடித்தார்.

“ரொம்ப பெரிய காமெடி! நாளைக்கு சிரிக்கறேன் நைனா.”

மகளின் விளிப்பில் உதட்டில் தானாக முறுவல் பூக்க, கண்களோ தன் மகளின் முக பாவனைகளை ஆராய்ந்தது, சங்கடமோ சோகமோ தென்படுகிறதா என. அப்படி ஒன்றும் தெரியவில்லை தான். இருந்தாலும் தந்தை ஆகிற்றே! “நீ எதுவும் ஃபீல் பண்றியா மினுமா?” என்று வினவினார்.

“சே இல்லப்பா, உங்களுக்கு தெரியாதா? எனக்கு எப்போ நடக்கனும்னு இருக்கோ அப்போ நடக்கும். விடுங்க, அது வரைக்கும் உங்க கூட ஜாலியா இருந்துட்டு போறேன்.”

மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு நேர்மாறாக வார்த்தைகள் வெளியே வந்தன. அவளும் சாதாரண பெண் தானே? கல்யாண கனவுகளில் இருந்து தப்ப அவள் மட்டும் என்ன விதிவிலக்கா?

ஆனால், அதை எதையும் இவள் பெற்றவர்களிடம் சொல்ல முடியாது. சொன்னால், ஏற்கனவே இருக்கும் அவர்கள் படும் துக்கத்தில், தன் பங்கை ஏற்றி வைத்தார் போன்று ஆகிவிடும். ஏனவே அதை மறைக்கும் பொருட்டு, “எனக்கு கிளாஸ்க்கு டைமாச்சு. நான் கிளம்பறேன்.” என மலர் கூறிவிட்டு எழுந்து தன் அறைக்குள் சென்றாள்.

‘இந்த பொண்ணுக்கு எப்போ தான் நல்ல காலம் வருமோ?’ ராஜன் மனதிற்க்குள் நினைத்ததை தன் வாய் வழியாக கூறினார் அவர் மனைவி. “எப்போ தாங்க இவளுக்கு ஒரு நல்ல காரியம் நடக்கும்?”

“கவி நம்மளும் பார்த்துட்டு தான் இருக்கோம். எல்லார் கிட்டயும் சொல்லி தேடிட்டே இருக்கோம். ஏதோ ஒரு காரணத்துல தள்ளி போயிட்டே இருக்கு. அது நல்ல காரணமாகவே இருக்கும்னு நம்புவோம். கூடிய சீக்கிரம் நல்லது நடக்கும்.”

அத்துடன் தன் பேச்சு முடிந்தது என அவரும் எழுந்து கை கழுவினார்.

சிறிது நேரத்திலேயே தன் ஸூம்பா கிளாஸ்க்கு தயாராகி வந்த மலர் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு விடைப்பெற, ராஜனும் “சிக்கனா மட்டனா கவி, சொன்னினா போயிட்டு வாங்கிட்டு வந்துடுவேன்.” என்று தன் மனைவியிடம் கேட்டார்.

“உங்க பொண்ணு தான் ஏதோ சிக்கன் தம் பிரியாணி செய்யப் போறேன்னு சொல்லிட்டு இருந்தா, சிக்கனே வாங்கிட்டு வந்துருங்க” என்று பதிலளித்து வாங்க வேண்டிய பொருட்களை எழுதி கொடுக்க, “சரி அப்போ நானும் கிளம்பறேன்.” என்று ராஜனும் கிளம்பினார்.

வெளியே செல்ல வீட்டை விட்டு வந்தாலும், மனம் அதன் போக்கில் சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தது. பெண்ணிற்க்கு இருபத்தியாறு அகவை முடிந்தாயிற்று. கடந்த மூன்று வருடங்களாக மாப்பிள்ளை பார்க்கின்றனர். அதுவும் கடந்த ஒரு வருடமாக முழு வீச்சாக தேடினாலும், எந்த மாப்பிள்ளையும் பொருந்தவில்லை.

ராஜன் ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தில் முதன்மை மேலாளாராக பணியாற்றினார். இந்த வருடம் தான் வீட்டினரின் அதீத வற்புறுத்தலில் விருப்ப ஓய்வு பெற்றார். அவரின் வயதிற்கேற்ற உடல் உபாதைகளே முழு காரணம்.

