அத்தியாயம் – 1
அந்த காலை வேளையில் சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலில் தன் காரை நத்தையாக கருதி, ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தான் வினோத். சூரியன் முகத்திலேயே அறைந்தும், மற்ற பிற வாகனங்கள் ஹார்ன் சத்தங்கள் எழுப்பியும், அவனின் முகத்தில் லேசாக கூட எரிச்சலின் கோடு தென்படவில்லை!
பக்கத்தில் உட்கார்ந்து வந்துக் கொண்டிருந்த அன்பரசி தான் அவனுக்கும் சேர்த்து கோபத்தில் இருக்கிறாளே? பிறகு, அவன் ஏன் எரிச்சல் படப் போகிறான்? தன் கூரிய மூக்கால் அவனை குத்திவிடுபவள் போல் அவள் முறைக்க, எதிர்தரப்பில் தான் எந்தவித ரியாக்ஷனும் காணோம்!!
தாங்க முடியாமல் அவன் பக்கம் திரும்பி, அவனுக்கு அடி என்னும் அபிஷேகத்தை குறைவில்லாமல் வழங்கினாள்… விழுந்த ஒவ்வொரு அடியும் வின் வின் என்று தெறிக்க, இப்போது திரும்பி கத்தினான் வினோத்.
“ஹே! எதுக்கு இப்போ அடிக்குற? சொல்லிட்டு அடி… வலிக்குதுல??”
டென்ஷனில் முகம் மேலும் ரத்த நிறம் கொள்ள, அன்பு புருவத்தை சுருக்கி வளைத்ததில் அது நர்த்தனமாடியது. “ஹான்.. ஏன் அடிக்கறேனா? டெய்லி நடந்து போற மாதிரியே இன்னிக்கும் போயிருப்பேன். பச்ச்… இப்போ எனக்கு கிளாஸுக்கு லேட் ஆச்சு… ”
இவள் இவ்வளவு கத்திய போதும், பதில் அசட்டையாக தான் வந்தது. “அதெல்லாம் சரியா கொண்டு போய் விட்டுடுவேன். நோ வொரிஸ்”.
“ஆமா, நோ வொரிஸ்… எதுக்குடா காரை பக்கத்து காரோட இவ்வளோ ஓட்டி நிப்பாட்டிருக்க? இறங்கி போகக் கூட முடியாது போல!”
“இறங்க கூடாதுனு தான்…” கண்ணடித்து கூறினான் வினோத். “நீ தான என்னை கார்ல போலாம், வா வானு கூப்பிட்ட… சே, உன்னை நம்பி வந்தேன் பாரு! என்னை சொல்லனும்” அன்பரசியின் கோபம் நிற்காமல் கொப்பளித்ததில், பொறுத்து பொறுத்து பார்த்தவனும் இப்போதும் லேசாக எரிச்சலானான்…
“கடவுளே! தெரியாம கூப்பிட்டுட்டேன்! போதுமா, இதோ டிராஃபிக் க்ளியர் ஆகுது. கரக்ட் டைமுக்கு நீ கிளாஸுக்கு போயிடுவ…! அதுக்குள்ள எத்தனை வாட்டி இதையே சொல்லி புலம்புவ? ஷப்பா, முடியல!!”
டிராப்பிக் சரியானதில் அன்புவின் கோபம் மட்டுபட இருந்தது. ஆனால், வினோத் “தெரியாம கூப்பிட்டுட்டேன்” என கூறியதை கேட்டதும் மேலும் கடுப்பாகி, முகத்தை சட்டென்று மறுபுறம் திருப்பி கொண்டாள்.
அவளின் கோபத்தை பற்றி நன்கு அறிந்ததாலோ என்னவோ, ஒன்றும் பேசாமல் வண்டியை இயக்கினான், வினோத். சில நிமிடங்களிலேயே பள்ளியும் வந்துவிட ஒன்றும் பேசாமல் காரிலிருந்து இறங்கினாள் அன்பரசி.
கதவை சாத்திவிட்டு ஜன்னலின் புறம் குனிந்து, “பை… ஈவ்னிங் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தாள். இல்லை முயன்றாள். “ஹலோ லவ்ஸ்” என்ற குரல் அவளை மேலே கால்களை வைக்க விடவில்லை.
புன்னகையுடனே திரும்பி அவனை பார்த்து, “என்ன” என்று கண்களாலே வினவினாள். “என் மேல கோபமா இருக்கியா?” ஒரு சீரியஸான குரலில் வினோத் கேட்டவுடன், செல்லமாக அவனை முறைத்தாள் அவனின் ’லவ்ஸ்’.
“உன் மேல நான் எப்படிடா கோபப்படுவேன்? எனக்குனு இருக்குறது நீ ஒருத்தன் தான்… உன்கிட்ட கோச்சிகிட்டு பேசாம என்னால இருக்க முடியுமா, சொல்லு?”
