அத்தியாயம் - 1
சூரியன் தன் வலிய கரங்களினால் பூமியை சுட்டெரிக்க, அவனின் அக்னி கனைகள் மக்களை வியர்வயில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. உச்சி வெயில் நேரம், பண்ணிரன்டு மணிக்கும் அந்த இடம் பரபரப்பாக இருந்தது.
நிறைய காவல்காரர்களும், வக்கீல்களும் அந்த இடத்தில் குழுமி இருந்தனர். அந்த இடம் சென்னை மாநகரத்தின் ஹைகோர்ட் கட்டிடம்.
அங்கே ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்கள், அவர்களின் தலைவருக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு குழுவாக பிரிந்து அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். சில பத்திரிகை நபர்களும் வந்திருந்தனர். அந்த இடத்தில் பதற்றம் நிலவியது.
அப்போது அங்கே ஒரு போலீஸ் வேன் வந்தது. அதற்குள் இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ, போலீஸ் காரர்களுடன் இறங்கினார். அவரை பார்த்ததும் கட்சித் தொண்டர்கள் அவரின் பெயரை சொல்லி கோஷங்கள் எழுப்பினர்.
எம்.எல்.ஏ, ஹைகோர்ட் உள்ளே செல்லவும், வேறு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க எம்.எல்.ஏ. வுக்கு பக்கவாட்டில் இருந்து தன்னால் ஆன அனைத்து முயற்சிகளும் செய்து கொண்டுருந்தான், ராஜீவ் குமார்.
ராஜீவ் குமார், ஐ.பி.எஸ், சென்னை பட்டினத்தில், அஸிஸ்டென்ட் கமிஷ்னர் ஆக பணிபுரிருந்து கொண்டிருந்தான். அப்போழுது அவன் முகம் மிகவும் கடினமாக இருந்தது. அவனை மேலும் கடினமாக்க பத்திரிகை நபர்கள் அவனை சூழுந்து கொண்டனர்.
அதற்க்கு பின், கேள்விகளுக்கு பஞ்சம் ஏது??!! தாறுமாறாக கேள்விகள் கேட்க பட்டன, அவனை நோக்கி!!!
"சார், எம்.எல்.ஏ.க்கு இன்னிக்கு ஜாமீன் கண்டிப்பா கிடைக்குமா?"
"சார், நீங்க ஸஸ்பென்ஷன் முடிஞ்சு எப்போ திரும்ப ஜாயின் பண்ணிங்க?"
"அன்னிக்கு என்ன நடந்ததுனு உங்களால சொல்ல முடியுமா?"
"எம்.எல்.ஏ.க்கு ஜாமீன் கிடக்கலைனா, அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன சார்?"
இப்படி பல கேள்விகள் அவனை நோக்கி. ஒவ்வொரு கேள்விக்கும் அவனின் முகம் மேலும் அஷ்டகோணலாக மாறியது. எங்கே வாயை திறந்தால் ஏதாவது சொல்லிவிடுவோமோ, என்று உதட்டை இறுக முடிக்கொண்டான்.
எதுவும் பேசாமல் எம்.எல்.ஏ. வை ஹைகோர்ட் உள்ளே கூட்டிக்சென்றான். தன் நிலையை எண்ணி அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
எப்படி எல்லாம் இருந்தவன், இப்போழுது மற்றவர்களின் கேள்விகளுக்கும் ஏலனத்திற்க்கும் ஆளாகி இருக்கிறான்!! சிலர் நேரிலும், பலர் மறைவிலும், வெகு சிலர் அவன் காது படவே முதுக்கிற்க்குப் பின்னும் பேசுவது, இன்னும் நடந்து கொண்டேதான் இருக்கிறது……
இது எல்லாம் எப்பொழுது முடியுமோ, என்று இருந்தது அவனுக்கு!! இத்தனை எண்ணங்களும் மனதிற்க்குள் காட்டாறு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த போதும், உள்ளம் உளைக்களமாக கொதித்துக் கொண்டிந்த போதும், அவன் யாரிடமும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
முகத்தில் மட்டும் ஒரு அசாத்திய கடினம் நிலவியது.