ஓய்வு பணமும் இத்தனை ஆண்ட் கால சேமிப்பும் கொண்டு தான், இந்த ஐந்து வருட பழைய அடுக்குமாடி குடியிருப்பை நண்பனிடமிருந்து நல்ல விலைக்கு வாங்கினார். அவரின் மனைவி கவிதா பக்கத்தில் இருக்கும் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியை. பெண்ணை அவளின் விருப்பம் போல் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இஞ்சினியரிங் படிக்க வைத்து, அவளும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறாள்.

எல்லாம் சரி தான், ஆனால் மகளை விட சிறிய பெண்களுக்கு திருமணம் முடிகையில் ஒரு தகப்பனாக, ரொம்பவே மனம் தோய்ந்து போவதை தடுக்கத்தான் முடியவில்லை!

மகளுக்கு கல்யாணம் ஆகவில்லை என ஒரு கவலையில் இருக்கும் இவருக்கு, கல்யாணம் ஆனால் பல கவலைகள் வரும் என யார் சொல்லுவது?

*************************************************************************************

சென்னையின் மற்றுமொறு வீட்டில் யாரும் இருக்கிறார்களா, என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு நிசப்தம் குடியிருந்தது. அதை கலைக்கும் வண்ணம் ஒலிப்பெருக்கியில் பீறிட்டது ‘கந்த சஷ்டி கவசம்’!

அது பொருக்காதது போல் சடசடவென வந்து பாடல் ஒலித்த ஒலிப்பெருக்கியை அணைத்தார் சுகுமாரன். எள்ளும் கொள்ளும் வெடித்தது அவர் முகத்தில்! அவர் முகம் மட்டுமா அப்படி இருந்தது? அதற்க்கு சற்றும் குறையாமல் கடுகடுவென முகத்தில் கோபம் தாண்டவமாட அவரின் மனைவி மாலதி மீண்டும் அந்த ஒலிப்பெருக்கியை இயக்கினார்.

சுகுமாரனால் இப்போழுது பேசாமல் இருக்க முடியவில்லை.

“எப்போவும் காலையில சாமி பாட்டு தான ஓடுது? இல்லனா டிவில ராசி பலன்! இன்னிக்கு ஞாயித்திக்கிழமை தான? வேற ஏதாவது நல்லதா நான் போடலாம்னு இருக்கேன்.”

“சாமி பாட்டை விட வேற என்ன நல்லதா இருக்க போகுது?”

கணவரை ஏறெடுத்தும் பார்க்காமல் மீண்டும் ஒலித்த சஷ்டி கவத்தை கேட்டுக் கொண்டே நகர்ந்தார் மாலதி.

இப்போது கோபம் கடலளவு கரையை கடந்தது சுகுமாரனுக்கு. ‘சொல்லிட்டே இருக்கேன், எப்படி போறாப்பாரு!’ வந்த கோபத்தில் ஒலிப்பெருக்கியை அணைத்து விட்டு கையோடு தன் அறைக்கும் எடுத்துச் சென்றார் சுகுமாரன்.

அவ்வளவு தான்! சமையலறையில் இருந்து வெளியே வந்த மாலதி, உச்ச சத்தத்தில் தன் கணவரை வசைப்பாட துவங்கினார். மாலதியின் குரலை கேட்டு முதலில் வந்தது அவரின் புதல்வன் கதிரவன் தான்.

அப்போழுது தான் எழுந்து பல் விளக்கிவிட்டு, தன் அறையில் இருந்து வெளியே வந்தான். பார்த்தால் அம்மா இப்படி கத்திக் கொண்டிருந்தார். ‘என்னாச்சு ஏன் கத்துறாங்க?’ அவன் யோசித்து முடிப்பதற்க்குள் அவன் அப்பாவும் சேர்த்து அவன் அம்மாவிடம் வாக்குவாதத்தை வெற்றிகரமாக துவங்கினார்.

“என்னம்மா பிரச்சனை?” என்று தன் அம்மாவிடம் கேட்க, அவர் குற்றப்பத்திரிகையை வாசிக்க துவங்கினார்.

“என்னப்பா சஷ்டி கவசம் எப்போவும் போடுறது தான? நீங்க ஏன் ஸ்பீக்கர் ஆப் பண்றீங்க?” வழக்கம் போல் தன் அன்னைக்கு ஆதரவாக பேசிய மகனை கோபமும் விரக்த்தியும் கலந்து பார்த்தார் சுகுமாரன்.

“நீ எப்போடா எனக்காக பேசிருக்க! எப்போவும் அம்மா சொல்றது, பண்றது தான உனக்கு நியாயம்? இந்த வீட்டுல நான் ஏன் இருக்கேன்னு எனக்கே தெரியில….”

