அத்தியாயம் – 10
ஆயிற்று நிச்சயத்தார்த்தம் முடிந்து நாட்களும் செல்ல, கதிரவனும் கொடிமலரும் இப்போது தான் தங்களின் காதலை மேன்மேலும் வளர்க்கத் துடங்கினர்.
திருமணத்தை மூன்று மாதம் கழித்து கோவிலில் வைத்து, அன்றிரவே ஒரு பிரபல ஸ்டார் ஹாட்டலில் ரிசெப்ஷன் வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
நிச்சயம் முடிந்து சில நாட்களிலேயே கொடிமலரின் வீட்டில் பத்திரிகை அடிக்கலாம் என முடிவு செய்து கொடிமலரின் பெற்றோர் அவ்வேலையில் இறங்க, கொடிமலர் தன் அலுவகம் செல்லா நேரங்களை கதிரவனின் ஒளிகளில் செலவழிக்க துவங்க, கதிரவனும் அம்மாலை நேரத்திற்காகவும், மலரின் வாசத்தை உணரத் துவங்கினான். நிச்சயம் முடிந்த தைரியம் இவர்களின் வீட்டினரும் இவர்களை கண்டுக் கொள்ளவில்லை.
வீட்டிற்கு திரும்பியும் ஃபோனில் குறுந்தகவல்களை பறிமாறிக் கொண்டிருந்தவர்களை வென்னிலா தான் கிண்டல் செய்தாள், “இப்போ தான பேசிட்டு வந்தீங்க? ரெண்டு பேரும் அப்படி என்ன தான் பேசுவீங்க?” என கேட்க, “அடுத்து உனக்கு ஒரு ஆள பார்த்து வைப்போம்ல. அப்போ நீயே தெரிஞ்சுப்ப!” என்று அதே கிண்டலை மறுபுறம் திருப்பினான் தமையன்.
கதிரவனின் பெரும் பேச்சு சில நாட்களாக அவன் உடல் எடையை குறப்பதில் இருக்க, கொடிமலரின் மனதில் அது சந்தேகத்தை உண்டாக்கியது. “ஏன்பா, இப்போ ரொம்ப வெயிட் லாஸ் பத்தியே பேசுறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் கூட பொறுமையா குறைச்சிக்கலாம் தான?”
மலரின் கேள்விக்கு அவளின் கண்களை பார்த்த கதிர், “இல்லமா, எனக்கு சீக்கிரமா வெயிட்லாஸ் பண்ணனும். ஆல்ரெடி, நான் மூணு கிலோ கிட்ட குறைச்சிட்டேன். இன்னும் ஒரு பத்து, பதினொரு கிலோ குறைச்சா சரியாகிடும்.” என்று தீவிரமாக பதிலுரைத்தான்.
“நிஜமா சொல்லுங்க, உங்களுக்கா இப்படி தோணுதா? இல்ல, யாராவது ஏதாவது சொன்னாங்களா? நம்ம நிச்சயம் அப்போ எதாச்சு நடந்துச்சா அந்த மாதிரி?”
கொடிமலர் தன் மனதில் தோன்றிய விஷயத்தை வெளிப்படையாக கேட்க, கதிரவன் பதறியபடி பதில் சொன்னான். “சேச்சே அப்படி எல்லாம் இல்ல. யாரும் எதுவும் சொல்லலை. என்ன அப்படி பார்க்குற, நிஜமா சொல்றேன்! எனக்கே இப்போலாம் வர நியூஸ் பார்த்து, நம்ம ஃபிட்டா இருக்கனும்னு தோணுது, ரொம்ப…. அது மட்டுமில்லாம கல்யாணத்துக்கு முன்னாடி வெயிட்லாஸ் பண்ணா கல்யாண ஃபோட்டோஸ் நல்லாயிருக்கும்ல? அத பார்க்கும் போது எனக்கும் ஒரு மோட்டிவேஷனா இருக்கும், எப்போவும்! அதனால தான் சொல்றேன்.”
