Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Minnalin Kathire - 2

  • Thread Author
மின்னலின் கதிரே – 2

கொடிமலரின் முறைப்பிற்க்கான அர்த்தத்தை கணிக்க முயன்றான் கதிரவன். ‘ரொம்ப தான் பார்க்கிறோமோ? ஓவரா முறைக்குறா! இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் டெரக்டா முறைக்க மாட்டாளே’

கதிர் மலரை முதலில் பார்த்தது, அவள் வீடு குடிப்புகும் போது தான். தன் நண்பனின் வீட்டிற்கு செல்ல அவளின் பிளாக்கில் மின்தூக்கிக்காக காத்திருக்கும் போது, இரு கரங்களிலும் பெரிய பைகளை எடுத்து வந்தாள் மலர்.

அப்போழுது சாதாரணமாக தான் பார்த்தான்…. கொடிமலரும் பார்த்தவுடன் ஈர்த்துவிடும் பேரழகியோ, பெயருக்கெற்றார் போல் கொடி இடை கொண்டவுளுமில்லை! ஐந்திரையடி உயரம், அதற்க்கெற்ற எடை கொண்ட மாநிறமான பெண். முகத்தில் பருக்கள் வந்து சென்றதன் அடையாளமும், ஒன்றிரண்டு பருக்களும் எப்போதும் இருக்கும். கதிரும் ‘புதுசா குடி வராங்க போல’ என நினைத்து, பெரிதாக அவளை கண்டுக் கொள்ளவில்லை.

அவளின் பெயர் தெரிய வந்தது, அவள் அந்த அப்பார்ட்மென்டின் ‘யூத் கமிட்டி’யின் வாட்ஸ்ஸப் குழுவில் இணைந்த போது. அவளை சந்தித்து சிறிது நாட்கள் கழித்து, அந்த குழுவின் தலைவர் அவளை அதில் இணைத்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

“பி பிளாக் பிளாட் 14 – கொடிமலர் புதுசா குடி வந்துருக்காங்க. யூத் கமிட்டி வெல்கம்ஸ் யூ மலர்.”

அதன்பின் சிறிது நாட்கள் கழித்து பார்த்தது, பொழுதுப்போக்கு கூடத்தில் தான். கதிரின் ஜிம்மிற்க்கு பக்கத்தில் தான் மலரின் ஸூம்பா கிளாஸ். அடிக்கடி சந்திக்க நேர்ந்ததில் அவளின் மிகைப் படுத்தாத தோற்றம் தான் முதன் முதலாக கவனிக்க வைத்தது! ஸூம்பா கிளாஸ் நடக்கும் இடமோ கண்ணாடிச் சுவர்களாக இருக்க, ஜிம்மில் இருந்து பார்த்தால் நன்றாக தெரியும். அதுவே வசதியாக போயிற்று கதிருக்கு.

இதனை முதன்முதலில் கவனித்தது அவன் நண்பன் ராகுல் தான். “என்னடா வரற்து என்னமோ ஜிம்முக்கு. ஆனா, பார்வையெல்லாம் பக்கத்து கிளாஸ்ல இருக்கு? யார பார்க்குற?”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா”

“நம்பிட்டேன், நீயா சொல்லுவ ஒரு நாள். அப்போ பார்த்துக்கறேன்.”

‘அப்படி ஒரு நாள் வரவே வராதுடா.’ மலரின் பக்கம் தன் எண்ணங்களின் போக்கை உணர்ந்தாலுமே, கதிரவன் அதை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்ல முயலவில்லை.

அதற்க்கு முதல் காரணம் அவன் உருவ தோற்றம்! தன் உடல் பருமனால் எப்பொழுதும் மனதில் ஒரு கூச்சம் நிலவும். இதனால், கொடிமலர் பற்றி நினைக்கும் போது, அவளுக்கு பதில் அவனின் தாழ்வுமனப்பான்மையே மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தது!

இரண்டாவது காரணம், அவன் வீட்டில் ஏற்க்கனவே அவனுக்கு பெண் பார்க்க துவங்கி வருடம் மூன்றாயிற்று! அதனால், தன் சமக்கால பெண்களின் எதிர்பார்ப்புகள் நன்றாக தெரியும் அவனுக்கு.

