அத்தியாயம் - 16
ப்ரியங்கா அப்படி அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனை, ராம் என்று சொல்லலாம்… கிருஷ்ணன் என்றும் கூப்பிடலாம்… இல்லையென்றால், ராமகிருஷ்ணன் என்றும் நீட்டி முழக்கி கூப்பிடலாம்!
அவள் தன் கண்களை அகல விரித்து, பார்த்துக் கொண்டிருந்த வேளை, ராஜீவ் கவுதமிற்க்கு மொபைலில் அழைப்பு விடுத்தான். சுருக்கமாக தான் இருக்கும் இடத்தை கூறி, உடனே வரும்படி ஆணையிட்டான். அதற்க்குள், ராஜீவ்வின் உதவியாளர் மற்றும் ட்ரைவர் பார்ர்க்கின் உள்ளே வரவும், மேலும் காக்கி உடையை பார்த்த ராம்மின் ஆட்டிகள், பின் பக்க வழியில் அங்கிருந்து தப்பித்தனர்.
அவர்களை விரட்டி, ராஜீவ்வின் ட்ரைவர் காரில் விரைந்தார்…. கவுதமும் சற்று அருகிலேயே இருந்ததால், உடனே வந்துவிட்டான். துப்பாக்கி சுடும் சத்தம் நின்றதும், ப்ரியங்காவை கூட கவனிக்காமல், ராஜீவ் அந்த கேமரா மேன்னிடம் ஓடினான்.
பார்த்தால், கேமரா மேன் வலியில் துடித்துக் கொண்டிருந்தான்…. அவனுடன் பணிபுரிபவர்கள் அவனை தூக்க முயன்றனர். ராஜீவ்வும் அவர்களுக்கு உதவினான். கேமரா மேனை கவுதம் வந்த காரில் ஏற்றியவுடன், கவுதமை அழைத்தான்.
“நான் இவங்க கூட ஹாஸ்பெட்டல் போறேன் கவுதம். இங்க நிலைமை இன்னும் மோசமா, ஆகாம பார்த்துக்கோ… எதுவா இருந்தாலும் உடனே எனக்கு கால் பண்ணு!! ஓகே?”
“ஓகே சார்… நீங்க பார்த்துப் போங்க!” ராஜீவ் காரின் பக்கம் திரும்பிய வேளை, ப்ரியங்கா அங்கே ஒரு ஓரமாக நிற்பதை பார்த்து, அவளிடம் சென்று, “இன்னும் இங்க எதுக்கு நின்னிட்டு இருக்க?? வீட்டுக்கு கிளம்பு முதல்ல! நேரா வீட்டுக்கு போ!” என்று கடின முற்ற குரலில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.
அத்துடன் காரில் ஏறும் முன் தொகுப்பாளினி நதியா அவனிடம் வந்து, “சார், நான் ஆபிஸுக்கு போய், இங்க நடந்ததை பத்தி சொல்லனும்… சோ, உங்க கூட இவர் வருவாரு.” கேமரா மேனுக்கு உதவியாளாக வந்தவனை கை காட்டினாள். ராஜீவ் ‘ஓகே’ என்று கூறி, காரில் ஹாஸ்பெட்டலை நோக்கி பறந்தான்….
ஹாஸ்பெட்டலில் கேமரா மேனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவனின் குடும்பத்தாருக்கு மொபைலில் அழைத்து விஷயத்தை கூறினர். அவர்களும் உடனே கிளம்பி வருவதாகவும், அது வரை பார்த்துக் கொள்ளும்படியும் சொல்லினர்.
ராஜீவ்விற்க்கு மிகவும் டென்ஷனாக இருந்தது. இன்னும் கமிஷனரிடம் சொல்லவில்லை. என்னவென்று சொல்ல முடியும்? தான் பார்க்குக்கு ட்யூட்டி டைமில் சென்றதையா? அல்லது யாரோ முகம் அறியாதவர்கள் என்னை அங்கே சுட முயன்றனர் என்றா?
“ஏன் தான் அங்க போனேன்னோ??” அவன் தன்னை தானே திட்டிக் கொண்டிருந்த சமயத்தில், கவுதம் கால் செய்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறி, கேமரா மேனுக்கு எப்படி இருக்கிறது என்றும் விசாரித்தான்.
