அத்தியாயம் – 9
மாலதியின் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். மாலதி தான் நடுவில், ஒரு அக்கா, ஒரு தங்கை என மூன்று பேரும் ஒற்றுமையானவர்கள். ஒருவருக்கொருவர் மிகுந்த பாசம் இருந்தாலும், உள்ளுக்குள் போட்டியும் பொறாமையும் கூடவே இருக்கும். அதுவும், மாலதிக்கும் அவரின் தங்கை லலிதாவிற்கும் மிகுந்த பொறாமை குணம்.
இதனாலேயே அவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வேண்டுமே என யோசித்தே கதிரின் காதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பார்த்தார். அவனின் பிடிவாதத்தில் ஒத்துக் கொண்டாலும், மாலதியின் கர்வம் அடி வாங்கியது சகோதரிகளிடம் பேசும் போது!
மாலதியின் அக்காவின் பிள்ளைகள் இருவருக்கும் பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். அதையே சொல்லிக் காட்டினார் மாலதியின் தங்கை. “நம்ம வீட்டுல லவ் மேரேஜ் முதல்ல பண்றது உன்னோட பையன் தான் மாலு. இதுல நம்ம கதிர் தான் ஃபெர்ஸ்ட்…”
தங்கை இப்படி என்றால், அக்காவோ வேறு மாதிரி குத்திக் காட்டினார். “நம்ம கதிர் லவ் பண்றானா என்னால நம்பவே முடியலடி. என் பையன் கூட நிறைய பொண்ணுங்க கூட பேசுவான், அவன் தான் லவ்வுன்னு வந்து நிக்க போறான்னு பயந்தேன். நம்ம கதிர இந்த மாதிரி யோசிச்சு கூட பார்க்கல…”
மாலதியும் என்னவெல்லாமோ சொல்லி சமாளித்துவிட்டார் அப்போது. பின், கொடிமலரின் வீட்டிற்கு சொந்தங்களுடன் செல்லும் போது தான் சில பல முணங்கல்கள் ஆரம்பித்தன. கொடிமலர் யாருடன் பெரிதாக பேசவில்லை. எல்லோர் முன் அமரும் போது எதோ காட்சிப் பொருளை அனைவரும் எடை போடுவது போல் உணர்ந்தாள். பழக்கமில்லாத முடமுடப்பான பட்டுப் புடவை வேறு அசுவையாக இருக்க, முகத்தை சாதாரணமாக வைக்க முயன்றுக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் வென்னிலா அவளின் பக்கத்தில் வந்து அமர, அவளுடன் பேசும் போதே திரும்பி கதிரவனை பார்த்தாள். அவனும், ஒரக் கண்ணால் இவளை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு புன் முறுவல் பூக்க மீண்டும் தன் வருங்கால் நாத்தனாருடன் பேசினாள், மலர். இவை எல்லாம் வென்னிலா கவனித்தாளோ இல்லையோ, மாலதியின் தங்கை லலிதா கவனித்து, முழுங்கையால் இடித்து மாலதிக்கும் உணர்த்த, மாலதியின் முகம் கோபத்தை அடக்கி, வாடிப் போனது.
அன்றும் சில எடக்கு மடக்கான பேச்சுகள் மாலதியின் வீட்டாரிடமிருந்து வந்த வண்ணமிருந்தன.
“பூஜை ரூம் எல்லாம் இல்லையா? வெறும் கப்போர்ட் தானா? அக்கா வீட்டுல அங்க பூஜை ரூம் தனியா இருக்கும்.”
“என்னமா உனக்கு சாமி பக்தி எல்லாம் இருக்கா? பூஜை பண்ண எல்லாம் தெரியுமா?”
