அத்தியாயம் - 21
ராஜீவ்வின் வீட்டினர் கிளம்பியவுடன், தையல்நாயகியின் தைக்கபடாத வாயிற்க்கு நிறைய வசவு விழுந்தது அனைவரிடமும் இருந்து. அதிலும் சந்தியா ஒரு படி மேலே போய், “வீடு தேடி வந்து என்னை வாழ்த்துனவங்கள, இப்படி பண்ணீட்டிங்கள பாட்டி?? இந்த பாவம் எல்லாம் உங்களையும் சரி, எங்களையும் சரி சும்மாவே விடாது! தெரிஞ்சிக்கோங்க…” என்று ஆத்திரம் அடங்காத குரலில் கத்தினாள்.
அர்ஜுன் தான் அவளை இந்த நேரத்தில் கத்துவது சரியல்ல, என்று சமாதானப்படுத்தினான். அப்போதும், சந்தியாவின் மனதில் இருந்த உருத்தல் போவேனா என்றது… எதுவோ கெட்டது நடக்கவிருக்கிறது, என்று அவளின் உள்மனது சொல்லியது…
எதுவாக இருந்தாலும், கடவுளின் மேல் பாரத்தை போட்டு, அவளின் வேலையை பார்க்க போனாள் சந்தியா… கடவுள் தன்னை கைவிட போவதை அறியாமல்!!!
****************************************************************************************************
இங்கே ராஜீவ்வின் வீட்டில், அடுத்த நாள் திங்கள்கிழமையாக இருக்க, அதுவும் ராஜீவ் மீண்டும் ட்யூட்டியில் சேரும் நாளாக இருக்க, காலையிலேயே வீட்டில் பரபரப்பு கிளம்பியது.
யாருக்கும் ராஜீவ் தன்னை திட்டியதை சொல்லவில்லை, ப்ரியங்கா. காலையில் எப்போதும் போல், ஆபீஸுக்கு கிளம்ப ஆய்த்தமானாள். அவள் உம்மென்று இருந்ததை எல்லோரும் கவனித்தனர், ராஜீவ் உட்பட.
ஆனால், யாரும் எதுவும் கேக்கவில்லை… காரணம் தெரியாத போது கேக்கலாம். எல்லாம் தெரிந்தும் கேட்டு மீண்டும் அவளின் மன காயத்தை கிளறிவிட, யாரும் தயாராகயில்லை. ராஜீவ்விற்க்கு காலையில் இருந்து வேலைக்கு செல்லும் ஜோரில், ப்ரியங்கா பற்றி நிறைய சிந்திக்க நேரமில்லாமல் போயிற்று.
இரவு முழுக்க அவள் அழுதுக் கொண்டிருந்து, விடிகாலையில் விசும்பலுடனே தூங்கியதை, அவன் அதிகாலையில் தான் கண்டான். பார்த்த நிமிடம் இதயத்தில், சுருக்கென்று குத்தியது, ஆழமாக! ஆனால், மீண்டும் அவனை அறியாமல் யோசனையுடனே துயில் கொண்டான். மறந்தும்விட்டான்…
அதனால், எப்போதும் போல் வேலைக்கு கிளம்பிச் சென்றான் ராஜீவ். ப்ரியங்காவும் நிஷாவும் சிறிது நேரத்தில் தத்தம் இடத்திற்க்கு சென்றனர்… வீட்டில் எல்லோரும், அவரவர் நேரத்தை ஏதோ ஒரு வழியில் போக்கிக் கொண்டிருக்க, திடீரென்று பதினோரு மணி அளவில், ப்ரியங்கா வீடு திரும்பினாள்.
என்னவென்று புரியாமல் அனைவரும் நிற்க, ப்ரியங்காவே பேசினாள். “நான்… நான் கொஞ்ச நாள் புனேல இருக்க எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன்மா.” இதை கேட்டு கீதா முதற்பட அனைவரும் அதிர்ந்தனர்.
“ஏன்மா, எங்க அம்மா திட்டுனதுல ரொம்ப கஷ்டமா இருக்காடா? கோபம் போறதுக்கு நான் என்ன பண்ணனும் சொல்லுமா, செய்யறேன்! அதை விட்டுட்டு, வீட்டை விட்டு போறேன்னு சொல்லாதடா!”
கீதாவின் பதற்றமான பேச்சில், அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீர் தாரை தாரையாக வெளியேறியது ப்ரியங்காவிற்க்கு! “இல்லமா… பிரச்சனை அதுல்ல.. இது.. ப்ளீஸ்மா, என்னனு கேக்காதீங்க. நான் கொஞ்ச நாள் தனியா இருக்கனும்னு தான் போறேன்.
