அத்தியாயம் - 11
கொடிமலருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் விளங்கவில்லை. தன்னை பெற்ற தந்தையின் அழைப்பை கைப்பேசியில் துண்டித்த போதும், மூளை பல வகையான யோசைனையில் ஆழ்ந்தது.
எப்படி அவருக்கு நம் கைப்பேசியின் எண் கிடைத்தது? அப்படியே கிடைத்தாலும் எப்படி அவரால் இப்போழுது அழைத்து பேச முடிந்தது? எங்கிருந்து வந்தது இந்த தைரியம்? இத்தனை நாட்களாக நிம்மதியாக இருந்து இப்போழுது தன் கல்யாணத்தால் வந்தது வினை!
இதை தன்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை எனும் போது எப்படி தன் பெற்றோர்கள் தாங்கிக் கொள்வர்? இவர் பேசவில்லை என யார் இப்போழுது அழுதது? எல்லாம் நம் நேரம் என நொந்துக் கொண்டவள், மீண்டும் அழைத்தது தன் மணாளனை தான்.
மறுப்பக்கம் கதிரவன் இப்போழுது தானே பேசி வைத்தது என நினைத்தபடி கொடிமலரின் அழைப்பை எடுக்க, அவளோ சடசடவென பெய்யும் மழையை போல், தன் மனக்குமுரலை கொட்டத் துவங்கினாள்.
“இப்போ உங்க மாமா கூப்பிட்டு இருந்தாரு. எப்படி அவருக்கு என்னோட நம்பர் கிடைச்சுது? நீங்க ஏதாவது குடுத்தீங்களா?”
கதிரவனுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை அவள் சொன்னவற்றில். “எந்த மாமா, என்ன சொன்னாங்க? ஒண்ணுமே புரியல, ஒழுங்கா சொல்லு, மினு…”
“ஹ்ம்ம்ம் எங்கேஜ்மெண்ட் அன்னிக்கு புதுசா வந்து எல்லாருக்கும் ஷாக் குடுத்தாரே, அந்த மாமா தான். எனக்கு இப்போ கால் பண்ணி, நான் தான் உன்னோட அப்பா பேசறேன்னு சொல்றார். என்ன நினைச்சுட்டு இதை எல்லாம் பண்றாங்க எனக்கு புரியல, நிஜமா….”
கொடிமலர் கூறியதை கேட்டு சிறிது திடுக்கிட்டான் கதிரவன். இது என்ன புது பிரச்சனை? இருக்கிற பிரச்சனைகள் போதாதா?
கதிரின் சிந்தனை ஓட்டத்தில் அவன் மௌனத்தில் நிலவ, அதை உணர்ந்த மலருக்கு இன்னமும் கோபம் ஏறியது.
“ஹலோ, உங்ககிட்ட சார் பேசறேன். ஏதாவது சொல்வீங்களா இல்லையா?” மலரின் கர்ஜனையில் கதிரின் வாய் தானாக வார்த்தைகளை உதிர்த்தது. “மினு எனக்கு நீ சொல்றது புதுசா இருக்கு. அவரு என்கிட்ட கேக்கல உன்னோட நம்பர, அப்படியே கேட்டு இருந்தா கூட நான் குடுத்துருக்க மாட்டேன், அட்லீஸ்ட் உன்கிட்ட கேக்காம குடுத்துருக்க மாட்டேன். இவருக்கு என்னோட வீட்டுல இருந்து தான் நம்பர் போயிருக்கனும்னு நினைக்கிறேன். நான் வீட்டுல பேசிட்டு உங்கிட்ட சொல்றேன் மினு.”
“என்னது நினைக்குறீங்களா…. உங்க வீட்டுல இருந்து தான் நம்பர் போயிருக்கனும், இது உங்களுக்கு புரியலயா? தயவு செஞ்சு என்னை டென்ஷன் பண்ணாம உங்க வீட்டுல பேசுங்க.”
