Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mezhugu Poove - 4

  • Thread Author
அத்தியாயம் – 4

அடுத்த நாள் ஜீவாவிற்கு மிக சீக்கிரமாகவே விடிந்தது போல் இருந்தது. இன்னிக்கு மட்டும் விடிஞ்சுருமே! ஹ்ம்ம்ம்… மனதிற்க்குள் ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருந்தது. காலையிலேயே சோர்வாக, இப்படியே யோசித்தல் நல்லதல்ல என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு, அவனிக்கிற்காக காத்திருந்த வேலைகளை கவனிக்க சென்றான்.

என்ன வேலைகள்? அவனின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் வேலை தான்… அதன் பின் தானே, அவன் அலுவகத்திற்க்கு கிளம்ப முடியும்? அதுவும் அவன் பெண் கூட கிளம்பிவிடுவாள்….

நிலேஷ் கிளம்புவதற்க்குள் இவன் களைத்துவிடுவான்! எனவே, வழக்கம் போல் ஆறரை ஆனவுடன், பிள்ளைகளை எழுப்பினான். “நிலு குட்டி… எழுந்துருங்க. நிக்கி குட்டி நீங்களும் தான். ஸ்கூலுக்கு டைம் ஆச்சுடா குட்டீஸ்.”

அவனின் குரல் கேட்டவுடன் நிக்கிதா எழுந்து கொண்டாள். அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு ”குட் மார்னிங்பா” என்று முத்தத்துடன் கூறிவிட்டு, தன் தமயனையும் எழுப்ப முயற்சித்தாள். “ண்ணா… குட் மார்னிங். குட் மார்னிங் ஆச்சுண்ணா. எழுண்ணா…”

தந்தையின் குரலுக்கும், தங்கையின் உலுக்கலுக்கும் எழுந்து கொள்வானா அந்த கும்பகர்ணனின் தூரத்து வாரிசு? கெஞ்சி கொஞ்சி, கடைசியில் மிரட்டி, ஒரு வழியாக, நிலேஷை எழுப்பி, இரண்டு பேரையும் குளிக்க வைத்து, தானே பள்ளிக்கும் ரெடி பண்ணினான் ஜீவா.

நிக்கித்தாவிற்க்கு தலை பின்னல் போடுவது உட்பட, அவனே எல்லாம் செய்தான்!! பிறர் குழந்தைகளையே தன் குழந்தை போல் அன்பு காட்டுபவன், தன் குழந்தைகள் மேல் தன்னிடமிருந்த ஒட்டு மொத்த அன்பையும் கொட்டி குளிப்பாட்டினான்.

நிக்கித்தாவையும் நிலேஷையும் கீழே அனுப்பிவிட்டு, இவன் குளித்து ரெடியாகி கீழே சென்றான். ஏற்கனவே சாப்பிட்டு கொண்டிருந்த அவனின் குழந்தைகளை பார்த்து சிரித்துவிட்டு, இவனும் சாப்பிட ஆரம்பித்தான்.

அப்போது தான் அவனின் தந்தை ராகவன், “ஜீவா உன்கிட்ட கொஞ்சம் பேசனும். பசங்கள ஸ்கூல்ல விட்டுட்டு வீட்டுக்கு கொஞ்சம் வா.” என்று ஒரு புதிரான குரலில் கூறினார்.

அவரின் புதிருக்கான விடையை அறிந்தவனோ, அவனின் அன்னை லட்சுமியின் முகத்தை பார்த்தான். அவரோ இவனை கண்டுக் கொள்ளாமல், நிக்கித்தாவுக்கு இட்லியை ஊட்டினார்.

ஒரு முடிவுக்கு வந்தவனாக, தந்தையிடம் தனக்கு ஆபிஸில் வேலை இருப்பதாக கூறி தப்பிக்க பார்த்தான். ஆனால், ராகவன் வேறு காரணம் முன் வைத்தார். “இன்னும் கொஞ்ச நேரத்துல, நானும் அம்மாவும் கல்யாணத்துக்கு போயிடுவோம். அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு தான் வர முடியும்.