அதற்க்குப்பின் கோர்ட்டில் வழக்கு ஆரம்பம் ஆகியது. எல்லாரும் எதிர்ப்பார்த்தது போல், எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் வழங்கினர். இப்பொழுது கமிஷ்னர் தினகரனும் கூட இருந்ததால் அவன் மனதிற்க்கு கொஞ்சம் தெம்பாக இருந்தது.
வெளியே கட்சித் தொண்டர்கள் “எம்.எல்.ஏ. வாழ்க!!” என்று கரவொட்சம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
எம்.எல்.ஏ.வை கூட்டிக் கொண்டு, ராஜீவும் தினகரனும் வெளியே வந்தனர். மறுபடியும் பத்திரிகை நபர்களும், மீடியாவும் சூழ்ந்துக் கொண்டனர்.
அதே கேள்விகள், அதே மவுனம்!! இல்லை…. மொத்தமாக மவுனம் காக்கவில்லை, ராஜீவ். இந்த முறை, “நோ கமென்ட்ஸ்” என்று சொல்லி, தினகரனை ஒரு பார்வை பார்த்தான். இப்பொழுது கமிஷ்னர் தினகரன், பத்திரிகை நபர்களிடம் திரும்பி, “எம்.எல்.ஏ. கேஸ் சமந்தமாக மட்டும் கேள்விகளை கேட்கலாம்” என்று சொன்னார்.
உடனே ஒரு சலசலப்பு பரவியது, அவர்கள் இடையே. அதில் ஒருவன், “அது எப்படி விட முடியும்? மத்தவங்க தப்பு பண்ணா மட்டும் கேக்கறோம். அதே மாதிரி போலீஸ் தப்பு பண்ணாலும் கேக்கற உரிமை எங்களுக்கு இருக்கு சார்” என்று ஆவேசமாக கூறினான்.
தினகரன் திரும்பி ராஜீவ்வை பார்த்து கண்களால் எதோ செய்தி சொன்னார். ராஜீவ்வும் அதை பின்பற்றி கோர்டில் கார்கள் நிற்க்கும் இடத்திற்க்கு சென்றான்.
அவன் செல்ல காத்திருந்துவிட்டு, தினகரன் மீடியா பக்கம் திரும்பி, “போலீஸ் தப்பு பண்ணா உங்கள கேக்க வேண்டாம்னு சொல்ல எனக்கு தான் உரிமை இல்ல.
ஆனா, செஞ்ச தப்புக்கு தண்டனையா ஒரு மாசம் ஸஸ்பென்ஷன் அனுபவிச்சதுக்கு அப்புறமும், திரும்ப அதபத்தி ஆரம்பிக்க வேண்டாம்னு தான் சொல்றேன். இப்போ என்னோட வேலைய பாக்க போகனும். ஸோ, ப்ளீஸ்…..”
சொல்லிவிட்டு நிற்காமல், போய்க்கொண்டே இருந்தார் தினகரன். அவர் சென்று நின்ற இடம் ராஜீவ். தன் முன் நிற்கும் உயர் அதிகாரியின் முகத்தை கூட பார்க்க முடியாமல், தலை குனிந்து இருந்தான் ராஜீவ். இப்படி ஆக காரணமான அந்த நபர் மேல், கட்டுக்கங்காத கோபம் வந்தது, ராஜீவ்விற்க்கு!!!
எரிமலையாக கொதிக்கும் அவன் இதயத்தை உணர்ந்தவராக, அவன் தோளில் கையைப் போட்டு ஒரு இலகுக் குரலில், “இது எல்லாம் பொது சேவைனு வந்துட்டா சகஜம் ராஜீவ். நாம தான் இதை எல்லாம் ஹென்டில் பண்ணும்.
உனக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு. சோ, இதை எல்லாம் மறந்துட்டு அடுத்த வேலைய பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும். சரியா? சியர் அப் மேன்!!” என்று முடித்தார்.
ரொம்ப சீரியஸ்ஸாக இல்லாமல், போகிறப்போக்கில் ஒரு அட்வைஸ் சொல்கிற மாதிரி சொன்னார். அவரை மதித்து ராஜீவ்வும், தலையசைத்து, “ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று சொன்னான்.
அதற்க்கு பதில் அளிக்கும் விதமாக, “பரவாயில்லை ராஜீவ். நீ எல்லா வேலையும் முடிச்சிட்டு மூணு மணிக்கு ஆபீஸ்க்கு வா. ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு” என்று சொல்லிச் சென்றார்.
ராஜீவ் அவனின் அஸிஸ்டென்ட் கவுதம், என்பவனை கூப்பிட்டு வேலைகளை ஆணையிட்டுவிட்டு, அவன் காரின் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டுருந்தான். கண்களை மூடி நிதானத்திற்க்கு வர முற்ப்பட்டான். சில மாதங்களாக நடந்த நிகழ்வுகள், அவன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
அப்பொழுது ஒரு பரிட்சயமான குரல், “ஹாய் ராஜீவ், எப்படி இருக்க?” என்று கேட்டது. கண்களை திறந்து பார்க்காமலேயே அது யாருடைய குரல் என்று அறிந்து கொண்டான். அந்த குரலுக்கு சொந்தக்காரன் உண்டாக்கி எரிச்சலா, அல்லது வேறு எதுவும் காரணமா தெரியவில்லை!
ஆனால் ராஜீவ் தன் முகத்தில் மட்டுமல்லாது தன் உடல் மொழியிலும் எரிச்சலை அப்பட்டமாக காட்டி, அந்த குரலுக்கு உரியவனிடம் திரும்பினான்.
ராஜீவ்வின் எதிரே இருந்தவன் தன் பின் இருபதுகளில் இருப்பவன் போல காட்சியளித்தான். அவன் வெள்ளை ஷர்ட், பேன்ட் மற்றும் கருப்பு கோட் அணிந்திருந்ததால் பார்த்தவுடன் சொல்லிவிடலாம் அவன் ஒரு வக்கீல் என்று. ஒரே புன்னகை மன்னாக இருந்தான்.
“ஏன் இருக்கமாட்டான்? எல்லாம் என்னொட கஷ்டகாலம்!!” என்று நினைத்தான் ராஜீவ்.
ராஜீவ் அவனுக்கு பதில் அளிக்கவில்லை. ஆனாலும் எதிரே இருப்பவன் விடுபவனாக தெரியவில்லை!!! மீண்டும் ராஜீவ்விடம் “ஏன் பதில் சொல்லமாற்ற ராஜீவ்? என்கிட்ட பேச இஷ்டமில்லயா ஏ.சி.பி. சார்க்கு?” என்று கேட்டான் நக்கலாக!
ராஜீவ் அவனை எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இல்லை, தவறு! முறைத்து கொண்டிருந்தான் என்பதே சரி. மேலும் அவன் எதுவும் பேசுவதற்க்கு இடம் கொடுக்காமல் ராஜீவ், “நான் இப்போ பேசுற நிலைமைல இல்லை அர்ஜுன். ப்ளீஸ், போய்டு” என்றான். குரல் கொஞ்சம் மன்றாடியதோ?? ஆனால் அவனுக்கு வேறு எப்படி பேசுவது என்று தெரியவில்லை.
“நீ பேசுற நிலைமைல இல்லையா? நம்ப முடியலையே!! ஒரு வேள என்கிட்ட மட்டும் பேசுற நிலைமைல இல்லையா? வேற யாராவது இருந்தா ஓகே வா?” என்றான் அர்ஜுன்.
‘ஐயோ…. இவன் விடமாட்டான் போலவே?!’ என்று அவனை திட்டித் தீர்த்தான் ராஜீவ், மனத்திற்க்குள் தான்! “சரி அதை விடு. நீ எப்போ திரும்ப ஜாயின் பண்ண?” என்றான் அர்ஜுன் ஒரு சாதாரனமான குரலில்.
“ஒன் வீக் ஆச்சு” பதில் அளித்த குரலே சொல்லியது, அவன் கட்டுப்படுத்திய கோபத்தை. ஆனால் அர்ஜுன் அதை எல்லாம் மதிப்பவனாக தெரியவில்லை.
“ஹோ….. அப்புறம், மீடியால செம ஹிட் ஆகிட்ட போல! எல்லோரும் உன்னையே சுத்தி வளைச்சு கேள்வி கேக்கறாங்க?” புருவத்தை தூக்கி அவன் கேட்டவிதம் ராஜீவ்வை அவன் பொறுமையின் எல்லையை கடக்க செய்தது….