மலருக்கு அளவுக்கதிகமான கோபம் என புரிந்தது கதிருக்கு. அதனால், அவனும் அவளை மேலும் கோபப்படுத்தாமல் தன் வீட்டிலும், மாமாவிடமும் கண்டிப்பாக பேசுவதாக பதிலளிக்க, அதை கேட்டு கொடிமலரின் கண்களில் நீர் கோர்த்து, தொண்டை துக்கத்தில் அடைத்தது.
“கொஞ்ச நாளா தான் எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிருக்குன்னு அம்மா, அப்பா, தாத்தா எல்லாம் சந்தோஷமா இருக்காங்கப்பா… ப்ளீஸ், உங்க மாமாவ எங்களை எதுவும் டிஸ்டெர்ப் பண்ண வேணாம்னு சொல்லிடுங்க. ப்ளீஸ்….”
“ஹே மினு ப்ளீஸ்மா நீ அழாத, நான் பார்த்துக்கறேன். ப்ளீஸ், அழாதடா…”
கதிரவனுக்கும் மிகவும் வேதனையாக போனது. நம் வீட்டினரால் இவளுக்கு மேலும் பிரச்சனை வரக் கூடாது என முடிவெடுத்தது அப்போழுது தான்.
பிறகு அவளை சமாதானப்படுத்தி அழைப்பை வைத்தவனுக்கு, வீட்டிற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என இருந்த அலுவக பணிகளை முடிந்த மட்டும் முடித்துவிட்டு, வீட்டிற்கு சென்றான்.
வீட்டில் அவன் நுழைந்த வினாடி கவனித்துவிட்டான், வென்னிலாவின் முகம் சரியில்லை என. ஹால் சோபாவில் சோகமே உருவமாக அமர்ந்திருந்தவளை உலுக்கி என்ன ஆகிற்று என கண்களாலேயே வினவினான்.
தங்கையோ ‘ஒன்றும்மில்லை’ என தலையாட்ட, அவளின் அருகில் அமர்ந்து, “என்ன விஷயம் சொன்னா தான தெரியும், சொல்லு நிலா.” என பணிவாக கேட்க, அவளோ தங்களின் பெற்றோர்களுக்குள் மீண்டும் இன்று பெரிய சண்டை என சொன்னாள்.
அதை கேட்டவுடன் கதிரவனுக்கு மேலும் சோர்வும், கோபமும் ஒரு சேர மனதில் ஏறியது. என்னடா இது நாம் ஒன்று நினைத்தால் வீட்டில் வேறு நிலவரமாக இருக்கிறது? தன் மாமாவிற்கு யார் மலரின் நம்பர் கொடுத்திருப்பார்கள் என தெரியும், அவன் அன்னையை தவிர வேறு யாராக அது இருக்க முடியும்?
அதை அவரிடம் பேசிவிடலாம் என நினைத்தால் இன்று வீட்டில் ஏற்கனவே சண்டையாக மூவரும் முகத்தை தூக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனாலும், மலரின் கண்ணீரும் அவன் காதுகளில் மீண்டும் ஒலிக்க, சரி கண்டிப்பாக பேசியாக வேண்டும் என்ற கட்டாயம் தோன்ற, அவன் அன்னையின் அறைக்கு விரைந்தான்.
அங்கே அவரோ கண்களை மூடியபடி படுத்து இருந்தார். அவரின் அருகில் வந்ததும் கைகளை பற்றி, “ம்மா, கொஞ்சம் பேசனும்மா…” என்று தன்மையாக தான் ஆரம்பித்தான்.
தனக்கும் கணவருக்கும்மான சண்டையை பற்றி பேசப் போகிறான் என்று நினைத்த மாலதி, “நான் இப்போ எதுவும் பேசுற மூட்ல இல்ல. இப்போ தான் உங்கப்பா கூட பேசிட்டு வந்தேன், அதுவே என்னால முடியல. என்னை தனியா விடுடா போதும்.” என்று கட்டையான குரலில் பதிலுரைத்தார்.