அதனால தான் சொல்றேன் இப்போவே பேசலாம்னு. புரிஞ்சுதா?” அவனின் முகத்தை உற்று நோக்கி கூறிய விதத்தை கண்டு, ஜீவாவிற்க்கு உள்ளுக்குள் எரிச்சல் பொங்கியது. அது அடுத்து அவன் கூறிய பதிலிலும் நன்றாக வெளிப்பட்டது.

“என்ன பேச போறீங்கன்னு நல்லாவே தெரியும்பா. அதனால தான், வேலை இருக்குன்னு சொன்னேன். இப்போ சந்தோஷமா? முன்னாடி இதை பத்தி என்ன முடிவு சொன்னேன்னோ அதே தான் இப்போவும்… ப்ளீஸ்பா, என்ன இதுக்கு மேல வேற எதாவது கேட்காதீங்க.”

சொல்லிவிட்டு அவன் பாட்டிற்கு சென்றுவிட்டான், கை கழுவ. ராகவனின் முகத்தில் சொல்லோன்னாத வேதனை படிந்தது. இவன் எப்போது தன் பேச்சை கேட்பான்? இதற்கு என்ன தான் முடிவு?

கண்களின் ஓரம் கசிந்த நீரை துடைத்தபடி, பேரனின் தலையை கொதினார்…

ஜீவாவோ வேறாக யோசித்தான். கை கழுவியதோடு தன் எண்ணங்களையும் கழுவ முடிந்தால்!!?? எவ்வளவு நன்றாக இருக்கும், என யோசித்தவாரே தன் ஷூக்களை அணிந்து கொண்டு, நிலேஷை ஒரு கையிலும், நிக்கித்தாவை மறுகையிலும் பிடித்துக் கொண்டு காரில் அவர்களை ஏற்றினான்.

பிறகு, டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வண்டியை இயக்கினான். காரிலிருந்து, கைகளை ஆட்டி தன்னை பெற்றவனின் பெற்றோர்களுக்கு ‘பை பை’ என்றனர் பொடிசுகள் இருவரும்.

கார் கேட்டை விட்டு தாண்டியதும், ஆரம்பித்தனர் தங்களின் வேலைகளை! “அப்பா, எதுக்கு தாத்தா கிட்ட சண்ட போட்டீங்க?” என நிலேஷும், “ஹா, டாடி தாத்தா பாவம்… ஏன் கோபமா பேசுனப்பா?” என நிக்கிதாவும் கேட்ட கேள்விகளில், ஸ்டீயரிங் வீலிலேயே தலையை முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது அந்த அப்பனுக்கு!

மீண்டும் அவர்கள் தங்களின் கேள்விகளை கேட்டகவும், எப்போதும் தான் கூறும் பதிலையே கூறி அவர்களை சமாதானப் படுத்தினான் ஜீவா. “அது உங்களுக்கு சொன்னா புரியாதுடா குட்டீஸ். நீங்க அப்பா மாதிரி பெரியவங்களா ஆனதுக்கு அப்புறம் அப்பாவே சொல்றேன். ஓகே வா?”

“அச்சோ…… போங்கப்பா.. எப்போவும் நீங்க இதே தான் சொல்றீங்க…“

நிலேஷின் சலிப்பில் சிரித்துவிட்டு, ‘எப்பா… எப்படியோ சமாளிச்சுட்டோம்!! என்னம்மா கேள்வி கேக்குறாங்க?’ என்று தன்னை தானே தேற்றிக் கொண்டான். அவனின் நிலையை கண்டு அவனுக்கே சிரிப்பாக வந்தது.

அந்த மனநிலையுடனே தன் பிள்ளைகளை பள்ளியில் இறக்கிவிட்டு, தானும் அலுவகத்திற்க்கு பயனித்தான். வேலையில் தன்னையே மூழ்கடித்து கொண்டதாலோ, என்னவோ, அதன் பின் மூட் முற்றிலுமாக மாறியது.

மதிய உணவை சீக்கிரமாக முடித்துவிட்டு, மூன்று மணிக்கே தன் குழந்தைகளை அழைக்க பள்ளிக்கு சென்றுவிட்டான். அதன்பின், நேரம் றெக்கை கட்டிப் பறந்தது அவர்களுக்கு.

வீட்டிற்கு சென்று அவசர அவசரமாக கிளம்பி நான்கு மணிக்கே மெரினா பீச்சில் கால் வைத்தனர். அலை பொங்கும் கடலை பார்த்தவுடன், பிள்ளைகளின் சந்தோஷமும் அலை கடலென பொங்கியது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆனதால், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியது.

கடலில் அவர்களை ஒரு அரை மணி நேரம் நிற்க வைத்து விளையாடி, பிறகு நிலேஷ் கேட்ட குதிரை சவாரி, நிக்கித்தா கேட்ட திண்பன்டங்கள் என அவர்கள் கேட்டதை கொடுத்தான் அந்த அன்புத் தந்தை.

சரியாக ஐந்து மணிக்கு, அன்பரசியை அவனையும் அறியாமல் அவன் கண்கள் தேடின. அவள் தான் பங்சுவாலிட்டி பாப்பம்மாவாச்சே? ஏன் இன்னும் வரல? அவனின் எண்ணங்களையும், கண்களையும் பொய்யாக்காமல் தூரத்தில் அன்பரசி வந்துக் கொண்டிருந்தாள்.

பார்த்ததும் முகத்தை திருப்பாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், ஜீவா. ஒரு சிலருக்கு மட்டுமே வயது கூடக் கூட, மெருகும் பொலிவும் அழகுடன் கூடும்! அந்த வகையை சார்ந்தவளோ?

இருபதியெட்டு வயதிலும் ஒரு பெண் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா என்ன? இல்லை ஒரு வேளை தன் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வதால் வந்த தேஜஸ்ஸோ?

எதுவாக இருப்பினும் அவள் முன்பை விட அழகாகி இருக்கிறாள் என்பதை உணர்ந்த நிமிடம் திடுக்கிட்டு, தன் சிந்தனையை அப்போதே முடித்துக் கொள்ள முழு முயற்சி செய்தான் ஜீவா.

இவன் தன்னையே பார்ப்பதை அன்பரசியும் தூரத்திலேயே அறிந்து கொண்டாள். ஏன் இப்படி பார்க்கிறான் என சிந்தித்தப்படியே அன்பு அவனை நெருங்க, நிலேஷும் நிக்கித்தாவும் தாங்கள் கட்டிக் கொண்டிருந்த மணல் வீட்டை விட்டுவிட்டு, இவளை நோக்கி ஓடினர்.

தன்னை நோக்கி ஓடி வந்த, குழந்தைகளுக்கு ஏற்ப மண்டியிட்டு, அவளும் அவர்களை கைகளை நீட்டி வரவேற்றாள். “அம்மாமாமா” என சிறுவர்கள் முத்தமிடவும், அன்பரசியின் கண்களில் எப்போதும் போல், இப்போதும் கண்கள் குளம் கட்டியது.

இதை எல்லாம் ஒரு மூன்றாம் மனிதனாக, பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா. என்ன முயன்றும் அவனின் பொறாமை உணர்வை அடக்க முடியவில்லை. இதை அறியாமல், பிள்ளைகளை மடியிலேயே வைத்து அன்பு பேசலானாள்.

சிறிது நேரத்தில், பிள்ளைகள் இருவரும் மணலில் விளையாட வேண்டும் என்று சற்று தள்ளி சென்றுவிட, அன்பரசி ஜீவாவை நோக்கி சென்றாள். அவனோ அவளையே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘எதுக்கு இப்படி பார்க்கிறான்? கடவுளே’ என மனதுக்குள் அவனை வசைப்பாடிய படியே, அவனிடம் பேச்சை துவங்கினாள். “இந்த வாட்டி, மண்டே தான் பசங்கள கூட்டிட்டு வருவேன். மண்டே அம்மாவோட திதி. நான் லட்சுமி அம்மா கிட்ட சொல்லிட்டேன், ஆல்ரெடி.”

“மண்டே ஈவ்னிங் அஞ்சு மணிக்கு ஷார்ப்பா, பசங்க வீட்டுல இருக்கனும்!”

இவனுக்கு சாதாரணமாகவே பேச வராதா? பெரிய இவன் மாதிரி, ஆர்டர் போடுறான்! பசங்களின் எதிரில் சண்டை வேண்டாம், என முடிவெடுத்ததெல்லாம் காற்றில் பறந்தோட, அவனிற்கு காட்டமாகவே பதிலளித்தாள்.