ஆம், அவள் கூறியது உண்மை தான். இப்போது மட்டுமல்ல எப்போதும், வினோத்தின் மீது அதிகமாக கோபம் கொள்ள அன்பரசியால் முடிந்ததில்லை. நொடியில் வரும் கோபம், சொல்லாமல் கொள்ளாமல் தானாக சென்றதாக அவளே பல முறை அவனிடம் கூறியது உண்டு.
அவள் உணர்ச்சிமயமாக இருக்கிறாள் என புரிந்ததால், ‘டேக் டைவேர்ஷன்’ போர்டை பார்த்தது போல, ரூட்டை மாற்றினான் வினோத். “அப்போ உனக்கு கோபமே வராதா? சாப்பாடுல கொஞ்சம் காரம், உப்பு எல்லாம் அதிகமா போடுனா, கேக்குறியா நீ? உனக்கும் கோபம் வர மாட்டேங்குது, எனக்கும் வர மாட்டேங்குது!!”
“அப்போ இன்னிக்கு நைட் சில்லி பரோட்டா போட்டுறவா?”
‘சில்லி பரோட்டா’ என கேட்டவுடன் அரண்ட முகத்துடன் கை எடுத்து கும்பிட்டான் வினோத். “வேணாம்மா தாயி… நீ கிளம்பு! ஒரு நாள் சமைச்சு போட்டுட்டு, ஒரு மாசத்துக்கு, ‘பரோட்டாவால் வரும் தீமைகள்’னு ஒரு பெரிய லெக்சர் எடுப்பப் பாரு…!! என்னால முடியாதுபா… நான் கிளம்பறேன். ஈவ்னிங் ஃபோன் பண்ணு”
சிரித்தபடி அவனுக்கு கையசைத்து விடை கொடுத்த அன்பரசிக்கு காலை பதினொரு மணி வரைக்கும் வேலை சரியாக இருந்தது. வேலை என்றால், கிளாஸ் கவனிக்கும் வேலையல்ல… கிளாஸ் எடுக்கும் வேலை.
தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில், எட்டிலிருந்து பத்தாம் வகுப்பு வரை வேதியியல் என்னும் Chemistry வகுப்பு எடுக்கிறாள். மாணவர்கள் மட்டுமல்ல பிற ஆசிரியர்களும் உதவி தேவை என்றால் முதலில் வந்து நிற்பது இவளிடம் தான்.
அதனாலேயே மாணவர்களின் விருப்பமான ஆசிரியர் கம் தோழி ஆனாள். பதினொரு மணி அளவில், ஆசிரியர்களின் அறைக்கு வந்தவளுக்கு தோன்றியது ஒன்று தான். இன்று மாலை வரை அவளுக்கு எந்த வகுப்பும் இல்லை… அதனால், சீக்கிரமாக கிளம்பி வீட்டிற்கு செல்ல வேண்டும், என்பதே அது.
ஓய்வாக உட்கார்ந்து பக்கத்தில் இருந்த ஆசிரியரிடம் அடுத்த வாரம் செல்லவிருக்கும் ‘பிக்னிக்’ பற்றி பேசிக் கொண்டிருந்த போது, பள்ளியின் ப்யூன் வந்து அவளை பார்க்க யாரோ வந்திருப்பதாக கூறவும், யாரென்ற கேள்வியுடன், பள்ளியின் விருந்தினர் அறைக்கு சென்றாள்.
அங்கே ஜெயந்தி அக்கா, உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஆவலுடன் அவர் அருகே விரைந்தாள். “அக்கா என்ன இங்க வந்திருக்கீங்க? வீட்டுக்கு வந்திருக்கலாம்ல?”
ஜெயந்தி மெதுவாக புன்னகைத்து, “ரொம்ப வேலை ஜாஸ்திமா அன்பு. இல்லனா வந்திருக்க மாட்டேனா? நாளைக்கு ஃபங்ஷன் இருக்குல… அதான் உன்னை இன்வைட் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். நீ கண்டிப்பா வருவ எனக்கு தெரியும். வினோத்தையும் கூட்டிட்டு சீக்கிரமா வந்துருடா… உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்று கூறிக் கொண்டே ஒரு பத்திரிகையை நீட்டினார்.
அந்த பத்திரிகை அவர் நடத்தி வரும் “பசுமை தென்றல்” என்ற டிரஸ்டின் ஐந்தாம் ஆண்டு விழாவிற்கானது. பார்த்தவுடன் அவருக்கு நன்றி தெரிவித்து, கண்டிப்பாக நாளை கலந்து கொள்வதாக கூறிவிட்டு அவருக்கு விடை கொடுத்தாள் அன்பரசி.
மீண்டும் தன் இருக்கைக்கு வந்ததும் அந்த அழைப்பிதழில், சிறப்பு விருந்தினர்களாக இருக்கும் பெயர்களை பார்வையிட்டாள். பார்த்த விழிகள் பார்த்தபடியே இருந்தன…
தான் காண்பது சரிதானா என்று பல முறை பரிசோதித்து, அதில் வெற்றி பெற்றும், முதன் முறையாக சோகமானாள். ‘ஜீவா, லஷ்மி குருப் ஆப் கம்பனீஸ்’ என்ற வரியிலேயே அவள் மனம் துடித்தது.