பேச்சு பூஜை, சாமியுடன் மட்டும் நிற்கவில்லை. அடுத்து பெண்ணிற்கு எவ்வளவு செய்வது என்பதில் ஆரம்பித்தது. கொடிமலரின் சொந்தங்களும் அப்போது வந்திருக்க, ராஜனும், கவிதாவும் தற்போதே எல்லாம் பேசி விடுவது சிறந்தது என யோசித்தனர். அனைவரின் முன்னிலையிலும், “பெண்ணிற்கு நாற்பது பவுன் போடுறோம். பையனுக்கு அஞ்சு பவுன்ல நகை போடுறோம். கல்யாணம் எங்க சைட்ல எல்லாம் பொண்ணு வீட்டுல தான் செய்வாங்க, ஆனா செலவு பாதி பாதியா எடுத்துப்பாங்க பையன் வீட்டுல. அதுபடியே செஞ்சுடலாம். உங்களுக்கு ஓகேங்களா?” என்று விரிவாக கேட்டார்.
மாலதி சிறிது திடுக்கிட்டு சுகுமாரனை பார்க்க, அவரோ என்ன சொல்வது என யோசிப்பதற்குள் லலிதாவின் கணவர் வாய் விட்டுவிட்டார்.
“என்னது நாங்க பாதி செலவு ஏத்துக்கணுமா? எங்க முறைல எல்லாம் பொண்ணு வீட்டுல தான் எல்லா செலவும் பண்ணுவாங்க. நாங்க ஏங்க பாதி செலவு ஏத்துக்கனும்?”
“எங்க முறையில ரெண்டு குடும்பமும் ஒண்ணா செலவு பண்ணனும் தான் பாதி செலவு ஏத்துக்கறது. நீங்க எல்லாமே நாங்களே பண்ணனும்னா எப்படி முடியும்?”
இது கொடிமலரின் சித்தப்பா… இருவரின் சித்தப்பாக்களும் மோதிக் கொள்வதை கண்டு கதிரவனும் கொடிமலரும் ஒருவரை ஒருவர் கவலையாக பார்த்துக் கொண்டிருக்க, சுகுமாரன் தான் இடையில் புகுந்து, “விடுங்க இதுலாம், அப்புறமா பேசிக்கலாம். நீங்க உங்க பொண்ணுக்கு என்ன முடியுமோ அதை பண்ணுங்க. நாங்க எதுவும் கேக்கலைங்க.” என்று சமாதானக் கொடி பறக்கவிட, அதையும் தடுத்தார் மலரின் தாய்மாமன்.
“ஆமா, எங்கள கேக்கறீங்களே, நீங்க பொண்ணுக்கு எவ்வளோ நகை ஈடுக் கட்டுறீங்கன்னு சொல்லவே இல்லையே?”
மலரின் மாமன் பேச்சு கதிரின் குடும்பத்தினரை சிறிது தூக்கி வாரிப் போட்டது. பெண் வீட்டார் அமைதியாக பயந்து பேசிய காலம் பறந்து சென்று விட்டது என உணர்ந்ததும் அப்போது தான். சுகுமாரனே எரிச்சல் அடைந்தார். நாம் சமாதானம் பேசும் போது இது என்ன ஏட்டிக்கு போட்டியாக பேச்சு?
ஒருவழியாக எல்லோரின் வாயையும் அடைத்தது, ராஜனின் தந்தை நடேசனின் பேச்சு தான். “எல்லாரும் ஒன்னு ஒன்னா பேசிட்டே இருப்போம். அப்புறமா பேசிக்கலாம்னு, பையனோட அப்பாவே சொல்லிட்டாரு. அதே மாதிரி, இன்னோரு நாள் பேசிக்கலாம்.”
நடேசன் பேச்சை கேட்டாலும், இரு வீட்டாரின் மனதிற்குள்ளும் இந்த விஷயம் ஓடிக் கொண்டே இருந்தது. எல்லாம் சாப்பிட்டு முடிந்து, வீடு வந்ததும், கதிரவன் முடிவாக சொல்லிவிட்டான். “நான் இதுக்கு முன்னாடி நீங்க பொண்ணு பார்க்குறப்போ சொன்னது தான்மா. வரப்போற பொண்ணு வீட்டுல எந்த டிமாண்டும் வைக்க கூடாது.
இப்போவும் அதே தான். என்னமா பார்க்கறீங்க?”
