Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ராமருக்கு ஒரு நியாயம், சீதைக்கு ஒரு நியாயமோ?

Active member
Staff member
Joined
Apr 22, 2024
Messages
115
ராமாயணம் – ஓர் புராணக் காவியம். மஹாபாரதத்திற்கு நிகராக போற்றப்படுகிறது இன்றளவும். பல முறை மேடை நாடகங்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் நாம் அதை ரசித்திருக்கிறோம்.

இந்த வருட துவக்கத்தில் ஹிந்தி மொழியில் ‘ராமாயணா’ என்ற பெயரில் இப்பூராணத்தை திரைப்படமாக எடுக்க இருப்பதாக செய்திகளில் வாசித்தேன். சமீபமாக ‘ஆதிபுருஷ்’ என்ற மகா காவியத்தை(!) எடுத்த அதே பாலிவுட் மீண்டும் இந்த புராணக்கதையை ஏன் எடுக்க வேண்டும் என தோன்றியது. சரி அது அவர்கள் பாடு, மிகையாக பணம் செழிக்கிறது… அவர்கள் செலவழிக்க, அதை திரையரங்குளில் பார்க்க வட இந்தியர்களும் தயாராக இருக்கிறார்கள் போல என்று இதை கடந்தேன்.

நான் முதலில் திகைத்தது ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ராமராக நடிக்கயிருப்பதை கேள்விப்பட்டு தான். முதலில் நம்பவில்லை, அடுத்த சில தினங்களாக இதே செய்தி வந்ததும் தான் இது உண்மை என்று தெரிந்தது.

நான் ஒன்றும் ரன்பீர் கபூரின் எதிர்ப்பாளர் இல்லை. அவர் நடித்த பல படங்களை பார்த்திருக்கிறேன். ‘பர்ஃபி’ எனக்கு மிகவும் படம், அவரின் நடிப்பும் அதில் மிகவும் பிடிக்கும்! நான் திகைக்க காரணம் ரன்பீர் கபூரின் நடிப்பை நினைத்தல்ல. இதே போல், 2011 நயன்தாரா சீதையாக வேடமிட்டு நடித்த ‘ஸ்ரீ ராம ராஜியம்’ என்ற தெலுங்கு படத்திற்கு வந்த பிரச்சனைகளை நினைத்து.

அப்போது நயந்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து, அவர் சீதையாக நடிக்க தகுதியற்றவர் என்று முத்திரை குத்தப்பட்டு, பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திரைப்பட ஷீட்டிங்கில் சிலபல பிரச்சனை வந்ததாக செய்திகள் படித்தும், கல்லூரியில் அதைப் பற்றி சக தோழிகளிடம் பேசிய நினைவுகளும் வந்து சென்றன என் மனதில்!

நயன்தாராவிற்கே இந்த நிலைமை என்றால், பாலிவுட்டின் முடி சூடா காதல் பிளேபாய் ரன்பீர் கபூருக்கு வரப் போகும் பிரச்சனைகளை நினைத்து இந்த படம் எடுத்தார் போல தான் என்று தோன்றியது! முதலில் எப்படி அவரை ராமராக மக்கள் மனதில் ஏற்றுக் கொள்வார்கள் என்று இயக்குனர் நம்பினார் என திகைத்தேன். ஆனால், நடந்ததோ முற்றிலும் வேறு!

ஷுட்டிங் ஒழுங்காக ஆரம்பித்தது மற்றும்மின்றி அதையொட்டி சில புகைப்படங்கள் கசிந்த போதும் எவ்வித சலனமும்மில்லை! ஒரு குரல்? ஒரு பதிவு? ஹூஹும் இல்லவே இல்லை!

யாரும் ரன்பீர் கபூர் எப்படி ராமராக நடிக்கலாம் என கேட்கவில்லை!

நான் இதில் நயன்தாராவை உயர்வாக வைத்தோ, ரன்பீர் கபூரை குறைவாக மதிப்பிட்டோ சொல்லவில்லை. திரையில் இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவரவருக்கு…

ஆனால், இங்கு நிலவும் ஆண், பெண் பேதம் சில சமயம் நாம் இருபத்தியொராம் நூற்றாண்டில் தான் இருக்கிறோமா என எண்ணும் அளவுக்கு இருக்கிறது! சீதையாக நடிக்க நயன்தாராவுக்கு தகுதியில்லையென்றால், ரன்பீர் கபூரும் ராமராக நடிக்க தகுதியற்றவர் தானே? ரன்பீர் கபூரை ஏகப்பத்தினி விரதன் – ராமராக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என ஒரு அமைப்பு கூட சொல்லவில்லை ஏன்? சீதையை போன்று ராமரும் புனிதமானவர் தானே?