வலியுடன் வார்த்தைகள் வந்த வேகத்தில் மீண்டும் அந்த ஒலிப்பெருக்கியை எடுத்து வந்து ஹாலில் வைத்து தன் அறைக்குள் சென்றார் சுகுமாரன். கதிருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

தன் அன்னையிடம் திரும்பி, “ஏன்மா ஒரு நாள் அப்பா ஏதோ போட்டு கேக்கட்டுமே, அவரும் என்ன குத்து பாட்டா போட போறாரு? பழைய இளையராஜா மெலடீஸ் தான கேப்பாரு!” என்று ஆற்றலுடன் கேட்டான்.

“காலையில என்னடா இளையராஜா பாட்டு கேக்குறது, சாமிப்பாட்டு கேட்டா தான் எனக்கு நாள் நல்லபடியா போகும்!”

திட்டவட்டமாக பேசிய தாயை எதுவும் கூற முடியாமல், தன் தந்தையிடம் பேச தன் அறைக்கு சென்றான். அதில் தான் அவன் தந்தையுடன் வசிக்கிறான்.

மூன்று படுக்கையறை கொண்ட அந்த வீட்டில், ஓர் அறையில் தந்தை சுகுமாரனும் அவனும், ஓர் அறையில் அவன் தாய் மாலதியும் அவன் தங்கை வென்னிலாவும் தங்குகிறார்கள்.

தந்தையிடம் பேச அவன் அறைக்கு செல்லும் போது தான், தங்கை வென்னிலா அவளின் அறை வாசலில் நின்று நடப்பதை ஒரு ஆற்றாமையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான்.

“ஹே நீ எப்போ எழுந்த?” சூழலை இலகுவாக்க கேட்டான் கதிரவன்.

“அம்மாவும் அப்பாவும் கத்தும் போதே எழுந்திட்டேன்.” தன் விரக்தியை பார்த்து அண்ணன் பேச துவங்கியதும், “என்ன, நீ ஏன் ஃபீல் பண்றென்னு கேக்கப் போற அது தான? எப்போவும் எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு போக முடியாது, அப்பப்போ மனசுன்னு ஒன்னு இருக்குல அது வலிக்கும்! உனக்கு எப்படியோ என்னால விட்டுட்டு போக முடியாது!” என்று தானே பேசி முடித்தாள் வென்னிலா.

பேசியதும் நேராக தன் தந்தையிடம் சென்றாள் வென்னிலா. ‘இந்த வீட்டுல அவருக்காக பேச யாரு இருக்கா?’

எபோழுதும் தோன்றும் எண்ணம் மேலோங்கியது. தன் தந்தையை விட்டு கொடுத்ததில்லை வென்னிலா! உள்ளே சென்றவள் கண்டது தலை வாரியப்படி வெளியே செல்ல கிளம்பிய தந்ததையை தான்.

“அப்பா வெளிய போறீங்களா?” மகளின் பக்கம் திரும்பிய சுகுமாரன், “ஆமாம்டா, இன்னிக்கு மீட்டிங் இருக்கு. அதான் சீக்கிரமே கிளம்பறேன்.” என்று பதிலுரைத்தார்.

“சாப்பிட்டீங்களாப்பா?” ஒற்றை வார்த்தை தான்… ஆனால், அந்த வளர்ந்த முதிர்ச்சியடைந்த ஆணின் மனம் இளகி கண்களில் நீர் கோர்த்தது!

மகளை நேருக்கு நேர் சந்திக்காமல், “இல்லம்மா, நான் வந்து சாப்பிட்டுக்கறேன்.” என்றார். மகளின் மனமோ அவரின் மனதை துல்லியமாக படிக்க, “நான் உப்புமா செய்யறேன்பா, பத்து நிமிஷம் தான். சாப்பிட்டு போங்க. மீட்டிங் முடிஞ்சு வர ரொம்ப லேட் ஆகும்.” என்று பதிலளித்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள் வென்னிலா.

அங்கே இருந்த தன் அன்னையை கண்டுக்காமல், வெங்காயம் எடுத்த வென்னிலாவை பார்த்து, “எதுக்குடி இப்போ வெங்காயம் எடுக்குற?” என்று மாலதி வினவினார்.