“இல்லம்மா, அப்பா பத்தியில்ல, வேற விஷயம் தான் பேசனும். ஈஸ்வர் மாமாக்கு மலரோட நம்பர் நீங்க தான் குடுத்தீங்களா?”
கதிரவனின் நேரடியாக தன் அன்னையின் முகத்தை உற்று நோக்கி கேட்டான். ஆனால், அதை அவர் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று உணர்த்தும் பொருட்டு, “ஆமா, நான் தான் குடுத்தேன். அதுக்கு என்ன இப்போ?” என்று விரைப்பாக பதில் கூற, இவரை என்ன செய்வது என்று யோசிக்க துவங்கினான் கதிர்.
ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன், “ஏன்மா இப்போ எதுக்குமா அவருக்கு மலரோட நம்பர் குடுத்தீங்க? இது தேவையில்லாம அவங்க குடும்பத்துக்குள்ள பிரச்சனை பண்ற மாதிரி தானமா? கொஞ்சமாச்சும் யோசிச்சு பேசுங்க, யோசிச்சு பண்ணுங்கன்னு சொன்னா கேக்கறீங்களாமா?” என்று வேதனையோடு ஆனால் அவர் செய்த தவறை புரிய வைக்கும் முயற்சியில் வினவினான் மகன்.
அவ்வளவு தான் மாலதியின் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது! காலையில் தன் சம்மந்தி நகை போட முடியாது என திட்டவட்டமாக கூறியதை தன்னை அவமானப் படுத்தியதாகவே நினைத்தார் மாலதி. அதன்பின், தன் வீட்டுக்காரரிடம் பத்திரகை வைப்பது பற்றி பேசியதும், அங்கே ஒரு பிரச்சனை வந்தது.
அது முடிந்தும் முடியாமலும் வென்னிலா இருவரையும் பிரித்து அவரவர் அறைகளுக்கு அனுப்ப, இங்கே வந்து படுத்தால் மகன் வந்து திட்டி கேள்வி கேட்கிறான், அவன் வருங்கால மனைவிக்காக! அவளுக்காக மட்டுமா? அவன் பேசுவது அவரை அவமான படுத்திய அவனின் மாமனார், மாமியாருக்காகவும் தான் என்று உணர்ந்தவர், பொங்கிய எரிச்சலை தன் குரலில் வழிந்தோட விட்டார்.
“என்னடா ரொம்ப தான் கோபப்படுற? நான் நம்பர் குடுத்ததுனால அவங்க வீட்டுல எதுக்கு பிரச்சனை வரனும்? புரியலடா… தேவையில்லாம என்னை பேச வைக்காத சொல்லிட்டேன்.”
தாயின் கோபம் கதிரின் கோபத்தை பல் மடங்கு பெருக்கியது! அவரின் பேச்சில் இருந்தே தெரிந்தது தன் அன்னை எல்லாம் தெரிந்தே தான் செய்திருக்கிரார் என. அதுவே அவன் கோபம் பெருகியதற்கு காரணம்!
மகனின் முகம் மாறுவதை கண்டவர் மேலும் எரிச்சல் கொள்ள, இப்போழுது கத்தத் துவங்கினார். “என்னடா ஆபிஸ்ல இருந்து வந்ததும் நேரா என்னை கேள்வி கேட்க வந்துட்ட. அப்படி என்ன பொல்லாத குத்தம் பண்ணிட்டேன்னு இவ்வளோ கோவம் வருது உனக்கு? சொல்லுடா…”
மாலதியின் குரலுக்கு கதிர் பதில் அளிப்பதற்குள் வென்னிலா அவரின் அறை வாயிலில் நின்றிருந்தார். சில நொடிகளிலேயே சுகுமாரனும் வென்னிலா உடன் நிற்பதை கண்ட கதிரவன், “ஏன்மா எனக்கு கோவமே வரக் கூடாதா? உங்களுக்கு மட்டும் தான் வரனுமா?” என்று மிடுக்காக பதில் கேள்வி வைக்க, சுகுமாரன் மகனின் கோபத்தை பார்த்து அவன் அருகில் வந்து கையை வைத்து, “என்னடா பிரச்சனை?” என்று வினவினார்.