ஒரு வாரம் இருந்துட்டு வந்துடுறேன்…. எனக்கும் உங்கள எல்லாம் பார்க்காம இருக்க முடியாது, அதுக்கு மேல!” அவள் இப்படி கூறியதும், வீட்டில் இருந்த மூன்று பெரியவர்களுக்கும் புரிந்துப் போனது. பிரச்சனை இவளுக்கும் ராஜீவ்விற்க்கும் தான் என.
எப்போதும் ராஜீவ்வை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்க மாட்டாள், அவனின் அன்பு மனைவி. அது, அவனின் பெற்றவர்கள் என்றால் கூட!! அதனால், இதை ஊகிப்பது அல்ஜீப்ராவாக இல்லை அவர்களுக்கு.
ஈஷ்வர் தான் ஒரு முடிவுக்கு வந்தவராக இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன்வைத்தார். “இதுக்கெல்லாம் காரணம் உன்னோட புருஷன் தான?? என்ன முழிக்குற? உன்னை பார்த்தாலே தெரியுது! ஹம்ம்ம்… சரிமா, நீ போயிட்டு வா. ஆனா, உங்க அப்பா வீட்டுக்கு வேணாம்.
அங்க போயிட்டும் நீ அழுதுட்டே இருப்ப. உங்க அப்பா, அம்மாவுக்கும் பார்க்க கஷ்டமா இருக்கும்! நீ பேசாம, என்னோட பொண்ணு மேகலை வீட்டுக்கு போயிடு. இந்த ராஜீவ் பையனும் அங்க தான் இருக்கறேன்னு கண்டுபிடிக்க மாட்டான். கொஞ்ச நாள் நிம்மதியா இருந்துட்டு வா… மேகலையும் உன்னை ரொம்ப நாளா கூப்டுட்டு இருக்கா… இது தான் சமயம்… போயிட்டு வா…”
தன்னை அவன் எப்போதும் தேட மாட்டான், என்று இந்த தாத்தாவிடம் யார் சொல்வது?? ஆனால், அவர் கூறியவற்றில் பெற்றோர்களை பற்றிய விஷயம் ப்ரியங்காவை சிந்திக்க வைத்தது… ராஜேந்திரனும் கீதாவும் அதையே வழிமொழிய, ப்ரியங்கா அன்று நன்பகலே திருச்சி அருகில் இருக்கும் மேகலையின் கிராமத்திற்க்கு வாடகை காரில் கிளம்பினாள்!
தன் செல்ல அத்தையுடன், தன்னை சேர்த்து வைத்த மேகலை பெரியம்மாவை ப்ரியங்கா எப்போது மறந்ததில்லை. அதனாலே, தயக்கம் சிறிதும் இன்றி அவரின் வீட்டிற்க்கு சென்றாள்.
மேகலைக்கு இலைமறை காயாக விஷயம் கீதாவால் சொல்லப்பட, ப்ரியங்காவை நன்கு கவனித்துக் கொண்டார் அவர். அவளை தனியே விடாமல் பார்ப்பதில் தொடங்கி, அவளுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து, ராஜீவ்வின் நினைப்பை அவளுக்கு பெரிதும் வராமல், பார்த்துக் கொண்டாள்.
ஆனால், ப்ரியங்காவின் மனம் எப்போதும் வேண்டாத குரங்கையே(ராஜீவ்வையே!?) நினைத்துக் கொண்டிருந்தது….
****************************************************************************************************
ப்ரியங்கா கிளம்பிய அன்று, வேலை முடித்து சீக்கிரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான் ராஜீவ். மனம் முழுக்க அந்த ராட்சஷியே தான்! காலையில் ஒழுங்காக வேலை பார்த்த ராஜீவ், மதியத்திலிருந்து ப்ரியங்கா மேல் பித்தானான்.
அவளை ரொம்ப ஓவரா திட்டிட்டோமோ?? ஏன், இப்படி திடீர்னு மாறினேன்? ஒரு சுய அலசலில் ஈடுபட்ட ராஜீவ் கண்டு பிடித்த விடையை அவனாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
ப்ரியங்காவின் மேல், புதிதாக பூத்த காதலால் குழம்பி இருந்த தன் மனதில், பாட்டியின் சொற்கள் ஈட்டியாக இறங்கியதில், அவனின் கோபதாபங்களில், மீண்டும் கோபம் மட்டும் தேங்கி, தாபம் பறந்தொடியது!!
இந்த வீணாக போன கோபத்தை வைத்து, அவளை திட்டி, அழ வைத்து… கொஞ்ச நஞ்சமா தப்பு செய்திருக்கீறோம்??இதில் காலையில் வேறு அவளிடம் சரியாக பேசவில்லை… சரியாக பேசவில்லையா?
