Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mezhugu Poove - 23

  • Thread Author
அத்தியாயம் – 23

“ஓகே சார். நான் வந்துடறேன். தாங்க்யூ சார், பை சார்.” அன்பு ஃபோன் பேசியதும் கால் கட் செய்து, தன் மொபைலில் ஒளிர்ந்த தன் பிள்ளைகளின் புகைப்படத்தையே பார்த்திருந்தாள். தான் எடுத்த முடிவு சரிதானா என நூறாவது முறையாக மனம் சிந்தித்தது.

அன்று ஜீவா அவளை முத்தமிட்டதும், தளர்ந்து போய் அவன் கைகளின் நெகிழ்ந்ததை நினைத்தால் இப்போதும் அவளுக்கு எரிச்சலும் கோபமும் சம அளவில் வந்தது. அவன் தான் கட்டி அணைத்தான் என்றால், இவளுக்கு எங்கே போனது புத்தி??

அவனை தள்ளி விட்டு, உதாசினப் படுத்தியிருக்க வேண்டாமா? அல்லது குறைந்த பட்சம் விலகியிருக்க வேண்டாமா? ஒன்றும் பண்ணாமல், அவன் விட்டதும் தான் இவள் விலகி சென்றாள்!

அதுவும் எப்படி? அவன் இவளின் கைகளை பற்றி நிறுத்தி, “ஐ லவ் யூ மோர் நவ் ராணி!! லவ் யூ சோ மச்…” என்று கூறிய பிறகே இவள் சென்றது. அவளின் அறைக்குள் புகுந்த அன்புக்கு, நடந்த செயலில் முதல் கை கால்கள் எல்லாம் நடுங்கியது.

பாத்ரூம் சென்று முகத்தில் தண்ணீரை அள்ளி தெளித்தாள். கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. மனதில் அப்போது தான் நடந்தது படமாக ஓடியது… அவன் செய்ததுக்கு தான் அமைதியாக இருந்தால், என்ன அர்த்தம்??

அவனை தான் மீண்டும் ஏற்றுக் கொண்டோமா. இல்லை, ரொம்ப நாட்கள் கழித்து அவன் அணைத்ததால், அவளுணர்ந்த காதலா? சிந்தனை செய்யவும் தெம்பில்லாமல், ஒரு மூலையில் அமர்ந்து விட்டாள்.

யோசனை செய்யவே பிடிக்கவில்லை தான்! இருந்தாலும், அந்த நிகழ்வு அன்பரசியை மிகவும் அசைத்தது என்னவோ உண்மை. ஊஞ்சலாடும் மனதை ஒரு நிலையில் நிப்பாட்ட முடியாமல், தவித்துப் போனாள்.

அவனை தனக்கு பிடிக்கிறது என்றால், எப்படி அவனை ஏற்றுக் கொள்வது என்று ஒரு பக்கம் மண்டை குடைந்தது. இன்னொரு பக்கம், பிடிக்கவில்லை என கூற முடியாமல், சற்று முன் நிகழ்ந்தது நெஞ்சில் காட்சியளித்தது!

ஜீவாவை வெறுக்காமல் தன் மனதில் இப்போதும் பூட்டி வைத்திருப்பது, இந்நேரம் அவனுக்கே தெரிந்திருக்கும். இதிலிருந்து எப்படி தப்பிப்பது?? ஆம், அன்பரசியின் மூளை இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்ததே தவிர, தீர்வு காணவில்லை.

தப்பிக்க அவள் கண்ட யோசனை சிறிது காலம், யார் கண்ணிலும் படாமல் வெளி ஊரில் இருப்பது. அப்போது தான், தன் மனம் அவனை தேடுகிறதா? அவனுடன் தன்னால் முழு மனதாக மீண்டும் இணைய முடியுமா என்று அறிய இயலும்.

பிரிவு ஒன்றே வழி என்று முடிவெடுத்தப் பின், அவள் கண்களில் வந்து போனவர்கள் யார் என்று தனியாக கூற வேண்டியதில்லை. ‘பசங்கள விட்டுட்டு எப்படி இருக்கறது?’ இதுவே, மனதை மேலும் அரிக்க, முடிவாக சிறிது காலம் அவர்களை பிரிந்து இருப்பது தான் சாலச் சிறிந்தது என வழி கண்டாள்.

