அத்தியாயம் – 8
மாலதியின் முகக் கோணல்களை கண்டும் சும்மதிருக்க சுகுமாரனால் முடியவில்லை. கதிரவனும் தன்னை அடக்கிக் கொண்டி உட்கார்ந்திருப்பதை கண்டவர் சட்டென்று, “சரி ஜாதகம் வாங்கியாச்சுல, அத பொருத்தம் பார்த்துட்டு அடுத்து எங்க வீட்டு சொந்தக்காரங்கள எப்போ கூட்டிட்டு வரதுன்னு பார்க்கறோம். இல்ல, நீங்க எங்க வீட்டுக்கு ஒரு முறை வரற்தா இருந்தாலும் ஓகே. எதுவா இருந்தாலும், ஒரு ரெண்டு நாள்ல சொல்லிடுறோம். சரிங்களா?” என்று பரிவாக கேட்க, ராஜனால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
மாலதியும் வெறும் “வரோம்” என்ற கூற்றுடன் விடைப்பெற, கதிரவன் சிறிது தயங்கி நின்று கொடிமலரின் வீட்டினரை பார்த்து, “எங்கம்மா வெடுக்குன்னு பேசுவாங்க நான் அதுக்காக சாரி கேட்டுக்கறேன். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறேன்.” என்று மன்னிப்பு கூறினான், மனப்பூர்வமாக.
“அதல்லாம் பரவாயில்லப்பா… நீங்க எதுக்கு சாரி எல்லாம் கேட்டுட்டு?” ராஜன் கூறியதை காதில் விழுந்தாலும், கொடிமலரின் முகம் சரியில்லாததை கண்டு அவனின் மனமும் சரியில்லாமல் போனது!
வீட்டுக்கு வந்ததும் மாலதி தான் முதலில் ஆரம்பித்தார். “எதுக்கு இப்போ ரெண்டு நாள்ல எல்லாம் சொல்றோம்னு சொன்னீங்க? என்னை கேக்காமயே எல்லாம் நீங்களே முடிவெடுத்தா அப்புறம் நான் எதுக்கு இந்த வீட்டுல?”
“நீ மட்டும் அங்க பேசுனது எல்லாம் என்னை கேட்டு தான் பேசுனுயா? நீ இஷ்டத்துக்கு பேசுவ, அதுக்கும் நாங்க எல்லாம் தான் தலை குனிஞ்சு நிக்கறோம்! வந்ததும் என்னையே கேள்வி கேக்குற! நீ பண்றது எல்லாம் சரி, நான் பண்றது எல்லாம் தப்பு, அப்படித்தான?”
சுகுமாரனின் கேள்விகள் மாலதியை மேலும் உசுப்பி விட, அவரும் பதிலுக்கு வாக்குவாதம் செய்ய, வென்னிலா இருவருக்கும் சமரசம் கொண்டு வர முயன்று தோல்வியுற்று போனாள். இதில் யாரும் கதிரவனை கவனிக்கவில்லை.
ஒரு புயலை உள்ளடக்கிய முகபாவத்துடன் இருந்தவன் வீட்டில் வந்த சத்தத்தில் தன் யோசனைகளில் இருந்து திசை திரும்பி, “அம்மாமாமா” என்று உரத்த குரலில் கத்த, மாலதிக்கு தூக்கி வாரிப் போட்டது! கதிரை திகைப்பாகப் பார்க்க, “கொஞ்சம் இங்க வந்து உட்காருங்க. அப்பா, நிலா நீங்களும் தான்.” என்று உறுதியான குரலில் சொல்ல, மூவரும் அப்படியே செய்தனர்.
மகனின் கோபத்தை உணர்ந்த தந்தையும், என்ன நடக்கப் போகிறதோ என்று பயத்துடன் இருந்த வென்னிலாவும் எதுவும் வாய் திறக்கவில்லை. மாலதி அமர்ந்தவுடன் அவரின் கண்களை நேராக பார்த்த கதிரவன், அன்னையிடம் மனசு விட்டு பேசத் தான் நினைத்தான். ஆனால், உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும் மனதை கட்டுப்படுத்த பெரும்பாடாக இருந்தது அவனுக்கு. இருந்தும், குரலை செருமிக் கொண்டு பேசத் துவங்கினான்.
“உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலமா… மலர் குடும்பம் என்ன ஆளுங்கன்னு தெரிஞ்சுக்கறதுல. சரி அப்படியே நீங்க கேட்டீங்க அவங்களும் சொன்னாங்க, அதை கேட்டுட்டு உங்க முகம் ஏன் அப்படி போச்சு? என்ன பிரச்சனை?”
“அவங்க நம்மள விட கொஞ்சம் கிழ இருக்குற ஆளுங்கடா. நம்மளுக்கு சரிசமமா வர முடியாதுல?”
மாலதி கூறியதை கேட்ட கதிரின் கோபம் வெடித்தெழுந்தது அந்த கணம் தான்.
“அப்படியா என்ன அவங்க குறைஞ்சு போயிட்டாங்க? இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த ஜாதி கருமாந்திரம் எல்லாம் பார்த்து மனுசங்கள எடை போடுவீங்க, சொல்லுங்க? இப்போ நமக்கு மேல நிறைய ஜாதி இருக்குல, அவங்க எல்லாம் நம்மள இப்படி கேவலமா பார்த்தா, இதே மலர் ஃபாமிலி அந்த மாதிரி இருந்து நம்மள வேண்டாம்னு சொன்னா சும்மா விட்டுடுவீங்களா? என்ன பார்க்குறீங்க? சொல்லும் போதே கோவம் வருதுல? அதே மாதிரி தான அவங்களுக்கும். நீங்க யோசிக்காம பண்ணுறத எப்போ தான் நிறுத்த போறீங்க, எனக்கு தெரியல…..
இப்போவே எனக்கு தெளிவா சொல்லிடுங்கம்மா. நாளைக்கு கல்யாணம் ஆன பின்னாடி வென்னிலாவ, என்னை எப்படி நடத்துறீங்களோ அதே மாதிரி தான் மலரையும் நடத்தனும். இந்த ஜாதி குப்பையை எல்லாம் மனசுல இருந்து தூக்கி போட முடியாதுனா சொல்லுங்க, நான் இப்போவே கல்யாணம் வேணாம்னு சொல்லி நிறுத்திடுறேன். அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்!”
கதிரவன் கோபாவேசமாக பேசியதை கண்டு அன்னையை விட தந்தைக்கு மிக வலித்தது. “டேய் நீ என்னடா நல்ல விஷயம் ஆரம்பிக்கும் போதே நிறுத்துறேன்னு சொல்லுற? சும்மா இருடா…” சுகுமாரன் சொன்னதை கேட்டதும், “பின்ன என்னப்பா? இந்த மாதிரி பண்றதுல்லாம் பாவம்! பெரிய பாவம்!” என்று மீண்டும் வெகுண்டெழ, மாலதி ஒரே அடியாக சட்டென்று மகனின் கூற்றுக்கு ஒத்துக் கொண்டார்.
“சரிடா, நான் இனிமே அந்த பேச்சே எடுக்க மாட்டேன். அந்த பொண்ணையும் இந்த விஷயத்தை வைச்சு எதுவும் சொல்ல மாட்டேன். போதுமா?”
மாலதி சமாதானமாக பேசினாலும் கதிரவனுக்கு ஏறிய தனல் மனதில் இறங்க சிறிது நேரம் பிடிக்கும் போல் இருந்தது. அந்த மனச்சூட்டில் வேறு விஷயங்களும் அவனின் மூளையில் தட்ட, அதையும் தாயிடம் கூறி விடுவதே மேல் என்று முடிவெடுத்தான்.
“சரி உங்ககிட்ட இன்னும் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்மா. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க.”
மகனின் சொற்களில் தொதிந்திருந்த ரகசியத்தை அறியும் ஆர்வத்துடன், “என்னடா சொல்லு” என்று மாலதி கேட்டார்.