அவனை பற்றி டாக்டர்கள் இன்னும் ஒன்றும் கூறவில்லை, என்று பதிலளித்துவிட்டு, தான் திரும்ப கால் செய்வதாக உறுதி அளித்து தொலைப்பேசியை வைத்தான் ராஜீவ்.
டாக்டர்களும் சிறிது நேரத்தில், குண்டு அகற்றப்பட்டது என்றும், கேமரா மேன் இப்போது நலமாக இருப்பதாகவும் கூறினர். அப்போது தான் நிம்மதியாக மூச்சுவிட்டான் ராஜீவ். என்ன தான் இருந்தாலும், உயிர் சமந்தபட்டது ஆகிற்றே… அப்படி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று இருக்க அவன் என்ன அசால்ட் ஆறுமுகமா?
இல்லையே!! ராஜீவ்… அதனாலேயே பயத்துடன் இருந்தான். நிம்மதி மூச்சு விட்ட வேளை, அடுத்த ஆப்பு தொலைப்பேசியின் வாயிலாக வந்தது! சென்னை மாநகரத்தின் கமிஷ்னர் தினகரனின் நம்பரை பார்த்த நிமிடம் ராஜீவ்விற்க்கு விளங்கிற்று.
விஷயம் அவருக்கு தெரிந்து விட்டது என… அழைப்பை எடுத்தால், உடனே கமிஷ்னர் அலுவகத்திற்க்கு வர வேண்டி ஆணையிட்டு, இல்லை இல்லை ஒரு மாதிரியான திட்டும் குரலில் மிரட்டிவிட்டு போனை வைத்தார் தினகரன்!
‘ஐய்யோ!!!’ என்று வந்தது ராஜீவ்விற்க்கு. அலுவகத்தை நோக்கி அவன் சென்று கொண்டிருந்த வேளை, ‘கண்ணா இது எல்லாம் சும்மா ட்ரைலியர் தான்! மெயின் ஆப்பு, பின்னாடி வருதுடா!!!’ என்று விதி தன் கோர பற்களை காட்டி சிரித்தது!!!
************************************சேனல் அலுவகம்*******************************************
நதியா உடனடியாக தன் அலுவகத்திற்க்கு சென்று, தன் மேலாளரிடம் அனைத்தையும் ஒப்பித்தாள். மேலாளர் அவருடைய மேலாளரை அனுகவும் விஷயம் பெரிதாகியது. நதியா அவரிடமும் மறுபடியும் படம் ஓட்டிவிட்டு, கடைசியாக கேமரா மேன் ஷூட் செய்ததை அவர்களிடம் காட்டினாள்.
அங்கே தான் ராஜீவ்வும் ப்ரியங்காவும் சிக்கினர். அதில் ப்ரியங்காவை அறிமுகப்படுத்தி பேட்டி எடுத்தது முதல், ராஜீவ் ப்ரியங்காவை இழுத்துக் கொண்டு ஓடுவது, கடைசியில் துப்பாக்கியின் குண்டு கேமரா மேனை தாக்குவது உட்பட அனைத்தும் ரெக்கார்டு ஆகியிருந்தது!
அதை பார்த்தவுடன், நதியாவின் மேனஜர் மிகவும் டென்ஷன் ஆகிவிட்டார்…. எப்படி ராஜீவ் அங்கே வந்தான் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, நதியாவை துளைத்தெடுத்தார். இறுதியில் அவர்கள் வந்த முடிவு தான் ராஜீவ் ப்ரியங்காவின் வாழ்க்கையை முற்றிலுமாக மாறி அமைத்தது.
ராஜீவ்வும் ப்ரியங்காவும் காதலர்கள்… ப்ரியங்காவை பார்க்கவே ராஜீவ் அந்த இடத்திற்க்கு தன் ட்யூட்டி நேரத்திலும் வந்தான் என முடிவெடுத்தனர். கூடவே, அடுத்த கேள்வியும் முளைத்தது…. எப்படி ராஜீவ் ட்யூட்டி நேரத்தில் பொறுப்பில்லாமல், தன் காதலியை பார்க்க வரலாம், என்பதே அந்த கேள்வி! மீடியாகாரர்கள் அன்றோ?? கேள்விக்கா பஞ்சம்!!