அவன் தான் என்பது உறிதிப்பட மூளை உதைத்ததும் வேறு நினைவுகள் இன்றி, மனம் அந்த பித்தனின் பின்னாடி பித்து பிடித்து அலைந்தது. அலைச்சல் எல்லை மீறிய நிலையில், தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டு வீடு நோக்கி நடந்தாள் அன்பரசி.
வீட்டிற்க்கு சென்றதும் ஏதேதோ செய்து தலைவலியில் இருந்து விடுபட முயன்றாள். ஆம், அவனை பற்றி, அந்த ஜீவாவை பற்றி நினைப்பதும் அவளை பொறுத்த வரை தலைவலி தான்.
எந்த உபயோகமும் இல்லாமல், மண்டை குடைச்சல் தான். ஆனால், அதிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல், ஹால் சோபாவிலேயே படுத்தபடி இருந்தாள் சோர்வாக.
மாலை வேலை முடிந்து வினோத் வந்த போதும், அதே நிலையில் தான் இருந்தாள். “ஹே! லவ்ஸ் எனக்கு சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாயேன்…”
அவள் சோர்வாக எழுவதை பார்த்து, அவளை கேள்விகளால் துருவினான். “என்னாச்சு? ஏன் ஒரே டல்லடிக்குற? உன்னோட பசங்க எல்லாம் ஃபெயில் ஆயிட்டாங்களா?”
கலாய்க்கும் குரலில் அவன் வினவ, அவன் முன் அந்த அழைப்பிதழ் நீட்டப்ப்ட்டது. பிரித்து படித்தவனின் முகமும் அதிர்ச்சியை எதிர் கொண்டாலும், ஒரு நொடியில் மீண்டும் சாதாரணமாக மாற்றினான்.
அவனின் முகத்தையே கூர்ந்து நோக்கிய அன்புக்கும் அவனின் நிலை புரிந்தது. ஆனாலும் மௌனம் சாதித்தாள். “ஹே! சூப்பர்… நாளைக்கு நான் வெட்டியா தான் இருப்பேன். நாம ரெண்டு பேரும் போலாம், கண்டிப்பா.”
அவனின் பதிலை கேட்டு ஆச்சரியமாக நோக்கிபடி, “அதுல ஒண்ணுமே இல்லையா வினோ? இல்ல கவனிக்கவே இல்லைனு பொய் சொல்லப் போறியா? ஹ்ம்ம்ம்… சொல்லு!” என்று அவனின் வாயை கிளறினாள். ஒரு கணம் கண்களை மூடி திறந்து, ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றினான்.
“என்னை பொறுத்த வரைக்கும் இதுல எதுவுமில்ல… உனக்கு எப்படியோ தெரியல?! இங்க பாரு அன்பு, பழசை பத்தி யோசிக்கலாம்… பட், சந்தோஷமா இருந்தா தான் யோசிக்கனும்… இல்லனா, யோசிக்கவே கூடாது. அதையும் மீறி யோசிப்பேன்னு சொன்னா, எனக்கு தெரியாது.”
கோபமாக கூறிவிட்டு அறையைவிட்டும் வெளியேற முயன்றான் வினோத். முழுதாக அறையை விட்டு போகும் முன் திரும்பி ஒரு எச்சரிக்கையும் வைக்க தவறவில்லை அந்த உத்தமபுத்திரன்.
“நாளைக்கு போலனா ஜெயந்திக்கா கிட்ட நீ தான் பதில் சொல்லனும். அதையும் ஞாபகம் வெச்சிக்கோ”
கண்கள் குளமாக உருவமெடுக்க, போகும் அவன் உருவம் முழுதாக மறைந்தது அன்புரசிக்கு… நாளை என்ன நடக்கும்? இதுவே அடுத்த நாள் வரை அவள் சிந்தையை நிரப்பிய ஒன்று.
****************************************************************************************************
சென்னையின் இன்னொரு முனையில், தன் அலுவகத்தில் அடுத்த நாளிற்கான அட்டவணையை பார்வையிட்டு கொண்டிருந்தான் ஜீவா.
மாலை ஐந்து மணி அளவில் இருந்த விழா அவன் அடுத்து சிந்திக்க வழி வகுத்தது. “பசுமை தென்றல்!”. இதற்க்கும் அவளுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ என்று மூளை சம்பந்தமில்லாமல் யோசித்தது.
அப்படியே அவள் அங்கே இருந்தாலும், ‘வருகிறேன்’ என கூறிவிட்டு போகாமல் இருக்க முடியாது. பார்க்கலாம் என்ன தான் ஆகும் என்று…. இயல்பிலேயே உடம்பில் ஊறிய சிறு திமிர்தனமும், சிறு அகம்பாவமும் அவனை அப்படி நினைக்க வைத்தது.
ஆனால், கடவுள் வேறு விளையாட்டை அடுத்த நாள் நடத்தினார். அதில் யார் வெற்றி பெறுவார் என இருவரும் அறியார். நானும் அறியேன்!