“கொடிமலரோட அம்மாக்கு அவ கைக்குழந்தையா இருக்கும் போதே டிவோர்ஸ் ஆகிருச்சு. என்ன காரணம்னு தெரியாது, நான் கேட்டுக்கல. இனிமே கேக்கப் போறதும்மில்ல. அவங்க டிவோர்ஸ்க்கு அப்புறம் கொடிமலரோட அம்மா வீட்டு தாத்தா வீட்டுல இருந்துருக்காங்க. மலருக்கு ஆறு வயசு இருக்கும் போது தான் ராஜன் அங்கிள் சம்மந்தம் வந்தப்போ அவகிட்டயும் கேட்டுத் தான் கல்யாணம் பண்ணிருக்காங்க.
மலர் இதுல்லாம் நமக்கு முன்னாடியே தெரிஞ்சுக்கனும்னு தான் சொல்லிட்டா. அவங்க எல்லாம் ஒண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அதனால, எனக்கு இது பெரிய விஷயமா தெரியல. உங்க கிட்டயும் இப்போ ஏன் சொல்றேன்னா, நீங்க என்ககு முன்னாடியே சொல்லலைன்னு பின்னாடி கோபப்படுவீங்க. அதனால தான், என்னம்மா பார்க்கறீங்க.”
கதிர் பேசப் பேச மாலதியின் முகம் போன போக்கை பார்த்து அவன் பேச்சை நிறுத்த, அவரோ வார்த்தைகளின்றி தடுமாறிப் போனார்.
எவ்வளவு பெரிய விஷயத்தை கூறாமலே அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதுமில்லாமல், இப்போழுது இது பெரிய விஷயம் அல்ல என அமைதியாக கூறிய மகனை திட்டக் கூட வார்த்தை திக்கியது அவருக்கு!
“என்ன… என்ன சொன்ன? அவங்க அம்மா டிவோர்ஸ் பண்ணாங்களா? அதுவும் கை குழந்தையை வைச்சுட்டு! டேய் என்னடா சொல்ற??? எனக்கு தலையே சுத்துது! இப்போ இருக்குறவரு அவளோட சொந்த அப்பா இல்லயா??? இதுலாம் சொல்லாமயே அவங்க வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போயிருக்க இல்ல?”
மாலதியின் அடங்கிய கோபத்தை கண்டு கதிருக்கு உள்ளுக்குள் ஒரு திகில் மூட்டம் பரவியது என்னவோ உண்மை. ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லம்மா, அப்படி இருந்தா இப்போ சொல்லியிருப்பேனா. எனக்கு இது ரொம்ப பெரிய விஷயமா தெரியல, அது மட்டுமில்லாம நீங்க ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்க்கனும்னு சொல்லிட்டு இருந்தீங்க. அதுல, இந்த விஷயத்தை மறந்துட்டேன். இல்லனா, நேத்தே எல்லாம் சொல்லிருப்பேன்.” என்று சாவதானமாக கூறுபவனை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார் அவனின் அன்னை.
இதில் தன் புருஷனும் மகனுக்கு உடன்பட்டு அவனுக்காக பரிந்து பேச, அவரையும் வெட்டவா குத்தவா என்று பார்த்தப்படி இருந்த மாலதி, முடிவாக தன் பிடித்தமின்மையை தெளிவாக கூறினார்.
“இங்க பாருடா, நம்ம வீட்டுல எல்லாம் டிவோர்ஸ் ஒன்னும் சாதாரண விஷயமில்ல! உனக்கே எல்லாம் தெரியும். எல்லாத்தையும் அனுசரிச்சிட்டு போறது தான் நல்ல குடும்பம். இந்த மாதிரி கை குழந்தையை வைச்சுட்டு பிரிஞ்சு போறதுலாம் நான் கேள்விப்பட்டது கூட இல்ல… என்ன குடும்பம்? என்ன அம்மா அவங்க? இதுல சின்ன பொண்ண வைச்சுட்டு கல்யாணம் வேற இருவது வருஷம் முன்னாடியே பண்ணிருக்காங்க. இதுலாம் நீ பெரிய விஷயம் இல்லன்னு சொல்லுவ. நானும் கேட்டுட்டு போகனும்?