கதிரவன் சுருக்கமாக கொடிமலருக்கு ஈஸ்வர் அழைத்தது, மாலதி தான் நம்பர் குடுத்தார் என சொல்லி முடித்தான். இதை கேட்டதும் எப்போதும் சாந்தமாக இருக்கும் வென்னிலா கூட சூடாகிப் போனாள்.
“ஷப்பா, முடியல…. அம்மா, ஏன்மா உங்களுக்கு இந்த வேலை? அண்ணி வீட்டுல தான் தெளிவா சொல்லிட்டாங்கல, எங்களுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னு. நீங்க எதுக்கு இப்போ அண்ணியோட நம்பரை அவங்கள கேக்காமயே குடுத்தீங்க மாமாக்கு?”
சுகுமாரனுக்கும் கோபம் தலைக்கேரியது கதிர் கூறியதை கேட்டு. “எத்தனை வாட்டி சொல்றது உனக்கு, உங்க அண்ணனுக்கும் மலருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. அவளோட அப்பா, ராஜன் சார் தான். அந்த பொண்ணுகிட்ட கால் பண்ணி உன்னோட அப்பா தான் பேசறேன்னு சொன்னா எப்படி இருக்கும் அவளுக்கு? பாவம் மலர், டேய் மலர்கிட்ட பேசுடா, நானும் பேசனும்னா கூட சொல்லு, பேசறேன் அவகிட்ட…”
மனைவியை திட்டினாலும் உடனே கோபம் தனிந்து, மருமகளுக்காக பரிதாபப் படவும் செய்தார் சுகுமாரன். வீட்டினரின் பேச்சை கேட்டு அழுகை பொத்துக் கொண்டு வந்தது மாலதிக்கு! ஆம், அவரின் கோபம் எல்லாம் எப்போழுது அழுகையாக மாறியது என்று உணராமல் ஒரு கேவலுடன் தன் ஆதங்கத்தை கொட்டினார்.
“ஆமா எல்லாரும் என்னையே சொல்லுங்க. எங்கண்ணன் தான் அவள நிச்சயதார்த்துல பார்த்ததுல இருந்து பேசனும் போல இருக்குமா, ரொம்ப கெஞ்சி கேட்டாரு. என் கிட்ட போன் நம்பர் இருக்குறப்போ குடுக்காமயா இருக்க முடியும்? என்ன தான் இருந்தாலும் அவங்க ரத்தம் கொஞ்சமாச்சும் துடிக்கும் இல்லயா…
இருவது வருஷம் முன்னாடி என்ன நடச்சுன்னு தெரியல… ஆனா, இப்போ எனக்கு பேசனும் போல இருக்குமான்னு கேட்டாரு. சரின்னு குடுத்தேன். அவளுக்கு பேசப் புடிக்கலைன்னா பேசாம போக சொல்லு.
அதுக்கு, எதுக்கு நம்பர் குடுத்தீங்கன்னு உன்கிட்ட சண்டை போட்டாளா... நீயும் அம்மான்னு கூட பார்க்காம எப்படி எல்லாம் கோபப்படுற? கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளோ பேசுற என்னை…. கல்யாணம் ஆச்சுனா…. போடா, எனக்குன்னு யாருமே இல்ல இந்த வீட்டுல… நான் ஏன் தான் இருக்கேன்னோ, கடவுளே!”