ஒன்று வேண்டும் என்றால், ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும். தனக்கு தெளிவான சிந்தனையும், ஒரு நிலையான மனமும், நிச்சயமான முடிவும் தேவையென்றால் குழந்தைங்கள் சில காலம் அவர்களின் தந்தையிடம் வளர்வதே சரி!

யோசனை உதித்த நேரத்திலேயே கண்களில் கண்ணீரும் பொழிந்தது. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நிலுக் குட்டியும், நிக்கி பாப்பாவும் அவர்களின் அப்பாவிடம் எந்த பிரச்சனையும் பண்ணாமல் இருப்பார்களா?

எண்ணற்ற கேள்விகளுடன் மறுநாள் பெங்களூரில் இருக்கும் தன் தோழிக்கு ஃபோன் அடித்தாள். அவள் அன்பரசியுடன் பி.யெட். ஒன்றாக பயின்று இப்போது பெங்களுரில் ஆசிரியையாக பணிபுரிபவள். அவளிடம் கால் செய்து, அவள் வேலை செய்யும் பள்ளியிலேயே வேலை கேக்க, அவள் பள்ளி தாளாளரின் நம்பரை கொடுத்து பேசச் சொன்னாள்.

பள்ளி தாளாளரோ, “ஒரே ஒரு வேக்கன்ஸி இருக்குதுமா. பட், அது ஆறாவது படிக்கிற பசங்களுக்கு தான்” என்றார். தன் நிலைக்கு அது சற்று குறைவான வகுப்பு தான் என்றாலும், அவள் ஒத்துக் கொண்டாள்.

அடுத்த மாதம் ஜாயின் பண்ணுமாரு அவர் சொல்ல, அன்புக்கு நிம்மதியாக போயிற்று. எப்படியும் வினோத்தின் திருமணத்தை பார்க்காமல் போகும் எண்ணமில்லை… ‘அவன் கல்யாணம் முடிஞ்சவுடனே, கிளம்பிடனும். லேட் ஆச்சுனா, கண்டுப் பிடிச்சுடுவான்.’

இவர்கள் எல்லாரையும் பற்றி நினைத்தவள், தன்னையே எண்ணி உருகும் ஜீவானான ஜீவாவை பற்றி நினைக்க தவறவில்லை… அவன் சிறிது காலம் தன்னை தேடினாலும், மீண்டும் பிள்ளைகள் அவனின் எண்ணத்தை ஆக்கிரமித்துக் கொள்வர்.

இப்படியே அவள் யோசனை சென்ற திசையில் அவளும் பயணிக்க, பள்ளியில் கடைசி வகுப்பு முடியும் மணி அடிக்க, ஒரு தெளிவான மனநிலையுடன் வீடு திரும்பினாள். நாயகி இப்படி நினைக்க, நாயகனோ வேறு திட்டம் போட்டான் வினோத்துடன்.

“இதெல்லாம் சரியா வருமா? பெருசா எதையோ நினைச்சு, கடைசியில தீபாவளிக்கு புஸ்னு போன புஸ்வானம் மாதிரி ஆகப் போகுது!”

ஒரு அசாத்தியமான முகபாவனையுடன் கண்கள் அதனுடைய ஒளியை பரப்ப, புன்னைகையுடன் பதில் கூறினான் ஜீவா.

“ஹே எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா இது வேலை செய்யும்… உன்கிட்ட சும்மா ஒரு இன்ஃபர்மேஷனுக்கு தான் சொன்னேன். நீ போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரியாத… புரியுதா??”

“ஹலோ பாஸ், டூ மச்!! ஓட்ட வாய்னு சொல்லாம சொல்ற…”

“ஆமா, அப்படி தான பண்ணுவ நீ! முதல்ல அன்பு ஒத்துக்கிட்டா தான் நீயும் ஓகே சொல்லுவேனு சொன்ன… இப்போ நீயே என் கூட கூட்டு சேர்ந்துட்ட??”

“ஆமா ஆமா.. ரொம்ப வீராப்பா தான் பேசிட்டு இருந்தேன். பட், நிறைய யோசிச்சு என்னோட ஏழாவது அறிவ நான் தட்டுனதுல தான் புரிஞ்சுது… ரெண்டு பேர் மேலையும் தான் தப்பு. என்ன நீ டிவோர்ஸ் வரைக்கும் போனதுனால, உன் பக்கம் ஸீ-ஸா கொஞ்சம் இறங்கிருச்சு!