என்னை பார்த்தா என்ன லூசு மாதிரி தெரியுதா? இது தான் பெரிய விஷயம்! ஜாதகம், அவங்க ஜாதி எல்லாம் கூட பரவாயில்லை.
அம்மாவே இருவது வருஷம் முன்னாடியே அப்படி இருக்காங்கன்னா, பொண்ணு இந்த காலத்துல எப்படி இருப்பா? அதான், ஒரே பொண்ணா இருந்தும் இன்னும் அவங்களுக்கு மாப்பிள்ளை கிடைக்காம இருந்துருக்கு! நம்ம போய் அந்த குடும்பத்துல விழுறதா? வேணவே வேணாம்…. அவங்களாச்சு அவங்க பொண்ணாச்சு. நமக்கு இந்த பொண்ணு செட் ஆகாதுடா. ஏங்க நீங்களும் இவன் கூட சேர்ந்துட்டு ஏதாவது பேசிட்டு இருக்காம, நமக்கு செட் ஆகாதுன்னு அவங்க வீட்டுல சொல்லிடுங்க…”
மாலதி அவராகவே பேசி அவராகவே முடிவெடுத்து, எல்லாம் முடிந்தது என்பது போல், சோபாவில் இருந்து எழுந்துக் கொள்ள, சுகுமாரனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், மனைவியை நிறுத்தும் வேளையை மட்டும் மூளை பிறப்பித்தது!
“ஹே நில்லு, என்ன நீ பாட்டுக்கு பேசிட்டு நீ பாட்டுக்கு எழுந்து போற?”
கணவனின் கேள்விக்கு நின்று திரும்பி பார்த்த மாலதி, அலட்சியமான கண்களுடன், “அதான், எல்லாம் பேசிட்டோமே இன்னும் பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்று வினவ, அவ்வளவு தான்! சுகுமாரனின் கோபம் கடல் அலை போல் மனதில் பொங்கிக் கொண்டிருந்தவை இப்போது சுனாமியாக பெருக்கெடுத்தது!
“பேசி முடிச்சுட்டோமா? நீ மட்டும் தான் பேசுன நாங்க எங்க பேசுனோம்? நீயா ஒண்ணு யோசிச்சு முடிவெடுத்தா நான் பார்த்துட்டு சும்மா இருக்கனுமா? எல்லாமே ஒரு அளவுக்கு தான், புரிஞ்சுக்கோ!”
சுகுமாரன் கையை நீட்டி மிரட்டும் தோணியில் பேச, வென்னிலாவுற்கும் கதிரவனுக்கும் பயம் நெஞ்சை அடைத்தது. அடுத்தது இவர்களின் பேச்சு எப்படியெல்லாம் செல்லும் என தெரிந்து வந்த பயமே அது.
“என்ன மிரட்டுறீங்களா? அதுக்கேல்லாம் பயந்த காலம் போச்சு. என்ன பண்ணுவீங்க இப்போ? ஏன், நீங்க எல்லாமே உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்து செஞ்செல்லாம் மறந்து போச்சா? என்னை மட்டும் வந்து சொல்றீங்க?”
மாலதி கணவனின் முன் நின்று பயப்படலாமல் உடனுக்குடன் பேச, வென்னிலா, “வேண்டாம்பா, விடுங்க. அப்புறமா பேசிக்கலாம்.” என்று தந்தையை கெஞ்ச, கதிரோ அன்னையிடம் அதே கோரிக்கையை வைத்துக் கொண்டிருந்தான்.