“உப்புமா செய்யப் போறேன்.” வெங்காயம் நறுக்கியப்படியே நறுக்கென பதிலளித்த மகளை முறைத்து, ”நான் இப்போ பூரி உருளைக்கிழங்கு செய்யலாம்னு மாவு பிசையறேன். இப்போ எதுக்கு உப்புமா செய்யற?” என்று கேள்வியாக கேட்டார்.

“அப்பா மீட்டிங் போறாரு, அவரு சாப்பிட்டனும் சீக்கிரமா, அதுக்கு தான்.”

“மீட்டிங் போறாரா? என்கிட்ட சொல்லவே இல்ல! நேத்தே சொல்லி இருந்தா நான் சீக்கிரமா எழுந்து செஞ்சுருப்பேன்ல?”

“அம்மா ப்ளீஸ்! அவரு இப்போ உங்க கூட சண்ட வேணாம்னு தான் சீக்கிரமா மீட்டிங்கே போறாரு, இல்லனா பத்து மணி மீட்டிங்க்கு ஏன் இவ்ளோ சீக்கிரம் கிளம்பனும்? ப்ளீஸ்மா, இதோட விடுங்க.”

“அப்போ நான் தான் சண்டக்காரி இந்த வீட்டுல, இல்ல?! நீ எப்போவும் உங்கப்பாக்கு தான் சப்போர்ட் பண்ணுவ.”

“சரி அப்படியே வெச்சுக்கோங்க, இப்போ நான் உப்புமா செய்யறேன். அப்புறமா என்னை திட்டிக்கோங்க.”

வென்னிலா அமைதியாக உப்புமா கிளரத் துவங்க, அவளின் தாயோ மேலும் எதுவும் பேச முடியாமல் போக, அவர்களின் குடும்பத்தை பற்றி பார்க்கலாம்.

தந்தை சுகுமாரன் அறுபது வயதை போன வருடம் தான் கடந்தார். மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி மாலதி இல்லத்தரசி! மீனாட்சி ஆட்சியாக குடும்பத்தை வழி நடத்த வேண்டும் என நினைப்பவர்.

கணவரோ குடும்பத்தில் சிதம்பர ஆட்சிக் கோளுண்ற நினைக்க, இருவருக்கும் எப்போழுதும் ஏழாம் பொருத்தமே! மகன் கதிரவன் எம்.பி.ஏ முடித்து, ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்க, மகள் வென்னிலாவோ தன் அண்ணனை பின் தொடர்ந்து தானும் முதுநிலை படிப்பை முடித்து, வேலை தேடிக் கொண்டிருந்தாள்.

தமயனுக்கும் தங்கைக்கும் எட்டு வயது வித்தியாசம்! அதனால், எப்போதும் அவனை ‘அண்ணா’ என்றே விழிப்பாள். இருவரும் நெக்குறுகும் பாசமலர்கள் இல்லையென்றாலும் கூட, மனதால் எப்போதும் ஒன்றுப்பட்டவர்களே.

அதுவும் தங்களின் பெற்றோர்களின் பொருத்தமற்ற திருமணத்தில் பெரிதும் பாதிக்கப்டுவது இவர்களாயிற்றே! அதனால், எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பர். அதனை நிருப்பிக்கும் பொருட்டு ஏதாவது ஒரு சண்டை வந்துக் கொண்டே இருக்கும் அவ்வீட்டில்!

இப்போதும் உப்புமாவை கின்டி தன் தந்தையை சாப்பிட வைத்தவளை, கதிர் அமைதியாக பார்த்து, “நீ மட்டுமில்லனா இன்னிக்கு ஒரு மூன்றாவது உலகப் போர் வந்துருக்கும்.” என்று சொல்ல, “சன்டே அதுவுமா சண்ட போடாம இவங்களால முடியாது!” என்று புன்னகையுடன் பதிலளித்தாள் வென்னிலா.

தன் பிள்ளைகள் பேசிக் கொள்வதை ஓரக்கண்ணால் பார்த்து சாப்பிட்டு முடித்த சுகுமாரன், “உப்புமா நல்லா இருந்துச்சுமா” என்று கூறி தட்டை சமையைலறையில் வைக்கச் சென்றார். அங்கே வந்த மாலதிக்கோ ஆற்றாமையாகி போனது.

“இதே நான் உப்புமா பண்ணா ஒண்ணும் சொல்லாம போனாக் கூட பரவாயில்ல. ஏதாவது குறை சொல்லிட்டு போவாரு!” தன்னிடம் தாய் கூறியதை கேட்டு எதுவும் பேசாமல், அறைக்குச் சென்று சட்டையை மாற்றி வந்தான் கதிரவன்.