கூடவே, பிடிக்கலனு கூவிட்டு இருந்தாலும், மனசுக்குள்ள லவ்ஸ் இன்னமும் உன்னை நினைச்சுட்டு தான் இருக்கா! ஒரு தட்டு தட்டுனா சரியாகிடும்… விளக்கம் போதுமா?? தாட்ஸ் ஆல் யுவர் ஹானர்.”

சிரித்தப்படியே வினோத்தின் தோளை கட்டிக் கொண்டான். வினோத்தின் லவ்ஸும், ஜீவாவின் ராணியம்மாவின் முடிவை பற்றி இவர்கள் அறியவில்லை… ஆனால், அறிய வந்த போது?

****************************************************************************************************

அதன்பின் வந்த நாட்களில் எல்லாரும் அவரவர் வேலைகளில் ஆழ்ந்து போயினர். அனைவரையும் ஒன்றிணைத்த விஷயம் வினோத்தின் திருமணம். மற்றவர்கள் அலுவல்களை பார்த்துக் கொள்ள, வினோத்தோ ‘மலரு’ம் கனவுகளில் தொலைந்து போனான். ஜீவா, மலரின் அப்பா ஞானகணேசன், அன்பு மூவரும் திருமணத்தை ஒட்டி நிறைய பேசிக் கொண்டனர்.

ஆம், விழா ஏற்பாடு குறித்து ஜீவாவிடம் தயக்கமின்றி பேச முடிந்த அன்பரசியால், தனிப்பட்ட வாழ்வை பற்றி ஒரு வரி கூட முழுதாக பேச இயலாமல் போனது! ஜீவாவும் சும்மா இல்லாமல் எதாவது பேசியபடியும், அவளை வம்புக்கு இழுத்தபடியுமே இருந்தான்.

அப்படி தான் ஒரு முறை, கை வேலையாக இருக்கும் அன்பரசியிடம் வந்து ஆலோசனை கேட்டான் ஜீவா. “ராணி ரிசப்ஷனுக்கு லைட் மியூசிக் எல்லாம் வேணாம். ஒரே சத்தமா இருக்கும்னு வினோத்தும் சொல்லிட்டு இருந்தான்.

அவனுக்கும் மலருக்கும் பிடிச்ச பாட்டு எல்லாத்தையும் டிராக்ட் லிஸ்ட் பண்ணி, அதையே போட்டுவிடலாம் ஈவ்னிங். ஓகே வா??”

ஜீவாவின் பேச்சில் முழு கவனம் இல்லை என்றாலும், அவன் கூறிய யோசனை பிடிக்க, “சரி.. ஓகே” என்றாள் தலையசைத்து.

“ஆனா, காலையில முகூர்த்தம் அப்போ நாதஸ்வரம் மேள தாளம்னு சும்மா களகட்டனும்! நான் ஆல்ரெடி அதை பத்தி பேசிட்டேன்…” இதற்கு வெறும் தலையசைப்பு மட்டும் வந்தது.

“நம்ம எல்லாமே ரெண்டு மூணு நாள் முன்னாடியே ரெடியா எடுத்து வச்சுக்கனும். அப்புறம் அது மிஸ் ஆச்சு, இது எடுத்துட்டு வரலைனு சொல்ல கூடாது…”

“ஹ்ம்ம்ம்ம்…”

“அப்படியே கல்யாணம் முடிச்சிட்டு நம்ம வீட்டுக்கு போயிடலாமா ராணிமா??”

“ஹ்ம்ம்ம்ம்…”

ஜீவா விழுந்து விழுந்து சிரிக்கும் சத்தத்தில் தாம் என்ன கூறினோம்?? எதற்காக இவன் இப்படி சிரிக்கிறான் என சிந்தித்தாள் அன்பு. அதன் பிறகே, அவன் கடைசி கேள்வி மனதில் பதிந்து, அதற்கும் ‘ஹ்ம்ம்ம்’ கொட்டினோமே என வருந்தி, மனதளவில் அவளுக்கு அவளே குட்டு வைத்து, அவன் முகம் காண முடியாமல் உள்ளே சென்று மறைந்தாள்.

ஜீவாவின் சிரிப்பு யோசனையாக மாறும் வரை பார்த்திருந்தான், அவள் சென்ற திசையை… கல்யாணத்திற்கு உடைகள் வாங்கவென்று போனப் போது, மற்றொரு முறை அவனிடம் மாட்டிக் கொண்டாள்.