அதனால், கோபமாக நதியாவின் மேலாளர், தன் ஹெட் ஆபீஸில் இருந்த ஒருவருக்கு அழைத்தார். அவரிடம் நடந்த விஷயத்தை கூறி, தங்களுடைய இன்னொரு கிளை சேனலான, பிரபல நியூஸ் சேனலில் இந்த செய்தியை ஒளிபரப்ப முயற்ச்சிகள் மேற்கொண்டார்.
நியூஸ் சேனலிலோ பெரும் வரவேற்ப்பு…. பின்னே, லைவ்வாக ஒரு திரில்லர் படத்தில் வருவது போல, நிஜ வாழ்க்கையில் நடந்த துப்பாக்கி சூட்டை ஒளிபரப்பி தங்களின் டி.ஆர்.பி.யை ஏற்றி கொள்ள யாருக்கு தான் கசக்கும்??
ஆடு தானாக வந்து பிரியாணி ஆகிக் கொள்ளவது போல, ராஜீவ் தானாக வந்து ஆப்பை வாங்கினான்!!! ஹ்ம்ம்ம், தப்பு தப்பு!! ப்ரியங்கா தானே வர வைத்தாள்?? பின், எப்படி அவனை மட்டும் குறை கூற முடியும்??
ஆனால், யாரின் மேல் தவறு அதிகம் என்பதை இப்போது விவாதிக்க நேரமில்லாமல், நியூஸ் சேனலில் அதை ஒளிபரப்ப ஆரம்பித்தனர்…. அதில் சம்மதப்பட்டவர்களோ அதை பார்க்காமல், வேறு வேலையில் மூழ்கி இருந்தனர்.
முதலில் ப்ரியங்கா என்ன செய்கிறாள் என்று பார்ப்போமா?? அவளின் காதலன் திட்டி அனுப்பிய பின்னர், ப்ரியங்கா ராஜீவ் கூறியதை அதிசயமாக கேட்டு வீடு திரும்பினாள். ஒரு வகையில் அவளுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்தது என்னவோ உண்மை…
அவளுக்கு தெரியவில்லை! அது ரொம்ப நாளாகவே தன் வேலையிலிருந்து லீவ் எடுத்துவிட்டது என..! அதுவும் ராம் மற்றும் ராஜீவ் விஷயத்தில் சுத்தம்!! வீடு வந்தவளுக்கு ஒரே கேள்வி மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது!!
‘எப்படி நான் ராம்மை, இப்படி கண்மூடித்தனமா நம்பினேன்??? ஏன் இப்படி ஆச்சு??’
யாரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும், தன்னுடைய பழக்கத்தை மட்டுமே காரணமாக்க அவள் தயாராக இல்லை!! அதற்க்கும் மேல், ராஜீவ்விடம் தான் கொண்டிருந்த அளவு கடந்த காதல் மட்டுமே அவள் கண்ணுக்கு இப்போது தெரிந்தது!!
இதெல்லாம் போதாது என்று, ராம் வேறு ராஜீவ்வுடன் விளையாடுவதை எல்லாம் பார்த்தப்பின், அவளுக்கு சந்தேகப்படவே தோன்றவில்லை!! அப்போது சட்டென்று ஒரு முகம் கண்களின் முன் மின்னியது…. ராஜீவ்வின் முகமல்ல!! மதுவின் முகம் தான் டால் அடித்தது!!
அவள் எத்தனை முறை கூறினாள்?? ராம்மை பற்றி ஒன்றும் தெரியாமல், பழகாதே என?? கேட்டாளா இவள்? இப்போது அனுபவிக்கிறாள்… அதில் ராஜீவ்வும் சேர்ந்து, பழி சுமப்பதை தான் தாங்க முடியாமல் போயிற்று ப்ரியங்காவிற்க்கு.
நினைக்கும் போதே கண்களில் அணை, ஏரி எல்லாம் உடைத்து சென்னை வெள்ளம் போல் சீரிப் பாய்ந்தது!! பார்க்கில் ஆரம்பித்த அழுகை, வீட்டிற்க்கு வந்த பின்னும் நின்றபாடில்லை! அவள் வீட்டிற்க்கு வந்து செய்த ஒரே நல்ல விஷயம் மதுவிற்க்கு அழைத்து, உடனே வீடு திரும்பும் படி கூறியது தான்.