அதற்க்குப்பின் பேசாமல் இருந்தால் அவன் ராஜீவ் இல்லையே!! ”இப்போ பேசினா உனக்கும் நல்லதில்லை, எனக்கும் நல்லதில்லை!! அதனால பேசாம போய்டு” ராஜீவ்வின் குரலே எச்சரித்தது.
“ஹோ! கோபம் வேற வருதா சாருக்கு? ஏன் பேச கூடாது? நான் பேசுவேன். உன்னையும் பேசவைப்பேன். உன்னொட உண்மையான காரக்டர் இப்பொவாவது தெரிஞ்சுது எங்களுக்கு!!” அர்ஜுனின் குரலில் அழுத்தமும் கோபமும் சரிவிகத்தில் ஒலித்தன!
அவனின் பேச்சைக் கேட்டு மேலும் வெருப்புற்று அங்கெ இருந்து செல்ல துவங்கினான் ராஜீவ். “நீ பேசாம போவதால நான் சொல்றது எல்லாம் உண்மையில்லைனு ஆகிடாது ராஜீவ்!!” அர்ஜுன் மீண்டும் அவன் முன் தோன்றி ராஜிவ்வின் கோபத்திற்க்கு ஆளானான்.
ராஜிவ் தன் தலையில் அடித்துக் கொண்டான், தன் நிலையை எண்ணி….. அவனுக்கு இப்பொழுது தனிமை தேவைப்பட்டது. ஆனால் அதை தான் தர மறுக்கிறானே இந்த அர்ஜுன்.
சிறுது நேரம் அங்கே அமைதி நிலவியது. அதை உடைத்தான் ராஜீவ் ஒரு வலியுடைய குரலில்! “உனக்கு புரியாது அர்ஜுன்! உனக்கு மட்டுமல்ல, வேற யாரும் என்னை புரிஞ்சிப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையில்ல.
ஆனா ஒன்னே ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. நான் யாருக்கும் கெடுதல் நினைக்கலை. இது சத்தியம்!”
இதை கேட்டு ஏளனமாக உதட்டை வளைத்த அர்ஜுன், “இது தான் உன்னோட பிரச்சனை ராஜீவ். தப்ப இன்னும் கூட உணராம இருக்கப்பாரு? இதுக்கு மேல நான் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. நான் கிளம்பறேன்.”
அவன் அகன்றதும் ஒரு பெருமூச்சை வெளியிட்டான் ராஜீவ். அவனுக்கு ‘அப்பாடா!!’ என்று இருந்தது.
எப்படி இவன் நிம்மதியாக இருக்கலாம், என்பது போல, சில அடி தூரம் சென்ற அர்ஜுன் நின்று இவனை பார்த்து, “ராஜீவ் எனக்கு அடுத்த வாரம் கல்யாணம். தெரியும்னு நினைக்கிறேன்!! நீ கண்டிப்பா வரனும். நானும் என்னோட மனைவியும் ரொம்ப சந்தோஷப்படுவோம்! ஓகே வா?
கண்டிப்பா வந்துரு!” என்று வற்புருத்தலோடு முடித்தான். அந்த வற்புருத்தலின் பின் இருக்கும் நக்கலை அறியாதவனா ராஜீவ்??
அவனின் ஒவ்வொரு வார்த்தையும் கூர் ஈட்டிகளாக, ராஜீவ்வின் மனதை அறுத்தன!! அந்த வலி முகத்தில் தென்பட பார்வை அர்ஜுனின் முதுகில் நிலைக்குத்தி நிற்க அவன் அப்படியே நின்றான்.
உள்ளுக்குள்ளே ஒரு குரல் கேட்டது! ‘அர்ஜுன் கிட்ட மறுபடியும் பேசு ராஜீவ்! இப்போவும் ஒன்ணும் கெட்டுப் போகல!’ ஆனால் அவன் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றிருந்தான், கண்கள் நிலைக்குத்தி!!
சென்னையின் இன்னொரு இடமான சோலிங்கநல்லூரில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ப்ரியங்கா அவள் தந்தையிடமும் தாயிடமும் அழுது மன்றாடிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவளின் பெற்றோர்கள் அவளுக்கும் மேல், அவளிடம் மன்றாடியும், மிரட்டியும், கெஞ்சிக் கொண்டும் இருந்தனர்.