மாலதியின் ஆவேசமான முகத்தை கண்டு பேச்சை நிறுத்தி கேட்க, மாலதி வழக்கம் போல் பொங்கிவிட்டார். “ஆமாடா, அவங்க மாமா நம்மல நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு கேட்டு அசிங்கப் படுத்துவான். அதை எல்லாம் பார்த்துட்டும் எதுவும் கேட்க கூடாதுன்னு சொல்ற! அவங்க தான் நம்மகிட்ட பாதி கல்யாண செலவு ஏத்துக்க சொல்லி கேக்குறாங்க.”
“அது அவங்க வீட்டு முறை, அத தான் நம்ம கிட்ட சொன்னாங்க. நம்ம இந்த விஷயத்தை பேசி முடிக்கலாம்மா. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.”
கதிர் கூறிவிட்டாலும் அவனின் மனதிற்குள்ளும் இதை எப்படி சரி செய்வது என ஓடிக் கொண்டே இருந்தது. கொடிமலருக்கும் அதே தான். அன்றிரவே வெகு நேரம் இதை குறித்து பேசினர். கதிரவனுக்கு கொடிமலரின் நிலை புரிந்தாலும், கல்யாண செலவை பாதி ஏற்றுக் கொள்ள அவனும் உடனே முன் வரவில்லை.
ஏன்னென்றால் அதற்கு அவனின் தந்தையும் ஒத்துக் கொள்ளவில்லை!
“டேய் உனக்கு முடிச்சு உடனே நிலாக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னு இருக்கேன். உனக்கே தெரியும், நம்ம வீட்டுல எல்லாம் நாம தான் செய்யனும் அவ கல்யாணத்துக்கு. அதனால, இப்போ உனக்கு செஞ்சுட்டா, அடுத்து அவளுக்கு செய்யும் போது காசு பத்தாது. நகை விலை வேற ஏறிட்டே போகுது. அவளுக்கு இன்னும் எப்படியும் ஒரு பத்து பவும் சேர்க்கனும்…. அதனால தான் சொல்றேன்.”
தந்தையின் கூற்றும் அவனுக்கு சரியெனப் பட்டது. சரி தான் சம்பாதித்த காசை குடுக்கலாம் என்றால், அதற்கும் மாலதி குறுக்கே நின்றார். சிறிது நாட்கள், விவாதத்திலேயே செல்ல கொடிமலரின் வீட்டில், கதிரின் குடும்ப நிலைப்பாடு புரிந்துவிட்டது. அவர்களும் ஒரு முடிவுடன் கதிரின் பெற்றோரை வீட்டிற்கு அழைத்து பேசி விட்டனர்.
“இங்க பாருங்க சார், உங்க கிட்ட மறைக்க எங்களுக்கு ஒன்னுமில்லை. நாங்க பொண்ணு கல்யாணத்துக்கு காசு சேர்த்து வச்சுருக்கோம். பட், அது கிராண்டா மண்டபம் எடுத்து கல்யாணம் பண்ண பத்தாது. நீங்களும் செலவு எடுத்துக்க யோசிக்கறீங்க. அதனால, வீட்டுல பேசினோம் என்ன பண்ணலாம்னு. எங்க மினுக்கும் கிராண்டா கல்யாணம் பண்ணி செலவு பண்றதுல விருப்பமில்ல.
அதனால, ஒரு நல்ல கோவில்ல கல்யாணம் பண்ணிட்டு, ரிசெப்ஷன் நல்லா கிராண்டா, ஒரு ஸ்டார் ஹோட்டல்ல கூட வச்சுடறோம். உங்களுக்கு ஓகே வா என்ன சொல்றீங்க?”
ராஜன் பேசியதும், சுகுமாரனுக்கு சரியெனவே பட்டது. அவரும் ஒரு பெண் பிள்ளைக்கு தந்தையாயிற்றே? ஆனால், அவரின் தர்ம பத்தினி என்ன நினைக்கிறார் என மாலதியின் முகத்தை பார்க்க, அவரும் பாதி சரி என்ற நிலையில் தான் இருந்தார்.