ப்ரியங்காவின் அழு குரலை கேட்டு, மதுவும் என்னவோ ஏதோ என்று உடனே கிளம்பினாள். இந்த யோசனைக்கு நடுவில், தான் ஒரு பேட்டி குடுத்தது எல்லாம் நன்றாகவே மறந்து போயிற்று அம்மையாருக்கு!!
தேவையான விஷயம் மட்டும் எப்படி தான் மறந்து போகுமோ?? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்… இதனால், அவள் டிவி இருந்த பக்கம் கூட பார்க்கவில்லை! அதனால், அதில் ஒளிபரப்பிய செய்தியையும் அவள் பார்க்கவில்லை!!!
மது வரும் வரை அவள் உட்கார்ந்த இடத்தில் இருந்து அவள் நகரக் கூட இல்லை!!
அவ்வளவு ஓய்ந்து போயிருந்தாள் ப்ரியங்கா, ஓரே நாளில்!! மது கதவை திறந்தது, மட்டுமே தெரியும் அவளுக்கு!! அதற்க்குப்பின், அவளை ஓடி அணைத்து, தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டவும், மனது கொஞ்சம் அமைதிப்பட்டது!! ஆனால், மதுவின் பி.பி. எகிறியது!!
எந்த அளவிற்க்கு என்றால், தன் உயிர் தோழியை ஓங்கி அறையும் அளவிற்க்கு!!!
************************************கமிஷ்னர் அலுவகம்*****************************************
ராஜீவ் டென்ஷனாக தினகரனின் அறைக்கு வெளியே காத்திருந்தான்!! ஹாஸ்பெட்டலில் இருந்து நேராக இங்கே வந்துவிட்டான். அவரிடம் என்ன சொல்லி சமாளிப்பது, என்றே அவனுக்கு தெரியவில்லை….
இருந்தாலும் கமிஷ்னர் மற்றும் உயர் அதிகாரி ஆன அவர் கூப்பிடும் போது, தப்ப முடியாது அல்லவா?? சிறிது நேரத்தில் அவனை வரச் சொல்லி, அழைப்பு வந்தது, தினகரனிடமிருந்து. உள்ளே, முதல் முறையாக கால்கள் பின்ன, நெஞ்சில் சிறு பயம் கொப்பளிக்க சென்றான்.
இவன் வணக்கத்தை கூட கவனிக்காதவராய், தினகரன் பொறிய ஆரம்பித்தார்! “என்ன ராஜ், இதெல்லாம்?? நீங்க எதுக்கு அங்க போனீங்க? என்ன நடந்தது அங்க?”
ராஜீவ் மவுனமாக தலை குனிந்து இருந்தான்! பின், சில நிமிடங்களில் துனிவை வர வைத்து, அவனாகவே எல்லாவற்றையும் கூறினான். குரல் கொஞ்சமல்ல, நிறையவே தடுமாறியது தான்…. ஆனால், சொல்ல வந்த பின், நிறுத்த முடியாதல்லவா!!
அனைத்தையும் கேட்ட தினகரனுக்கு கோபமும் பரிதபமும் சம அளவில் வந்தது. ஒரு கமிஷ்னராக இதை அணுகும் வகையில், கோபமும், ஒரு சக மனிதனாக ராஜீவ்வை அறிந்து இருந்ததாலும், பார்க்குக்கு வேண்டும் என்றே சென்று இருக்க மாட்டான் என புரிந்ததாலும், பரிதாபமும் தோன்றியது!!
ஆனால், கமிஷ்னராக பணியாற்ற கடைமை தலை முன் தூக்கியதில், ராஜீவ்வின் தலை தானாக குனிந்தது! அவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் தீயில் விரலை விடுவதை போல, வலித்தது! எரிந்தது….. எப்படியெல்லாம் இவர் முன் பெயரும் புகழும் வாங்கியவன்?
இப்படி திட்டு வாங்கவே அருவெறுப்பாக இருந்தது ராஜீவ்வுக்கு…. அதை கடவுளும் உணர்ந்தாரோ என்னவோ, தினகரனின் தொலைப்பேசி அடித்ததால், அவனை வெளியே இருக்க சொன்னார் அவர்.
வெளியே வந்தால் கவுதம் பதட்டமாக இருந்தான். அவனை பார்த்ததும் தெரிந்தது, என்னவோ நடந்துவிட்டது என… பதட்டமாக இருந்தவனை அணுகி, என்ன நடந்ததென்று கேட்டான் ராஜீவ்.