தன் மகனும் வெளியே செல்ல கிளம்பியதை பார்த்து கேள்வியாக நோக்கிய சுகுமாரனிடம். “ஜிம்முக்கு போறேன்பா” என்று பதிலளித்தான் கதிர். தலையசைத்தபடியே வீட்டிலிருந்து வெளியேறினார் சுகுமாரன்.

மகன் சொன்னதை கேட்டு, “டிபன் சாப்பிட்டு போடா” என்று கூறிய மாலதியை சலிப்பாக நோக்கிய கதிரவன், “எது பூரி உருளைக்கிழங்கா? ஏன் அத சாப்பிட்டுட்டு, ஜிம் போய் புஷ் அப் கூட பண்ண முடியாம போறதுக்கா? என்னை கெடுக்கறதே நீங்க தான்மா.” என்று பொங்கினான் மகன்.

“உனக்கென்னடா கொஞ்சம் தான் பூசினாப்புல இருக்க. இதுக்கே ஜிம்முக்கு போறேன், இத சாப்பிட மாட்டேன், அத சாப்பிட மாட்டேன்னு சொல்ற!”

“ஆமா, அப்படியே நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னா விட்ருவீங்க பாருங்க….”

சலித்துக்கொண்டே தன் உடலை குனிந்து பார்த்தான் கதிரவன். மாலதி சொன்னதை போல அவன் பூசினாற்ப்போல் இல்லை, குண்டாகவே இருந்தான். அவனின் ஐய்ந்தே முக்கால் அடி உயரத்தையும் மீறி அவனின் உடல் எடை நன்றாகத் தெரிந்தது.

வீட்டில் அவன் மட்டுமல்ல அவனின் தங்கையும் உடல் எடை கூடித்தான் இருந்தாள். இவர்களின் அம்மாவும் அப்படியே இருந்ததால், தாயை போல் பிள்ளை என்று இருந்தனர். வென்னிலா குழந்தையில் இருந்தே பூசினாற்போல் தான் இருப்பாள்.

ஆனால், கதிர் எடை கூடியதோ அவனின் பதின் வயதிலிருந்து தான். இப்போது சில வருடங்களாக தான் உடல் எடை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றத் துவங்கியது.

அதிலும் பாதி நாட்கள் அவன் தாய் இப்படி பூரியை சுட்டு, இவன் உணவு கட்டுப்பாட்டை புஸ்பமாக்கி விடுவார்.

இதெல்லாம் மனதில் ஓடியபடியே, ஜிம்மிற்க்கு கிளம்பினான் கதிரவன்.

******************************************************************************************

அந்த பெரிய அறையில் பேச்சுக்குரலுக்கு பஞ்சமில்லை! ஒரே நேரத்தில் பலத்தரப்பட்ட குரல்கள் கேட்க சில பேர் தன் இருக்கையை விட்டு எழுந்து கத்தி பேசினர். அப்போது தானே மற்றவர்களை விட தான் பேசுவது, இல்லை இல்லை கத்துவது நன்றாக கேட்கும்? அப்போது ஓர் குரல் முதன்மையாக ஒலித்தது.

“ஒவ்வொருத்தரா பேசினாத் தான் என்னன்னு புரிஞ்சுக்க முடியும். ப்ளீஸ், பொறுமையா உங்க டேர்ன் வரும் போது பேசுங்க.”

அதன்பின், ஒவ்வொருத்தராக பேச அதில் கேட்ட சில குரல்கள் கீழே வருபவை.

“போன வாரம் பேஞ்ச மழையில செடி மரமெல்லாம் விழுந்துடுச்சு, அதையேல்லாம் சரி பண்ணனும்.”

“ஆமா, இங்க மழையில ஜெனரேட்டர் பொர்க் ஆகாம எவ்வளோ கஷ்டப்பட்டோம். அது தான் முக்கியமா இப்ப பார்க்கனும்.”

“இது வருஷா வருஷம் நடக்கிறது தான்! இப்போ நியூ இயருக்கு ரெண்டு வாரம் தான் இருக்கு, அதுக்கு யூத் கமிட்டில என்ன பிளான் இருக்குன்னு சொல்லுங்க.”

“ஆமா, இந்த தடவ எல்லாமே சின்ன பசங்க பார்த்துக்கறேன்னு சொல்றாங்க. என்ன பண்ண போறாங்கன்னு சொல்லுங்க. அப்போ தான் வீட்டுல இருந்து கூட்டிட்டு வரர்தா இல்லயான்னு முடிவு பண்ணனும்!”

இப்படி ஒலித்த பல குரல்களுக்கு நடுவே சுகுமாரன் கொஞ்சமல்ல ரொம்பவே தடுமாறி தான் போனார். ஆபத்தாந்தவனாய் அஸோஸியேஷன் தலைவர் உள்ளே புகுந்து அனைவரையும் சமாதானப்படுத்தினார். வழக்கம் போல், எந்த ஒரு பெரிய முடிவும் எடுக்கப்படாமலே வெறும் விவாதம் மட்டும் நடந்து அந்த கூட்டம் கலைந்தது.

எல்லோரும் கலைந்து சென்றதும் நாற்காலிகளை எடுத்து அடுக்கிய சுகுமாரனிடம் வந்தார் ராஜன்.

“ஹலோ சார், என் பேர் ராஜன். பி பிளாக் ஃபிளாட் 14ல குடி வந்துருக்கேன்.”

கை குலுக்க நீட்டிய கைகளை பற்றிய சுகுமாரன், “ஹோ அப்படியா, என்னோட பேர் சுகுமாரன். இந்த அப்பார்ட்மெண்ட் துணை தலைவரா இருக்கேன். நான் டி பிளாக் ஃபிளாட் 27ல இருக்கேன்.” என்று தன்னை அறிமுகத்தினார்.

“உங்களை பத்தி கேள்விப்பட்டேன் சார். ரொம்ப நல்ல மாதிரின்னு சொன்னாங்க, அதான் ஒரு ஹலோ சொல்லலாம்னு வந்தேன்.”

“தாங்க்ஸ் சார். இங்க எப்போ குடி வந்தீங்க?”

“நான் வந்து ஒரு மாசம் மேல ஆச்சு சார்.” தங்களின் அறிமுகப்படலத்தை தொடர்ந்து தங்களின் குடும்ப உறுப்பினர்களை பற்றியும் மேலோட்டமாக பேசத் துவங்கினர் ராஜனும் சுகுமாரனும்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்தது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ‘சமூகக் கூடம்/கம்யூனிட்டி ஹால்’. சிறு விழாக்களும், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அஸோஸியேஷன் கலந்துரையாடல்களும் நடக்குமிடம்.

அந்த ஹாலில் இருந்து வெளியே வந்தால், எல்லாவிதமான பொழுதுபோக்கு வசதிகளும் கொண்ட ‘ரீக்ரியேஷன் செண்டர்/பொழுதுப்போக்கு கூடம்’ வரும். அங்கே இருந்த ஜிம்மில் தன் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்தான் கதிரவன். சரியாக அந்த நேரம் ஒரு நிகழ்வை எதிர்பார்த்து நடந்தவனுக்கு, அது கிடைக்க கண்கள் பூத்து மலர்ந்தன அவனுக்கு.

இவன் முகமலர்ச்சியை நன்றாகவே கவனிக்கப்பட்டது மறுபக்கம். என்ன அங்கே பெரிதாக எந்த மலர்ச்சியும் காணவில்லை! ஒரு வேளை முகமும் அதன் பாவனைகளும் மறைக்கப்பட்டதோ? அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை கதிர். அலைப்பேசியில் நண்பனிடம் பேசிக் கொணடே நடந்த வண்ணம் சில பார்வைகளை மட்டும் பரிமாரிய வண்ணம் இருந்தான்.

இதையெல்லாம் மறுப்புறம் இருந்த கொடிமலர் ஒரு விதமான யோசனையுடனே கவனித்தாள்.

‘இவன் நம்மல தான் பார்க்கறானா? அப்படினா, ஏன் கிட்ட வந்து பேசல? எவ்வளோ நாள் இப்படி பார்த்துட்டே இருப்பான். இல்ல, நம்ம தான் சும்மா பார்க்குறதை, வேற மாதிரி நினைச்சுக்குறோமோ? ஹ்ம்ம்ம், கத்திரிக்கா முத்துனா கடத்தெருவுல வந்து தான் ஆகனும். பார்ப்போம், இந்த குண்டு கத்திரிக்கா எப்போ முத்துத்துன்னு!’

முகத்தில் இவை எதையும் காட்டாமல், கதிரை ஓர் பார்வை பார்த்துச் சென்றாள் மலர். அவளை பொறுத்தவரை அது பார்வை, கதிரை பொறுத்தவரை அது முறைப்பு!!!
 
Top