இந்த பிரச்சனைக்கு ஒரு முடி வந்தால் சரி தான் என கதிரும் மாலதியின் முகத்தை பார்த்து கண்களாளே வினவ, அவரும் ஒரு பெரு மூச்சுடன், சரியென தலையசைத்தார்.
கதிரிடம் கொடிமலர் ஏற்கனவே இந்த கோவில் கல்யாணம் என்ற விஷயத்தை கூறியபடியால், அவனுக்கு இது புதிதாக இல்லை. அவனுக்குமே இதுவே பிடித்தது. சுகுமாரனும், “அப்படியே செஞ்சுடுங்க, எல்லாருக்கும் இது தான் கரக்டா இருக்கும்.” என்று மகிழ்ச்சியுடன் கூற, ராஜனுக்கும் கவிதாவிற்கும் அது தொற்றிக் கொண்டது.
எல்லாம் சில நொடிகள் தான், திடீரென மாலதியின் குரல் துடுக்காக அங்கே ஒலித்தது. “நிச்சயதார்த்தம் பத்தி பேசவே இல்லையே?”
இது காதல் திருமணம் என்பதால், கொடிமலரின் வீட்டில் நேரடியாக திருமணத்தை வைத்துக் கொள்ளும் முடிவில் இருக்க, சட்டென்று கதிரின் தாய் இதை பற்றி கேட்டதும் எல்லோரும் திகைப்பாக உணர்ந்தனர்.
சுகுமாரன் மாலதியின் காதின் அருகில் சென்று, “இப்போ எதுக்கு நிச்சயம் எல்லாம்? இது லவ் மேரேஜ் தான, விடு…” என்று கிசுகிசுக்க, மாலதி அதை சட்டையே செய்யவில்லை. பதிலை எதிர் நோக்கி, மலரின் குடும்பத்தாரின் முகத்தை பார்த்த வண்ணம் இருந்தார்.
கொடிமலரின் முகமோ கோபமும், வலியும் ஒரு சேர இருப்பதை கண்ட கதிரவன் தான் இதற்கு தீர்வும் கூறினான். “நிச்சயதார்த்தம் நம்ம அப்பார்ட்மெண்ட் கம்யூனிட்டி ஹால் இருக்குல அங்கயே பண்ணிக்கலாம்மா… ரெண்டு ஃபிமாலியில இருக்குற நெருங்கிய சொந்தக்காரங்க வரைக்கும் வச்சுட்டு பண்ணிக்கலாம். என்னப்பா ஓகே தான?” சுகுமாரன் தலையாட்டியதும், ராஜனின் முகம் பார்க்க அவரோ, “ஹால்ல ஒரு நூறு, நூத்தி இருவது பேர் தான் உட்கார முடியும் தம்பி. உங்களுக்கு ஓகே வா?” என்று தயங்கியபடி கேட்க, இப்போழுது வாய் திறந்தது கதிர் அல்ல, கொடிமலர்.
“ஏன்பா, க்ளோஸ் ரிலேட்டிவிஸ் வரைக்கும் கூப்பிட்டா, ரெண்டு குடும்பத்துலயும் ஒரு நூறு பேர் தான் வருவாங்க. அது வரைக்கும் கூப்பிட்டு பண்ணாவே போதும். கரக்ட் தானமா? என்ன தாத்தா, சரி தான?”
கதிர் அவனின் தந்தையை கேட்டது போல், கொடிமலரும் அவளின் வீட்டினரை கேட்க, அதுவே மாலதிக்கு பிடிக்கவில்லை. ‘இந்த பொண்ணு என்ன இப்பவே இப்படி பேசுது, இதுலாம் எங்க போய் முடிய போகுதோ?’ மாலதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அனைவரும் மலர் கூறியதற்கு ஒத்துக் கொண்டனர். ஆனால், எல்லோரும் ஒரு பக்கம் நிற்க தான் மட்டும் மறுப்பக்கம் தனியாக நிற்பதை விரும்பாதவர், கொடிமலரும் கதிரும் கூறியதற்கு சம்மதித்தார்.