ராமருக்கு ஒரு நியாயம் சீதைக்கு ஒரு நியாயமாக இருக்கிறது நம் நாட்டில்!!
ramayana_img2.jpg

மற்றும் ஒரு விஷயம் எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. இதே ‘ராமாயணா’ படத்தில் முதலில் சீதையாக நடிக்க இருந்தது, ரன்பீர் கபூரின் மனைவி – ஆலியா பட். நிஜ வாழ்க்கை கணவன் மனைவி, ராமர்-சீதையாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாக செய்திகள் கசிந்தன.

ஆலியா பட் - பாலிவுட்டின் விரல் விட்டு சொல்ல கூடிய மிகச் சிறந்த நடிகை! ஆனால், அவர் நீக்கப்பட்டு, கிளாமராக நடிக்காமல், புடவை மய்யமாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது நடிக்கிறார்.

ஹிந்தியில் எடுக்கும் இப்படத்தில் ஆலியா பட்டே சிறந்த தேர்வாக இருக்கும் போது ஏன் அவர் நீக்கப்பட்டார்? ஏன்னென்றால், அவர் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்து குழந்தை உண்டாகி, பின் திருமணம் செய்துக் கொண்டவர். நிஜ வாழ்க்கையில், அவருக்கு சாய் பல்லவி போன்று ‘ஹோம்லி’ கேரக்டர் இல்லை! தன் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பழைய காதல் முதற்கொண்டு வெளிப்படையாக இருப்பவர். அவருக்கு ‘கங்குபாய்’ கேரக்டர் தான் பொருந்தும் போலும், என நினைத்து மாற்றப்பட்டிருக்கலாம்.

எனக்கு இன்னும் ஓர் பெரிய அதிர்ச்சி, என்னை போன்று பல பேருக்கு தோன்றலாம். சிலருக்கு ஒவ்வாமை கூட தோன்றலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி பல நூறு கோடிகள் முதலீடு செய்து ரன்பீர் கபூரை ராமராக நிலை நிறுத்திகின்றனர். எந்த நம்பிக்கையில் இது நடக்கிறது என்றால், ஹீரோவாக இருந்தால் அவர் திருமணம் முன்/பின் பலப் பெண்களுடன் தொடர்பில் அல்லது காதலில் இருக்கலாம். அது பிரச்சனை ஆகாது. ஏன்னென்றால் அவன் ஆண் மகன்! அவனே ஹீரோ.

அதே ஒரு கதாநாயகி ஒரு திரைப்படத்திற்காக ஒரு கிளாமரான வேஷத்தில் நடித்தால் கூட அவள் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் என பேசுபவர்கள் தானே இங்கே உள்ளார்கள்…

இங்கே நடிகர்களை வெறும் நடிகர்களாக மட்டும் பார்க்கும் கலாச்சாரம் நம் ஊரில் இல்லை. அதையும் மீறி ஒரு இமேஜ் அவர்கள் மேல் வைக்கப்படுகிறது. அது ஒழிந்தாலும், இங்கே நடக்கும் ஆண் பெண் பேதம் மாற எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியவில்லை! சில ஆண்டுகளாக தான் திருமணம் ஆகியும் ஹீரோயின் நடிக்கலாம் என்ற சுழ்நிலை வந்திருக்கிறது. அதுவே பெரிய விஷயமாக இருக்கிறது!

மொத்ததில், இதிலிருந்து ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒன்றே ஒன்று தான். இங்கு நடக்கும் ஆண்/பெண் பேதத்தில் கடவுளும் விதிவிலக்கல்ல, அவரும் நம் போன்று ஒரு சாதாரண பெண்ணே!!!!
 
Last edited:

Author: Sinduja
Article Title: ராமருக்கு ஒரு நியாயம், சீதைக்கு ஒரு நியாயமோ?
Source URL: Kathaiaruvi-https://kathaiaruvi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top