Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Minnalin Kathire - 7

  • Thread Author
அத்தியாயம் – 9

மாலதி சம்மதம் சொன்னதும் கதிரவன் மேலே என்ன செய்வது அன்று சில மணி நேரம் யோசித்தான். கொடிமலரின் வீட்டிலும் தங்களின் ஒப்புதல்காக காத்திருக்கின்றனர்.

அவர்களின் வீட்டிலும் தான் முழு சம்மதம் இல்லை என்னும் போதிலும், அவர்கள் மேலே விசாரித்து தங்களின் சம்மதத்தை கூறியிருக்கின்றனர் மகளிடம். இங்கே தன் அன்னை சொல்லும் விஷயங்களை எல்லாம் எப்படி அவர்களுக்கு சொல்லுவது?

முதலில் எப்படி கொடிமலரின் ஜாதகத்தை வாங்குவது? இது எல்லாம் தான் அவனின் நினைவை ஆக்கிரமித்து கொண்டது.

மாலையில் கீழே சமூகக் கூடத்தில் சந்திக்கலாம் என மலருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி அவளின் பதிலுக்காக காத்திருந்தான். மலரும் சிறிது நேரம் கழித்து வருவதாக சொல்ல, தானும் தயாராகி கீழே சென்று அவளுக்காக காத்திருந்தான்.

கொடிமலர் வருவதை கண்டு சிரித்த முகமாக இருக்க முயன்றான் ஆனால் முழுதாக அவனின் எண்ணங்களை மறைக்க முடியவில்லை. “என்னப்பா முகம் ஒரு மாதிரியா இருக்கு?” கொடிமலரின் கேள்விக்கு கதிரவன் ஒன்றும் சொல்லாமல் பக்கத்தில் இருந்த ஒருக்கையை காட்டி உட்காரச் சொன்னான்.

மலர் அமர்ந்ததும், “நேத்து அம்மா கொஞ்சம் பேசினாங்க. இப்போதைக்கு ஓகேன்னு சொல்லிருக்காங்க. பட், கொஞ்சம் விஷயம் எல்லாம் சொன்னாங்க.” என்று மேலோட்டமாக சொல்ல, கொடிமலௌர்க்கு குழம்பியது.

“எனக்கு புரியல, இப்போதைக்கு ஓகே சொல்லிருக்காங்கன்னா? திரும்ப வந்து ஓகே இல்லைன்னு சொல்லுவாங்களா?”

கொடிமலரின் கேள்வி நியாயமானது தான், கதிரவனிடம் இதற்கு பெரு மூச்சு தான் வந்தது. பின் முன் நாள் நடந்தவற்றை ஒன்றின்பின் ஒன்றாக சொல்ல, மலருக்கு கோபம் கலந்த ஆதங்கம் பொங்கியது. வலி மிகுந்த குரலில், “ஜாதகம் பார்த்து ஏதாவது பிரச்சனைன்னு சொன்னா அப்போ நிறுத்திருவாங்களா? அதுக்கு இப்போவே முடியாதுன்னு சொல்லிட்டு போலாமே? ஏன்பா இப்படி?” என்று கேட்க, கதிருக்கு அதற்கு பதிலில்லை.

கதிரின் குற்றயுணர்ச்சி படிந்த முகத்தை பார்த்து சில நிமிடங்கள் கொடிமலருக்கும் பாவமாக இருந்தது. தங்களின் வீட்டில் விஷயத்தை கூறி சில வாரங்கள் ஆயிற்று. ஆனால், இந்த சில வாரங்களில் தங்களுக்குள் புரிதலும், பிடிப்பும், காதலும் அதிகரித்தாலும் கதிரவனின் மனதில் எப்போதும் ஒரு இறுக்கம் நிலவுகிறது என்பதை கண்கூடாக பார்த்தாள் மலர்.