கதிரவன் ஆத்மாத்திரமாக கூறியதை கேட்ட மலரும், தனக்கு தெரிந்த உடல் எடை குறைப்பு முறைகளை பற்றி விளக்க ஆரம்பித்தாள். மறுநாள் கதிரை சந்திக்க வரும் போது தன் கைப்பேசியில் ஒரு செயலியை கான்பித்து, “நீங்க டயெட் இருக்கேன் சும்மா சாப்பாடு கம்மியா சாப்பிட்டா மட்டும் போதாது. நீங்க சத்துள்ளதா சாப்பிடனும், இல்லனா உடம்பு தான் போகும். அதனால, இந்த ஆப் இன்ஸ்டால் பண்ணிக்கோங்க உங்க ஃபோன்ல.
இதுல நீங்க டெய்லி எவ்வளோ சாப்பிடறீங்களோ அத குடுங்க. உங்க வெயிட்லாஸ்க்கு எவ்வளோ சாபிடனும்னு அதுவே சொல்லும். இதை கரக்டா ஃபாளோ பண்ணிங்கன்னா அதுவே போதும்!
அதே மாதிரி டெய்லி ஜிம் கண்டிப்பா போகனும். மிஸ் பண்ணாம, சாக்கு போக்கு சொல்லாம போகனும்! முதல்ல இதுலாம் ஒரு மாசம் ஒழுங்கா பண்ணுங்க, உங்களுக்கே ரிசஸ்ட் தெரியும்.” என்று விளக்கமாக கூறியவளை உற்று கவனித்ததும் மட்டுமல்லாமல், அவள் சொன்னதை வழிப்பற்றவும் செய்தான் அவளின் காதலன்.
கொடிமலருக்கு அது பல மடங்கு சந்தோஷத்தை குடுத்தது என்றால், மாலதிக்கோ அது புகைச்சலயும் கவலையும் குடுத்தது.
“என்னடா ரெண்டு தோசை போதும்குற, மத்தியானம் வரைக்கும் எப்படி இது பத்தும்? உடம்ப குறைக்குறேன்னு, கெடுக்குற நீ!”
“ம்மாமா, நான் தான் பதொனொரு மணிக்கு சாப்பிட, நட்ஸ், பழம் எல்லாம் எடுத்துட்டு போறேன்ல? எனக்கு பெருசா பசிக்கலமா. ஒரு மணிக்கு லன்ச் சாப்பிட்டுவேன், விடுங்க.”
கதிரவன் கூறியது எதுவும் மண்டையில் ஏறவில்லை மாலதிக்கு. “அப்போ உனக்கு பசிக்குது தான? ஏன்டா இவ்வளோ கஷ்டப்படுற? உடம்பு குறைக்கனும்னு யாரு கேட்டா இப்போ? ஏன், மலர் எதுவும் சொன்னாலா?”
மகனின் மேல் பாசத்தில் ஆரம்பித்தாலும், மருமகளின் மேல் உள்ள பொறாமை எட்டிப் பார்ப்பதை தன் அன்னையால் தவிர்க்க முடியவில்லை என உணர்ந்தாள் அங்கே நின்றிருந்த வென்னிலா.
ஆனால், தாயின் பேச்சில் எதையும் உணராமல், கதிரவனும், “அதெல்லாம் இல்லமா. நான் தான் கம்மி பண்ணனும் இருக்கேன். அவகிட்ட இதை பத்தி சொல்லும் போது தான், இந்த ஆப் பத்தி சொன்னா. இதுல பாருங்க, எவ்வளோ சாப்பிட்டோம்னு போட்டா, மத்த ரெண்டு வேளைக்கு எவ்வளோ இன்னும் சாப்பிடலாம்னு அதுவே காட்டும். அது யூஸ் பண்றது ரொம்ப நல்லா இருக்குமா. ஒரு மாசம் ஒழுங்கா டயட் இருக்கேன், பார்க்கலாம்…” என்று தன் கையில் இருக்கும் கைப்பேசியை காட்டி சொன்னவன், பின் அலுவகத்துக்கு கிளம்பிச் செல்ல, மாலதியின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது!