பெண்கள் அனைவருக்கும் காஞ்சிபுரம் சென்று புடவைகள் எடுப்பது என்று முடிவானது. காரில் குழந்தைகளுடன் நால்வரும் கிளம்பினர். கடையில் முதலில் மலருக்கு பட்டு புடவைகள் எடுத்து முடித்தவுடன், அன்புக்கு பார்க்க ஆரம்பித்தனர்.

அங்கிருந்த புடவை எல்லாமே நன்றாக இருந்ததால், மிகவும் குழம்பிப் போனாள். மேலும், அவளிடம் நிறைய பட்டு புடவை இல்லாததும் ஒரு காரணம். வினோத்தோ இளம் ஊதா நிறத்தில் ஒரு புடவையை எடுத்து காண்பிக்க, ஜீவா அவனுக்கு மிகவும் பிடித்த மெரூன் வண்ணத்தில் ஜரிகை இழையோடிய பட்டை தேர்ந்தெடுத்தான்.

ஏற்கனவே அவளுக்கு இரண்டு புடவை தேர்வு செய்தாகிற்று. இப்போது ஒரு புடவை தான் எடுக்க முடியும் என்ற நிலையில், இருவரின் முகத்தையும் அவர்கள் கையில் இருந்த புடவையும் அன்பரசியின் கண்கள் மாறி மாறி நோட்டம்விட்டன.

வேண்டாம் என மறுத்தால் வினோத் புரிந்துக் கொள்வானா? இல்லை ஜீவாவின் தேர்வை மறுத்தால், அவரை உதாசினப் படுத்துவதாக எடுத்துப்பாரோ?? குழம்பிய குட்டையானாள்.

வினோத்தோ, “நீ தான் அந்த மெரூன் கலர்ல புடவை வெச்சுருக்கல?? அப்புறம் என்ன இதையே எடுத்துக்கோ…” என்று மிரட்டாமல் மிரட்டினான். மலர் வினோத்துக்கு செய்கையில் நீ பேசாதே என கூறியும் அவன் அசரவில்லை. ஜீவா அன்பரசியின் தவிப்பை உணர்ந்து, கடைக்காரரிடம் “ரெண்டையுமே எடுத்துக்கறோம்… பில் போடலாம்.” என்றான்.

‘ஹா எதற்கு ரெண்டு புடவை?? யார் காசு கொடுப்பது?? ஒவ்வொன்றும் பல ஆயிரமாகிற்றே!?’ என மனதில் எழுந்த கேள்வியை ஜீவாவிடம் அப்படியே கேட்டாள். “நான் தான் காசு கொடுக்கறேன். கண்டிப்பா நீ என்கிட்ட திரும்ப வருவ ராணிமா… அப்போ இது உனக்கு தான்…. உனக்கு மட்டும்….”

ஒரு நிமிடம் கண்கள் பனித்தது அன்புக்கு. இப்போது இவ்வளவு காதலையும் அன்பையும் பொழிபவன் எதற்காக விவாகரத்து கொடுத்து என்னை ஒதுக்க வேண்டும்?? அதன்பின் வாங்கிய விவாகரத்தை ரத்து செய்து, மீண்டும் புதிய ஒரு வாழ்க்கை தொடங்குவோம் என வந்து நிற்க வேண்டும்??

எத்தனையோ முறை, நாம் மட்டும் தப்பே செய்யவில்லையா?? குழந்தைகளை அலட்சியமாக கவனித்துக் கொண்டதால் தானே இத்தனை பிரச்சனைகள்…

அப்போது ஜீவா தன் பக்கம் அடியெடுத்து வைத்து சேர நினைக்கும் போது, தான் அவனை உதாசினப்படுத்துவது சரியா?? இக்கேள்வி மனதில் முளைத்த அடுத்த நிமிடமே, டிவோர்ஸ் வாங்கிய காலமும், அதன் பின் யாருமற்ற தனிமையும், அதனால் அனுபவித்த வேதனையும் மனதில் எரிமைலையாக பொங்கியது…

இதற்கு அவனால் பதில் கூற முடியுமா?? கண்களை துடைத்துக் கொண்டு, எண்ணங்களிலிருந்து விடுபட்டு வந்தாள் அன்பரசி. எல்லோரும் நிக்கித்தாவிற்கு பட்டு பாவாடை எடுக்கும் பிரிவுக்கு போகலாம் என ஜீவா கூறவும், வினோத்தை கோவமாக பார்த்தபடி கேட்டாள் அன்பு.

“லட்சுமி அம்மாவுக்கு புடவை எடுக்கனும்னு சொல்லிட்டு இருந்தல? எடுக்காமையே போற?”

அவள் கூறியவுடன் தான் வினோத்துக்கும் ஞாபகம் வந்தது. மண்டையில் தட்டியபடி, மீண்டும் பட்டு புடவை செக்ஷனுக்குள் புகுந்தனர். அவள் தன்னிடம் வரும் நாள் நெருங்கியதாகவே உணர்ந்தான் ஜீவா.

நாட்கள் இப்படியே செல்ல, திருமணத்துக்கு சரியாக இரண்டு வாரம் இருந்த நிலையில் ஒரு வெள்ளிக்கிழமை மாலை அன்பரசி பள்ளியில் இருந்து கோவிலுக்கு சென்று வீடு திரும்பினாள். குழந்தைகள் இருவரும் வினோத்துடன் சிறுவர்கள் விளையாடும் இடத்தில் இருக்க, யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் சாவியை கதவில் அவள் பொருத்த, கதவு தானாக திறந்துக் கொண்டது!

ஜீவா தான் திறந்திருந்தான்… ஒன்றும் பேசாமல் இவள் உள்ளே போக, ஹாலில் இருந்தவற்றை பார்த்து திகைத்து நின்றாள். “நான் நம்மளோட வீட்டுக்கு கிளம்பறேன் ராணிமா…”

ஜீவாவின் பொருள்கள் அனைத்தும் பெட்டிகளிலும், பைகளிலும் இருப்பதை பார்த்தே அவள் பேச்செழாமல் இருக்க, அவன் கூறியதை கேட்டு கவலைபடிந்த முகத்துடன் நோக்கினாள்.

“ஏன்… ஏன் கிளம்புறீங்க??? என்னாச்சு? நான் எதாவது உங்கள தப்பா பேசி இல்லனா ஹெர்ட் பண்ற மாதிரி நடந்துகிட்டேனா??”

கண்களில் தவிப்புடன் ‘ஐய்யோ’ என்ற உணர்ச்சி மட்டும் நிலைக்க, அன்பரசி கேட்டவிதம் ஜீவாவை உருக்கியது! அவளை அணைத்து சமாதானப்படுத்த எழுந்த கைகளை அடக்கி, முகத்தில் எதுவும் காட்டாமல் நிலையாக வைத்து பேசினான் ஜீவா.

“நேத்து நைட் நீ உன்னோட பிரண்டுகிட்ட பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்!!”

அப்பப்பாபா… ஒரே வரியில் அனைத்தும் விளங்கியது அன்பரசிக்கு. அவள் பேசிக் கொண்டிருந்தது பெங்களூரில் அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்த அவளின் தோழியிடமே. அன்பரசி என்ன பதில் கூறுவது என தெரியாமல், அமைதி காத்தாள்.

“நான் தண்ணி குடுக்கனும்னு தான் வந்தேன். பார்த்தா நீ ஹால்ல பேசிட்டு இருந்த… நான் வரும் போது சரியா, “எனக்கு சீக்கிரமாவே பெங்களூர் வருனும் போலயிருக்கு… இங்க இருக்க இருக்க… ஷப்பா முடியல!! யோசிச்சு யோசிச்சே டெய்லி தலைவலிக்கறது தான் மிச்சம்.”னு சொல்லிட்டு இருந்த…

எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?? கன்னத்துலயே அடி வாங்குன மாதிரி இருந்துச்சு! உன்னை என்கிட்ட வர வைக்கனும்னு நினைச்சுட்டு, உன்னை எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணிருக்கேன்னு அப்போ தான் புரிஞ்சுது.

சாரிமா… ரொம்ப கஷ்டமா போயிடுச்சு எனக்கு…. நீ இப்படி என்கிட்ட இருந்து தப்பிக்க வேற ஊருக்கு போவன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல...”

அவளின் முகத்தை ஆழ ஆராய்ந்து ஒரு பெருமூச்சுடன், “இனிமேலும் உன்னை நான் எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்… நீயும் குழந்தைகளும் இங்க நிம்மதியா இருக்கலாம்!” என்று முடித்தான்.