அதில் மலர் மட்டும் விதிவிலக்கா என்ன? தன் திருமணத்தை பற்றி நினைத்து பார்த்தால் இப்போது எல்லாம் பெருமூச்சு தான் வந்தது கதிருக்கு.

எந்த பெண்ணுடனும் பெண் பார்க்கும் படலத்தை தாண்டி அடுத்த கட்டத்திற்க்கு செல்லவில்லை.

சில பெண்களின் ஜாதகம் பொருந்தி நேரில் சென்று பார்த்திருக்க, இவன் உருவத்தை மேலும் கீழும் பார்த்தே இவனுக்கு விடையை கூறுவர்.

ஒன்றிரண்டு முறை இவன் அம்மாவிற்க்கு பெண்ணை பிடிக்காமல் போயிற்று. “பெண் கிடைப்பதே கஷ்டமா இருக்கு”, என சுகுமாரன் எடுத்துக் கூறியும், மாலதி தன் பிடியில் இருந்து வரவில்லை. கணவன் மனைவிக்குள் பிரச்சனை தான் அதிகமாயிற்று.

சரி பொறுமையாக காத்திருக்கலாம் என்றால், அவன் வயதோ யாருக்காகவும் காத்திருக்காமல் எளிதாக முப்பதை தொட, அவனுக்குமே தமக்கு கல்யாணம் விரைவில் நடக்காது என தோன்ற துவங்கியது.

பெண் கிடைக்கவில்லை என்பதை விட, இவனின் தலையாய பிரச்சனை இவனின் தாய் மாலதியின் பொலம்பல்களும் வேண்டுதல்களும் தான்! “பையனுக்கு வரன் பார்க்குறோம். உங்களுக்கு தெரிஞ்ச இடமிருந்தா சொல்லுங்க” என கடவுளிடம் ஆரம்பித்து பார்க்கும் நபர்களிடமெல்லாம் சொல்லும் அளவுக்கு சென்றதும், இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க தன் தங்கையின் திருமணத்தின் பக்கம் ‘டேக் டைவர்ஷன்’ போர்ட் வைத்தான் கதிரவன்.

வென்னிலாவிற்க்கு திருமணம் முதலில் செய்யலாம் என சொன்னதை கேட்டதும் அவள் பொங்கி விட்டாள். “ஹே உனக்கு பொன்னு கிடைக்கலனா ஏன்டா என்னை இழுத்து விடுற? எனக்கு இன்னும் வேலை கூட கிடைக்கல! நானெல்லாம் வேலைக்கு போயிட்டு ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணிப்பேன்.”

ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்தவளை எரிக்கவா புதைக்கவா என முறைக்க மட்டும் தான் முடிந்தது அண்ணன்காரனுக்கு.

இவன் வாழ்க்கையே இப்படி வாழையிலையில் ஊற்றிய ரசத்தைப் போல எந்த பக்கம் செல்லுகிறது என தெரியாமல் சென்றுக் கொண்டிருக்க, அதை கொடிமலரின் பக்கம் செலுத்த அவனுக்கு முற்றிலும் விருப்பமில்லை!

ஆனால், அவனின் விருப்பத்தை மாற்றியமைக்க கொடிமலரே அவனிடம் பேசினாள். அதுவும் சில நாட்களிலேயெ!

******************************************************************************************

‘டிங்’

கொடிமலரின் கைப்பேசி ஒலியெழுப்ப, மீட்டிங் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த ராஜன், “மினு உனக்கு ஃபோன்” என்று கூப்பிட, சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த மலர் தன் தோழி பிரியங்காவின் அழைப்பை எடுத்தாள்.

“சொல்லுடி…. இல்ல நான் கிட்சன்ல இருந்தேன், மெசேஜ் பார்க்கல…. ஈவ்னிங் அஞ்சு மணிக்கா? ஹ்ம்ம்ம், சரி போலாம். நான் வந்துருவேன். சரிடி பை.”

கைப்பேசியை மேசை மேல் வைத்து, “ஈவ்னிங் அஞ்சு மணிக்கு யூத் கமிட்டி மீட்டிங் இருக்காம்பா, நியூ இயருக்கு என்ன பிளான்னு டிஸ்கஸ் பண்ணுவாங்க போல, பிரியங்கா தான் கூப்டா” என்று தந்தையிடம் பகிர, “ஆமாம்மா, இப்போ அஸோஸியேஷன் மீட்டிங்ல கூட அதை பத்தி பேசுனாங்க” என்று பதிலளித்தார் ராஜன்.

