அத்தியாயம் – 24
ஜீவா போனதில் இருந்து நிக்கித்தாவும் நிலேஷும் அவனைப் பற்றி கேட்டே வினோத்தின் பொறுமையை பெரும் அளவு சொதித்தனர். ஒரு நிலையில், ‘அப்பாபாபா’ என நிக்கித்தா பெருங்குரல் எடுத்து அழுவ ஆரம்பித்தாள் என்றாள், நிலேஷோ ஒரு படி மேலே போய், “அப்பா வேணும்… மம்மம் வேணாம்…” என கோபாவேசமாக அன்பரசியிடம் சண்டையிட்டான்.
இதையெல்லாம் பார்க்க முடியாமல், அன்பரசியே வினோத்திடம் அவர்களை ஜீவாவிடம் சில நாட்களுக்கு விட்டு வரச் சொன்னாள். முன் தினம் மாலையிலிருந்து, வாழ்க்கையே வெறுத்துவிட்டது போல் ஒரு பார்வையும், யோசனை படிந்த கண்களுமாக அவனின் லவ்ஸ் இருந்ததால், வினோத்தும் மறுபேச்சு பேசாமல் அவர்களை அடுத்த நாளே ஜீவாவின் வீட்டில் அழைத்துச் சென்றான்.
இவன் வருவதாக எல்லாம் சொல்லவில்லை, யாரிடமும். அதனால், கதவை திறந்த லட்சுமி அம்மாவுக்கு ஆனந்த ஆச்சரியமாக போயிற்று. கடந்த ஒரு மாதமாக கூட இல்லாத பேரப் பிள்ளைகளை அணைத்து ஊச்சி முகர்ந்தார். ராகவனும் சேர்ந்துக் கொள்ள, ‘ஒரே பாச மழையா பொழியுதே… தேடி வந்த காரக்டர காணோம்… ஜீ எங்க?’ என மனதில் நினைத்ததை வெளியேயும் கேட்பதற்குள், நிலேஷ் முந்திக் கொண்டான்.
“பாட்டி அப்பா எங்க?? மேல இருக்காரா??” என கேட்டபடியே அவரின் கைகளில் இருந்து விடுபட்டு, படிகளில் தாவி ஏறினான். பின்னேயே நிக்கித்தா வேறு..! சந்தோஷமாக அவர்களை பார்த்தபடி, ராகவனும் லட்சுமியும் வினோத்திடம் பேசினர்.
“எப்படி இருக்கபா? அன்பு எப்படி இருக்கா??”
“எல்லாரும் நல்லா தான் இருக்கோம்மா…”
“ஏன்பா பொய் சொல்ற?? அன்பு என்ன பண்ண இருந்தான்னு ஜீவா எங்ககிட்ட நேத்தே சொல்லிட்டான்.”
ராகவன் கேட்டதிற்கு பதிலாய், ஒரு செயற்கை புன்னகையை உதட்டில் அணிவித்தான் வினோத். அவனுக்கு காபி போட்டுக் கொண்டு வந்த லட்சுமி அவர் மனதின் அங்கலாய்பை எடுத்துரைத்தார்.
“என்னத்த சொல்லபா? எதோ எங்களோட இல்லைனா கூட பரவாயில்லை, அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா போதும்னு தான் நினைச்சோம். உன்னோட கல்யாணம் வேற நடக்குது. எல்லாம் சரியாகிடும்னு மொத்தமா நம்பினேன் நான்.
ஆனா, கொஞ்ச நாள் கூட நம்ம சந்தோஷம் நிலைக்கல பாரேன். நேத்து வந்து இவன் திடீர்னு நிக்கவும், எங்களுக்கு ஒண்ணுமே புரியல… என்னடா ஆச்சுனு கேட்டா, அங்க நடந்ததை சொல்லிட்டு, ‘எல்லாம் நல்லதுக்கு தான்மா. கொஞ்ச நாள் கூட இருந்துட்டு இப்போ இல்லைனா, கண்டிப்பா அவ என்னை தேடுவா’ அப்படிங்கறான்! ஒண்ணும் விளங்க மாட்டேங்குது…”
அதன் மேற்கொண்டு பேச முடியாமல் அவர் மௌனமாக, ராகவன் தொடர்ந்தார். “அவன் எங்கள சமாதானப்படுத்த அப்படி சொன்னானா, இல்லை அவனையே சமாதானப் படுத்திக்கிட்டானா? தெரியலைபா…. ஆனா, நேத்து பெட்டியை தூக்கிட்டு வந்த அவன் முகத்தை பார்க்க என்னால முடியல!”