வென்னிலா சொல்வதை கேட்டு அவளின் முகத்தை பார்த்து உருகிய சுகுமாரன், ஒரு பெருமூச்சை விட்டு, “இங்க பாரு, நாம இப்போ பேச வேண்டியது உன்னை பத்தியோ, என்னை பத்தியோ இல்ல. நம்ம பையனோட வாழ்க்கையை பத்தி. அதனால, பொறுமையா உட்காரு, பேசலாம்.” என்று இறுகிய குரலில் கூற, மாலதியின் மனதில் அது எல்லாம் பதியவே இல்லை.
“நான் தான் சொல்லிட்டேன்னே அந்த பொண்ணு வேணாம்னு. என்னோட முடிவு இது தான். நான் மாற போறது இல்ல. டேய் நீ என்னடா சொல்ற?”
கணவனிடம் பேசிக் கொண்டே சட்டென்று மகனை திரும்பி பார்த்து கேள்வி கேட்க, கதிரோக்கோ இப்போது என்ன சொன்னாலும் சண்டையாகும் என புரிந்தது. இருந்தாலும் அமைதியாக செல்லும் நேரம் இதுவல்லவே? தன்னை நம்பி ஒரு ஜீவன் பக்கத்து பிளாக்கில் இருக்கிறதே, அவளுக்கு வாக்குறுதி குடுத்தது எல்லாம் ஞாபகம் வந்தது.
சில நொடிகள் கீழே தரையை பார்த்த கதிரவன், பின் முடிவாக நிமிர்ந்து தன் அன்னையை பார்த்து, “அம்மா, உங்களுக்கு என்னோட லவ் மேர்ஜ் ஒத்துக்க கஷ்டமா இருந்துச்சு. எனக்கு அது நல்லாவே தெரியும். பட், நீங்க இந்த கல்யாணத்துக்கு நேத்து ஒத்துக்கிட்டீங்க தானமா? அப்புறம், இப்போ என்னம்மா பிரச்சனை?
அவங்க அம்மா ரெண்டாவது கல்யாணம் பண்ணா நமக்கு என்ன பிரச்சனை? அவங்களே சந்தோஷமா இருக்காங்க, நம்ம இந்த விஷயத்தை வைச்சுட்டு சண்டை போடனுமா? எப்போவுமே பொண்ணு டிவோர்ஸ் வாங்கி இருந்தா தான், பையன் வீட்டுல யோசிப்பாங்க. நீங்க என்னென்னா பொண்ணோட அம்மா விஷயம் எல்லாம் பெருசு பண்றீங்க. ப்ளீஸ்மா, கொடிமலர் நல்ல பொண்ணுமா. நான் பழகுன வரைக்கும் எனக்கும் அவளுக்கும் ரொம்ப ஒத்துப் போதுமா….
எனக்காக இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்க, ப்ளீஸ்….” என்று மிகவும் கெஞ்சும் குரலில் கேட்கும் மகனை வேற்று மனுஷனை பார்ப்பது போல் பார்த்தார் மாலதி.
வென்னிலாவும் தன் பங்கிற்கு மாலதியின் கைகளை இறுக்கி கண்களாளே கெஞ்ச, மாலதியோ அந்த செஞ்சலுக்கேல்லாம் அசராமல், “ஆமாடா, இந்த விஷயத்தை நான் தான் பெருசு பண்றேன். நீ எல்லாம் பண்ணிட்டு என்னை குறை சொல்லுற?” என்று வெறுப்புடன் கூற, கதிரவனுக்கு ஆத்திரம் அதிகமாகியது.
சுகுமாரன் தலையில் கை வைத்து சோர்வாக அமர, கதிரோ அன்னையை சிறிது வெறுப்புடன் பார்த்து, “ஏன்மா, நான் இவ்வளோ பேசுறேன். இதுல உங்களுக்கு நான் சொன்ன ‘பெருசு பண்றீங்க’ வார்த்தை மட்டும் தான் தெரியுதுல? ரொம்ப சந்தோஷம்மா…. இப்படியே இருங்க!