‘எப்படி இவ கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே அவளுக்கு ஏத்த மாதிரி பையனை ஆட வைக்குறா? இவனும் கொஞ்சமும் யோசிக்காம அவ சொல்றத அப்படியே செய்யறான்? இன்னும் கல்யாணம் ஆச்சுனா நம்மல எல்லாம் மதிக்க மாட்டான் போல!’
இதே மாலதியின் மண்டையில் ஓடிக் கொண்டிருக்க, அவரின் சகோதரிகளும் அதற்கு தூபம் ஏற்றினர். அவர்கள் குத்திக் காட்டிய மற்றொரு விஷயமும் நெருஞ்சி முள்ளாய் மாலதியின் மனதில் குடாய, அதை எடுத்து எறிய அவர் சென்ற இடம் கொடிமலரின் வீடு! அதுவும் அவர் சென்றது சொல்லாமல் கொள்ளாமல் தனி ஆளாக!
அவர் காலை பத்து மணி அளவில் சென்றதால், ராஜன், கவிதா டிவியில் மூழ்கியிருக்க, நடேசன் ஓய்வெடுத்திருந்தார். வார நாள் என்பதால், கொடிமலர் அலுவகம் சென்றிருந்தாள்.
காலிங் பெல் அடிக்கவும், திரும்பி பார்த்தால் மாலதி நின்றிருந்தார் தனியாக. சட்டென்று எழுந்த கவிதா, “வாங்க வாங்க…” என்று கூறி, வாசல் கேட்டை திறந்து விட, ராஜனும் தன் பங்கிற்கு, “வாங்க சம்மந்தி” என்று அழைத்தார்.
மாலதியும் முகத்தை இயல்பு நிலையிலேயே வைத்துக் கொண்டு, “கோவிலுக்கு போனேன், அதான் அப்படியே பேசலாம்னு வந்தேன்.” என்று கூற, இருவரும் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.
“உட்காருங்க, காபி போட்டு எடுத்துட்டு வரேன்.” கவிதாவும் காபி கொண்டு வர, மாலதியும் அதை குடித்து முடித்து, “மருமக ஆபிஸ் போயிட்டாளா? எப்போ டெய்லி வருவா?” என்று ஆர்வமாக வினவ, கவிதாவும் சந்தோஷமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். பின் வரப் போகும் பூகம்பத்தை அறியாமல்.
சில சாதாரண பேச்சுக்களுக்குப் பின், மெதுவாக வந்த விஷயத்தை ஆரம்பித்தார். “எங்க சொந்தக்காரங்களுக்கு எல்லாம் இவன் நிச்சயத்தார்த்த விஷயம் தெரிஞ்சு ஒரு வாரமா ஃபோன் பண்ணி விசாரிக்குறாங்க. எல்லோர்கிட்டயும் பேசி பேசி முடியல…” மாலதி கூறியதை சிரித்த முகத்துடனே கேட்டனர் ராஜனும், கவிதாவும். சம்மந்தி எப்போதும் பெருமை பேசுபவர் என்று அறிந்ததால் அவரின் கூற்றை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை இருவரும்.
ஆனால், மெதுவாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றினார் மாலதி. “எல்லோரும் கேக்குறது கல்யாணம் கோவில்லயான்னு தான். அது கூட இப்போலாம் நடக்குறது தான்… பொண்ணுக்கு நாப்பது பவுன் தான் போடுறாங்களான்னு கேக்குறாங்க…. என்னால பதில் சொல்லவே முடியல! நீங்க எங்ககிட்ட பாதி கல்யாண செலவை கேட்டீங்கனா சொல்ல முடியும்?”