வினோத்திற்கு அவர்களை என்ன சொல்லி தேற்றுவது என்று ஒன்றும் புரியவில்லை. ஆறுதலாக அவர்களின் கைகளை பற்றிக் கொண்டு, “எனக்கும் கஷ்டமா தான்மா இருக்கு. ஆனா, இன்னும் கொஞ்ச நாள் தான் இதெல்லாம்… கண்டிப்பா ஜீவா இப்படியே இருக்க விட்டுட மாட்டான்.
அன்பும் நேத்து இவன் போனதுலந்து எதையோ பறிகொடுத்த மாதிரி தான் இருக்கா. பார்க்கலாம்… எல்லாம் நம்ம நினைக்குற மாதிரி நல்லபடியா நடக்கும்!! நம்புங்க.. நம்பிக்கை… அதானே எல்லாம்!”
அவன் பேச்சை கேட்டு செல்லமாக அவன் முகத்தில் அடித்து, “டேய் வாலு, அப்படி மட்டும் நடந்துச்சுனா, எத்தனை கோவிலுக்கு வேண்டுதல் வெச்சுருக்கேன் தெரியுமா? எல்லாரும் ஒண்ணா போயிட்டு வரலாம்.” என லட்சுமி கூறி முடிக்கவில்லை, பொங்கிவிட்டான் வினோத்.
“என்னது கோவிலுக்கா? புதுசா கல்யாணம் ஆன பையன ஹனிமூன் அனுப்பாம, கோவில் கோவிலா கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க… என்ன ஒரு வில்லத்தனம்??” வினோத்தின் பேச்சை கேட்டு சிரித்தனர் இருவரும்.
இவர்கள் சிரிப்பதை பார்த்தபடியே மேலிருந்து கீழே இறங்கினான் ஜீவா. ஒரு கையில் நிக்கி, மறுகையில் நிலேஷுடன். குழந்தைகள் அவனை ஒரு நாள் காணாமல் போனதற்கே அவனை வறுத்தேடுத்தனர். அதில் நிலேஷ் கேட்ட கேள்வி தான், ஜீவாவுக்கு தூக்கி வாரி போட்டது.
“இனிமே நீ அங்க வர மாட்டியாபா? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் அங்க வாப்பா…”
நிலேஷுக்கு பதில் அளிக்க முடியாமல், அவன் அறியாமல் பேச்சை மாற்றினான் தந்தையவன். கீழே கூட்டியும் வந்துவிட்டான். ஜீவாவின் கைகளில் குட்டீஸ் இருவரையும் பார்த்தவுடன் வினோத் “இப்போ சந்தோஷமா?? ஹப்பாபா, என்னமா கத்தறாங்க ரெண்டும் பேரும்.
இந்த வயசுலயே உன்னோட பையன் உண்ணாவிரதம் எல்லாம் இருக்கான்டா… ரொம்ப குஷ்டம்!!!” நிலேஷ் ‘வெவ்வெவ்வே’ என பழிப்பு காட்டியபடி தன் தந்தையின் தோள்களில் வாகாக சாய்ந்துக் கொண்டான்.
சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டான் வினோத். அவன் விடைபெறும் போது, ஜீவா தலையசைத்து கண்களை மூடி திறந்து, ‘நான் பார்த்துக்கறேன்’ என நம்பிக்கை என்னும் டானிக் ஊட்டவும், உற்சாகமாக வினோத்தும் கிளம்பினான்.