அடுத்து நிச்சயதார்த்த புடவை, நகை எடுக்கவும், மாலதியின் அக்கா, தங்கை வந்து வேவு பார்க்க ஆரம்பிக்க, கொடிமலருக்கும் அவர்களின் முன் சாதாரணமாக இருக்கவே முடியவில்லை.
தன் மாமன் மகள் ஆர்த்தியும் வந்திருக்க அவளிடம் கூறினாள். “இவங்க வந்தாலே என்னால, ஃப்ரியா இருக்க முடியலடி. சிசிடிவி கேமரா மாதிரி நோட்டம் விட்டுட்டே இருக்காங்க. அதுவும் அவங்க சித்தி இருக்காங்களே!! ஷப்பா, முடியல…”
கொடிமலர் கூறியதை முதலில் கவனித்தது கதிரும் வென்னிலாவும் தான். வென்னிலா முதலிலேயே அண்ணனிடம் சொல்லி இருந்தாள். “பெரியம்மா, சித்தி கண்ணுயெல்லாம் உங்க ரெண்டு பேரு மேலயும் தான். அதனால, பார்த்து இருந்துக்கோனா.”
என்ன தான் மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்று உணர்ந்தாலும், கதிரவனுக்கும் பிடித்த மாதிரி புடவை எடுக்க வேண்டும் என்று நினைத்தாள் மலர். எல்லாப் பெண்களும் விரும்புவதும் அது தானே?
ஆனால், இவள் புடவை எடுக்கும் போது மற்ற குடும்பப் பெண்கள் சூழ நிற்க, கொடிமலர் திரும்பித் திரும்பி கதிரை தேடினாள். இவளின் கண்களின் தேடலை கவனித்து வென்னிலா தூர நின்றிருந்த தமயனை உடன் அழைக்க, அவன் வந்ததும் கொடிமலர் கண்களாலே அவனிடம் தான் எடுத்த புடவையை காட்டி வினவ, கதிரும் தலையசைத்து, “நல்லாயிருக்கு, உனக்கு ஓகே வா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
“ஹ்ம்ம்ம்ம்” என்று அதே மெல்லிய குரலில் மலர் அளிப்பதற்குள் மாலதியின் தங்கை லலிதா, “அதெல்லாம் அவளுக்கு பிடிச்ச மாதிரி தாண்டா எடுக்கவிட்டோம். நாங்க எதுவும் சொல்லலை” என்று நடுவில் புகுந்து உரத்த குரலில் கூற, கொடிமலருக்கு தூக்கி வாரிப் போட்டது.
நாம் பேசுவதையும் இவர்கள் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்களா? இவர்கிட்ட பேசும் போதும் கவனமா தான் இருக்கனும் போல….
இப்படி பல தரப்பட்ட சோதனைகளுடன் இவர்கள் நிச்சயப்பட்டு, நகையை வாங்கிச் செல்ல, அதற்குப்பின் கொடிமலர் இவர்களை கண்டது நிச்சயத்தார்த்த மேடையில் தான்.
இதையெல்லாம் யோசித்தபடி படுத்திருந்த ஜீவன்கள் இருவர். வேறு யார் கதிரும் மலரும் தான். மறுநாள் அவளிடம் நேரில் பேச வேண்டும் என நினைத்த கதிர், மதிய சாப்பாட்டுக்கு வெளியே போகலாமா என்று கேட்க, மலரும் சரி என்றாள்.
மறுநாள் கீழே பார்க்கிங் ஏரியாவில் கொடிமலரை பார்த்த கதிர் புன்னகைக்க, அதே புன்னகை அவளின் முகத்தில் எதிர் ஒலித்தது.
பொதுவான விஷயங்கள் பேசி, அருகில் இருந்த ஒரு நல்ல உணவகத்துக்கு சென்றவர்கள் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு, ஒருவரை ஒருவர் கண்களால் மற்றவரின் மனதில் ஓடும் எண்ணத்தை படிக்க முயன்றனர்.
கதிர் அதில் தோல்வியுர, மலரிடம் நேரடியாகவே கேட்டான். “உங்க வீட்டுல என்ன சொல்றாங்க மினு? முக்கியமா நீ என்ன நினைக்குறன்னு தெரிஞ்சுக்க தான் இன்னிக்கு கூப்பிட்டேன்.”