அப்பா, இங்க பாருங்க. எல்லாருக்கும் தான் சொல்றேன். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது மலர தான் பண்ணிப்பேன். இல்லனா, எனக்கு கல்யாணம் வேணாம். நான் இதுல ரொம்ப தெளிவா இருக்கேன். என்னை யாரும் கம்பேல் பண்ணாதீங்க….” என்று கோபம் கொப்பளிக்க கூறி அவனின் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டவனை யாராலும், ஏன் மாலதியாலும் கூட அசைத்துப் பார்க்க முடியவில்லை…
கதிரவன் அவன் பேருக்கேற்ப அந்த சூரியனின் வெப்பத்துடன் அடுத்த சில நாட்களுக்கு இருக்க, கொடிமலரும் அவனின் நிலையை உணர்ந்து மேலும் எதுவும் அவனை தொல்லை பண்ணாமல் இருந்தாள்.
வீட்டிலும் மாலதியும் எவ்வளவோ பேசிப் பார்த்து விட்டார். அவரின் எந்த அழுகையும், கோபமும், வருத்தமும் மகனின் மனதை மாற்றவில்லை. வென்னிலாவும், சுகுமாரனும் கதிரவனின் பக்கம் சார்ந்து பேசி, அவனுக்கு ஆதரவை அளிக்க, மாலதி தனித்து விடப்பட்டதாக உணர்ந்தார். “நீங்க மட்டும் ஏன்மா தனியா என்கிட்ட இவ்வளோ போராடுறீங்க? நீங்க என்கிட்ட கேக்குற மாதிரி தான் நானும் கெஞ்சிக் கேக்குறேன். ப்ளீஸ் ஒத்துக்கோங்க!”
மாலதியின் சூட்டமத்தை அவருக்கே திரும்பி அவன் செலுத்த, அவருக்கு கோபம் எட்டிப் பார்த்தது. “அப்படி என்னடா அந்த பொண்ணு இத்தனை வருஷமா வளர்த்த என்னை விட முக்கியமா போயிட்டாளா?”
மாலதியின் கேள்வியை கேட்டு கதிரவன் மெலிதாக சிரித்து, “அவ தான் முக்கியம்னு நான் சொல்லலைமா. ஆனா, நீங்க ஒத்துக்குட்ட அப்புறம் அவகிட்ட நமக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும்னு சொல்லிட்டேன். நானும் அந்த மைன்ட் செட்ல தான் இருக்கேன். நீங்க எதாவது கரக்டா ஒரு காரணம் சொல்லி வேணாம்னு சொன்னீங்கனா பரவாயில்ல.
பட், நீங்க சொல்ற காரணம் எல்லாம் அவங்க அம்மாவ பத்தி, அவங்க லைப் பத்தி. அது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல எனக்கு! அதனால, ப்ளீஸ் என்கிட்ட இன்னமும் பேசி கவின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க…” என்று தெளிவாக கூறி தூங்கச் செல்ல, அவனின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்த மாலதிக்கு தான் தூக்கம் தூரச் சென்றது.
அன்றிரவு முழுவதும் யோசித்து பின் மறுநாள் யாருக்கும் சொல்லாமல், ஜாதகப் பொருத்தம் பார்க்க போனார். தன் ஆஸ்தான ஜோசியரிடம் பொருத்தம் பார்த்தால், பத்துக்கு ஏழு பொருத்தம் இருந்தது. தாராளமாக திருமணம் செய்யலாம் என அவர் கூற, மாலதியின் மனதில் சிறிது நம்பிக்கை பிறந்தது.
வீட்டிற்கு வந்ததும் சுகுமாரனிடம் விஷயத்தை மெதுவாக கூற, அவரோ மிகவும் சந்தோஷப்பட்டார். “நிஜமா நம்ம பையனுக்கு அந்த பொண்ணு நல்ல ஜோடி தான். ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் நல்லபடியா இருப்பாங்க பாரு…” கணவன் மனதார கூறிய சொற்களை கேட்டும் மாலதியின் மனதில் சந்தோஷமில்லை. வென்னிலா அப்போழுது தான் ஹாலுக்கு வந்து என்ன விஷயம் என கேட்க, மாலதி அவளிடமும் செய்தியை பகிர்ந்தார்.