ஐந்து மணியும் ஆகிற்று, மலரும் சமூகக் கூடத்திற்கு விரைந்தாள். அனைவரும் இன்னும் வந்திருக்கவில்லை, ஏனவே அங்கங்கே சிறு குழுக்களாக எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர்.

கொடிமலர் இங்கே வந்ததிலிருந்து அவளுக்கு தெரிந்த ஒரே தோழி பிரியங்கா தான். பள்ளிக் காலத்தில் ஒன்றாக படித்து, பின் கல்லூரி சேரும் போது பிரியங்கா வீடு மாறி செல்ல, தொடர்பு சிறிது சிறிதாக துண்டித்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வரும்போது தான் மலருக்கு தன் தோழியும் இங்கே இருக்கிறாள் என தெரிய வர நட்பு மீண்டும் துளிர்விட்டது.

ஆகையால், தன் தோழியின் அருகே சென்று, “ஹே ரொம்ப நேரமாச்சா வந்து?” என்று பேச்சை தொடங்கினாள் மலர். “இல்லடி இப்போ தான் வந்தேன்.” பிரியங்காவும் தன் பதிலை அளித்து, பக்கத்தில் இருந்த மற்ற பெண்களை அறிமுகப் படுத்தினாள் கொடிமலருக்கு.

“இவ எனக்கு கீழ் வீட்டு பொண்ணு, பேரு வென்னிலா. எம்.பி.ஏ. முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கா. இவ அவளோட க்ளோஸ் பிரெண்ட் ஹேமா. ரெண்டு பேரும் காலேஜ்மேட்ஸ். ஹேமா உன்னோட பிளாக் தான். இவ என்னோட ஸ்கூல் கிளாஸ்மேட் கொடிமலர். ஐ.டி.ல வொர்க் பண்றா.”

தனிச்சையாக உதட்டில் முறுவல் ஒன்று குடியேர, “ஹலோ” என இருவருக்கும் பொதுவாக சொன்னாள் கொடிமலர். வென்னிலாவும் சம்பிர்தாயமாக ஒரு தலையசைப்பை கொடுக்க, அவர்கள் மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தனர்.

எல்லோரும் அப்போது சமூகக் கூடத்தினுள் செல்ல இவர்களும் சென்றனர். அச்சமயம் தான் கதிரவன் இவர்களை பார்த்தது. ‘என்ன நிலாவோட இவ இருக்கா?’

ஆங்கில புத்தாண்டை எப்படியெல்லாம் வரவேற்பது என கலந்துரையாடல் ஆரம்பிக்க, எல்லோரும் எதில் பங்கேற்கலாம் என விவாதிக்க துவங்கினர்.

“நிலா நீ நல்லா மெஹந்தி போடுவல்ல, இந்த வாட்டி தனியா அதுக்கு ஸ்டால் எல்லாம் போடுறாங்களாம், அதுல பேர் குடுக்கறியா?”

ஹேமா கேட்ட கேள்விக்கு வென்னிலா ஒரு நிமிடம் யோசிக்க, “எதுக்கு யோசிக்குற நிலா?” என்று பிரியங்காவும் வினவ, “இல்லக்கா, எனக்கு ஓகே தான், அம்மாக்கு தான் நான் மெஹெந்தி போடுறது அவ்வளவா பிடிக்காது. அதான் யோசிக்கறேன்.” என பதிலளித்தாள்.

அவளின் பதிலை கேட்டு மலருக்கு ஆச்சரியமாக போயிற்று. “ஏன் உங்க அம்மாக்கு பிடிக்காது?” தனிச்சையாக கேள்வியும் வந்தது அவளிடமிருந்து.

“இல்ல இப்போல்லாம் நெறைய பேர் அதையே ப்ரோஃபஷனா பண்றாங்கல, எங்கம்மாக்கு நானும் அப்படி போயிடுவேனோன்னு பயம், அதான்.”