ஆம், கதிரும் கொடிமலரை இப்போது எல்லாம் மினு என்றே அழைக்கிறான். வீட்டில் உள்ளவர்கள் போல் இவன் அழைக்கும் போது தனக்கு இன்னும் நெருக்கமானதாக மலரும் உணர்ந்தாள்.
ஆனால், தற்போது அவனின் கேள்வி மிகவும் ஆழமானதே? அதற்கு சட்டென்று பதிலளிக்க முடியாமல், மலரும் தன்னவனின் முகத்தை பார்க்காமல் கீழே மேசையை பார்த்து படி இருக்க, கதிர் தான் அவளின் உள்ளங்கையை பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்து அவளை பேசத் தூண்டினான்.
ஒரு பெரு மூச்சை விட்ட மலர், மேலும் இவனிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை, வாழ்க்கையே பகிரப் போகிறோம் சில மாதங்களில்.
அதனால், மனதில் இருந்ததை மறைக்காமல் பேசினாள். “தெரியல இன்னும் முழுசா ஷாக்ல இருந்து நாங்க வெளிய வரலன்னு தான் சொல்லனும். நேத்து வீட்டுக்கு வந்துட்டு ஈவ்னிங் அம்மா, அப்பா கூட பேசினேன். அம்மா சொல்லிட்டாங்க, எங்க எல்லாரோட லைப்ஃலையும் நேத்து பார்த்தவரு ஒரு முடிஞ்சு போன சாப்டர்! அதனால, இந்த விஷயத்தை மறக்க சொல்றாங்க! எனக்கு எல்லாமே எங்கப்பா, எங்கம்மா தான். இன்னிக்கு ரெண்டு பேரும் ஓகே வா தான் இருக்காங்க.
தாத்தா தான் கொஞ்சம் யோசனையாவே இருக்காரு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, நானும் எதுவும் மேல யோசிக்கல…. ஏன்னா யோசிச்சு பார்த்தா ஏன் கடவுள் இப்படி பண்றான்னு தான் இருக்கு கதிர்! ப்ப்ச்ச், விடுங்கப்பா…”
வாழ்க்கை போகும் போக்கை பிடிக்காமல், ஒரு விரக்த்தியில் கொடிமலர் பேசுகிறாள் என்று கதிரின் மூளைக்கு புரிந்தாலும், மனம் வேறாக எண்ணியது.
மனம் போன போக்கையும், நேற்று முதல் மனதில் துரித்திக் கொண்டிருந்த எண்ணில் அடங்கா பயங்களையும் தன் குரலில் தேக்கி, தன் வருங்கால மனைவியிடம் கேட்டான். “தாத்தா என்ன யோசிக்கறாரு? எனக்கு நேத்துல இருந்து ரொம்ப பயமா இருக்கு…. இதனால, நம்ம கல்யாணத்துக்கு பிரச்சனை வருமோன்னு! அப்படி உங்க வீட்டுல ஏதாவது யோசிக்கறாங்களா?”
கதிரின் கேள்வி மலரை உண்மையில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவளும் சரி, அவளின் வீட்டினரும் சரி அந்த போக்கில் யோசிக்கவே இல்லை. ஒரு புரியாத பாவனையுடன், மலரும் பதிலளித்தாள். “நீங்க என்ன சொல்ல வறீங்க, நம்ம கல்யாணத்தை எங்க வீட்டுல நிறுத்திருவாங்கன்னா? யாராவது அப்படி செய்வாங்களா? ஏன் இப்படியேல்லாம் யோசிச்சு குழப்பிக்குறீங்க? எங்க வீட்டுல இதால எதுவும் பிரச்சனை வராது! எங்களுக்கு பயமே உங்கம்மா, அவங்க சொந்தக்காரங்க எல்லாம் ஏதாவது பிரச்சனை பண்ணப் போறாங்களோன்னு தான்….”