அவனே அதை பற்றி கூறி இருந்தான், அவன் அன்னையை நினைத்து தான் எல்லாம். இப்போது ஜாதகம் பார்ப்பது சிறிய விஷயம் அல்லவே? “ஜாதகம் பார்க்குறது எல்லாம் நம்ம மட்டும் முடிவெடுக்க முடியாதுபா. எங்க வீட்டுல சொல்லனும். நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்லட்டுமா, ஓகே வா?” கொடிமலரின் தயக்கமான குரலில் கதிரவனுக்கும் அவளை நினைத்து வருத்தமாக இருந்தது.

சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் இவளும் நமக்காக வருத்தப்படுகிறாளே என்று தோன்ற, “கண்டிப்பா வீட்டுல பேசிட்டு சொல்லு, ஒன்னும் பிராப்ளம் இல்ல. பட், இந்த ஜாதகம், மத்த விஷயம் எல்லாம் நினைச்சு நீ ஃபீல் பண்ணாத. நம்ம ரெண்டு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் நடக்கும். டோண்ட் வொரி!” என்று கதிரவன் உறுதியளிக்க, கேட்ட கொடிமலரின் மனதில் அது எண்ணில் அடங்கா நிம்மதியை கொடுத்தது.

இதுவரை, பலமுறை தாங்கள் பேசி இருந்தாலும் கதிர் இப்படி உறுதியளித்ததில்லை. அதனால், இப்போது அவன் கூறுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது எனலாம்…

ஆனால், இந்த மகிழ்ச்சியும் சில நிமிடங்களே நிலைத்தன. மலரின் வீட்டில் எல்லாம் சொன்னதும், முதலில் கோபப்பட்டது அவளின் தந்தை ராஜன் தான். “இப்போ எதுக்குமா ஜாதகம் எல்லாம்? பார்த்துட்டு சரி வரலனா, விட்றுவாங்களா, சொல்லு…. எனக்கு என்னவோ இது சரியா படல.”

ராஜனின் கோபம் நியாயமானது தான், கவிதாவுக்கும் இதில் விருப்பமில்லை என்ற போதும், பிற்காலத்தில் ஏதாவது நடந்தால் ஜாதகம் பார்க்காதது தான் பிரச்சனை ஆகிற்று, என கதிரின் தாய் கூறினால் என்ன செய்வது என்று யோசித்தார்.

பின் முடிவாக, “இல்லங்க, பின்னாடி பிரச்சனை ஆகும். அவங்களுக்கு பார்க்கனும்னு இருக்கு, பார்க்கட்டும். ஆனா, அதுக்கு முன்னாடி நம்மளும் அவங்கள நேர்ல பார்க்கனும்! அவங்கள பொண்ணு பார்க்க வர சொல்லலாம். அப்போ நேர்ல மேல ஆக வேண்டியத பேசிக்கலாம். சரிதான?” என்று கவிதா தெளிவான குரலில் கூற, ராஜனும் ஒப்புக் கொண்டார்.

“ஹ்ம்ம்ம் அதுவும் கரக்ட் தான், எவ்வளவு தான் பசங்கல வைச்சுட்டே பேசுறது? நம்மளும் நேர்ல பேசுனா தான் சரி வரும். என்கிட்ட சுகுமாரன் சார் நம்பர் இருக்கு, நான் பேசுறேன் அவர்கிட்ட.”

ராஜன் கூறிவிட்டு, உடனே சுகுமாரனிடமும் பேசினார். அவருக்கும் பெண் வீட்டிற்கு சென்று பேசுவது சரியென பட, நல்ல நாள் பார்த்து வருவதை உறுதிப்படுத்துவதாக கூறி வைத்தார்.

சுகுமாரன் பெண் பார்க்க வருவதாக கூறி வைத்தார் தான். ஆனால், உள்ளுக்குள் கட்டிய மனைவி என்னென்ன சொல்லுவாளோ என்ற பயம் இருக்கத் தான் செய்தது.

ஒரு பெருமூச்சை விட்டு இது தங்களின் பிள்ளைகளின் வாழ்க்கை பிரச்சனை, இதில் தங்களால் மேலும் சிக்கல் ஆக கூடாது என முடிவெடுத்து, ஹாலுக்கு சென்று மற்ற மூவரையும் அழைத்தார்.

எல்லோரும் வந்ததும், “இப்போ தான் மலரோட அப்பா ராஜன் சார் பேசினார். ஜாதகம் எல்லாம் பார்க்குறதுக்கு முன்னாடி நம்ம பெரியவங்க உட்கார்ந்து பேசுறது நல்லா இருக்கும்னு சொன்னாரு. அதே தான் எனக்கும் சரின்னு படுது. அவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லிருக்கேன். நீ என்ன சொல்ற மாலதி?” என்று நேரடியாக மனைவியை பார்த்து கேட்டதும், மாலதிக்கு கோபம் எட்டி பார்த்தது.

“டேய் அதுக்குள்ள ஜாதகம் பார்க்குறது பத்தி அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டியா? அவ்வளோ என்னட அவசரம்? அவங்களும் உடனே பொண்ணு பார்க்க வாங்கன்னு சொல்லுறாங்க! நீங்க யாரையும் கேட்காம அவங்க வீட்டுக்கு வரோம்னு சொல்லிட்டீங்க அப்படி தான?? எல்லாம் நீங்களே பண்ணிட்டு எதுக்கு இப்போ என்னை கேக்கறீங்க, நீங்களே பொண்ணு பார்க்க போங்க.”

மாலதியின் சொற்கள் வந்த விழுந்த வேகத்தில் மகனின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியது! நாம் தான் திருமணத்திற்காக அவசரப்படுகிறோமோ, என கதிரே நினைக்கத் துவங்கினான். அமைதியாக அமர்திருந்த மகனை ஓர் பார்வை பார்த்து, “கொஞ்சமாச்சும் நம்ம பேசுறது எல்லாருக்கும் எப்படி இருக்கும்னு யோசிச்சு பேசுன்னு உனக்கு பல முறை சொல்லிட்டேன்! சரி விடு.

இங்க யாரும் அவசரப்படல, அந்த பொண்ணு வீட்டுல, எத்தனை நாளைக்கு தான் பசங்கல வைச்சுட்டு பேசுறது. கல்யாணம்னா பெரியவங்க பேசனும்னு சொன்னங்க. அதான், என்னோட வீட்டுல கேட்டுட்டு நல்ல நாள் பார்த்துட்டு வரேன்னு சொன்னேன். மத்தபடி யாரும் இங்க உன்னை மதிக்காம நடக்கல. பையன் முகத்தை பாரு! ஏன் இப்படி எல்லாம் பேசுற?” என்று ஆதங்கமும், ஆற்றாமையும் பொங்கிய குரலில் சுகுமாறன் சொன்னதும், மாலதிக்கு ஒரு மாதிரி ஆயிற்று.

அதுவும் கதிரின் முகத்தில் வழிந்த வருத்தத்தில், அவன் மனம் எவ்வளவு தத்தளிக்கிறது என்று புரிந்தவுடன் மகனின் அருகில் அமர்ந்து அவன் தோளை தடவி கொடுக்க தொடங்கினார்.

“அம்மா எதோ கோபத்துல பேசிட்டேன்டா. நம்ம அந்த பொண்ணு வீட்டுக்கு போயிட்டு பார்க்கலாம். நீ கஷ்டப்படாதபா…”

தாயின் மன்னிப்பை கேட்டு கதிரவனும் தன் பக்க நியாயத்தை புரிய வைக்க முயன்றான். “அம்மா, இது என்னை மட்டும் சம்மந்த படுத்துற விஷயமா இருந்தா நான் அவசரப்பட மாட்டேன்மா. ஆனா, மலரும் அவளோட குடும்பமும் நம்ம என்ன சொல்லுவோம்னு வெயிட் பண்றாங்க. அதனால தான் அவகிட்ட இன்னிக்கு சொன்னேன். பட், நீங்க அவசரமா பண்றதா யோசிச்சீங்கனா, நான் வெயிட் பண்றேன். மலர்கிட்டயும் பேசுறேன். ஓகே வா?”