சாதாரணமாக ஆரம்பித்தாலும், அங்கலாய்பாக முடித்து தன் மனத் தாங்கலை காண்பித்தார்.
கோபத்தின் பாவனை ராஜனின் முகத்தில் வந்துப் போக, கவிதாவோ சிறிது ஆவேசமாக, “அது தான் எல்லாம் பேசி முடிவெடுத்துட்டோமே. இப்போ எதுக்கு நீங்க அதை பத்தி பேசுறீங்க?” என்று கேட்க, மாலதியோ அதற்கு சிறிதும் யோசிக்காமல் பரிகாசமாக, “ஆமா, அப்போ நீங்க நிச்சயத்தார்த்தமாவது கொஞ்சம் கிராண்டா பண்ணுவீங்கன்னு நினைச்சு ஒத்துக்கிட்டேன். இப்போ நாங்களும் தான் பொண்ணுக்கு பத்து பவுன் ஈடு கட்டிருக்கோம். ஐம்பதாயிறத்துக்கு புடவை எடுத்துக் கொடுத்தோம். என்னோட வீட்டு சைட்ல எல்லாம் கேக்குறாங்க, நீயே பத்து பவுன் நகை ஈடு கட்டிருக்க, அவங்க நாப்பது பவுன் தான் போடுறாங்கலான்னு. என்னால என்ன சொல்ல முடியும் சொல்லுங்க?” என்று சிறிதும் கூச்சமின்றி வினவினார்.
ராஜனுக்கு இப்போது பொறுமை பறந்துவிட, “ஏங்க, நீங்க இவ்வளோ போடுங்கன்னு நாங்க கேட்டோமா? நீங்களே தான் இவ்வளோ செய்யறோம்னு சொன்னீங்க. இப்போ அதையே சொல்லி காட்டுறீங்களே? இதுல நாங்க என்ன பண்ண முடியும்…” என்று கோபாவேசமாக தன் வருங்கால சம்மந்தியை கேட்டார்.
ஆனால், இதை எல்லாம் மாலதி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. “அப்போ நான் சொல்லக் கூட கூடாதா? இது என்ன வம்பா போச்சு? எனக்கு இருக்கிறது ஒரே பையன், அவன் கல்யாணம் எனக்கு முக்கியம் இல்லியா, ஒரு அம்மாவா நான் பேசுவேன். என்னை தான எல்லோரும் கேக்குறாங்க?”
மாலதியின் கூற்றை கேட்டு மேலே பேசப் போன ராஜனின் கால் முட்டில் கை வைத்து அவரை அவசரமாக தடுத்தார் கவிதா. பின், தான் பார்த்துக் கொள்வதாக கண்களாலே அவரிடம் சமிஞ்சை செய்து, பிரச்சனை பண்ணவே வந்திருக்கும் சம்மந்தி பக்கம் திரும்பினார்.
“ஏங்க கொஞ்சம் நிதானமா பேசுவோமா? நீங்க முதல்ல கேக்குறதுக்கு முன்னாடியே நாங்களும் இது தான் செய்ய முடியும்னு டிரெக்ட்டா சொல்லிட்டோம். ரெண்டு குடும்பமும் உட்காந்து பேசி முடிச்ச விஷயத்தை இப்போ குறையா சொன்னா நாங்க என்ன செய்ய முடியும்? நாங்களும் ஒரு பிளான் பண்ணி கல்யாண வேலை பார்த்துட்டு இருக்கோம். கொஞ்சம் எங்க சைட்டும் யோசிச்சு பேசுங்க…”
கவிதாவின் வேதனை மிகுந்த குரலொன்றும் மாலதியை அசைக்கவில்லை! ஆனால், உடனே உரத்த குரலில் பேசாமல் மீண்டும் தன் மனதின் ஆதங்கத்தை கொட்டினார்.
“அப்போ பேசினோம் தான், இல்லைன்னு சொல்லல. ஆனா, யோசிச்சு பார்த்தா கல்யாண செலவு கூட ஒரு நாள் கூத்து சரி அதுக்கு செலவு பண்ண வேணாம்னு விட்டுடுவோம். ஆனா, நகை பத்து பவுன் கூட போடுறது உங்க பொண்ணுக்கு தான? நாங்க ஒன்னும் அத எடுத்துக்க போறதில்லையே… என்ன இருந்தாலும் உங்க பொண்ணுக்கு சொத்தா தான் இருக்கப் போகுது…. நானும் ஒரு பொண்ணு வைச்சிருக்கேன், அவளுக்கும் அம்பது பவுன் போடனும்னு எப்பவோ டிசைட் பண்ணிட்டோம், தெரியுமா?”
மாலதி இந்த முறை தன் மருமகளுக்காக யோசிப்பது போல் பேச, கவிதாவிற்கு இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்று புரிந்து போனது! ஆனால், அவரும் நிச்சயம் முடிந்தப் பின் சூட்சமமாக வந்து நிற்கும் சம்மந்தியின் ஆசைக்கு இணங்கவும் மனமில்லை.
ஒரு பெருமூச்சுடன் தன் கணவனை திரும்பிப் பார்க்க, ராஜனோ கீழே தரையை வெறித்த வண்ணம் உட்கார்ந்திருக்க, கவிதா மீண்டும் சம்மந்தியின் பக்கம் திரும்பி ஒரு உறுதியான குரலில், “எங்களால முடிஞ்சதை எங்க பொண்ணுக்கு நாங்க செய்வோமுங்க.
இப்போ நாங்களே மேல பத்து பவுன் போடுறோம்னா எங்க பொண்ணு ஒத்துக்க மாட்டா… அதனால இந்த விஷயத்தை நீங்களும் விட்டுருங்க, நாங்களும் மறந்துடறோம். அதான், ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது…” என்று சொல்ல, ராஜனும் தற்போது தன் சிந்தனையில் இருந்து மீண்டவர் தலையசைத்து அதை ஆமோதித்து, “ஆமாங்க, ரெண்டு பேரும் முதல்ல ஒத்துக்குட்ட முக்கியமான விஷயம் அப்படியே இருக்கட்டும். இப்போ மாத்துனா என்னோட பொண்ணு கண்டிப்பா திட்டுவா, சண்டை போடுவா.
கதிர் தம்பிக்கும் இதுலாம் பிடிக்காதுன்னு நினைக்கிறேன். எதுக்கு இப்போ தேவையில்லாம சண்டை சொல்லுங்க… வேணாம், இந்த பேச்சை இப்படியே விட்டுறுவோம். என்ன சொல்றீங்க?” என்று தன்மையாக கேட்டார்.
மாலதிக்கு மனதில் வந்த ஆத்திரத்துக்கு என்ன பேசுவது என ஒரு கணம் தெரியவில்லை. கண்முன் தெரியாத கோபம் என்பார்களே அப்படிப்பட்ட கோபம் வந்தது அம்மணிக்கு. மறைமுகமாக இவர்கள் என்ன நம்மை மிரட்டுகிறார்களா? அதை அவரின் முகத்தை வைத்தே புரிந்துக் கொண்ட, ராஜன் தம்பதியர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அதற்குள் பொறுக்காமல், விருட்டென்று சோபாவில் இருந்து எழுந்தார் மாலதி.
எழுந்த வேகத்தில் வாசலை நோக்கி அவர் செல்ல, கோபத்தில் செல்கிறாரே என்று ராஜனுக்கு தோன்ற, “எதுவா இருந்தாலும் நம்ம பேசிக்கலாம். நீங்க ஒண்ணும் கோபப்பட வேணாம்.” என்று சமாதானமாக கூறினார். மாலதிக்கு அது எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல் ஆனது!