அன்பரசிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. என்ன குழந்தைகளை தம்மிடம் விட்டுச் செல்கிறானா?? முழு மனதுடன் தான் சொல்கிறானா…

“என்னடா பசங்கள விட்டுட்டு எப்படி இவன் இருப்பான்னு யோசிக்கறயா? இங்க உன் கூட இருக்கும் போது தான் தெரிஞ்சுக்கிட்டேன், ஒரு குழந்தைக்கு அவங்க அம்மா எவ்வளவு முக்கியம்னு… அதனால, புரிஞ்சு தான் சொல்றேன் நீ தான் பசங்கள வளர்க்கனும்! அவங்களுக்கு என்னை பார்க்கனும்னு தோணுச்சுனா வினோத் கூட அனுப்பிவை… பை!”

பைகளையும், பெட்டிகளையும் வெளியே இழுத்தபடி சென்றவன், திடீரென்று திரும்பி, “பட், உனக்காக அப்பா, அம்மா, நானு, அந்த மெரூன் பட்டு எல்லாரும் அங்க காத்துட்டு இருப்போம்கறத மறந்துடாத…” என்று அழுத்தமான குரலில், அவளின் உயிர் வரை ஊடுறுவி சென்றான்.

சென்றான்… சென்றேவிட்டான்! இரண்டாம் முறையாக அவளை விட்டு சென்றுவிட்டான். இம்முறை அவளின் நன்மை கருதி எடுத்த முடிவாகினும், அன்பரசிக்கு வேப்பங்காயாக கசந்தது.

அவன் சென்றதை தாங்க முடியாமல், சோபாவில் தொப்பென விழுந்தாள். நினைவுகள் எங்கெங்கோ சென்றன… தான் மட்டும் பெங்களூர் போவதாக முடிவெடுக்காமல் இருந்தால், ஜீவா தன்னை விட்டு அகலாமல் இருந்திருப்பானோ? அவனுடனே இவ்வீட்டில் நாட்களை கழித்திருக்கலாமோ??

இல்லை, அவன் போனது தான் சரியா?? தன் மனதில் இருப்பதை கண்டறிய இந்த தனிமை தனக்கு தேவை தானோ?? கடவுளே… அவன் இல்லை என்றவுடன் தன் உடம்பிலேயே சக்தியற்று போனது போல் உணர்ந்தாள்.

எதோ பாதி உயிரும் உடலும் கழன்று, அவனுடன் சென்றுவிட்டது போல் ஒரு உணர்வு. இதையெல்லாம் தாங்க முடியாமல், மூளை தன் வேலையை நிறுத்திக் கொள்ள, அவள் எவ்வித உணர்வும் இன்றி படுத்துக் கிடந்தாள்.

எல்லாம் வினோத் ஆவேசமாக அவளிடம் வரும் வரை தான். அவன் வந்து உலுக்கி எழுப்பிவிட, அவன் பின்னால் பார்த்தாள். அவளின் தேடலை புரிந்தவன், “குழந்தைங்க கீழ இருக்காங்க… நீ பெங்களூர் போகனும்னு இருந்தியா, கல்யாணம் முடிஞ்ச உடனே??” என்று முகத்தில் அதியசமாக கோபம் தாண்டவமாட கேட்டான்.

அன்பு எதுவும் பேசாமல், அவன் முகத்தை பார்க்கும் திராணியின்றி, தலைகுனிந்தபடி ‘ஆம்’ என தலையசைத்தாள். “வர கோவத்துக்கு பளார்னு ஒண்ணு குடுக்கனும் போல இருக்கு…

யார கேட்டு இப்படி முடிவு பண்ண? நீ போயிட்டா எல்லாம் சரியாகிடுமா? பிரச்சனை வந்தா அதுலந்து தப்பிச்சு ஓட பார்க்கறது கோழத்தனம்னு உனக்கு தெரியாது? நீ வீட்டை விட்டு போகனும்னு டெஸிஷன் தான் எடுத்த. ஆனா, நீ பிரச்சனைனு நினைச்ச அவன் போயே போயிட்டான்.

போங்க… மறுபடியும் நீ இங்க, அவன் அங்க… குழந்தைங்க ரெண்டு பேரும் கிட்டயும் அலையட்டும்!!”

வினோத் பேசப் பேச அன்பரசியிடம் எந்தவித மாற்றமும் இல்லை… அவள் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியாமல், வினோத்தே திணறிப் போனான். இதில் வேறு, விளையாடி முடித்து வந்த குழந்தைகள், “அப்பா எங்க?? மாமா சொல்லு அப்பா எங்க போனாங்க…” என இவனை கேட்க, எப்படியடா இவர்களை சமாளிக்கப் போகிறோம் என வினோத்து திகைத்து நின்றான்.
 
Top