பேசவேயில்லை! மிகவும் பயந்து போனான் ராஜீவ். நேராக சரண்டர் ஆக வேண்டியது தான்!! வேறு வழி, அவனுக்கு தெரியவில்லை?!
இப்படியே சந்தித்து, என்னவும் செய்து ப்ரியங்காவை சமாதானப்படுத்துவது என்ற நிலைக்கு வந்தான், அந்த காவல்காரன்… ஆனால், அங்கே வைத்தாளே அவன் மனையாள் பெரிய ஆப்பாக!!
உள்ளே வந்து வீட்டில் தேடினால், அவளை காணோம்! சரி பக்கத்தில் எங்கேயாவது போயிருப்பாள் என நினைத்து, வீட்டினரிடம் விசாரித்தான் ராஜீவ். அனைவரும் ஒற்றுமையாக கூறிய ஒரே பதில், ‘தெரியாது’.
அப்போது தான் ஏதோ விபரீதம் என்று புரிந்தது அவனுக்கு. மேலும் எல்லோரிடமும் துருவி துருவி கேக்க, நீ அரைத்து கேட்டாலும் இதே பதில் தான் என்று இருந்தனர் அவனின் குடும்பத்தினர். ஒரு நிலையில் தன்னை அறியாமல், குரல் உயர்த்திவிட்டான் ராஜீவ்.
“இப்போ ப்ரியங்கா எங்கனு சொல்லப் போறீங்களா, இல்லையா?”
“என்னடா, ரொம்ப பாசமான புருஷன் மாதிரி கத்தற? அவள நீ தான் என்னமோ சொல்லிருக்க… எங்களுக்கு தெரியும்! ஆனா, உன்னை பத்தி ஒரு வார்த்தை கூட தப்பா பேசாம வீட்டை விட்டு போனா தெரியுமா, அந்த பொண்ணு? அவள போய்! எங்களுக்கு அவ எங்க இருக்கானு தெரியும்… ஆனா, சொல்ல மாட்டோம், புரியுதா?”
ராஜேந்திரனின் அதட்டலான பேச்சு, மூளையில் உறைக்கவே சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு. புரிந்ததும், அறைக்கு ஓடி அவளின் கப்போர்டை திறந்து, அவர் சொல்லியது உண்மை என்று தெரிந்துக் கொண்டான் ராஜீவ்.
அப்படியே உட்கார்ந்து விட்டான், ஒன்றும் புரியாமல்… என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும், ப்ரியங்கா வீட்டை விட்டு போவாள் என்று துளியும் நினைக்கவில்லை… இப்போது எங்கே என்று தேடுவது?
அவனுக்கு அவள் திரும்பி ஒரு வாரம் கழித்து வருவாள் என தெரியவில்லை… ஆதலால், மிகவும் பயந்து, உள்ளுக்குள்ளேயே நொறுங்கிப் போனான் அவன்.
அன்று இரவு உணவு கூட அருந்தாமல், அந்த அறையிலேயே குடியிருந்தான் ராஜீவ். பித்து பிடித்தது போல உணர்ந்தான். அவளின் நினைவுகள் தன்னை இந்த அளவிற்க்கு பாதிக்கும், என இந்நாள் வரை தெரியாமல் போயிற்றே, என வருந்தினான்.
ஆனால், தன் வீட்டினர் அமைதியாக இருப்பதை பார்த்தால், அவள் பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.
எப்படியோ இரவை கடத்தி, அடுத்த நாள் காலையிலேயெ தன் மன மாற்றத்தை தன் பெற்றவர்களிடம் கூறி, தன்னவளின் இருப்பிடம் பற்றி விசாரித்தான்.
ஆனால், ராஜேந்திரனும் சரி, கீதாவும் சரி, ஈஷ்வர் தாத்தாவும் சரி வாயே திறக்கவில்லை!!! இதில், நிஷா இவனை கண்டால், பேசாமல் கூட ஒதுங்கிப் போனாள்! தன்னை தானே வெறுத்தான் ராஜீவ்… அன்று முழுக்க என்ன செய்வது? அவளை எப்படி தேடுவது என்றே சிந்தனை ஓடியது.
அவளின் மொபைலுக்கு நேற்று இரவிலிருந்து முயன்று கொண்டிருந்தான். ‘தற்காலிகமாக அணைக்கப் பட்டுள்ளது’ என்ற செய்தியே, கேட்டது எப்போதும்…. இதில் கீதா வேறு அவள் புனேவில் இல்லை, தேவையில்லாமல் அவன் மாமனாரிடம் கேட்டு அவரை வேறு வருந்தவைக்க வேண்டாம் என கூறிவிட்டார் திட்டவட்டமாக.
பேசாமல், தன் டிப்பார்மென்டின் உதவியில், அவளை கண்டுபிடிப்போமா? என்று கூட யோசித்தான்.