“நல்ல விஷயம் தானமா, எதுக்கு மூஞ்ச இப்படி வைச்சிருக்கீங்க?”
“நீ வேற சும்மா இருடி. அந்த அம்மாவே டிவோர்ஸ் வாங்கிருக்காங்க, இருவது வருஷம் முன்னாலயே…. இப்போ ஹச்சுன்னு தும்முனா டிவோர்ஸ்ன்னு நிக்கறாங்க எல்லாரும். இந்த பொண்ணும் அவங்க அம்மா மாதிரியே இருந்தா என்ன பண்றது?” மாலதியும் ஒரு தாயாக தன் மனத்தாங்கலை கணவனிடமும், மகளிடமும் பகிர, வென்னிலா தாயின் சொற்களை கேட்டு சிரித்தே விட்டாள்.
“என்னமா காமெடி பண்றீங்க. அப்படி பார்த்தா உங்கள மாதிரியா நான் இருக்கேன். இதுலாம் ஒரு காரணமா?”
நிலா கூறி முடிப்பதற்குள் சுகுமாரனும் அவளுக்கு ஒப்புக் கொண்டு பேசினார்.
“கரக்ட்டு. மாலதி இங்க பாரு, நிதானமா கேளு. முதல்ல அவங்க அம்மா எதுக்கு டிவோர்ஸ் வாங்குனாங்கன்னே தெரியாது. நமக்கு அது தேவையும் இல்லை. அவங்க சொல்ற வரைக்கும் நமக்கு இந்த விஷயமே தெரியாது தான? எனக்கு ராஜன் சார் கூட பழகுன வரைக்கு ரொம்ப தங்கமான மனஷன். அவரு தான் கொடிமலரோட அப்பா. நான் அத நம்புறேன். நீயும் அப்படியே நினைச்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ…”
கணவன் சொன்னதும் சரி தான் மகனும் திருமணமே வேண்டாம் என்றிருக்குறான். அதற்கு அவன் விரும்பும் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்து அலுவகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மகனிடம் அவரின் முடிவை கூற, கதிரவனின் முகத்தில் பல நாட்கள் கழித்து அப்போது தான் ஒளி வந்தது!
“ரொம்ப தாங்கஸ்மா” என்று அன்னையிடம் கூறிவிட்டு மறுநிமிடமே கொடிமலருக்கு ஃபோனை போட்டான். அதன்பின் வேலைகள் மலமலவென நடந்தது.
முதலில் கொடிமலரின் வீட்டில் இருந்து அவர்களின் நெருங்கிய சொந்தங்கள் கொண்டு கதிரின் வீட்டுக்கு வந்து பேசிச் சென்றனர்.
கொடிமலரின் தாய்மாமா, சித்தப்பா எல்லாம் ஒரு சேர வந்து கதிரவனை கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர். மலரின் சித்தப்பாவிற்கு சிறிது மனச்சுணக்கம் இருந்தாலும் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நடுவில், மலரின் மாமாவும், சித்தப்பாவும் சேர்ந்து கதிரவனை பற்றி அவன் அலுவகத்தில் எல்லாம் விசாரிக்க வேறு செய்தனர்.
அனைவரும் நற்சான்றிதழ் வழங்க கொடிமலரின் வீட்டில் பச்சை கொடி பறக்க விடப்பட்டது. அடுத்து, கதிரின் வீட்டில் இருந்து அவன் சொந்தங்கள் கொடிமலரின் வீட்டுக்கு செல்லும் முறை.
அதற்கு சில நாட்கள் முன் தான் மாலதி தன் உடன் பிறந்த அக்கா, தங்கையிடம் விஷயத்தை பகிர, அவர்களின் அங்கலாய்பில் மாலதி ஒரு வழியாகிப் போனார்.
பின் நல்ல நாள் பார்த்து அனைவரையும் கூப்பிட்டு, கொடிமலரின் வீட்டிற்கு செல்ல அங்கே ஆரம்பித்தது பிரச்சனை!!