கதிரவன் சொன்னதை கேட்டு மாலதி பதில் சொல்லுவதற்குள் வென்னிலா புகுந்து விட்டாள், தன் அண்ணனுக்காக!

“ஹே நீ என்ன இவங்க சொல்லுறதுக்கேல்லாம் ஓகே சொல்லிட்டு இருக்க? நானும் காலையிலிருந்து பார்த்துட்டு இருக்கேன்.

ஒன்னு ஓகே சொல்லனும், இல்ல இல்லைன்னு சொல்லனும். ரெண்டுமில்லாம சும்மா அண்ணாவ போட்டு படுத்திட்டு இருக்கீங்க. அவன் என்ன இருவது வயசுலயா வந்து கல்யாணம் பண்ணுங்கன்னு கேட்டான். அவசரப்படுறன்னு சொல்றீங்க? அந்த அக்கா வீட்டுலயும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, அதுக்காக தான சொல்றான். புரிஞ்சுக்கோங்கமா, பாவம்மா….” கோபமாக ஆரம்பித்தாலும் தன் அண்ணனுக்காக பரிந்து பேசி முடித்த மகளை நினைத்து சுகுமாரனுக்கு பெருமையாக இருந்தது.

மாலதியும் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்து, நேராக மாத கேலண்டரை எடுத்து எதையோ தேட ஆரம்பித்தார். சில நொடிகளுக்கு பின், “டேய், நாளைக்கு சுபமுகூர்த்த நாள் தான், நாளைக்கே போய் பார்க்கலாமா? ஏங்க, நீங்க என்ன சொல்றீங்க?” என்று ஆர்வமாக கேட்கும் அன்னையை கண்டு சிரிப்பதா, அழுவதா என கலங்கி நின்றான் கதிரவன்.

சில நிமிடங்களுக்கு முன் தான் அவசரப்படுகிறாய் என தன்னை குத்திக் காட்டினார். ஆனால், இப்போழுது அடுத்த நாளே பெண் பார்க்க செல்லலாம் என்பதை என்னவென்று சொல்வது?

சுகுமாரனும் இதையே தன் கண்களில் தேக்கி, தன் மக்களை காண வென்னிலாவிற்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. அன்னை முன் அதையும் செய்ய முடியவில்லை!

ஆனால், அன்னையே ஒத்துக் கொண்டப் பின் சுகுமாரனும் கதிரவனும் தாமதிக்கவில்லை. மறுநாளே பெண் பார்க்க வருவதாக, சுகுமாரன் ராஜனிடம் கூற கொடிமலருக்கும் திகைப்பாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தது.

மறுநாள் மாலையும் வர, ஆறு மணி போல் கதிரவன் வீட்டினர் கொடிமலரின் வீட்டிற்கு சென்றனர். பொதுவான உபசரிப்புகள் அற்முகங்கள் முடிந்தவுடன் தான் கதிரவன் கவனித்தான். அவனின் தாயின் கண்கள் வீட்டையும், வீட்டின் பொருட்களை கவனிப்பதிலும் தான் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்த வேளையில் தான் அவன் அம்மாவே முதல் மிடக்கான கோரிக்கையை அவரின் ஆதங்கத்தை தேக்கி முன் வைத்தார்.

“உங்க பொண்ண கூட்டிட்டு வாங்க, அதான் எல்லோருமே பார்த்துட்டாங்களே…. என்னை தவிர! இப்போ எதுக்கு உள்ள இருக்கனும்?”

எல்லோரின் முகத்திலும் இருந்த ஒரு சமிர்தாய சிரிப்பும், மாலதியின் சொற்களில் துடைத்து எடுக்கப்பட்டது. ராஜன் திரும்பி கவிதாவை பார்க்க, அவரும் ஒரு கவலையை கண்களில் மறைக்க போராடிக் கொண்டிருந்தார். பின் கணவனின் பார்வை புரிய, எழுந்து உள்ளே சென்று கொடிமலரை கூப்பிட்டு வெளியே வந்தார். கொடிமலருக்கு சிறிது அல்ல பெரும் பதற்றமாகவே இருந்தது.