கவுதமின் நாக்கு அவனுக்கு ஒத்துழைக்கவில்லை!!! அதை பார்த்து இன்னும் டென்ஷன் ஆனான், ராஜீவ்! “என்னாச்சு கவுதம்?? இப்போ சொல்ல போறீயா இல்லையா?”
“சார்… அது வந்து….”
“டேய்! நீ வேற என்ன சாவடிக்காதடா!! ப்ளீஸ், சொல்லு!”
யார் மேலோ இருந்த கோபம், தன் மேல் எழுந்த கோபம் அனைத்தும் கவுதமின் மேல் வடிந்தது அருவியாக! கோபமாக ஆரம்பித்தாலும் குரல் தானாக இறங்கியது ராஜீவ்வுக்கு! இக்குரலை கேட்ட பின்னும் கவுதமால், மவுனமாக நிற்க முடியவில்லை!
ராஜீவ்வை பக்கத்தில் இருந்த அறைக்கு அழைத்து சென்றான்! அங்கே, டிவி ஓடிக் கொண்டிருந்தது! என்ன சேனல் ஓடிக் கொண்டிருக்கும் என்று நான் தனியாக வேறு சொல்ல வேண்டாமல்லவா??? அதே நியூஸ் சேனலே தான்!!
இப்போது அவர்கள் இன்னும் முன்னேறி, இந்த விஷயத்தை ஒரு சில சமுதாய பிரமுகர்களை கொண்டு, அவர்களுக்குள் விவாதித்தப்படி இருந்தனர். அவ்வப்போது இதற்க்கெல்லாம் காரணமான அந்த வீடியோவை வேறு போட்டு போட்டு, காட்டினர்!
இப்போது தான் இது ஒரு ஃபேஷனாக ஆகிற்றே!!! ஒன்றும் இல்லாத விஷயத்தை விவாதித்தே, பெரிது படுத்துவது!! அதையே அவர்களும் செய்தனர்…. தலைப்பு தான் ஹைலைட்!
“நன்பகலில் பார்க்கில் துப்பக்கி சூடு! அஸிஸ்டென்ட் கமிஷ்னர், ராஜீவ் குமார், தன் காதலிலை சந்திக்க வந்தப்போது நிகழ்ந்தது!”
ராஜீவ்வின் கண்கள் அந்த டிவியை மட்டுமே நோக்கியது. நிலை குத்தி நின்றது எல்லாம் சின்ன வார்த்தை! அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வந்ததில், அவனுக்கு தன்னை சுத்தி என்ன நடக்கிறதே என்றே தெரியவில்லை!
இதில் அந்த சமுக ஆர்வலர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் வேறு ராஜீவ்வை கிழி கிழியென கிழித்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு பொறுப்பே இல்லையாம். அவனெல்லாம் எப்படி ஐ.பி.ஸ். ஆகினான் என கேள்வி எழுப்பினர்!
அதையே பார்த்த வேலையில், கவுதம் அவனை உளுக்கினான். “சார், இது எல்லாம் மீடியா டிரிக்ஸ் சார்! நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க. ப்ளீஸ், சார்! நான் சொல்றதை கேளுங்க….”
ஹ்ம்ம்ம், கவுதம் கூறியது அனைத்தும் ராஜீவ்வின் மண்டைக்குள் சென்றடைய முழுதாக ஐந்து நிமிடங்கள் பிடித்தன!
“எப்படி கண்டுக்காம இருக்க முடியும்?? அவங்க என்ன சொல்றாங்க கேட்டியா? நான் கடைமை உணர்ச்சியே இல்லாதவனாம்! இப்படி இருக்கருதுனால தான், போலீஸ் டிப்பார்மென்ட் மேல யாருக்கும் நம்பிக்கையே இல்லையாம்! என்னை பத்தி எப்படி எல்லாம்……….”
ராஜீவ்வால் முடிக்க கூட முடியவில்லை! அதற்க்குள் அவனின் மொபைல் அழைப்பு விடுத்தது! யாரென்று பார்த்தால், ப்ரியங்கா!! முதலில் கட் செய்தான் ராஜீவ்… இருக்கிற கோபத்தில் எதாவது ஏடாகூடமாக திட்டிவிட போகிறோம் என்ற நல்லெண்ணம் தான்.