****************************************************************************************************
இங்கே குழந்தைகளை அனுப்பிவிட்டு பள்ளிக்கும் லீவ் சொல்லிவிட்டு, வீட்டில் தனியாக உட்கார்ந்து யோசித்தாள் அன்பு.
கண்டிப்பாக அவளின் மனம் ஜீவாவை தேடுகிறது… இதில் எள் அளவும் சந்தேகமில்லை அவளுக்கு. ஆனால், அது மட்டும் போதுமா அவனுடன் மீண்டும் இணைவதற்கு??
அப்படியே இவள் சேர முடிவெடுத்தாலும், ஜீவாவுடன் ஒரு முறை உட்கார்ந்து மனம் பேசி, அதன்பின் முடிவெடுப்பதே சிறந்தது. இப்படியே அன்பரசி அடுத்து வந்த நான்கு நாட்களை ஓட்ட, ஐந்தாம் நாள் அவளை பார்க்க அவளின் செல்வங்கள் வந்துவிட்டனர்.
காலிங் பெல் விடாமல் அடிக்கவும், ஓடிப் போய் கதவை திறந்தாள் அன்பு. ‘அம்மாமாமா’ என இவளின் கால்களை ஆளுக்கு ஒன்றாக கட்டிக் கொண்டனர் அவளின் மக்கள். சந்தோஷ அலைகள் உடல் முழுவதும் பெருகி வழிய, இவளும் குனிந்து அணைத்தாள், இருவரையும்.
“ஹே செல்லம்ஸ் யார் கூட வந்தீங்க?”
“தாத்தா பாட்டியோட… அவங்க லிப்ஃடுல வராங்க.”
ஒரே ஒரு கணம் அவள் எதிர்பார்த்த பதிலாகிய, ‘அப்பா’ வரவில்லை என்றவுடன் மனம் துவண்டு போனது அன்புக்கு. பின்பு, வீட்டுக்கு எப்போதோ வருபவர்களை பற்றி இப்படியா எண்ணுவது என தன்னை தானே திட்டிக் கொண்டாள். இன்முகத்துடனே தன்னை பெறாத பெற்றோர்களை வரவேற்றாள்.
நலம் விசாரிப்பு முடிந்தவுடன், குழந்தைகள் பற்றி கூறினார் லட்சுமி. “ரெண்டு நாள் அப்பப்போ உன்னை பத்தி கேட்டாங்கமா. ஆனா, நேத்து ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு…. நிக்கி குட்டியே முகத்தை உம்முனு வெச்சிருந்தானா பார்த்துக்கோயேன்.”
தன் மடியில் வாகாக அமர்ந்துக் கொண்டு, டிவியில் ‘டோரா புஜ்ஜி’ பார்க்கும் மகளின் உச்சியில் முத்தமிட்டாள் அன்பு. உடனே இடைசொருகலாக நிலேஷ் பேசினான். “ம்மா நான் கூட உன்னை பத்தி கேட்டுட்டு இருந்தேன்மா… பாட்டி சொல்லு!” நிலேஷின் குரல் அதட்டலாக ஒலிக்கவும் தான், அவனும் தாங்கள் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறான் என அறிந்தனர் லட்சுமியும் அன்பரசியும்.
பேசியிருந்துவிட்டு பெரியவர்கள் இருவரும் கிளம்பும் தருவாயில், லட்சுமிக்கு குங்குமம் கொடுக்க அதன் சிம்மிழை திறந்து காட்டினாள் அன்பு. தானும் எடுத்துக் கொண்டு, அன்பரசியின் நெற்றிலும் குங்குமம் வைத்தபடியே கூறினார், “அப்படியே உன்னோட வகிட்டுலயும் குங்குமம் வைக்கனும்னு தான்மா எனக்கு ஆசை.
பார்த்து முடிவு பண்ணு…. நாங்க கிளம்பறோம். வீடு பூட்டிக்கோ.” செல்லும் அவர்களையே பால்கனியில் நின்று பார்த்தாள் அன்பு. இவ்வயதில் அவர்கள் படும் மனவேதனையை எண்ணி நெஞ்சம் கனத்தது.