‘ஏன் அப்படிப் பண்ணா தான் என்ன?’ மனதிலிருந்தது வார்த்தையாக வடிக்காமல் வேறு விதமாக கேட்டாள் கொடிமலர். “உனக்கு உங்கம்மாகிட்ட பயம், அப்படித்தான?”

“பயமெல்லாம் இல்ல, வீட்ல தேவையில்லாம பிரச்சனை ஆகுமே யோசிச்சேன்.”

மேலும் இவ்விஷயத்தை ஆராய்வது தனக்கு அவசியமற்றது என உணர்ந்து, பிரியங்காவிடம் தாங்கள் என்ன செய்யலாம் என ஆலோசித்தாள். “ஹே நம்ம ஈவன்ட் ஹோசிட்டிங் பண்ணலாமாடி?”

“ஹ்ம்ம்ம் நானும் அதான் நினைச்சேன், ஏதாவது கேம்ஸ் நடத்துறது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற மாதிரி பார்க்கலாம்.”

பிரியங்காவின் பதிலை கேட்டு நிலாவின் முகம் இன்னமுமே யோசனையில் விழுந்து, பின் முடிவெடுத்தவளாய் தன் தமையனை அலைப்பேசியில் அழைத்தாள், தூரத்தில் தெரிந்தவனை பார்த்துக் கொண்டே.

“ஹே உன்னோட லெப்ட் சைட்ல பாரு, தெரியறனா? இங்க கொஞ்சம் வா…” தான் மட்டும் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் வென்னிலா. கதிருக்கோ எதற்க்கு அழைக்கிறாள் என தெரியாமல், போவதா வேண்டாமா என குழப்பம். கூடவே மலர் வேறு இருக்கிறாளே?

வென்னிலா மீண்டும் கையசைத்து கூப்பிட, மேலும் தாமதிக்காமல் அவர்களின் அருகில் சென்றான் கதிரவன். அவன் வருவதை அருகில் வரும்போது தான் கவனித்தாள் கொடிமலர்.

‘ஹே இவனா? இவன் எங்க நம்மகிட்ட வரான்?’

எண்ணங்கள் தாறுமாறாக ஓட, கண்களை வேறு பக்கம் திருப்பினாள். கதிரவன் அருகில் வந்ததும் சாதாரணமாக பிரியங்காவிடமும், ஹேமாவிடமும் நலம் விசாரித்துவிட்டு, “எதுக்கு கூப்பிட்ட?” என்று தங்கையின் பக்கம் திரும்பினான்.

மறந்தும் மலரின் பக்கம் திரும்பவில்லை, அவன். பிரியங்கா தான் மலரை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். “அண்ணா இவ என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட் கொடிமலர். பி பிளாக்ல குடிவந்திருக்கா.”

அப்போது தான் புதிதாக பார்ப்பது போல் முகத்தை பாவனையாக மாற்றி, “ஹலோ” என கூறினான் கதிரவன். ‘இவன் தான் நம்மல அடிக்கடி பார்த்தானா’ என சந்தேகமே வந்தது கொடிமலருக்கு! தன் அதிர்ச்சியை விழுங்கிவிட்டு முறுவலுடன் தலையசைத்தாள்.

“நீ எந்த ஈவண்ட்ல பேர் குடுக்கப் போறண்ணா?” வென்னிலாவின் கேள்விக்கு கதிரவனன் ஏதுவும் சொல்லாமல் முழித்தான். “இந்த ரெண்டு அக்காவும் கேம்ஸ் கண்டக்ட் பண்றதுல பேர் குடுக்க போறாங்கலாம். நீயும் அதுலாம் நல்லா பண்ணுவல? நீயும் ஜாயின் பண்ணிக்கோ.”

மேலும் வென்னிலா சொன்னதை கேட்டு, திடுக்கிட்டது இருவர். ஒன்று சொல்லவே தேவையில்லை என்னும் அளவுக்கு அப்பட்டமாக பார்த்த கதிரவன். மற்றொன்று கொடிமலர். ‘இதான் சான்ஸ்ன்னு கூடவே வந்துடுவானோ?’ அவளின் கேள்வியை பொய்யாக்கும் வண்ணம் வந்தது கதிரின் பதில்.

“இல்ல நிலா, நான் இந்த வாட்டி ஃபுட் அரேன்ஜ் பண்றதுல போறேன்னு ஆல்ரேடி ராகுல் கிட்ட சொல்லிட்டேன். சோ, நான் அதுல ஜாயின் பண்ணிக்கறேன்.”

சொல்லிவிட்டு அவன் நகர முற்பட, வென்னிலாவோ “ஹே மெஹெந்திக்கு தனியா ஸ்டால் இருக்கும் போல, நான் அதுக்கு பேர் குடுக்கலாம்னு இருக்கேன்.” என்று உறுதியான குரலில் கூறினாள்.

“எதுக்கு இப்போ எங்கிட்ட சொல்ற? ஓ, அம்மாகிட்ட கதிருக்கு முன்னாடியே தெரியும்னு சொல்லிடலாம்னு!.”

கதிர் சரியாக யூகித்து கேட்க, வென்னிலா ஆமோதிப்பாக தலையசத்தாள்.

“ஹ்ம்ம்ம் ஓகே, பை.” வென்னிலா பதிலளித்ததும், அங்கிருந்து நகர்ந்து தன் தோழர்களுடன் ஐக்கியமாகி விட்டான் கதிரவன். அவன் வென்றப்பின்பும் வென்னிலாவின் முகம் சரியாகவில்லை.

“ஏண்டி நீ டல் ஆகுற? அதான் அண்ணா எதுவும் சொல்லல?” ஹேமாவின் கேள்விக்கு, “அண்ணா எப்போவுமே எதுவும் தடுத்ததில்ல. உனக்கே தெரியும்ல? அவன் எப்படியோ அதே மாதிரி தான் என்னையும் நடத்துவான். நான் யோசிச்சது அவனுக்காக தான்.

இந்த மாதிரி குருப் கேம்ஸ் எல்லாம் நிறைய தெரியும். ஆனா, எல்லார் முன்னாடியும் வந்து ஷோ மாதிரி பண்ணனும்னா ரொம்ப யோசிக்கும். கொஞ்சம் ஷை டைப். எல்லாரும் என்ன சொல்லுவாங்களோன்னு. அதான் இப்போவாவது ஏதாவது பண்றானான்னு கேட்டு பார்த்தேன்.” என்று சோகமாக பதிலளித்தாள் நிலா.

“நீ முடிஞ்சா உங்கண்ணாவ கவின்ஸ் பண்ணு. உனக்காக ரொம்ப பார்ப்பாருன்னு சொன்ன, அப்போ நீயும் அவருக்காக பேசிப்பாரு நிலா.”

பிரியங்கா சொன்னதை கேட்டு வென்னிலாவும், “சரிக்கா, பார்க்கறேன்.” என்று பதிலளிக்க, “ஏதோ நம்மளால முடிஞ்சது” என சிரித்துக் கொண்டே சொன்ன பிரியங்காவிடம் எதையும் சொல்ல முடியவில்லை கொடிமலரால்!

******************************************************************************************

நாட்கள் வேகமாக செல்ல, டிசம்பர் முப்பத்தியோன்றாம் தேதி வந்தே விட்டது. காலையிலிருந்து கொடிமலர் பரப்பரப்பாக காலை உணவை முடித்துக் கொண்டு, சமூகக் கூடத்திற்கு கிளம்பினாள். அங்கே சென்று இன்றைய ஆட்டத்திற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் பிரியங்காவுடன் சேர்ந்து.

அவசரமாக நடக்கும் போது தான் கவனித்தால் தன் முன்னால் கதிரவன் நடப்பதை. இந்த இரு வாரங்களில், கதிரைப் பற்றி மேலும் தெரிய வந்தது மலருக்கு. எல்லாம் வென்னிலாவின் மாயம். இந்த புத்தாண்டு ஏற்பாடுகளில் பங்கெடுக்கும் போது பேச்சுக்கள் எழ, வென்னிலாவின் பேச்சு பாதி அவளின் தமயனைப் பற்றியே இருந்தது.

மேலும் கதிரும் இப்போழுது கொடிமலரை பார்ப்பதில்லை. அவளும் அதை பெரிதாக பொறுட்படுத்தவில்லை. அதனால், தற்பொழுதும் அவனை கவனிக்காமல் விறுவிறுவென நடந்தாள் மலர்.

அப்போழுது கதிரவன் தன் பேன்டிலிருந்து கைப்பேசியை எடுக்க, கூடவே சில காகிதங்களும் வெளியே விழுந்தன. அது தெரியாமல், தன் பாட்டுற்கு நடந்தான் கதிரவன். காற்றில் பறந்த காகிதங்களை ஓடிச் சென்று எடுத்து பார்த்தாள் மலர். அனைத்தும் அன்றிரவு உணவுக்கு குடுத்த முன்தொகைக்கான ரசீதுகள்.

காகிதத்திலிருந்து பார்வையை முன்னே செலுத்தினால் கதிரவனை காணவில்லை. அதை பையில் வைத்து, சமூகக் கூடத்தினுள் சென்றதும் முதலில் அவள் கண்ணில் பட்டது கதிரவன் தான். அங்கே நடந்துக் கொண்டிருந்த அலங்கார வேலைகளை மேற்பார்வை பார்த்த ராகுலுடன் பேசியப்படி நின்றிருந்தான் அவன்.

நேராக அவனை நோக்கி நடந்தாள் கொடிமலர்.

“ஹாய் கதிரவன்”

தன் பெயரை உச்சரித்தவளை அப்போது தான் திரும்பி பார்த்து, அதிர்ச்சியை உள்வாங்கி, பின் சாதாரணமாக முகத்தை வைத்து, “ஹலோ” என்று பதிலளிக்க பெரும் பாடுப்பட்டான் கதிர்.

“உங்க பாக்கேட்ல இருந்து இந்த பேப்பர்ஸ் விழுந்துச்சு, கவனிக்காம வந்துட்டீங்க.”

மலர் நீட்டிய ரசீதுகளை வாங்கிப் பார்த்து ஆச்சரியப்பட்ட கதிர், “ரொம்ப தாங்க்ஸ். ஏல்லாமே அட்வான்ஸ் பண்ண ரெசிப்ட்ஸ். தாங்க்ஸ் அகேயின்…” என்று உள்ளார்ந்த நன்றியை உரைத்தான்.

“டேய் எல்லாம் ஒழுங்கா ரெசிப்ட்ஸ் வெச்சுக்கோன்னு என்கிட்ட சொல்லிட்டு நீ பறக்க விட்டு வந்திருக்க” நண்பனுக்கே உரிய இலக்கணத்திற்கு பங்கம் வராமல் ராகுல் கதிரை வார, மலரின் பார்வை அவனின் மேல் விழுந்தது.

கதிரவனே இரண்டு பேருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். “ஹோ இவனை கேம்ஸ் நடத்த சொல்லி வென்னிலாகிட்ட கொளுத்தி போட்டது நீங்க தானா? ரெண்டு பேருக்கும் ரொம்ப சண்ட தெரியுமா?” ராகுல் துளியும் இங்கிதமில்லாமல் கேட்க, சற்றும் சளைக்காமல் கொடிமலரும் பதிலளித்தாள்.

“வென்னிலாகிட்ட பேசினது என்னோட ஃபிரண்ட் பிரியங்கா, ஏன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?”

“எனக்கு என்ன பிரச்சனை? இவனுக்கு தான் பிரச்சனை. நீ பேசிக்கோடா கதிரு. எனக்கு டேகரேஷன் வொர்க் இருக்கு.”

மலரின் நேரடி தாக்குதலுக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் விலக, அங்கே ஒரு அசௌகரியமான மௌனம் சில நொடிகள் ஆக்கிரமித்தன. அதையும் உடைத்தது மலரே.

“வென்னிலா சொன்னா உங்ககிட்ட அவ ரொம்ப பேசியும் நீங்க ஒத்துக்கலன்னு, ரொம்ப சண்ட போட்டீங்கன்னு. பிரியங்கா சும்மா தான் சொன்னா. அது இவ்ளோ பெரிய விஷயம் ஆகும்னு நினைக்கல அவ.”

பாதி குற்ற உணர்ச்சி நிரம்பிய குரலில் பேசியவளை உற்று நோக்கினான் கதிரவன். முகத்தில் எவ்வித சலனமுமில்லை! “இல்ல அது ஒன்னும் பிரச்சனையில்லை. எப்போவும் எங்க வீட்டில நடக்கறது தான். சோ, பிராப்ளமில்லை.” என்று பதிலளித்தான்.

பதில் கூறும் போதே எண்ணங்கள் தன் வீட்டில் தங்கைக்கும் தனக்கும் நடந்த வாக்குவாதத்திற்க்கு சென்றது. இருவரும் கத்திக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களின் பெற்றோர்களும் அதில் தலையிட வீடே போர்களமானது. மாலதிக்கு மகள் மெஹெந்தி போடுவது பிடிக்கவில்லை, அதே நேரத்தில் மகன் இதில் கலந்துக்காமல் சாப்பாடு போடும் வேலை செய்வது பிடிக்கவில்லை.

சுகுமாரனோ மகனை மேடை ஏற வேண்டும் என மகளுடன் சேர்ந்து வர்புறுத்த, ஆளுக்கொன்றை கூறி அன்றிரவு முழுவதும் வாக்குவாதம் செய்தனர்.

நினைவலைகள் பின்னோக்கி இழுத்தாலும் வலுக்கட்டாயமாக தன் முன் நிற்பவளிடம் அதை நிறுத்தினான்.

கொடிமலருக்கோ மேலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சரி தன் வேலையை பார்க்கலாம் என எண்ணி, “சரிங்க, எனக்கும் ஈவன்ட் வொர்க் இருக்கு, பை” என பேச்சை துண்டிக்கப் பார்த்தாள். “நீங்க ஈவ்ண்ட்ல என்ன வொர்க் பண்றீங்க?”

கதிரவனுக்கோ அவளாக வந்து பேசியும் அதை அப்படியே முடித்துக் கொள்ள விருப்பமில்லை. ஆனால், என்ன பேசுவது என்றும் புரியவில்லை! கொடிமலர் என்ன வேலையில் பங்கேடுக்கிறாள் என எல்லாம் தெரிந்தும், வாயில் வந்ததை கேட்டு வைத்தான்.

அவனின் கேள்வியை கேட்டதும் உதட்டில் வந்த முறுவலை கடும்பாடுப் பட்டு அடக்கினாள் மலர். ‘இவனுக்கு நான் என்ன ஈவண்ட்ல வேலை செய்யறேன்னு தெரியாதா? சும்மா பேசனும்னு பேசறான்! விட்டா பஸ் பாஸ் ரென்யூ பண்ணிட்டீங்களா கேப்பான் போல?’

மனதில் ஆயிரம் எண்ணங்கள் நொடி பொழுதில் ஓட, வெளியில் எதையும் காட்டாமல், “ஏன் உங்களுக்கு நான் என்ன ஈவன்ட் பண்றேன்னு தெரியாதா?” என நிதானமாக நேரடியாக கேட்டே விட்டாள்.

கதிருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. “ஆமா, ஏன் ஃபர்ஸ்ட்டெல்லாம் அடிக்கடி என்னை பார்த்துட்டே இருந்தீங்க? இப்போ பார்க்குறதில்லை? புதுசா வேற பொண்ணை பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களோ?”

நக்கல் குரலில் மிதக்க கேட்ட மலரை இப்போழுது அதிர்ச்சி பாதி கோபம் மீதி என முறைத்தான் கதிரவன். வந்த கோபத்தில் எதுவும் பேசாமல் செல்லலாம் என தான் முதலில் நினைத்தான். தேவையில்லாத வாதத்தில் ஈடுபட அவனுக்கு துளியும் விருப்பமில்லை.

ஆனால், அவன் விருப்பபடி எதுவுமே நடப்பதில்லை அல்லவா? மலர் முகத்தில் தெரிந்த நக்கல் நைய்யாண்டியை போக்கவே கதிரவன் பேசத் துவங்கியது. படபடவென பேசிப் பழகிய கொடிமலரை அமைதியாக்கி, அவளின் கேள்விக்கு பதிலளித்தான் கதிரவன். கதிர் பேசப் பேச மலரின் முகத்தில் பல உணர்ச்சிகள் பளபளத்தன!

அவன் பேசி முடித்ததும் இவளின் பதிலுக்கு காத்திராமல் நகர, மலர் தான் அவ்விடத்தில் வேரூன்றியிருந்தாள்!
 
Top