“அதான் நீங்களே எல்லாம் பேசி, மறந்துற சொல்லிட்டீங்களே? இதுக்கு மேல பேச என்ன இருக்கு, நான் வரேன்.” மாலதி கொந்தளிப்புடன் வார்த்தைகளை உதிர்த்து, செருப்பை மாட்டிக் கொண்டு படிக்கட்டில் திடுதிடுவென இறங்கினார்.
அவர் செல்லும் வழியை பார்த்துக் கொண்டிருந்த கவிதாவுக்கும், ராஜனுக்கும் தான் மனதில் பாரம் கூடியது… வருங்கால சம்மந்தியின் கோபம் என்னென்ன விளைவுகளை காட்டப் போகின்றதோ?
******************************************************************************************
இது எதையும் அறியாத கொடிமலர் அந்த வாரயிறுதியில் தன்னவனுடன் ரிசப்ஷனுக்கு ஷாப்பிங் செய்ய பேசிக் கொண்டிருந்தாள். “சண்டே அப்போ கண்டிப்பா போறோம் தான? லெஹெங்கா கொஞ்சம் கம்மி பஜ்ஜெட்ல இருக்குற கடை பிரியங்கா சொல்லிருக்கா. அங்க போயிட்டு பார்க்கலாம் முதல்ல, ஓகே வா?” கொடிமலர் கூறியதை கேட்டு, “ஹ்ம்ம்ம், ஓகே மினு. அப்படியே ஈவ்னிங் பீச் போலாமா?” என்று மனதில் இருந்த ஆசையை தேக்கி குரலில் வழிய வைக்க, அதிலிருந்து தப்ப முடியாமல் மலரும் சரியென்றாள்.
எல்லாம் பேசிவிட்டு தன் அலுவக காரிடாரில் இருந்து தன் இருக்கைக்கு செல்ல முயன்றவளை தடுத்தது அவளின் கைப்பேசி. அது எழுப்பிய ஒலியில் யார் அழைப்பது என பார்த்தால், புதிய எண்ணாக இருக்க, யார் என யோசனையின்றி அசைட்டையாக, “ஹலோ” என்றாள்.
மறுப்புறம் சில நிமிட மௌனம் எதிர்லொலித்தது. பின் மீண்டும் கொடிமலர், “ஹலோ கேக்குதா, யாரு பேசுறது?” என்று வினவ, மெதுவாக ஒரு கட்டையான ஆண் குரல் கேட்டது. “ஹலோ நான் ஈஸ்வர் பேசுறேன் மலர்.”
கொடிமலரின் மனதில் எவ்வித சிந்தனையுமின்றி, “யார் ஈஸ்வர்?” என்று கேட்க, மறுப்புறம் சில நொடி மௌனம் மீண்டும்!
பின் மெதுவாக பதில் வந்தது.
“நான் தான்மா ஈஸ்வர், உன்னோட அப்பா…”
வந்து விழுந்த வார்த்தைகளின் தாக்கம் பெரியதாகவே இருந்தது கொடிமலரிடம். மனதில் ஆயிரத்தெட்டு கேள்விகளும், வசவுகளும் ஒரு சேர தோன்றிய நொடி, அவளின் உதடுகள் அவளை அறியாமல் பதில் உரைத்தன.
“ஹலோ சாரி ராங் நம்பர், என்னோட அப்பா பேரு, ராஜன்!”
பதில் சொல்லிய மறு நொடி வந்த அழைப்பையும் துண்டித்து விட்டாள். அவளின் மனக்குமுறல்கள் உடம்பிலும் எதிரொலிக்க அவளின் உள்ளங்கை சிறிது நடுக்கம் கண்டது அப்போது…. ஆனால், பின் வரப்போகும் பல நிகழ்வுகளுக்கு இதுவே தொடக்கப் புள்ளி என, கொடிமலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!