ஒரு பெருமூச்சுடன் இரவு சமையலை கவனிக்க ஆரம்பித்தாள். உணவை குழந்தைங்களுக்கு புகட்டி, அவர்களை உறங்கவும் வைத்தாள். இவளுக்கு தூக்கம் தான் வருவேனா என சண்டித்தனம் செய்தது. ஏதேதோ நினைவுகள் அவளை ஆக்கிரமிக்க, படுக்கையில் புரண்டபடி இருந்தாள்.
தன் அருகில் உறங்கும் நிலேஷையும் நிக்கித்தாவையும் பார்த்தபடி தன் எண்ணங்களில் மூழ்கினாள். என்னவோ திடீரென்று அவளுக்கு கல்யாண போட்டோவை காண வேண்டும் போல் இருக்க, மெதுவாக எழுந்துச் சென்று தன் அலமாரியில் அடியில் இருந்த ஃபிரேம் பண்ணிய போட்டோவை வெளியே எடுத்தாள்.
முகமெல்லாம் சிரிப்பாக அதில் இருந்த ஜீவாவை காணும் போது, தன் இதயத்தில் எதுவோ ஏற்றி வைத்தது போல் பாரமாக கனத்தது. கால்கள் வலுவிழந்து போக பெட்டின் விளிம்பில் போட்டோவை நெஞ்சோடு அணைத்தப்படி அமர்ந்துவிட்டாள்.
தான் அழுகிறோம் என்ற உணர்வு சிறிதும் இன்றி அவள் இருக்க, அவள் மகனுக்கோ தாய் படும் பாடு தெரிந்தது போலும்! அமைதியாக அவள் அருகில் வந்து அவள் தோளில் கை வைத்து, ‘அம்மா’ என அழைத்தான் குழந்தை.
திடுக்கிட்டு திரும்பினாள் அன்பு. அவள் பாட்டுக்கு மனதோடு பேசியபடி இருக்க, நிலேஷ் அழைத்தது தூக்கத்தில் இருப்பவருக்கு தண்ணீரை முகத்தில் ஊற்றியது போல் ஆனது. இவள் கண்கள் சிவந்து கன்னமெல்லாம் கண்ணீராக இருக்க, நிலேஷ் முகம் வாடியது.
தாய் அழுகிறாள் என்று புரிந்ததும், அவளின் கண்ணீரை தாமாக துடைக்க ஆரம்பித்தான் மகன். பிஞ்சு கைகள் ‘அலாதமா’ என கூறி, கண்ணீரை அகற்றவும் அவனை கட்டிக் கொண்டு மேலும் அழுவலானாள் அன்பு.
என்னவோ தன் மன பாரத்தை எல்லாம் தன் சின்ன குழுந்தையிடம் இறக்கி வைப்பது போன்ற ஒரு உணர்வு! இவள் இப்படி நினைக்க, அவளின் செல்ல கண்ணனோ அவளின் கைகளில் தவழ்ந்த புகைப்படத்தில் நாட்டம் காட்டினான். அதை அன்புவின் கைகளில் இருந்து வாங்கி, “ம்மா அப்பா நீ… நான் எங்க? நிக்கி பாப்பா காணோம்” என்று வினவினான்.
அவள் காட்டி முக பாவனைகளில் மனதை வழக்கம் போல் பறிகொடுத்து, விளக்கம் கூறினாள். “இது அப்பா அம்மா கல்யாணம் போட்டோடா குட்டி. இதுல நீங்க இருக்க மாட்டிங்க…”
“ஹோ… ஏன்??” குழந்தைகளுக்கே உரிய ஆர்வத்துடன் நிலுக்குட்டி கேட்க, “அப்புறமா இன்னோரு நாள் அம்மா சொல்றேன். போய் தூங்குடா குட்டி. ஏன் எழுந்து வந்தீங்க?” என்று கவனமாக பதில் கூறாமல் மறுகேள்வி கேட்டாள் அன்னை.
“நான் கை போட்டா நீ காணோம்மா.. பயமா போச்சு… எலுந்துட்டே…”
“சரி வா, அம்மா படுக்கறேன் தூங்கு.”