ஆனால், கவுதம் எடுக்க சொன்னான்… “சார்! அவங்களுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கும் சார்! அதனால தான் இப்போ கால் பண்றாங்க போல! எடுங்க சார்! யார் உங்கள டார்கெட் பண்றாங்கனும் தெரிஞ்சிக்கலாம்….”
கவுதமின் வற்புறுத்தலின் பெயரில் எடுத்த ராஜீவ், ஒரு வார்த்தை கூட பேசவில்லை… ஏன், ஹலோ என்று கூட சொல்லவில்லை! அந்த பேட்டியை பார்த்தப் பின்னும் பேச அவன் என்ன முட்டாளா??
ஆனால், ப்ரியங்கா பசித்தவளுக்கு விருந்தே கிடைத்தது போல், வேக வேகமாக அனைத்தையும் அவனிடம் கூற ஆரம்பித்தாள். மது அறைந்ததும், அழுதப்படி இருந்தவளை மீண்டும் அவளே எழுப்பி, ராஜீவ்விடம் அனைத்தையும் சொல்லச் சொன்னாள்.
அதனாலையே, அவள் அழைத்ததும் தானாக பேசினாள்…. “ஹலோ! ராஜீவ் இருக்கீங்களா?? ப்ளீஸ், நான் சொல்றத கேளுங்க. நடுவுல கட் பண்ணிடாதீங்க ப்ளீஸ்!!”
ராம்மிடம் அறிமுகம் ஆகியது, ராஜீவ்வின் மேல் காதல் கொண்டது, ராம்முடன் ப்ளான் போட்டது உட்பட அனைத்தையும், பள்ளி மாணவி போல், ஒப்புவித்தாள் ப்ரியங்கா!!
கேட்ட ராஜீவிற்க்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கியது!! அவள் காதல் சொன்ன போது எழுந்த சந்தேகம், இப்போது சந்தேகமே இல்லாமல், கன்ஃபார்ம் ஆகியது…. என்னவா?? ப்ரியங்கா ஒரு லூசு தான் என கன்ஃபார்ம் பண்ணினான் அவளின் காதலன்.
பின்னே, யார் என்றே தெரியாதவனிடம் பழகி, அவளையும் அவனையும் இணைத்து வந்த செய்திக்கும் காரணமாகியவளை என்னவென்று நினைப்பான் அவன்?? இருந்த கோபம் மொத்தமும் இப்போது அவளின் பக்கம், ‘டேக் டைவேர்ஷன்’ போர்ட் பார்த்தது போல், திரும்பியது….
“ஹே! நீ என்ன லூசா??? ராம் என்னோட ஸ்கூல் ப்ரெண்டுனு நான் சொன்னனா?? நீயா ஏதாவது முடிவு பண்ணிப்பியா?? அறிவே இல்லையா உனுக்கு?? சே! என்னோட மானத்தை மொத்தமா குழி தோண்டி புதைச்சிட்ட!!! இப்போ சந்தோஷமா?? இனிமே என் முன்னாடி வந்து நின்ன…. அவ்ளோ தான் சொல்லிட்டேன்! என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது… வைடி போன!!”
கத்திவிட்டு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிய ராஜீவ்வை கவுதம் எப்படி எதிர் கொள்வது என யோசித்தான்! என்ன சொன்னாள் ப்ரியங்கா, என்று கேட்பதுக்கு கூட பயமாக இருந்தது அவனுக்கு. கண்களை மூடியபடி இருந்த ராஜீவ்வை தினகரன் கூப்பிடுவதாக ஒருவன் வந்து கூறினான்.
உள்ளே சென்றால், தினகரன் முகத்தை கடினமாக வைத்துக் கொண்டிருந்தார். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ, என்று ராஜீவ் உள்ளுக்குள் நடுங்கிய வேளையில், தினகரன் குரலை கனைத்தார்.
“சாரி ராஜீவ்… நியூஸ் பார்த்து நிறைய பேர் எனக்கு கால் பண்ணிக் கேக்கறாங்க. எந்தவிதமான ஆக்ஷ்னும் எடுக்கலயானு கேட்டு. ஐ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்! உங்கள ஒரு மாசம் ஸஸ்பென்ட் பண்றேன்”
இதை உள்வாங்கிய ராஜீவ்விற்க்கு நிறைய வருடங்கள் கழித்து, கண்கள் வேர்த்தன!!!