“அவங்க எனக்கும் பசங்க தான்… எனக்கு தெரியும் எப்போ வந்து விடனும்னு! பெருசா ஆர்டர் எல்லாம் போடத் தேவையில்ல.”

அவளையே கண்களுக்குள் ஊடுறுவி, ஒரு வகையான குரலில், “நீ இன்னும் மாறவே இல்லைல? அப்படியே தான் இருக்க!” என்றான் ஜீவா…

“ஆமாம்மா… உங்கள மாதிரி அடிக்கடி மாற எனக்கு முடியாது தான்… என்ன பண்றது?”

‘அடிக்கடி மாற’ என்னும் சொல்லும் போது அழுத்தமாக கூறினாள். நக்கலும் குத்தலும் அவனிற்கு நன்றாக பதிலடி கொடுக்க வேண்டும், என்ற சிந்தித்த நொடியே வந்து ஒட்டிக் கொண்டது .

இந்த பதிலை கேட்டு இன்னும் கடுப்பானான், ஜீவா. ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, அவளை பேச்சால் அடித்தே தீருவது என்று முடிவு செய்தான்.

“ஆமா, உனக்குனு தனியா ஒரு லைஃப், இப்போ… ஃபர்ஸ்ட்ட விட இப்போ தான் சந்தோஷமா இருக்க போல…”

இதை கேட்டு ஒரு அற்பப் பார்வை வீசினாள் அன்பு. “உங்களுக்கு புரிஞ்சது அவ்வளவு தான்… இதை பத்தி மேல பேசி எதுவும் ஆகப் போறதில்ல…. எனக்கு எப்போவுமே என்னோட பசங்களோட இருக்குறது தான் சந்தோஷம்!”

புருவத்தை உயர்த்தி ஆச்சரிய குறியை காட்டினான் ஜீவா. “அப்படியா? தெரியாம போச்சே! ஆனா, பாரு கோர்ட் பசங்க உன்கிட்ட ரெண்டு நாள் தான் இருக்கலாம்னு சொல்லிருச்சு. பேட் லக் பார் யூ…”

ஆம், ஜீவாவிற்க்கும் அன்பரசிக்கும் விவாகரத்தாகி வருடங்கள் மூன்றை தொடப் போகின்றன!! அவன் கூறியதை கேட்டதும், அந்த நாட்களை வலியுடன் நினைத்து, மேலும் பிரச்சனையை பெரிது பண்ணாமல், கிளம்பலாம் என முடிவெடுத்தாள் அன்பு.

ஆனால், ஜீவா விடுவதாக கானோம்… அவன் தான் அவளின் மனதை இன்று குழி தோண்டி புதைப்பது என்ற முடிவுடன் இருந்தானே. “அப்புறம் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். கூடிய சீக்கிரம் என்னோட குழந்தைகளுக்கு ஒரு புது அம்மா வரப் போறாங்க!!”

அப்படி ஒரு எண்ணம் சிறிதும் இல்லை ஜீவாவுக்கு… ஆனாலும் அவளை காயப்படுத்தவே அவன் அப்படி சொன்னான். அவன் நினைத்தபடியே, அன்பரசியின் மனம் சில்லு சில்லாக உடைந்தது!

கண்களில் கலவரம் தோன்ற, அருவி பொழிய அது தயாராகவும் இருந்தது. மூன்று வருடங்கள் முன் உணர்ந்த வலியை இப்போதும் அவள் உணர்ந்தாள், மனதாற!!!

அவனையே பார்த்து அழுவது இழுக்கு என்று நினைத்தாளோ என்னவோ, குனிந்து அழுகையை துடைத்து கொண்டு, அவனின் முன் மீண்டும் கம்பீரமாக நிமிர்ந்து நின்றாள்.

“ஹோ, அப்படியா? ஆல் தி பெஸ்ட்! ஆனா, நீங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா குழந்தைங்கள நான் கூட்டிப்பேன்! என்ன பார்க்குறீங்க? கண்டிப்பா நான் தான் வளர்ப்பேன்!”