அவனை இழுத்து படுக்கையில் போட்டு தட்டிக் கொடுத்தபடி, தானும் உடன் படுத்தாள். திடீரென்று அவள் பக்கம் திரும்பி, “ம்மா நீ பீச் போட்டோ வைச்சுருக்கியா?” என நிலேஷ் கேட்கவும், குழம்பி போனாள் அன்பு.
“பீச் போட்டோவா? என்ன போட்டோபா? அம்மாக்கு தெரியலையே…”
“நீ அப்பா இருக்க போட்டோமா… பின்னாடி பீச் இருக்கும். இவ்வளோ தண்ணி!!” கைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகன்று விரித்து, கண்கள் ஒளிர சொன்னான் குழந்தை.
அப்போது தான் புரிந்தது அன்பரசிக்கு. திருமணம் முடிந்து சில நாட்களிலேயே குடும்பத்தில் அனைவரும் ஒரு நாள் கடற்கரை சென்றனர். அப்போது அன்பரசியும் ஜீவாவையும் நிற்க வைத்து, பல போட்டோக்கள் எடுத்து தள்ளினான் வினோத். அதில் மிகவும் பிடித்த ஒரு புகைப்படத்தை ஃபிரேம் செய்து அவர்கள் அறையில் மாட்டினான் ஜீவா.
ஒரு வேளை குழுந்தை அதை தான் கூறுகிறானோ? ஆனால், இன்னுமா அந்த புகைப்படத்தை தொங்க விட்டுருக்கிறான் ஜீவா? நினைக்கும் போது, அடி நெஞ்சு வரை தித்தித்தது!! வேண்டாம் சந்தோஷப்படும் முன், முதலில் தன் பையனிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வோம் என்று, கேள்விகளை அடுக்கினாள் அன்பு.
“அந்த போட்டோ அம்மாகிட்ட இல்லைடா குட்டி. நீ எங்க பார்த்த பீச் போட்டோவ?”
“உன்கிட்ட இல்லையா… அப்பாட்ட இருக்குமா. நாம வாங்கிக்கலாம்.”
“ஹோ அப்பா ரூம்ல பார்த்தியா?”
“ஆமா… அப்ப ரூம்ல பெட்கிட்ட ஒரு டேபில் இருக்கோம்ல... அங்க தான் வைச்சுருப்பாரு. நீ இப்போ போட்டோ பார்த்து அலுதல, அது மாதிரி அப்பாவும் போட்டோ பார்த்து சேட்டா இருந்தாருமா. இப்படி கட்டி பிடிச்சுபாரு போட்டோவ.”
இருக்கி அணைத்துக் கொள்ளவது போல் பாவனை செய்து, சோகமாக கூறினான் நிலேஷ். அன்புவிற்கு கேட்க கேட்க, யாரோ நெஞ்சில் வாளால் கிழிப்பது போல வலித்தது. கஷ்டப்பட்டு மகனை தூங்க வைத்து, ஜீவாவிடம் அப்போதே பேச துடித்த மனதை அடக்கினாள்.
தன்னை போலவே அவனும் அங்கு மருகிறான் என்பது புன்பட்ட மனதுக்கு ஆறுதலாக இருந்தாலும், எதற்காக இப்படி இருவரும் ஒவ்வொரு மூலையில் பிரிந்து வேதனைப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.
ஒரு வழியாக மனதை நிலைப்படுத்தி, இன்னும் ஆறே நாட்களில் வினோத்தின் திருமணம் முடிந்த உடன் ஜீவாவிடம் பேசுவது என்று முடிவெடுத்தாள். அந்த முடிவே சோர்ந்திருந்த இதயத்துக்கு மிகவும் தெம்பூட்டியது.
தான் ஜீவாவுடன் பேசி எல்லாம் சரியாக வந்ததும், அவனுடன் மீண்டும் இணைய மாட்டோமா, என அப்போதே ஏங்க துவங்கினாள். இனிய நினைவுகளுடன் தூக்கத்தை தழுவினாள். அவள் கணவன் என்ன எல்லாம் செய்ய இருக்கிறான் என அறியாமல்….