Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...17...2

  • Thread Author
அத்தியாயம்….17…2

வதனியிடம் மெசஞ்சரில் பேசிய பின் ஸ்ருதி கண்ணாடி முன் வந்து நின்றாள்… தேகம் மெலிந்து, உதடும்.. தோலும் வரட்சியாக… கண்களை சுற்றி கருவளையுமாக கண்ணாடில் அவள் முகத்தை அவள் பார்க்கவே என்னவோ போல் தெரிந்தாள்…

மாதம் ஒரு முறை அழகு நிலையத்திற்க்கு ஸ்ருதி கண்டிப்பாக சென்று விடுவாள்.. ஸ்ருதி அழகி தான்.. ஆனால் அழகை இன்னும் எடுத்து காட்டுவாள் ஸ்ருதி…

சித்தார்த் தன் கழுத்தில் தாலி கட்டி விட்டு தன்னை விட்டு சென்ற பின்.. அவள் குளிப்பதற்க்கே அவளின் அன்னை சொல்லும் படியான நிலையில் தான் அவள் தற் சமயம் இருக்கும் போது, எங்கு இருந்து அழகு நிலையத்திற்க்கு எல்லாம் சென்று இருக்க போகிறாள்..

அதனால் அவளின் புருவம் ஏனோ தானோ என்று வளர்ந்து போய் தெரிந்ததில், தன் அழகு குறைந்தது போல தெரிந்தது.. கூடவே கண்ணாடியில் தெரியும்… தன் பிம்பத்தின் பின் பக்கம் மகி இயற்க்கை அழகோடு நின்று கொண்டு இருப்பது போல தெரிய, சட்டென்று அனிச்சை செயலாக தன் பின் பக்கம் திரும்பி பார்த்த ஸ்ருதி…

அது தன் மனப்பிரம்மையில் தான் மகி தெரிந்தாள் என்று புரிந்து கொண்டவள் மீண்டுமே ஸ்ருதி தன் உருவத்தை கண்ணாடியில் பார்வை இட தொடங்கினாள்…

இன்று சித்தார்த்தை பார்க்க செல்கிறோம் என்றதில் காலையிலேயே பார்லருக்கு சென்று வந்து இருக்கலாம். என்று காலம் கடந்து நினைத்து கொண்டாள்..

கூடவே மகிக்கு பக்கம் தான் நிற்கும் போது கொஞ்சம் குறைந்து தெரிந்து விடுவோமோ என்ற பயமும் வந்தது.. ஆனால் சித்தார்த் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன். அவன் முன் ரதியே வந்தாலுமே அவன் கண்ணுக்கு நான் தான் அழகாக தெரிவேன் என்று தன்னை தேற்றிக் கொண்டாலுமே, இன்று சித்தார்த்தை பார்க்க செல்வதால் தன் உடையிலும் சரி… தன்னை அலங்கரித்து கொள்வதிலும் சரி கொஞ்சம் தன்னை சிரத்தை எடுத்து கொண்டு தான் தயாராகி கூடத்திற்க்கு வந்தாள்.

மாலை காபியை குடித்து கொண்டு இருந்த தாமரை நீண்ட நாட்களுக்கு பின் மகள் தன்னை அழகாக அலங்கரித்து கொண்டதில் மகிழ்ந்து போனவர்…

“ஸ்ருதி வெளியில் போறியாடா…? அம்மாவும் வரட்டுமா…? என்று கேட்டவளிடம்..

“ஆமாம் மா வதனியை பார்க்க போறேன்.. நானே போயிக்கிறேன் ம்மா நீங்க வேண்டாம்..” என்று மகள் சொன்னதும் தாமரை சட்டென்று ஒத்து கொண்டு விட்டாள்..

காரணம் வதனி வேலை செய்வது மாப்பிள்ளை வேலை செய்யும் அதே கல்லூரியில் தான் என்பது தாமரைக்கு தெரிந்ததினால்,

அதனால் தான் மகள் தன்னை இப்படி அல்கங்கரித்து கொண்டு இருக்கிறாள் என்பதும் தாமரைக்கு புரிந்து விட்டது…

சித்தார்த் தன் மகளை பார்க்க கூடும்.. அவர் மனது மாறவும் வாய்ப்பு உள்ளது என்ற சந்தோஷத்தில் மகளை சிறிது நிற்க வைத்து பிரிஜில் இருந்த மல்லிகை பூவை எடுத்து வந்தவர் மகள் தலையில் வைத்து அவளை சந்தோஷமாகவே தான் வழி அனுப்பி வைத்தது.

ஆனால் அந்த பூ தான் இன்று குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக சின்னா பின்னாமாகி போகிறது என்று தெரியாது. தன் மகள் அழகில் மயங்கி போய் மாப்பிள்ளை தன் மகளோடு வாழ ஆரம்பித்து விடுவான் என்று நினைத்து பகல் கனவு கண்டு கொண்டு இருக்க.

இங்கு கல்லூரி வளாகத்திற்க்கு வெளியில் காத்து கொண்டு இருந்த ஸ்ருதியின் கண்களோ எப்போதடா சித்தார்த் கார் கண்களுக்கு தெரியும் என்று தேவுடு காத்து கொண்டு இருந்தாள்…

சித்தார்த்தின் கார் சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு தான் ஸ்ருதியின் கண்களுக்கு பட்டது… ஸ்ருதி கல்லூரி வளாகத்தை விட்டு கொஞ்சம் தூரம் தான் தன் காரை நிறுத்தி இருந்தாள்.. காரை விட்டு வெளியில் எல்லாம் வரவில்லை.. காரில் ஒட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தான் சித்தார்த்தின் காரை எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தது..

சித்தார்த்திடம் ஸ்ருதி சண்டை பிடிக்கும் எண்ணம் எல்லாம் கிடையாது.. இன்னும் கேட்டால் தன்மையாக பேசி, தங்களின் காதலை அவனுக்கு நியாபகம் படுத்தி தங்களின் காதலை புதுபித்து கொள்ள தான் நினைத்து கொண்டு இருந்தாள்..

ஆனால் தூரத்தில் சித்தார்த் அருகில் மகியை பார்த்ததும்.. அதுவும் சித்தார்த் மகியிடம் ஏதோ அவளை பார்த்து பேசி சிரித்து கொண்டே சாலையில் பார்வை பதித்த சித்தார்த்தின் முகத்தில் தெரிந்த அந்த புன்னகை..

அதோடு தன்னை பார்க்காத பாதிப்பு எதுவும் இல்லாது எப்போதும் போலவே சித்தார்த்தின் உருவம்.. உடை என்று அனைத்தையும் பார்த்தவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்து விட்டது.. தன்னுடைய பிரிவு அவனை பாதிக்கவே இல்லையா,..? என்ற கோபம் ஸ்ருதிக்கு,

அதில் ஸ்ருதி சட்டென்று எதை பற்றியும் யோசிக்காது சித்தார்த்தின் காரின் முன்பு தன் காரை நிறுத்தி விட்டு இருந்தாள்..

கல்லூரி விட்டு ரொம்ப நேரம் ஆகி இருந்ததினால், அந்த சாலை வெரிச்சோடி போய் தான் காண்ப்பட்டது.. அதோடு சித்தார்த்தும் மகியிடம் பேசிக் கொண்டே காரை ஓட்டியதினாலும் சித்தார்த் காரை வேகமாக எல்லாம் செலுத்தவில்லை..

அதனால் ஸ்ருதி காரை இடையில் வந்து நிறுத்தவும் .. சித்தார்த் சட்டென்று சடென் ப்ரேக் போட்டு விட்டான் தான்… ஆனால் கொஞ்சம் அசந்து இருந்தாலும் சித்தார்த் கார் ஸ்ருதி காரை மோதி இருந்து இருப்பான்..

இன்று ஸ்ருதி அவளின் அப்பாவின் காரை எடுத்து வந்ததால், காரை செலுத்தியது ஸ்ருதி என்று சித்தார்த்துக்கு தெரியவில்லை..

இப்படி வந்து நிறுத்தவும்.. பல்லை கடித்து கொண்டு கோபத்தோடு தான் சித்தார்த் காரை விட்டு இறங்கினான்.. கூடவே மகியுமே தன் அத்தானோடு இறங்கினாள்..

அவளுக்கு இதே போல் தான் தன் அப்பா அம்மாவை காரில் இடித்து இருந்து இருப்பாளோ என்ற கோபம்.. மகிக்குமே காரில் இருப்பது ஸ்ருதி தான் என்று தெரியாது தான் இறங்கினாள்

மகிக்கு தண்ணீர் அடித்து கொண்டு காரை ஓட்டுகிறானோ… என்றதில் வந்த கோபமும் அவளுக்கு சேர்ந்து கொண்டது..

காரில் அமர்ந்து கொண்டு இருந்த ஸ்ருதியோ… இரண்டு பேரும் ஒரு சேர இரண்டு பக்கம் இருந்து.. அதுவும் கோபத்தில் கூட இரண்டு பேரும் ஒன்றாக கோபமான முகத்தோடு இறங்குவதை பார்த்து ஸ்ருதிக்கு அவர்களை விட கோபம் வந்து விட்டது.. அவளுமே கோபமாக தன் காரை விட்டு இறங்கி நின்றாள்.

ஸ்ருதியின் காரை நோக்கி கோபத்தோடு வந்த சித்தார்த்தும், மகியுமே ஸ்ருதியை பார்த்து ஒரு சேர் அடுத்த அடியை எடுத்து வைக்காது நின்று விட்டனர்.. இதிலுமே ஒற்றுமையா…? என்று பார்த்து ஸ்ருதிக்கு இன்னும் தான் கோபம் கூடியது…

ஆனால் ஸ்ருதியை பார்த்த மகிக்கு அவளை விட கோபம் ஏற..

“ஓ மேடமா…? காரை இடிப்பது போல நிறுத்தும் போதே.. அனுமானித்து இருந்து இருக்க வேண்டும்…” என்று இடக்காக பேசினாள்..

ஸ்ருதியிடம் இது வரை மகி பாசமாக அன்பாக தான் பேசி பழக்கம்.. இது போலான பேச்சு மகி ஸ்ருதியிடம் பேசுவது புதியது …

அதோடு ஸ்ருதி தான் தன் அப்பா அம்மாவை காரை ஏத்தி கொன்றது என்று தெரிந்து. இப்போது தானே ஸ்ருதியை மகி பார்ப்பது.. அதனால் இது போல பேச்சு தன்னால் மகிக்கு வந்து விட்டது.. கூடவே இப்படி இடையில் காரை நிறுத்தியதிலும் கோபம்.

அன்று தான் போதை.. அதுவும் அவளுக்கே தெரியாது கொடுத்து விட்டார்கள் என்றார்கள். இன்று என்ன. இன்றுமே அது போல கொடுத்து விட்டார்களா என்ன..? நினைத்ததை கேட்டும் விட்டாள்..

மகியின் இந்த பேச்சுக்கு ஸ்ருதி சித்தார்த்தை தான் பார்த்தாள். அவன் தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்லுவானா…? என்று நினைத்து…

ஆனால் சித்தார்த் ஒன்றும் பேசவில்லை.. யாரோ என்று நினைத்து கோபமாக பேச வந்தவன்.. ஸ்ருதி என்றதும் அந்த கோபமான பேச்சாக பேச கூட பிடிக்காது தான் நின்று விட்டான்..

ஆனால் அது தெரியாது ஸ்ருதி தான்… “ நான் வேண்டும் என்று எல்லாம் காரை ஏத்தல புரியுதா.. ? அதோட நான் உன் கிட்ட பேச வரல. நான் என் ஹஸ்பெண்ட் கிட்ட தான் பேச வந்தேன்…” என்ற பேச்சில் மகி சித்தார்த்தை தான் பார்த்தாள்..

சித்தார்த் முகத்தில் மகி என்ன கண்டாளோ… “ என்ன ஹஸ்பெண்டா..? அது யாரும்மா…?” என்று கிண்டலாக கேட்டாள்..

மகிக்கு தன் தாய் தந்தையரை காரை ஏற்றி கொன்றதை விட. அவர்களின் இறப்பை அப்படி மாற்றி விட்டார்களே என்ற கோபம் தான் அதிகமாக இருந்தது.

அதோடு ஸ்ருதி சுய நினைவு இல்லாத போது காரை ஏற்றினாள்.. அவளாள் இரு உயிர் போய் விட்டது கூட அவளுக்கு தெரியாது.. அதனால் மத்தது எதுவும் தெரியாது என்று சொன்னால் கூட, இப்போது தான் எல்லாம் தெரிந்து விட்டது தானே… தெரிந்த பின் என்ன செய்தாள்.. நியாயமானவளாக இருந்தால், ஜாமீன் வாங்கி இருந்து இருப்பாளா. அதோடு இந்த தற்கொலை எல்லாம் இது என்ன ட்ராமா.. அத்தானோடான திருமணம் கூட இப்படி தானே நடந்தது. எமோஷனல் ப்ளாக்மெயில் போல தானே எல்லாம் செய்கிறாள் என்ற எண்ணம் மகிக்கு..

சித்தார்த் திருமணத்தினால் தான் தன் அத்தைக்கு அத்தனை மன அழுத்தம் கூடவே ஸ்ருதியின் தந்தை செய்த கேவலமான அந்த செயல்கள் என்று அனைத்தும் சேர்ந்து மகிக்கு அத்தனை கோபம்..

மகியின் இந்த கிண்டல் பேச்சு.. பார்வை.. அதோடு ஹஸ்பண்டா என்று கேட்டு சிரித்த தோரணை.. இதை எல்லாம் விட சித்தார்த் இதை எல்லாம் கேட்டு அமைதியாக நின்று கொண்டு இருப்பதை பார்த்தவள்..

“ஆமா ஹஸ்பெண்ட் தான். அதுல உனக்கு சந்தேகம் வேறா….?அது தான் அன்னைக்கு நீயும்.. உன் அத்தையுமே பார்த்திங்களே..” என்று இப்போது ஸ்ருதியின் பேச்சிலும் இடக்கு இருந்தது..

இத்தனை நேரம் அமைதியாக நின்று கொண்டு இருந்த சித்தார்த்.. அதுவும் ஸ்ருதியின் கார் தான் தன் காரை வழி மறித்து நின்றது என்று கண்டதுமே பார்வை கூட ஸ்ருதி பக்கம் பார்க்காது நின்று கொண்டு இருந்த சித்தார்த்..

ஸ்ருதி தங்கள் திருமணத்தை சொன்னவள் கூடவே தன் அம்மா பார்த்ததுமே கூறியதில், அதனால் தன் அம்மா பட்ட கஷ்டமும். மன வேதனையும்.. கூடவே ஸ்ருதியின் அப்பா தன் அம்மாவுக்கு செய்த கொடுமையுமே சேர்ந்து நியாபகத்திற்க்கு வந்து விட..

இப்போது சித்தார்த் ஸ்ருதியை நேர்க் கொண்டு பார்த்தவன்….

“என் அம்மா பார்த்தது மட்டும் சொன்னா எப்படி..? என் அம்மா மயக்கம் போட்டு விழுந்ததை நீ சொல்லலையே… அந்த மயக்கம் கூட தன் மகன் தனக்கு தெரியாது கல்யாணம் செய்த அதிர்ச்சியை விட.. யாரோட மகளை கல்யாணம் செய்து கொண்ட அதிர்ச்சியில் தான் விழுந்தாங்க… அது நீ சொல்லலையே…?” என்று கேள்விகளாக சித்தார்த் கேட்டு கொண்டு போக.,.

ஸ்ருதியின் முகம் பாவம் சட்டென்று மாறி போக.. மிகவும் அமைதியான முக பாவனை தான் ஸ்ருதியின் முகத்தில் தெரிந்தது…

சித்தார்த் அருகில் வந்தவள்… “ அது தான் சித்து..நாம இது பத்தி பேசலாம் சித்து.. தனியா பேசலாம் சித்து…” என்று குழைந்து போய் பேசியவளையே தான் மகி ஒரு மாதிரியாக பார்த்து நின்று கொண்டு இருந்தாள்..

தன்னிடம் பேசும் போது இந்த முகம் எப்படி இருந்தது..? இப்போது அப்படியே மாற்றி… குழந்தை முகமாக நொடியில் மாற்றிக் கொண்டவளை பார்த்தவளுக்கு,

இவளோடா தான் இத்தனை நாள் நட்பாக இருந்தேன்… சித்தார்த் அத்தானுக்காக தான் தன்னிடம் அப்படி பேசினாளா.? பழகினாளா…? அது தான் அப்படி தன்னிடம் அப்படி தன்மையாக நடந்து கொண்டதா. இவளை பற்றி நல்ல விதமாக வீட்டில் பேசுவேன் என்று..

அவள் திட்டம் போட்டது போல் தானே நான் இவளை பற்றி அத்தையிடம் பேசாத நாள் இல்லையே… ஒரு வேளை இவள் அப்பா தன் அத்தைக்கு அப்படி ஒரு அநியாயத்தை செய்யாது இருந்து இருந்தால், தன் அப்பா அம்மா இறப்புக்கு இவள் காரணம் இல்லாது இருந்து இருந்தால், நானே அத்தான் இவளை திருமணம் செய்து கொண்டதற்க்கு.

அத்தை தனக்காக இவர்கள் திருமணத்தை ஏற்காது போனாலுமே, நான் ஸ்ருதிக்காக பேசி இருந்து தான் இருப்பேன்.. இவள் போட்ட திட்டம் எல்லாமே சரி தான். ஆனால் இடையில் நடந்த விசயங்கள் தான் இவளுக்கு எதிராக போய் விட்டது என்று நினைத்து கொண்டே ஸ்ருதியை அப்படி ஒரு பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்..

ஸ்ருதிக்கு தன் பேச்சுக்கு சித்தார்த் எந்த எதிர் பேச்சும் பேசாது அமைதியாக இருந்ததும்.. கூடவே தன் முகத்தை கூட பார்க்காது மகியின் பக்கம் சித்தார்த் பார்வையை செலுத்தியதை பார்த்தளுக்கு.. அவமானமாக இருந்தது.. அதுவும் மகியின் எதிரில்.

அதில் ஸ்ருதி மகியின் பக்கம் பார்வையை செலுத்த, மகியோ தன்னை கீழாக பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு.

“ உனக்கு மேனன்ஸ் என்பதே கிடையாதா.? புருஷன் பொண்டாட்டி பேசும் போது பார்த்துட்டு நிற்கிற…”

ஸ்ருதியின் முகமும்.. குரலிலும் திரும்ப மாற்றம்…

இப்போது சித்தார்த் பேசினான்.. “ இதோ இப்போ நீ மகி குட்டி கூட பேசின பார்த்தியா.? இது தான் நீ… “ என்றவனின் பேச்சில் ஸ்ருதி மீண்டும் தழைந்து போனவளாக.

“இல்ல சித்து… புருஷன் பொண்டாட்டி பேசட்டும் என்று இல்லாம நம்மையே பார்த்துட்டு இருந்தாளா. அது தான் சித்து.. ப்ளீஸ் சித்து நான் உன் கிட்ட தனியா பேசனும் சித்து.. ப்ளீஸ்.. சித்து.. நாம காதலிச்சது உண்மை தானே சித்து… நீங்க என்னை விரும்பி தானே நம்ம கல்யாணம் நடந்தது… அப்புறம் என்ன சித்து..” என்று பேசியவளின் குரலில் அத்தனை பணிவு இருந்தது..

“ம் உண்மை தான் எனக்கு உன்னை பிடித்தது தான்… நிதானமா படிப்பு முடிந்து அப்புறம் காதல் சொல்லி… பெரியவங்க கிட்ட பேசி.. மகிக்கு ஒரு லைப் அமைத்து கொடுத்து விட்டு.. இப்படி படி படியா தான் நடத்த நினச்சேன்..

ஆனா நம்ம விசயத்தில் அப்படியா நடந்தது…. காதல் சொன்ன.. நான் முடியாது.. சொன்ன பின் அட்லீஸ்ட் என்னை காதலிச்சிங்கலா. அது தெரிந்தால் போதும் என்று சொன்ன. நான் உண்மையை தான் சொன்னேன்.. அப்போ உன்னை காதலிச்சேன்… அது சொன்னேன். ஆனா நான் மகியை தான் மேரஜ் செய்துக்குவேன்.. என்று சொன்னேன்.. அப்போ அமைதியா போன. பின் நீ என்ன செய்த.. அடுத்த நாளே… சூசைட்… உடனே கல்யாணம். என்னை கொஞ்சம் கூட யோசிக்க விடாது… கார்னர் பண்ணி…

சும்மா சொல்ல கூடாது. நான் எல்லாம் படிச்சு பிஎச் டி… வாங்கி என்ன பிரயோசனம்.. நாடகத்திற்க்கும், உண்மைக்கும் வித்தியாசம் என்னால கண்டு பிடிக்க முடியலையே…” என்ற சித்தார்த்தின் இந்த பேச்சில் ஸ்ருதி உண்மையில் உடைந்து போய் விட்டாள்..

“சித்து ட்ராமா இப்படி சொல்லாதிங்க சித்து. உண்மையில் நான் உங்களை லவ் பண்றேன்… இப்போ இன்னுமே அதிகமா பண்றேன்.. ஏன்னா நீங்க என் கணவன் சித்து…” என்று நடு வீதியின் தரையில் அமர்ந்து கொண்டு தன் முகத்தை அடித்து கொண்டு அழுது கொண்டு இருந்தவளை பார்க்க பாவமாக தான் இருந்தது…

ஆனால் இதுவும் உண்மையா….? தெரியவில்லை.

இதோ சாரதாவிடம் இருந்து மகியின் பேசிக்கு அழைப்பு வரும் வரை.. மகி தன் பேசி இசைக்கவும் பேசியில் யார் அழைப்பது என்று பார்த்த மகி.. அத்தை என்றதும் உடனே ஏற்றவள்..

“இல்ல அத்தை நான் அத்தான் கூட தான் இருக்கேன்.. “ என்று பேசியவள் சாரதா என்ன சொன்னாளோ…

“இதோ கொடுக்குறேன் அத்தை..” தன் கைய் பேசியை சித்தார்த்திடம் கொடுத்தாள்..

சித்தார்த் பேசியை காதில் வைத்த நொடி… “ என்ன சித்து நான் வீட்டில் பயந்து போய் இருப்பேன் என்று உனக்கு தெரியும் தானே.. எனக்கு கொஞ்சம் கூப்பிட்டு சொல்ல கூடாதா…. மகி உன் கூட தான் இருக்கா. இந்த தைரியத்தில் தான் நான் கொஞ்சம் வீட்டில் தைரியமா இருக்கேன் சித்து… சில சமயம் மகி படிப்பை நிறுத்திட்டு வீட்டோட கூட வைத்து கொண்டு விடலாமா என்று கூட நினைக்க தோனும்.. மகி பத்திரம் சித்து..” என்று பட பட என்று பேசி விட்டு வைத்த தன் அன்னையின் இந்த பயம் யாரால்…? என்று நினைத்த நொடி..

ஸ்ருதி உண்மையில் அழுகிறாளா..? பொய்யாக அழுகிறாளா..? என்ற சிந்தினை இல்லாது…

“வா மகி அம்மா சீக்கிரம் வீட்டிற்க்கு வர சொன்னாங்க.. உன் கூட நான் இருக்கிறேன் என்ற உடன் தான் அவங்க நிம்மதியாவே இருக்காங்க வா போகலாம்..” என்று சொல்லி மகியோடு தன் காரை நோக்கி சித்தார்த் நடந்தான்..

சித்தார்த் இந்த பேச்சு பேசியது கூட ஸ்ருதிக்கு தெரியட்டும்… தன் அம்மாவின் இந்த பயம் யாரால் என்று… இனி தாங்கள் கணவன் மனைவியாக வாழ்வு.. அது முடியாது.. தன் அம்மாவுக்கு ஸ்ருதி எப்போதுமே மருமகளாக இருக்க முடியாது என்று ஸ்ருதி தெரிந்து கொள்ளட்டும்.. இனியும் இது தொடர கூடாது என்று நினைத்து தான் சித்தார்த் இப்படி சொன்னது..

ஆனால் நம் ஸ்ருதியோ… அதை வேறு விதமாக புரிந்து கொண்டு விட்டாள்.. அதாவது சாரதா மகி சித்தார்த்தோடு இருப்பது தான் அவருக்கு நிம்மதி என்ற வார்த்தையை மட்டும் எடுத்து கொண்டவள்… அதன் அர்த்தமும் வேறாக எடுத்து கொண்டவள்.

இத்தனை நேரம் பாவமாக அழுது கொண்டு இருந்தவள் விருட்டென்று எழுந்தவள்..

“ அவங்க உங்களுக்கு அம்மா தானே….?” என்ற வார்த்தையில் தங்கள் காரை நோக்கி நடந்து கொண்டு இருந்த சித்தார்த்தும், மகியுமே நின்று விட்டனர்..

அதோடு ஸ்ருதியையும் பார்த்தனர் .. இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று… மகிக்கு தெரிந்து விட்டது.. இவள் இதை நல்ல விதமாக மட்டும் சொல்ல வில்லை என்று..

அவள் நினைத்தது போல் தான் ஸ்ருதி சொன்ன அடுத்த வார்த்தை அமைந்தது..

“பெண்டாட்டி கூட மகன் இருக்க கூடாது.. மத்த பெண் கூட நீங்க இருப்பது அவங்களுக்கு நிம்மதியா. அவங்க உங்களுக்கு அம்மாவா…? மாமாவா…..?” என்ற வார்த்தையில்..

சித்தார்த்… “ ஏய்…” என்று கத்தி கொண்டே அவள் அருகில் சென்றவன்.. அவளை அடிக்க கையையும் ஒங்கி விட்டான்..

ஆனால் சித்தார்த் கையை பிடித்து தடுத்து நிறுத்திய மகி… “ அத்தான் வேண்டாம். ஒருத்தவங்களை அடிக்க கூட அவங்க நமக்கு உரிமை பட்டவங்களா இருக்கனும்.. புரியுதுங்கலா.. வேண்டாம். வாங்க போகலாம்.. அத்தை நேரம் ஆச்சின்னா.. இன்னுமே தான் பயந்து போவாங்க.. வாங்க. .” என்று சொன்னவள் சித்தார்த்தின் கை பிடித்தும் காரை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்..

சித்தார்த்தை பார்த்து மகி அழைத்த இந்த அத்தான் என்ற அழைப்பு நீண்ட நாட்களுக்கு பின் கேட்டதில் சித்தார்த்துமே மகியின் பேச்சு கேட்டு அவளின் இழுப்புக்கு அவளுடன் சென்றான்..

இதை பார்த்த ஸ்ருதி தன் நிலையை மறந்து விட்டாள்.. ஆம் தன் நிலையை முற்றிலுமாக அவள் மறந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்..

அதுவும் மகி சொன்ன அடிக்க கூட ஒரு உரிமை வேண்டும்.. என்ற வார்த்தை தான் அவளை தன்னிலை இழக்க செய்தது..

நான் யாரா. அவர்கள் இரண்டு பேரின் முன் நின்றவள்.. தன் கழுத்தில் இருந்த தாலியை மகியிடம் எடுத்து காட்டிய ஸ்ருதி.

“இது இவர் என் கழுத்தில் கட்டி இருக்கார்… அப்போ இவர் எனக்கு யார்…? சித்துக்கு என்னை மீறி யாருமே உரிமை பட்டவங்களா இருக்க முடியாது.. எனக்கு தான் அதிக உரிமை இருக்கு.. உங்க அத்தைக்கு கூட அந்த அளவுக்கு என் சித்து மீது உரிமை இருக்க முடியாது..” என்று தெனவெட்டாக பேசினாள்..

மகி ஸ்ருதியின் பேச்சுக்கு கோபம் பட்டாள் தான்.. அதுவும் தன் அத்தையை விட என்று தன் அத்தையை இந்த பேச்சில் எடுத்தது மகிக்கு கோபம் வந்தது தான் . ஆனால் அதை வெளியில் காட்டவில்லை.. சித்தார்த் கோபமாக ஏதோ பேச வந்தவனையும் தடுத்து நிறுத்தி விட்ட மகி ஸ்ருதியை பார்த்து ஒரு விதமாக கிண்டலாக சிரிக்க.

அதை பார்த்த ஸ்ருதிக்கு இன்னும் கோபமாக தான் வந்தது கோபம் என்ற வார்த்தையை விட வெறி வந்து விட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும்..

“ஏன்..? ஏன்…? நீ இப்படி சிரிக்கிற…?” என்று கேட்டவளிடம்..

மகி பேசிய பேச்சில் ஸ்ருதி தன் தலையில் சூடி இருந்த பூவை பிச்சி போட்டவள்.. தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி மகியின் கழுத்தில் மாட்டவும் முயன்றாள்..

பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சித்தார்த் தடுக்க தடுக்க வெறி கொண்டவள் போல இந்தா இந்தா இது உன் கழுத்தில் தொங்க தானே நீ இப்படி சொன்ன இந்தா இந்தா என்று மகி கழுத்தில் மாட்ட முயல…

அதை பார்த்த சித்தார்த் அவளை அடிக்க முயலும் முன்.. அங்கு வந்த குரு மூர்த்தி அவளை அடித்து விட்டு இருந்தான்….
 
Top