மாலதியின் அழுகையும், புலம்பல்களும் சரியாகவே வேலை செய்தது! சுகுமாரனும், வென்னிலாவும் இவர் திருந்தப்போறது இல்லை என்று உணர்ந்து தங்களுக்குள் பார்வை பரிமாற்றம் செய்துக் கொள்ள, மகனோ அன்னை கூறியதை கேட்டு வேதனையும் துக்கமும் மனதில் பொங்க, “என்னமா இப்போ எதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க? யாருமே இல்லன்னுலாம் சொல்றீங்க, என்ன பேச்சுமா? நான் அப்படியா மாறிடுவேன்னு நினைக்குறீங்க?
நான் ஒண்ணும் சும்மா கேக்கலமா, மலர் இன்னிக்கு ரொம்ப கஷ்டப்பட்டா அதான் உங்ககிட்ட கேட்டேன். இப்போவும் நீங்க பேசும் போது அவங்க ரத்தம்னு எல்லாம் சொல்றீங்க. அந்த பேச்சே வேணாம்மா…
மலரோட குடும்பம் பொறுத்த வரைக்கும், மாமா நம்ம வீட்டு சைட்ல ஒரு ரிலேட்டிவ், அவ்வளோ தான். அதனால, அப்படியே விடுங்க… இதுக்கு மேல இதை பத்தி பேச வேணாம்.
நானும் மாமாகிட்ட பேசறேன், மலர கூப்பிட்டு பேசாதீங்கன்னு. இத இப்படியே விட்டுட்டா எல்லாருமே நிம்மதியா இருக்கலாம்மா. என்ன ஓகே வா?” என்று சமாதானக் கொடியை பறக்க விட்டான் மகன். எப்படியோ தன் மகனுக்கு தன் மேல் இன்னும் சற்று அக்கரை இருக்கிறது என நினைத்து, மாலதியும் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தார்.
மாலதியும் உடனே முருங்கை மரம் இறங்க காரணமில்லாமல் இல்லை. காலையில் கொடிமலரின் பெற்றவர்களிடம் பேசிய விஷயத்தை அவர்கள் மறந்து விடுவதாக கூறி இருந்தனர். அவர்கள் பேசியதில் யாருக்கும் இதை சொல்லப் போவதில்லை என்று புரிந்துக் கொண்டார் மாலதி. ஆனால், ஒரு வேளை அவர்கள் மலரிடமோ, கதிரிடமோ, அல்லது தன் கணவனிடமோ விஷயத்தை கூறினால், தன் மேல் மீண்டும் அனைவரும் பாய்வர்.
அதனாலேயே அவரும் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, இரவு உணவை தயாரிக்க சென்றார்.
சுகுமாரன் மகனின் பேச்சின் முடிவுலேயெ அறையில் இருந்து வெளியேறி இருக்க, வென்னிலாவோ தன் புத்திகெட்ட தமயனை பார்த்து நொந்துப் போனாள்.
நிலாவின் முகத்தில் தெரிந்த கேலியான வடிவத்தில் கதிரவன், “என்ன அப்படி பார்க்குற?” என்று கேட்க, நிலாவோ, “ஆமா, இப்போ யார் தப்பு பண்ணா, யாரு சமாதானம் பண்ணான்னு கொஞ்சம் யோசி! ஒவ்வொரு வாட்டியும் இதே மாதிரி பண்ணிட்டு அழுதாங்கன்னு நீ விடுவ, நான் விடுவேன். அப்பா கூட விடுவாரு. ஆனா, அண்ணி விட மாட்டாங்க…
அவங்க சும்மா விடனும்னு அவசியமும் இல்ல! இதையெல்லாம் கொஞ்சம் யோசின்னா!” என்று நெற்றியில் ஆள்காட்டி விரலில் தட்டி அண்ணனை யோசிக்க சொல்லி, அறையில் இருந்து வெளியேறினாள்.