கதிரவன் தன் தாயை பற்றி கூறியவையாவும் மூளையில் ஒரு நான்-ஸ்டாப் ரயிலை போல ஓடிக் கொண்டிருந்தன, காலையிலிருந்து. வேலை தேடும் போது ஒரு நேர்காணலுக்கு செல்லும் மாணவியை போல உணர்ந்தாள். தப்பாக, துடுக்காக எதுவும் பேசாதே என வீட்டினரின் சொற்களையும் மனதில் பதிய வைத்தபடி இருந்தாள்.

கொடிமலர் வந்து அமர்ந்ததும் அவளை நன்றாக நோட்டம் விட்டு, பின் சம்மந்தமே இல்லாமல், கவிதாவிடம் திரும்பி, “எப்போ இந்த வீடு வாங்குனீங்க? லோன்லயா வாங்குனீங்க?” என்று மாலதி கேட்க, கனிந்து வந்த மலரின் மனதில் வெந்நீரை ஊற்றியது போலானது.

இவர் என்ன செய்ய முயலுகிறார்? தன்னை கூப்பிட்டு வரச் சொல்லிவிட்டு தன்னை பற்றி எதுவும் கேளாமல், ஒன்றும் பேசாமல் வீட்டை பற்றி இப்போது எதுக்கு பேச்சு? கொடிமலரின் பார்வை தன்னவனிடம் செல்ல, அவனோ அன்னையை அதட்டிக் கொண்டிருந்தான், தாழ்ந்த குரலில்!

சுகுமாரன் கோபத்தை அடக்கியபடி இருக்க, ராஜன் மற்றும் கவிதா தம்பதியர் இருவரும் சிறிது திகைப்பில் மூழ்கினர். முதலில் சுதாரித்து பதிலளித்தது மலரின் தாத்தா நடேசன் தான்.

“நாங்க வாங்கிட்டி வந்து கொஞ்ச மாசமாச்சு. லோன் எல்லாம் இல்ல, பையனும் கவிதாவும் சேர்த்து வைச்சது தான். உங்களுது எப்படி சொந்த வீடா? லோன் போட்டிருக்கீங்களா? எப்போ வாங்குனீங்க?”

நடேசன் கோபம் கொள்ளாமல், பொறுமையாக பதில் சொல்லி, அதே சமயம் அதே கேள்விகளை மாலதியின் முன் வைக்க, அவருக்கு ஆற்றாமையாக போயிற்று. திரும்பி சுகுமாரனை பார்க்க அவரோ ‘நீயே பதில் சொல்லிக்கோ’ என வேறுப்புறம் பார்த்தபடி இருந்தார்.

வேறு வழியில்லாமல் மாலதி வேண்டா வெறுப்பாக பதில் கூறினார்.

“எங்களுதும் லோன் எல்லாம் இல்ல, நாங்க அப்பார்ட்மெண்ட் புதுசா கட்டும் போதே புக் பண்ணி வாங்கிட்டோம்.”

மாலதி கூறியதும், பேச்சை திசை திருப்புவதற்காக ராஜன், “நல்ல காரியம் பேச ஆரம்பிக்கிறோம், ஸ்வீட் எடுத்துக்கோங்க.” என்று அவர்கள் முன் இருந்த டீபாயில் வைத்த இனிப்பை சுட்டிக் காட்டினார்.

சுகுமாரன், கதிரவன், வென்னிலா மூவரும் முதல் ஆளாக முந்திக் கொண்டு அதை எடுக்க, மாலதியும் வேண்டா வெறுப்பாக அதை சிறிது எடுத்துப் பிட்டுக் வாயில் போட்டார்.

கொடிமலருக்கு இப்போது கதிரின் மேல் பார்வை வைக்க கூட பயமாக இருக்கும் அளவுக்கு, மாலதியின் ஓரப் பார்வை தன்னை தொடர்வதை கண்டாள். சில மேல் மூச்சுகளை விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள அவள் நினைக்க, மாலதி அதற்கு விட்டாள் தானே?

அடுத்த கணயை நேராக மலரை நோக்கி விட்டார்.