“அவர் ரொம்ப நல்லவர்ப்பா! கண்டிப்பா என்னை நல்லாப் பாத்துப்பாரு…. அம்மா நீயாவது என்ன புரிஞ்சிக்கோமா… ப்ளீஸ்!” அவளின் குரலில் கரைந்தாலும் விட்டுக் குடுக்காமல், இருந்தனர் அவளின் பெற்றோர்.
மிகவும் கடினப்பட்டு ஒரு இலகுவான குரலில், அவளின் தந்தை ரவி பேச ஆரம்பித்தார். “சொன்னா புரிஞ்சிக்கனும் ப்ரியா….. உனக்கு இவன விட நல்ல பையனா நம்ம ஊர்ப்பக்கம் நான் பாக்கிறேன். யோசிச்சு சொல்லுமா…..”
“இதுல யோசிக்க ஒன்னுமில்லப்பா. நீங்களும் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பன்னுங்க ப்ளீஸ்…. அம்மா நீங்க எதாவது சொல்லுங்க மா.” ப்ரியங்காவிற்க்கு பயம் துளிர் விட ஆரம்பித்து விட்டது.
“அதுதான் எங்க பேச்சுக்கு நீ குடுத்த மரியாதையை பாக்கறேனே…. போதாது? நான் பேசினா மட்டும் மனசு மாறிட போறியா என்ன?”
அவளின் தாயின் குரல் வேதனையுடன் ஒலித்தது. ப்ரியங்கா இப்பொழுது பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள்.
இவ்வளவு நேரம், அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியங்காவின் தம்பி, ப்ரதீக், இப்பொழுது அவன் அக்கா அழுவதை பொறுக்க முடியாமல், அவன் தந்தையிடம் திரும்பி, “ஏன்ப்பா? ஏன் அக்காவ இப்படி அழ வைக்கறீங்க? அவளுக்கு புடிச்சிருந்தா அவரையே கல்யாணம் பண்ணிக்கட்டும். ப்ளீஸ்பா… ஒத்துக்கோங்க”
அவன் முடிப்பதற்க்குள் ப்ரியங்கா மயங்கி விழுந்தாள்!! காலையில் இருந்து சாப்பிடாதது மற்றும் அழுதுக் கொண்டே இருந்ததே, அவள் மயங்கி விழுவதற்க்கான காரணங்கள்.
‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதற்க்கினங்க, அவளின் பெற்றோர்கள், பதறி அடித்து, அவளை தூக்கி எழுப்பி தண்ணீர் குடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
ஆனால், எழுந்ததும் ப்ரியங்கா, “ப்ளீஸ்பா… என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுப்பா… சரின்னு சொல்லுங்கப்பா…. ப்ளீஸ்” என்று கேட்டது, அவரின் பிடிவாதத்தை தகர்த்தியது!! தன் நிலையிழந்த நிலையிலும், அவனின் நினைவு மட்டும் இவளுக்கு இருக்கிறதென்றால் அவ்வளவு தீவிரமாகவா இருக்கிறாள் நம் மகள்?
காலையிருந்து ஒரு நூறு முறையாவது ‘ப்ளீஸ்ப்பா’ என்று சொல்லியிருப்பாள் ப்ரியங்கா.
ப்ரதீக்கும் வற்புருத்தவே, சம்மதம் சொல்லினர், ரவி தம்பதியினர்!!! ப்ரியங்காவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
விரைவாக சென்று தன் கைப்பேசியை எடுத்து, ஒரு நபரை அழைத்தாள். சந்தோஷத்துடன் தன் வீட்டினரின் சம்மத்தை தெரிவித்தாள். சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தாள்.
இப்போழுது அவள் மனதில் ஒரே எண்ணம் தான்…. அவள் திருமணம் எந்த தடங்களும் இன்றி நன்றாக நடக்க வேண்டும்!! அவ்வளவுதான்!! ஒரு பெரிய விஷையத்தை சிறு விஷயமாக நினைத்துக் கொண்டிருந்தாள் அந்த பாவைப்பெண்!!