ஆனால், வென்னிலா கூறியதை கேட்ட கதிரவனின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. முதன் முறையாக தன் எதிர்காலத்தை எண்ணி, தன் மண வாழ்க்கையை எண்ணி மனதில் கவலை ரேகைகள் படர்ந்தன!
******************************************************************************************
அங்கே கொடிமலரின் வீட்டிலோ ஒருவரிடம் ஒருவர் விஷயங்களை மறைத்துக் கொண்டு கபடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
மாலதி கோபமாக சென்றதும் ராஜனின் கவலைகள் பெரு மடங்காக உயர்ந்தன. “என்ன கவி இப்படி பேசிட்டு போறாங்க, இவங்க வீட்டுல நம்ம பொண்ணு எப்படி நிம்மதியா வாழுவா?”
கவிதாவிற்கும் அதே கவலை தான், ஆனால் அவர் வேறு விதமாகவும் யோசித்தார். “கொஞ்சம் கஷ்டம் தான் இவங்களோட வாழுறது, அதுவும் இவங்க மாமியாரா இருக்கிறது, கண்டிப்பா நம்ம பொண்ணு சமாளிச்சு தான் ஆகனும்! வேற வழியில்ல. ஆனா, நம்ம பேசுனதும் ரொம்ப கட் அன் ரைட்டா பேசிட்டோம். முடியாதுன்னு மட்டும் சொல்லிருக்கனுமோ?
அதான், இப்படி கோவிச்சுட்டு போறாங்க…. சரி விடுங்க, அவங்க பேசினது தான் தப்பு முதல்ல. அதனால, அவங்க இதை பத்தி அவங்க வீட்டுல சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்படி அவங்க சொல்ற மாதிரி இருந்தா அவங்க புருஷனை, இல்ல பையனை கூட்டிட்டு வந்திருக்க மாட்டாங்க? யாருக்குமே தெரியாம வந்திருக்காங்கன்னா, இந்த நகை போடுறது இவங்க மட்டும் கேக்குறது.
நம்ம மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையன்னா இருக்காப்புல, இவங்க சொல்றதை எல்லாம் பெருசு பண்ண வேணாம், விடுங்க…”
கவிதாவின் பெரிய விளக்கத்தை கேட்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்த ராஜன் பின், “இவங்க வந்து போன விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். அப்பாக்கோ, மினுக்கோ தெரிய வேணாம். பொண்ணு கண்டிப்பா கதிர்கிட்ட சொல்லி பிரச்சனை பண்ணுவா. அதனால, விட்டுடலாம்.” என்று முன் எச்சரிக்கையாக கூறினார். கவிதாவும் அதற்கு தலையாட்ட அன்று அலுவகம் முடிந்து சீக்கிரமாக வந்த பெண்ணிடம் எதுவும் சொல்லவில்லை இருவரும்.
பெற்றவர்கள் தனக்காக நினைத்ததையே அவர்களுக்காக நினைத்த மலர், தனக்கு ஈஸ்வர் தொலைப்பேசியில் அழைத்ததை சொல்லவில்லை! ஆம், இது தேவையில்லாமல் பெற்றவர்களை கவலை கொள்ள வைக்கும். தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையால், பெற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. அதனால், எதுவாகினும் தானே சமாளிப்பது என்று துணிந்து முடிவெடுத்தாள் கொடிமலர்!
ஆனால், பலதரப்பட்ட யோசனையில் விழுந்த இதயம் தனக்கு சிறிது ஓய்வு தேவை என கூற, சீக்கிரமாக அலுவகத்தில் இருந்து புறப்பட்டவள், வீடு வந்ததும் உடைமாற்றி கீழே நடக்கும் ஸும்பா கிளாஸுக்கு சென்றாள்.
உடலுக்கு நல்ல வேலை குடுக்கக் குடுக்க, நம் மனது சிறிது தேவையற்ற எண்ணங்களில் இருந்து ஓய்வு கொள்ளும் அல்லவா? அதையே இன்று பின்பற்றியவள், அந்த ஸும்பா வகுப்பின் முடிவில் தனக்காக தன்னவன் வெளியே காத்திருப்பான் என அறியவில்லை!
தனக்காக் காத்திருந்தவனை கண்டதும் உள்ளம் மலர்ந்தாலும், காலையில் நடந்த நிகழ்வுகளின் இறுக்கம் சிறிது நிலவவே செய்தது கொடிமலரின் முகத்தில். அதை எல்லாம் மறைத்து, “என்னப்பா பார்க்க வரேன்னு சொல்லவே இல்லையே. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?” என்று வினவ, கதிரோ அவளின் முகம் வழியே அகத்தை ஆராய முற்பட்டான்.
“ஹல்லோ உங்ககிட்ட தான் பேசறேன் சார், எங்க இருக்கீங்க?”
கொடிமலர் கதிரின் முகத்தின் முன்னே கைகளை ஆட்டி, அவனின் நினைவுகளை கலைக்க, கதிரும் ஒரு பெருமூச்சு விட்டு, “உட்காந்து பேசுவோமா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.
மலர் சரியென தலையாட்டியதும் தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பென்சில் அமர்ந்து கதிரின் முகத்தை பார்த்த வண்ணம் இருந்தாள் மலர். சில நொடிகள் கழித்து பேச ஆரம்பித்தான் கதிர்.
“எனக்கு எங்கயிருந்து ஆரம்பிக்கறது தெரியல. பெர்ஸ்ட், உன்கிட்ட சாரி சொல்லிக்கறேன். எங்கம்மா தான் மாமாகிட்ட நம்பர் குடுத்திருக்காங்க. கேக்காம குடுத்தது தப்பு தான், அவங்ககிட்டயும் இது பத்தி பேசிட்டேன். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறேன். பட், நிறைய வாட்டி இந்த மாதிரி நடக்குது அதுக்கு என்ன பண்றதுன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்.
எங்கம்மா, அப்பா, நிலாவோட கேரக்டர் எனக்கு தெரியும். உன்னோட கேரக்டரும் எனக்கு இப்போ ஒரளவுக்கு புரியுது. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு, இல்ல இல்ல… நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோஷமா லைப் போகனும்னு தான் பார்க்கறேன். எங்கம்மா பண்ற சின்ன சின்ன விஷயம் இப்படியெல்லாம் முடியும்னு நான் நினைக்கல. நம்ம லைப்பும் எல்லார மாதிரியும் சண்டையிலயே போயிடுமோனு பயமா இருக்கு மினு! ரொம்ப பயமா இருக்கு….”
கதிர் கூறியதை கேட்டு மலருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், அவன் தன் முகத்தை உற்று நோக்கி, பதிலை எதிர்பார்க்கிறான் என்று உணர்ந்தவள், அவன் உள்ளங்கையை தன் கைகளில் ஏந்தி, “ஏன்பா இப்போவே ரொம்ப யோசிச்சு குழப்பிக்குறீங்க? பயம் எல்லாம் வேண்டாம், நம்ம லைப் நம்ம பார்த்துக்கலாம். எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்!” என்று நம்பிக்கை ட்னானிக்கை ஊற்ற, கதிரின் முகமோ அதை உண்டு முகம் சுழிக்கும் குழந்தையின் முகத்தை கொண்டது.
“உனக்கு புரியல மினு, சரி விடு…” கதிர் விட்டேத்தியாக கூறியதும், மலர் விடாமல் மேலும் அவனை தூண்டினாள். “அப்படியெல்லாம் விட முடியாது, நீங்க எதுக்கு பயப்படுறீங்க, முதல்ல? கல்யாணத்துக்கு அப்புறம் உங்கம்மாக்கும், எனக்கும் சண்டை வர போகுதுனா?
அத பத்தி உங்களுக்கு டௌட்டே வேணாம், கண்டிப்பா சண்டை வரும். எனக்கு அது நல்லாவே தெரியுது, உங்களுக்கு புரியலயா?”
மிகவும் சாதாரணமாக சண்டை வருவதை கூறிய மலரை வினோதமாக பார்த்த கதிரின் கைகளை தட்டியவள், பின் மீண்டும் தன் விளக்கத்தை தொடர்ந்தாள்.
“எந்த வீட்டுலப்பா மாமியார், மருமக சண்டையில்லாம இருந்திருக்கு? அவங்க எல்லோரும் ஒண்ணாயில்லையா? என்னோட கல்யாணமான ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்த்துருக்கேன். என்னதான் நல்லா பார்த்துக்கிட்டாலும், மாமியார் மாமியார் தான்! மருமக மருமக தான்!
எப்படி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போறாங்கன்னு தான் பார்க்கனும். ஆனா, இதுல ஒன்னு ஒத்துக்கறேன்.
இந்த சண்டை வந்தா நடுவுல மாட்டிட்டு முழிக்கறது பசங்க தான். அத நீங்க தான் ஹாண்டில் பண்ண கத்துக்கனும்! முக்கியமா நமக்குள்ள எந்த சண்டையும் வராம பார்த்துக்கனும். என்ன புரிஞ்சுதா?”
தன் பெரிய உரையை கேட்டு முகத்தில் பேய் அடித்தது போல் அமர்திருந்தவன், மலரின் கேள்வியில் பொங்கிவிட்டான். “நீ என்ன எல்லாமே ரொம்ப கேஷுவலா, நார்மலா சொல்ற? உனக்கு பயமாவே இல்லயா?” என்று நக்கலாக கேட்டவனை தன் பதிலால் மேலும் வெறுப்பேற்றினாள் கொடிமலர்.
“நான் ஏன் பயப்படனும்? தப்பு செஞ்சா தான் பயப்படனும், தப்பே செய்யாம சும்மாவே மாமியார நினைச்சு நான் ஏன் பயப்படனும்?”
“ஹ்ம்ம்ம்ம், உனக்கு இன்னும் எங்க வீட்டு நிலைமை முழுசா தெரியல. அதான் இப்படி பேசுற, போகப் போக நீயே தெரிஞ்சுப்ப…”
எதிர்காலத்தை எட்டிப் பார்த்தவன் போல் கதிரவன் தத்ரூபமாக சொல்ல, மலரோ அவனை கேலி செய்யும் மனநிலைக்கு சென்றாள்.
“சரி தெரிஞ்சுக்கறேன். ஆமா, ஸ்டார்டிங்ல பேசும் போது ஏதோ உன்னோட கேரக்டரும் ஓரளவுக்கு புரியுதுன்னு சொன்னீங்க. இன்னும் என்னை பத்தி ஃபுல்லா புரியலயா?”
தன் மணாளனை சிரிக்க வைக்க எண்ணி அவனை பார்த்து புன்னகையுடன் கேட்க, அவனின் முகமும் சிரிப்பை தத்தெடுத்தது. அது குடுத்த உற்சாகத்தில் தன்னவளை தன்னருகே இழுத்தவன், மெல்லிய குரலில், “எங்க நீ இவ்வளோ தூரமா இருந்தா எப்படி புரிஞ்சுக்குறது? இப்படி கிட்ட வந்தா தான் என்னவாம்?” என்று காதலாக உருகிய குரலில் பதிலுரைத்தான்.
தன்னவனின் முதல் காதல் தொடுதலில் அவன் அருகே மூச்சு விடவும் மறந்து, அந்த வானில் இருந்த பூரண நிலவின் ஒளியிலும், தன்னவனின் காதலிலும் முழுதாக மலர்ந்தாள் கொடிமலர்!