“உனக்கு சமைக்க தெரியுமா? வீட்டு வேலை எல்லாம் செய்வியா?”

மலருக்கு இப்போது பொறுமை பறக்க இருக்கவா என கேட்டது! ‘இவங்க என்ன வீட்டுக்கு வெலை செய்யறதுக்கா ஆள் எடுக்குறாங்க. முதல்ல பேச்சே இப்படியா கேப்பாங்க?’ மலரின் மைன்ட் வாய்ஸ் எல்லாம் கதிரவனுக்கும் புரிந்தது. அன்னையின் கைகளை பிடித்து இறுக்க, இப்போழுது அவரோ அதை உதரி தள்ளி, “என்னடா கேட்கக் கூடாததையா கேட்டேன்? எல்லாரும் கேக்குறது தான?” என்று பதிவிசாக சொல்ல, சுகுமாரனோ அதற்கு தக்க பதிலடி கொடுத்தார்.

“கேட்க கூடாதது தான்… நம்ம வீட்டுக்கு மலர் என்ன வேலை செய்யவா வரப் போறா? நம்ம பையன் கூட வாழப் தான வரப் போறா… அதனால தெரியலனாலும் பிரச்சனை இல்லை. மலர், நான் முன்னாடியே சொல்லிடுறேன். எனக்கு சமையல் சுத்தமா வராது. ஆனா, அவங்க அம்மாக்கு முடியலனா கதிரும் சரி, நிலாவும் சரி எல்லாமே செய்வாங்க. சமையல்லருந்து வீடு துடைக்குற வரைக்கும்! அதனால, உனக்கு தெரியலனாலும், கதிர் சொல்லிக் பார்த்துப்பான், ஒண்ணும் பிராப்ளமில்ல.”

சுகுமாரன் கூறியதை கேட்டு ஒரு மென்னகை தானாக வந்து பேசத் தூண்டியது கொடிமலரை. “இல்ல அங்கிள், எனக்கு சமைக்க தெரியும். வீட்டு வேலையும் முடிஞ்ச அளவுக்கு செய்வேன்.” பொறுப்பாக வருங்கால மாமனாருக்கு பதில் அளித்தவளை இன்னமும் பிடிக்காமல் போனது வருங்கால மாமியாருக்கு.

‘நம்ம கேட்டதுக்கு பதில் சொல்லல, இந்த ஆளுக்கு மட்டும் சிரிச்சுக்கிட்டே பதில் சொல்றா.’

கொடிமலர் மட்டுமல்ல, அவளின் குடும்பத்தினரும் தற்போது சிரித்த முகமாக சுகுமாரனிடமும் வென்னிலாவிடமும் பேச, கூடவே ராஜனும் கதிரவனிடம் நல்லபடியாக பேசிக் கொண்டிருந்ததை கண்டவர், இப்படியே சென்றால் நாளைக்கே திருமணம் முடித்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள்.

நாம் பேச வந்த முக்கியமான விஷயத்தை போட்டு உடைக்க வேண்டும் என முடிவெடுத்தார். சற்று உரத்த குரலில், “ஒரு முக்கியமான விஷயம் பேசனும். உங்க பொண்ணு என்ன நட்சத்திரம், ராசி?” என்று மாலதி கவிதாவை பார்த்துக் கேட்க, அதற்கு அவரும் பதில் அளித்தார்.

பின் சின்ன மனக்கணக்கு போட்ட மாலதியோ, “ஹ்ம்ம்ம், இவங்க ரெண்டு பேருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கனும். இவளோட ஜாதகம் எடுத்துட்டு வரீங்களா?” என்று அதிகார தோரணையில் கேட்க, அதை சற்றும் எதிர்பார்க்காத கவிதாவோ சில நொடிகள் அப்படியே செய்வதறியாது நின்றார்.