ஆனால், நாளை வரை பார்த்து, முடியவில்லை என்றால், பிறகு அணுகலாம் என்று முடிவெடுத்தான். இப்படியே செவ்வாக்கிழமை கழிய, வாழ்க்கையில் முதல் முறையாக ப்ரியங்காவை பார்க்கவே முடியாதோ என்ற பயத்தை கொடுத்த, அந்த நிமிடத்தை அறவே வெறுத்தான் ராஜீவ்.
ராஜீவ் சென்னையில் தவித்த தவிப்பிற்க்கு, சிறிதும் குறையாமல், ப்ரியங்காவும் தவித்தாள் என்று சொல்லமுடியாது!! ஏன்னென்றால், அவளுக்கு தான் கூட மேகலை பெரியம்மா இருந்தார்களே!
அவனை பற்றியும், தன் வீட்டாரை பற்றியும் சிந்தனை ஓடிக் கொண்டே தான் இருந்தது மனதிற்க்குள். அதற்க்காக கண்ணீர் விடுவதால், ஒன்றும் ஆகப் போவது இல்லை என்று புரிந்துக் கொண்டாள். அதனால், தன் கவனத்தை அந்த அழகான செட்டிநாடு வீட்டின் மேலும், பின்புறம் இருந்த தோட்டத்தின் மேலும் திசை திருப்பினாள்.
புதன்கிழமை அதிகாலையில் எழுந்து அந்த அழகான தோட்டத்தில், பூ பறித்துவிட்டு, அங்கேயே ஒரு ஓரத்தில் அமர்ந்தாள். விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதில், ப்ரியங்காவின் நெஞ்சம் முழுவதுமாக அவள் கணவனே இருந்தான்.
சட்டென்று, பின்புறம் ஏதோ ஓசை கேட்கவும், திரும்பி பார்த்தாள் ப்ரியங்கா! பார்த்த விழிகள் அப்படியே ஆணி அடித்தார் போல் நிலைக்குத்தி நின்றது.
இது கனவா, இல்லை நினைவா?? பின்னே, அவள் கணவன் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்த பிறகு அவளுக்கு இந்த சந்தேகம் வராதா, என்ன?? ஆனால், அவளின் கணவனுக்கு அந்த சந்தேகம் இல்லை போலும்…
இவளிடம் வர நடைகள் முன்னோக்கி அவன் வைத்த அந்த நேரத்தில், ப்ரியங்காவிற்க்கு இது நிஜம் தான் என புரிந்து, தானாக எழுந்தாள். அருகில் வந்தவன், இவளை இழுத்து அணைத்து, கட்டிக் கொண்டான்…. தன் அன்பை மொத்தமாக அந்த அணைப்பில் காட்டுவது போல், அவன் இறுக்கியதில் ப்ரியங்காவிற்க்கு மூச்சுவிட கஷ்டமாக இருந்தது.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை! திட்டுவான் என பார்த்தால், இது என்ன?? அது மட்டுமா? அதன் பின், ராஜீவ் உளரியதை தான் ப்ரியங்காவால் நம்ப முடியாமல் போயிற்று.
“ஹே ப்ரியா! ஏன்டி என்னை விட்டுட்டு வந்த? ரெண்டு நாளா எவ்வளோ பதறிட்டேன் தெரியுமா? பையித்தியமே புடிச்சிடுச்சு!! இனிமே உன்னை திட்டவே மாட்டேன்டா பேபி! ஐ லவ் யூ!! ஐ லவ் யூ சோ மச்!”
ப்ரியங்காவிற்க்கு மயக்கமே வந்தது இதையெல்லாம் கேட்டு!! ஆனால், ராஜீவ் பொழிந்த முத்த மழையில் ப்ரியங்கா என்னும் பறவை சிறகை விரித்து பறந்தது சந்தோஷமாக!!
****************************************************************************************************
இங்கே, அதே நேரத்தில் சென்னையில் சந்தியாவிற்க்கு எட்டாவது மாதத்திலேயே, வலி எடுத்ததால் ஹாஸ்பெட்டலில் அனுமதிக்கப்பட்டாள்…. அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்…
சிக்கலான பிரசவத்தால், ஆப்ரேஷன் பண்ணி தான் எடுக்க முடியும் என்று டாக்டர் கூறிவிட, வேறு வழியில்லாமல் அர்ஜுனும் சம்மதித்தான். மிக பதற்றமான பல நிமிடங்களை கடந்து, அர்ஜுனுக்கு டாக்டர் மிக அதிர்ச்சியான தகவலை பகிர்ந்தார்.
அர்ஜுனிற்க்கு பூமியின் உள்ளே போகிற மாதிரி இருந்தது அதை கேட்டு!!