இதை கேட்டு பெரிதாக சிரித்துவிட்டு, அவளை பார்த்து, “நல்லா ஜோக் பண்ணுற.. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ!” என்றான் ஜீவா…

அவளும் விரைப்பாக நின்று, குழந்தைகளை கத்தி கூப்பிட்டாள். அவர்கள் வந்ததும் இரண்டு பேரையும் கைகளில் பிடித்துக் கொண்டு, அவனிடம் ஒரு வலி மிகுந்த குரலில் பேசினாள்.

“கண்டிப்பா என்னால முடிஞ்ச அளவுக்கு போராடுவேன்! எனக்கு போராட கத்து கொடுத்ததே நீங்க தான்! ஆனா, இன்னோரு வாட்டி உங்ககிட்ட வாழ்க்கை பிச்சை கேட்டு நிப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க…

அது இனிமே நடக்காது… கண்டிப்பா நடக்காது!” கூறிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள். போகும் அவளையும், “பை ப்பா” என கையசைத்து சென்ற குழந்தைகளையுமே ஒரு கைய்யாலாகத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.

தோற்று போன மனநிலையே அவனை ஆக்கிரமித்தது, முழுதாக!

****************************************************************************************************

வீட்டிற்க்கு ஆட்டோவில் வந்தாள் அன்பரசி. வந்ததும் குழந்தைகளை குளித்து உடை மாற்றி, அவர்களின் விருப்பமான கார்டூன் சேனலை போட்டுவிட்டாள். என்ன வேலை செய்த போதும், அவன் கூறிய சில சொற்களே காதுகளில் ரீங்காரமிட்டது.

“கூடிய சீக்கிரம் என்னோட குழந்தைகளுக்கு ஒரு புது அம்மா வரப் போறாங்க”

‘நிஜமாலுமே கல்யாணம் பண்ணிக்க போறானா? இல்ல சும்மா சொன்னான்னா?’ அழுது கொண்டே, மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள் இதையே நினைத்து. அவள் இவ்வளவு பாதிப்படைய காரணம் ஜீவா இதற்கு முன் இப்படி கூறியது இல்லை!

பசங்களோ அவளை பேசச் சொல்லி வற்புறுத்தினர். அவர்களின் அன்னை அழுவதை பார்க்க முடியாமல் தான்!

“ம்மா.. ஏன்மா அழறீங்க… பேசுமா!” என்று நிலேஷும், “ம்மா அதாதீங்க(அழாதீங்க). ஊச்சி போட்டாங்களா உனுக்கு?” என நிக்கித்தாவும் வினவினர். எதுவும் அவள் காதுகளில் ஏறவேயில்லை…

ஒரு வழியாக நைட் எட்டு மணிக்கு, வீட்டின் கதவை திறந்து, வினோத் உள்ளே நுழையவும், குட்டீஸ் இருவரும் குதுகளமாக அவனிடம் ஓடினர். “வினோ மாமா” என்று அவனை கட்டிக் கொண்டு, அவனிடம் பேச்சுக் கொடுத்தனர்.

அவர்களின் அம்மா அழுவதை வெற்றிகரமாக போட்டு கொடுத்துவிட்டு, அவன் வாங்கி வந்த புது விதமான பொம்மை காரில் மூழ்கி போயினர்.

சோபாவில் அழுது வடிந்த முகத்துடன், படுத்திருந்த அன்பரசியை பார்த்ததும் தான் சொல்ல வந்த சந்தோஷமான விஷயத்தை கூட மறந்தே போனான் அந்த நல்லவன்! ‘இவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படி அழுதுட்டு இருக்கா?’ யோசித்தபடியே அன்புவிடம் விரைந்தவன், அவளிடமும் அதையே கேட்டான்.

அவனிடம் கூறும் தேம்பு கூட இன்றி, படுத்தே இருந்தாள் அன்பரசி. ஆனால், விஷயம் வினோத்தை அடைந்ததும், அவன் எடுத்த முடிவோ!? அன்பரசியையும் மீறி இருந்தது!!


சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள் …ஓ

வர வர கசக்குது கசக்குது என் இளமையும் …ஹேய்

நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் …ஹா

என்னாச்சோ தெரியலையே…
 
Top