‘என்ன இவங்க நம்ம வீட்டுக்கே வந்து நம்மளயே இப்படி பேசுறாங்க?’ கொடிமலர் கோபமாக முறைக்க, அதற்குள் கதிரவனே உள்ளே புகுந்து தன் அன்னையை தடுத்தான். “அம்மா, இப்போ எதுக்கு உடனே ஜாதகம் பார்க்கனும், நம்ம வீட்டுலயிருந்து எல்லாம் வந்து பார்த்துட்டு அப்புறமா அது எல்லாம் பார்க்கலாம்.”

மகனின் பேச்சை கேட்டு மாலதிக்கு கோபம் பொங்கியது, பொங்கவில்லை என்றால் தானே ஆச்சரியம்?

“என்னடா நேத்தே எல்லாம் சொன்னேன் தான? பொண்ணு வீட்டுல நேர்ல பேசிக்கலாம்னு சொன்ன, அதான் கேக்கறேன். எனக்கு ஜாதகம், ஜோசியம் எல்லாம் நம்பிக்கை இருக்கு, உனக்கு தெரியும் தான?”

“உங்களுக்கு நம்பிக்கை இருக்குங்க, தப்பில்ல. அதே மாதிரி தான் எங்களுக்கும். ஆனா, இவங்க ரெண்டு பேருக்கு தான் கல்யாணம்னு முடிவு பண்ணிட்டு எதுக்கு அதுலாம் பார்த்துட்டு? ஏதாவது தப்பா சொன்னா அதுவே நிம்மதி இல்லாம போயிடும்…. அதுக்காக தான் சொல்றேன்.” ராஜன் நிதானமாக பேசினார், மாலதிக்கு புரியவைக்கும் முயற்சியில். ஆனால், வெற்றிகரமாக அதில் தோல்வி அடைந்தார்.

“அதே தான் நானும் சொல்றேன், ஏதாவது தப்பா சொன்னார்னா இப்போவே தெரிஞ்சிக்கலாம்ல? இல்லனா ரொம்ப கஷ்டமாயிடும். கண்டிப்பா ஜாதகப் பொருத்தம் பார்க்கனும்!”

மாலதி விடாப்பிடியாக சொல்ல, ராஜன் மீண்டும் வாய் திறப்பதற்குள் கவிதா அவரின் தோள்களில் தட்டி அமைதி காக்கும்படி பார்வையால் கூறி, தன் மகளின் ஜாதகத்தை கையோடு கொண்டு வந்து கொடுத்தார் மாலதியிடம்.

அதை வாங்கிக் கொண்ட மாலதி, அடுத்த கேள்வியில் அனைவரும் ஸ்தம்பிக்கும்படி செய்தார். “தாங்கஸ். ஆமா, நீங்க என்ன ஆளுங்க? பையன்கிட்ட நேத்து கேட்டேன் அவனுக்கு தெரியல…”

“மாலதி, கொஞ்சம் சும்மா இருக்கியா?”

சுகுமாரன் என்ன தான் சொன்னாலும் மாலதி அதை கேட்டும் நிலையில் இல்லை…. மகனின் தலைகுனிவு, மகளின் தர்மசங்கடம் எதுவும் அவருக்கு பெரியதாக தெரியவில்லை!

இதில் கொடிமலரின் குடும்பத்தினரின் நிலையை சொல்ல வேண்டுமா?

நடேசன் வேறு புறம் திரும்பி தன் பிடித்தமில்லாமயை காட்ட, கொடிமலருக்கு பெற்றோர்களை நினைத்து பாவமாக போனது. அவளுக்கு மட்டுமா அங்கு இருந்த அனைவருக்கும் தான்.

வேறு வழியில்லாமல் கவிதா, வேண்டா வெறுப்பாக பதிலளிக்க, அதை கேட்ட மாலதியின் முகம் அஷ்டக்கோணலாக சென்றது.

அந்த முகத்தின் பாவத்தை கவனித்த கொடிமலருக்கு, தன் வருங்கால மாமியாரின் மேல் முழு அருவெறுப்பு வந்தது அப்போது தான்!!
 
Active member
Joined
May 24, 2024
Messages
194
Intha pombalaiku payasam perusa irukanum
Nalla vachi sei malar apo tan adangum
 
Top