கொடிமலர் கூறியதும் கதிரவனின் முகத்தில் ஒரு பிரகாசம் வந்தது. பெயருக்கேற்ப இப்போது தான் இருக்கிறான் என்று எண்ணம் வந்த போதும், கொடிமலர் அவளின் கேள்விக்கு பதில் வரவில்லை என்று உணர்ந்து மீண்டும் தன் கேள்வியை முன் வைத்தாள்.
“சொல்லுங்க, உங்க வீட்டுல என்ன சொன்னாங்க? மெயின்னா உங்கம்மா, அப்பா எல்லாம்…”
கொடிமலரின் கேள்வி கதிரவனை நேற்று வீட்டில் நடந்தவற்றை ஞாபகப்படுத்தியது.
நிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரும் கிளம்பியது கதிரின் குடும்பத்தார் வீட்டிற்கு வந்ததும், மாலதி தான் இவ்விஷயத்தை முதலில் ஆரம்பித்தார்.
நேராக பூஜை அறைக்குச் சென்று, “அப்பா, முருகா. கோடான கோடி நன்றிப்பா… எப்படியோ வீட்டுக்கு வரப் போற மருமக, என்னோட சொந்தத்துலயே கூட்டிட்டு வந்துட்ட. இதை எதிர்பார்க்கவே இல்ல. என்னோட அண்ணோட ரத்தம் தான் எனக்கு மருமகளா வரனும்னு இருந்துருக்கு! எல்லாம் உன் சித்தம்….” என்று மனமார முருகனிடம் பரவசப்பட்டு விட்டு, வெளியே ஹாலுக்கு வந்தும் அதையே எல்லோரிடமும் கூறி சிலாகித்தார்.
கதிருக்கு இருக்கும் தலைவலியில் தாயை ஏதாவது பேசி விடக் கூடாது என்று பயந்தவன், “ம்மா, விடுங்க. அவங்க வீட்டுல இதை பெரிய விஷயமா எடுத்துக்கல. அவங்க நார்மல்லா இருக்காங்க. நாமளும் அப்படியே இருப்போம்… நீங்க போயிட்டு ரெஸ்ட் எடுங்க.” என்று பொறுமையாக சொன்னான்.
“அது எப்படி சின்ன விஷயம் ஆகும்? அவங்க என்ன ஆளுங்களோ என்ன குடும்பமோன்னு இருந்தேன். பார்த்தா, கடைசியில எங்க பெரியம்மா குடும்பம் தான் சொந்தம் வருது… இது கடவுளா போட்ட முடிச்சுடா…. உனக்கு இவ தான்னு இருக்கு பாரு!”
மாலதி கூறியதை கேட்டு கதிரி பதில் அளிப்பதற்குள் சுகுமாரன் இடையில் புகுந்து, “உனக்கு எது தான் சின்ன விஷயம் சொல்லு, எல்லாமே பெரிய விஷயம் தான்…. முதல்ல வேண்டவே வேண்டாம்னு இருந்த, இப்போ என்னடான்னா அப்படியே உல்டாவா சொல்ற… ஒரே மாதிரி பேசு முதல்ல!” என்று மனைவிக்கு புத்திமதி சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்.
மாலதி கணவனின் பேச்சை எல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் நல்ல மனநிலையில் இருந்ததால்! ஆனால், அன்னையின் சந்தோஷத்தை பார்த்த கதிருக்கு இது கண்டிப்பாக பின்னால் பிரச்சனையில் முடியும் என்று மட்டும் புரிந்தது. இப்போது இதையேல்லாமா கொடிமலரிடம் சொல்ல முடியும்?
மேலோட்டமாக கூறி முடித்தான். “எங்க வீட்டுல ஒண்ணும் சொல்லல… எனக்கு உங்க வீட்டுல என்ன ரியாக்ஷன்னு தெரிஞ்சிக்க தான் இன்னிக்கு பேசலாம்னு சொன்னேன்.”
கதிர் கூறியதை கேட்டு கொடிமலரும் நம்பினாள் முழுமையாக. சில நாட்களில் இதை ஒட்டி வரப் போகும் பிரச்சனையை அறியாமல்!!
Last edited: