Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளை....5

  • Thread Author
அத்தியாயம்…5

கிரிதரனுக்கும் ஜெய சுதாவுக்கும் இன்றைக்கும் அன்றைய நாள் நினைவு இருக்கிறது.. அதை மறக்க முடியுமா…? தன் கணவர் ராஜ சுந்தர மாறனை பற்றி அனைத்தும் சொன்னார் தான்.

தன்னை படிக்க வைத்தது அவர் தான் .. அவருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்று நல்ல மாதிரியாக சொன்னதில்…

கணவன் நான் முதலில் செல்கிறேன்… அவர் கிட்ட சொல்லாம.. அவர் கிட்ட சொல்லாம நாம கல்யாணம் செய்து கொண்டதில் அவர் கொஞ்சம் பேச கூடும்…” என்று சொன்ன போது கூட ஜெய சுதா..

“பெரியவங்க பேசினா பேசட்டும் ங்க.. நாம நம் நிலை பற்றி சொல்லலாம்.. என் தூரத்து சொந்தத்தில் என்னை கல்யாணம் செய்துக்க.. அதுவும் என் இந்த வேலைக்காகவே செய்துக்க நெருக்கடி கொடுத்தாங்க. மிரட்டினாங்க…. நான் ஊருக்கு போனா ஏதாவது செய்ய போறாங்க என்று தான்.. ட்ரையினிங் முடிச்சிட்டு இரண்டு பேருக்கும் சென்னையில் போஸ்ட்டிங்க என்று தெரிந்த உடன் அங்கேயே ஒரு கோயிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டோம் என்று சொன்னால் அவர் புரிஞ்சிப்பாரு…” என்று சொல்லி கணவனோடு சென்றது..

பாவம் இருவருக்கும் தெரியவில்லை…

அந்த வீட்டின் திட்டம். திட்டம் மட்டுமா… ஜெய மாறன் இன்று கிரி வந்தாலும் வர கூடும் என்று சொன்னதில் வைஜெயந்தி.. என்னவோ மகளை கிரிதரனுக்கு திருமணம் முடித்து விட்டு.. இந்த வீட்டு மாப்பிள்ளையாக வருவது போல… வந்தால் சட்டென்று என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை சமையல் செய்யும் பெண்மணியிடம் சொல்லி அனைத்தும் தயார் நிலையில் இருந்த சமயத்தில் தான்.

நான் மாப்பிள்ளை தான்.. ஆனால் நான் இந்த வீட்டு மாப்பிள்ளை இல்லை என்பதை போல கிரிதரன் ஜெயசுதாவோடு வந்தது.. பார்த்தவர்களுக்கு புரிந்து விட்டது..

புரிந்த விசயம் அத்தனை உவப்பானதாக இல்லை… ஏன் தங்களை பார்த்து இத்தனை அதிர்ச்சி என்று யோசிக்கும் போது தான் ராஜ சுந்தர மாறன்.

“என் பெண் சாரதாவை கல்யாணம் செய்து கொள் கிரி….” என்று சொன்னது.. அன்று சுந்தர மாறன் பேச்சில் கிரிதரன் ஜெயசுதா மட்டும் இல்லை… மாறன் குடும்பத்தினரே அதிர்ந்து தான் விட்டனர்.. இது என்ன பேச்சு என்பது போல்..

ஆனால் சுந்தர மாறன். இது தான் என் பேச்சு என்பது போல்…. ஜெயசுதாவை காட்டி… “ கவலை படாதே இந்த பெண்ணை மொத்தமா விலக்கி வைக்க சொல்லலே… நீ வேறு இந்த பெண்ணுக்கு யாரும் இல்ல என்று சொல்ற.. இந்த பெண்ணும் இருக்கட்டும்..” என்று சொன்ன நொடி கிரிதரனாவது படிக்க வைத்தார் என்ற விசுவாசத்தில் இவர்கள் மனது நோகாது எப்படி மறுப்பது என்று யோசித்து நின்றது..

ஆனால் ஜெய சுதாவுக்கு அது எல்லாம் இல்லை தானே.. பேசி விட்டார்…

“ஆமா ஆமா உங்களுக்கு ஒன்று இல்லை ஒன்பது கூட கல்யாணம் பண்ணிக்கலாம்… ஆனா பாருங்க ஒன்று இருக்கும் போது இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்தா.. அந்த மனைவி இல்லீகல் தான்…” என்று சொன்ன அந்த வார்த்தை அந்த வீட்டு மூத்த பெண்மணி வைஜெயந்தியையும் சேர்த்து தாக்கியது..

அதோடு படித்த கலை முகத்தில் இருக்க.. வேலை கொடுத்த நிமிர்வோடு பேசிய ஜெய சுதாவின் அன்றைய பேச்சு இன்று வரை இது எல்லாம் என்ன குடும்பத்து பெண் என்று தான் மாறன் குடும்பத்தினர் பேசிக் கொண்டு உள்ளனர்….

இன்றும் ராஜ சுந்தர மாறன் அதை வைத்து தான் கிரிதரனை பேசியது.. அம்மா போல தானே பெண் இருப்பா.. அம்மா என் பெண் வாழ்க்கையை தட்டி பரித்தால், இன்று அவள் பெண் என் பேத்தி வாழ்க்கையை தட்டி பரித்து இருக்கா.. என்று..

இந்த விசயம் எல்லாம் ஸ்வர்ணாம்பிகைக்கு புதியது தானே… அவளுக்கு தூரத்து உறவு என்ற அளவில் மட்டும் தான் மாறன் குடும்பத்தை பற்றி பெண்ணவளுக்கு தெரியும்.. இது என்ன பழைய கதையில் புதிய விசயம் என்று நினைத்து யோசித்து கொண்டு இருக்கும் போதே..

அங்கு இருந்த ஒரு இளம் பெண்… அந்த பெண்ணை காட்டி… “ இந்த பெண்ணை தான் என் பேரனுக்கு கட்ட இருந்தேன்…” என்று சொன்னவரின் பேச்சில் ஸ்வர்ணாம்பிகையின் பார்வை சுந்தர மாறன் காட்டிய பெண் பக்கம் பார்த்தது..

உண்மையில் அந்த பெண் இந்த மாறன் குடும்பத்து பெண் தானா என்று சந்தேகிக்கும் படியாக தான் அவளின் தோற்றம் இருந்தது. நகை அணிந்து நல்ல உடை தான் அந்த பெண் உடுத்திக் கொண்டு இருந்தது..ஆனால் தோற்றம்.. கண்டிப்பாக ஐந்து அடி கூட வளர்த்தி கிடையாது…

அதோடு ஒல்லியாக நிறம்.. அது கூட பிரச்சனை கிடையாது.. ஆனால் இவர்கள் மயூரா என்று கை காட்டிய பெண்…இந்த குடும்பத்திற்க்கு ஒத்து இல்லை…அதற்க்கு காரணம் அந்த பெண் அவள் அப்பா சுபாஷ் போலவே இருந்தது தான். அவருமே ஏதோ போல் தான் தெரிந்தார்..

இப்படியான இரு குடும்பத்திற்க்குள் பிரச்சனை இருக்கும் என்று ஸ்வர்ணாம்பிக்கை நினைக்கவில்லை.. ஆனால் வெற்றி மாறனுக்கு அனைத்தும் தெரிந்து இருந்தது போல்…

“ம் இதுக்கு தான் நான் சீக்கிரம் கல்யாணம் செய்துக்க சொன்னேன்…” என்று வேறு விளக்கினான்..

இப்போது தான் ஸ்வர்ணாம்பிகைக்கு அனைத்தும் புரிந்தது… ஏன் முதன் முதலில் தான் கிரிதரனின் மகள் என்றதும் வெற்றி மாறனின் முகம் அப்படி மாறியது என்று.. புரிந்த விசயம் பெண்ணவளுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை…

கூடவே தன் வீட்டவர்கள் ஏன் தன் காதலுக்கு அத்தனை எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதும் பெண்ணவளுக்கு புரிந்தது… அனைத்திற்க்கும் சுதந்திரம் கொடுத்தவர்கள் இந்த காதலுக்கு மட்டும் ஏன் எதிர்த்தார்கள் என்று நான் யோசித்து இருக்க வேண்டும் என்றும் தான்… ஆனால் தெரிந்தது அனைத்துமே காலம் கடந்து தானே.

அதுவும் தன் முன் வெற்றி மாறனின் அப்பா தன் அம்மாவை பற்றி அத்தனை இழிவாக பேசியதை கேட்டு இவள் ஏதோ வாய் திறக்கும் முன்..

தன் கை பிடித்து தடுத்து நிறுத்திய வெற்றி மாறன்.. “ கோல்ட்.. நீ எதுவும் பேசாதே… தாத்தா கோபத்தில் பேசுறார்… நீ அமைதியா இரு…” என்று அடக்கி பேசியதில் பெண்ணவள் அதிர்ந்து விட்டாள்..

“நாம இரண்டு பேரும் தான் தெரியாம கல்யாணம் செய்தோம்.. எங்க வீட்டு ஆளுங்களுக்கும் கோபம் இருக்கும் தானே… அப்போ என் அப்பா அம்மா இது போல உங்க வீட்டு ஆளுங்களை பேசினா நீங்க சும்மா இருப்பிங்கலா.” என்று இவள் கேட்ட போது..

“பேச சொல்லு.. உங்க அப்பா அம்மாவை பேச சொல்…” என்று வெற்றி மாறன் சொல்ல. பெண்ணவள் திரும்பி தன் வீட்டவர்களை பார்த்த போது அவள் கவனித்தது இதை தான்..

தாத்தா பேசிய அத்தனை பேச்சுக்கும் தன் அம்மா அப்பா மட்டும் அல்லாது அண்ணன் விக்னேஷ் கூட அமைதியாக நின்று இருந்ததை தான்..

அதில் தன் அப்பாவிடம்.. “ டாட்..” என்று அவர் கை பிடிக்க போன போது தன் கை பிடிக்காது ஒதுங்கி நின்று கொள்ள..

அவளின் தாயோ அவளை ஒரு பார்வை பார்த்தது அவ்வளவு தான்… அண்ணன் விக்னேஷுமே அப்படி ஒரு பார்வை அவ்வளவு தான். புரிந்து விட்டது மூன்று பேருமே வீட்டில் ஏதோ பேசி முடிவு செய்து கொண்டு தான் இங்கு வந்து இருக்கிறார்கள் என்று..

வெற்றி மாறன் திரும்பவுமே… “ உங்க அப்பா அம்மாவுக்கு எங்க தாத்தாவை எதிர்த்து பேச முடியாது கோல்ட். அவருக்குமே கொஞ்சம் குற்றவுணர்ச்சி இருக்கும் தானே…” என்றவனின் பேச்சில் பெண்ணவள்.

“உங்களுக்கு தான் எல்லா விசயமும் தெரிஞ்சி இருக்கு தானே.. நாம மேரஜ் செய்து கொண்டா. பிரச்சனை தான் என்று.. அப்போ ஏன் விடாது காதல் சொல்லி என்னை கல்யாணம் செய்து கொண்டிங்க…?” என்று பெண்ணவள் மூக்கு விடைய கோபத்துடன் கணவனிடம் கேட்டு கொண்டு இருக்கும் போதே ஒரு விசயம் மண்டையில் உரைக்க.

அதில் கொஞ்சம் பயத்துடன் தான். “ ஒரு வேல.. இந்த பழி வாங்க அது போல….?” என்று திக்கி திணறி கேட்க.

வெற்றி மாறனோ… “எனக்கு என் லைப் ரொம்ப முக்கியம் கோல்ட்… பழி வாங்க எல்லாம் மேரஜ் செய்தா என் வாழ்க்கையும் தானே பாழா போகும்… ம் சொல்லு…?” என்று கேட்டவன்..

பின்… “எனக்கு தெரியும் எல்லாமே தெரியும்.. என் தாத்தாவுக்கு மட்டும் இல்ல… எங்க வீட்டவங்களுக்குமே உன் அப்பா அம்மா மேல அத்தனை கோபம் இருக்குன்னு எனக்கு தெரியும் தான்..

ஆனால் தெரிந்தும் உன்னை நான் மேரஜ் செய்துக்குறேன் என்றால்… எனக்கு உன்னை அந்த அளவுக்கு பிடிக்கும் கோல்ட்.. புரியுதா…. வீணா பயந்துக்காதே…” என்று சொன்ன வெற்றி மாறனின் பேச்சு உண்மை தான்.

அவனுக்கு தெரியும் தான்.. ஸ்வர்ணாம்பிகையை காதலித்தால் இரண்டு வீட்டவர்களிலும் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும்..

அதனால் தான் ஸ்வர்ணாம்பிகையை இத்தனை விரைந்து அவன் திருமணம் செய்து கொண்டது.. அதோடு பெண்ணவளுக்கு தங்கள் இரு வீட்டாரின் விரோதம் தெரியவில்லை என்பதும்.. தெரிந்தால் தயங்க கூடும் என்பது தெரிந்து தான்… இப்படி அவசர கதியில் அவளை திருமணம் செய்து கொண்டது…

ஆனால் இப்போது உன்னை நான் பழிவாங்க திருமணம் செய்யவில்லை என்று சொல்பவனின் ஒரு சில செயலே பெண்ணவளை பழி வாங்க கூடும் என்பதும். பின் நாளில் இருவரின் பிரிவுக்கும் காரணமாக அமைந்து விடும் என்பதும் உணராது இன்று பேசினான்…

ஸ்வர்ணாம்பிக்கைக்கு இப்போதே கணவனின் பேச்சு அவ்வளவு பிடித்தமானதாக இல்லை… அதோடு தாங்கள் இருவரும் இப்படி பேசுவதை பார்த்த வெற்றி மாறனின் சின்ன பாட்டி( அதாவது ராஜ சுந்தர மாறனின் இரண்டாவது மனைவி…)

“இப்படி ரகசியம் பேசி தான் எங்க வீட்டு பையனை மயக்கி வெச்சிட்டா போல. இந்த சூட்சுமம் எல்லாம் எங்க வீட்டு பெண்களுக்கு தெரியாதுடியம்மா…. ஏன்னா எங்க வீட்டு பெண்களை வளர்த்த அம்மாங்களுக்கே அந்த விதரனை எல்லாம் தெரியாது… ” என்றவரின் பேச்சு தன்னை மட்டும் கிடையாது தன் அன்னையையும் சேர்த்து தான் என்பது அவரின் பார்வை தன் அன்னையின் பக்கம் சென்று தன்னை பார்த்ததில் தெரிந்தது..

அதில் தன் அன்னை ஒரு பார்வை பார்க்க. பெண்ணவளோ கணவனை தான் பார்த்தது அவன் ஏதாவது பேசுவான் என்று..

ஆனால் அவனோ… சொன்னது இது தான். “ அவங்க கோபமா இருக்காங்க கோல்ட்… ஒரு சமயம் அத்தை வாழ்க்கை நல்லப்படியா இருந்து இருந்தா… உங்க அப்பா செய்ததை மறந்து இருக்க கூடும்.. ஆனால் அத்தை வாழ்க்கை அத்தனை சீராக இல்லை கோல்ட். நீ கொஞ்ச நாளுக்கு அமைதியா இரு… போக போக எல்லாம் சரியாகி விடும்” என்று சொன்னவன் எத்தனை நாளில் சரியாகி விடும் என்று மட்டும் சொல்லவில்லை..

அதை அவன் சொல்லி இருந்தாலுமே அதை மண்டையில் ஏற்றிக் கொண்டு இருந்து இருப்பாளோ என்னவோ.. காரணம் அவளின் பார்வை மொத்தமும்.. தன் வீட்டவர்கள் மீது தான் இருந்தது..

ஏன் இவர்கள் இத்தனை பேச்சுக்கும் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது தான் அவளுக்கு புரியவில்லை.. அப்பாவை படிக்க வைத்ததிற்க்காக அவர்கள் என்ன சொன்னாலும் செய்ய முடியுமா என்ன..? இவளே அனைவரின் முன்னும் அன்னையின் கை பிடித்து..

“மாம் ப்ளீஸ் என்னை மன்னிச்சிக்கோங்க.. எனக்கு இது எல்லாம் தெரியாது மாம்.. அதோட உங்களை இப்படி மரியாதை குறைவா நடத்துவாங்க என்று நான் நினைக்கல,,,, சாரி மாம்…” என்று சொன்னவளிடம்.

அந்த அன்னை ஒன்றே ஒன்று தான் சொன்னது…. “ இன்னுமே எங்களுக்கு பிரச்சனை வர கூடாது என்று நினச்சா.. இன்னுமே நாங்க ஊர் உறவு முன்னாடி அவமானப்பட கூடாது என்று நீ நினச்சா… உனக்கு அங்கு எந்த பிரச்சனை வந்தாலும் வாழ். அவ்வளவு தான் நான் சொல்லுவேன். உன் அண்ணனுக்கு முடிவான இடம் முறிஞ்சி போயிடுச்சி.. இனி அவனுக்கு வேறு ஒரு இடத்தை தான் பார்க்கனும்.. அவன் வாழ்க்கை பற்றி அக்கறை இருந்தா…. அங்கு பார்த்து நடந்துக்க…” என்று அன்னை சொல்லி கொண்டு இருந்த போதே ஸ்வர்ணாம்பிகை அதிர்ந்து போய் தன் அண்ணனை பார்த்தாள்..

அந்த இடம் முடிவு ஆனதில் இருந்து.. அண்ணன் முகமே அத்தனை மகிழ்ச்சியில் திளைத்தது. அதோடு தினம் பேசியில் பேசுகிறார்கள் என்பதும் வார நாட்களில் வெளியில் செல்கிறார்கள் என்பதும் அவளுக்கு தெரியும். பின் என்ன காரணம்.. என்று யோசித்தவள் பின் ஏதோ தோன்ற…

“மாம் அவங்க சொன்ன இடத்தில் நான் மேரஜ் செய்யாததா.?” என்று பெண்ணவள் அதிர்வுடன் கேட்க.

ஆனால் அவளின் அன்னையோ அதை விட அதிர்வான பதிலாக.. இல்லை என்று தலையாட்டியவர் பின்…

“மாறன் குடும்பத்தை பகைச்சிக்க அவங்க தயாரா இல்லை…” என்ற அந்த சொல்லில் அவளின் கண்கள் விரிந்து தன் அன்னை தந்தை தன் அண்ணன் மூன்று பேரையும் பார்த்தது..

பின் அன்னை எந்த காரணம் தொட்டும் அங்கு வாழாது வந்து விடாதே என்று சொன்ன காரணமும் அவளுக்கு புரிந்தது…








 
Top