மின்னலின் கதிரே – 3
எல்லோரும் காத்துக்கொண்டிருந்த புத்தாண்டு நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரிரு மணி நேரங்களே இருக்க, கொடிமலர் தன் புடவையில் ரெடியாகி தன் குடும்பத்துடன் சாப்பிடும் இடத்திற்கு விரைந்தாள். எதிரே தென்ப்பட்ட பிரியங்காவோ, “என்னடி இன்னுமா சாப்பிடல? சீக்கிரமா போ” என்று கூறி, நடையை எட்டிப் போட்டாள்.
பஃபே முறையில் பறிமாறப்பட்ட உணவை எடுப்பதற்கு வரிசையில் நிற்க, அங்கே தான் கதிரவன் நின்றிருந்தான். மலர் அவனைக் கண்டதும் வேறு புறம் பார்வையை செலுத்த, கதிரும் இவளை கண்டதும் பக்கத்தில் இருந்த கேட்டரிங் பையனிடம் காதில் எதோ சொல்லி மறுப்புறம் நகர்ந்தான். உணவை எடுத்துக் கொண்டு தன் தாத்தா, தந்தை, தாய்யுடன் மேசையில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள் மலர்.
கொஞ்சம் தள்ளியுள்ள மேசையில் வென்னிலாவும், கதிரவனும் சாப்பிடுவதை கண்டு சில நொடிகள் தன்னையும் அறியாமல் அவர்களை நோக்கினாள். அவர்களுடன் இருப்பது அவர்களின் அன்னையாக இருக்க வேண்டும், அப்படியே கதிரவனின் சாயல் தெரிந்தது அப்பெண்மணியிடம்.
ஒரு பெருமூச்சு விட்டப் போது, நினைவலைகள் அன்று காலையில் கதிரவுடன் நடந்த உரையாடலுக்கு இழுத்து சென்றது. அப்பப்பா எப்படி பொரிந்து தள்ளி விட்டான்? எந்தவொரு ஆண்மகனிடமும் இப்படி பேச்சு வாங்கியதில்லை!
“என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? எப்படி வேற பொண்ணை பார்க்கறீங்களான்னு கேப்பீங்க??? நான் ஒன்னும் போற வர பொண்ணையெல்லாம் சைட் அடிச்சு, பின்னாடியே போறவன் கிடையாது.
ஆமா, உங்களை பிடிச்சது பார்த்தேன். ஏன்னு தெரியாது! பட், பிடிச்சது உண்மை தான். நான் அதுக்கு மேல ஒன்னும் செய்யலையே? உங்க பின்னாடியே வந்தேன்னா? உங்கள ஸ்டாக் பண்ணேன்னா? இல்லயே!
உங்க கூட ஈவன்ட் பண்ற சான்ஸ் கிடைச்சும் வேணாம்னு தான சொன்னேன்? வாட்ஸ்ஸப் குருப்புல உங்கல ஆட் பண்ற வரைக்கும் எனக்கு உங்க பேர் கூட தெரியாது. நீங்க நிலாகிட்ட பேசுற வரைக்கும் உங்க முழு பேர் கொடிமலருன்னு கூட தெரியாது. அப்போ கூட அவகிட்ட உங்கள பத்தி கேட்டதில்லை!
இப்போ நீங்களா வந்து பேசவும், மேல கொஞ்சம் பேசலாம்னு தான் என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டேன். தப்பு தான் உங்ககிட்ட நான்லாம் பேச ஆசப்பட்டுருக்க கூடாது!
இந்த அப்பார்ட்மென்ட்ல தான் அஞ்சு வருசமா இருக்கேன். யார்கிட்ட வேணும்னாலும் கேட்டுக்கோங்க நான் எப்படின்னு. எனக்கும் ஒரு தங்கச்சியிருக்கா… நிஜமா, உங்கள ஜிம் போகும் போது மட்டும் தான் பார்ப்பேன். நீங்களும் பக்கத்துல கிளாஸ் போவீங்க அதனால தான். அதுகூட….. ப்ச்ச்ச், சரிவராதுன்னு தெரிஞ்சு உங்கள பார்க்குறதையே நிறுத்திட்டேன்.
நீங்க என்னடான்னா புதுசா வேற ஒரு பொண்ணை…..
எனிவே, நான் எப்படின்னு எனக்கு தெரியும், உங்ககிட்ட தேவையில்லாம என்னை பத்தி சொல்லிட்டிருக்கேன். இதுக்கு முன்னாடி உங்கள பார்த்ததுக்கு ஒரு பெரிய சாரி. இனிமே எந்த பிரச்சனையும் வராது என்னால!“
மூச்சுவிடாமல் பேசி, இல்லை இல்லை தன் மனதில் இருந்த பொறுமல்களை வார்த்தைகளாக மலரிடம் கொட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றான் கதிர். மலருக்கு தான் மனதில் பாரம் கூடிப்போனது! விளையாட்டாக அவனிடம் வம்பிழுத்தது வினையாகிப் போயிற்று.
நினைவுகள் காலையில் நடந்தவற்றில் உழன்றாலும், கை அது பாட்டுக்கு சாப்பாட்டை உள்ளே தள்ளியது. என்ன இருந்தாலும், தான் அப்படி நேரடியாக அவனை தாக்கி பேசியிருக்க கூடாது. யார் தந்தது அந்த உரிமையை? அவனும் தன்னை எதுவும் டிஸ்டெர்ப் செய்யவில்லையே. தன்னை ஒருவர் அப்படி பேசியிருந்தால் எப்படி பொங்கியிருப்போம்? இதில், ஆண்ணுக்கும் பெண்ணுக்கும் வேவ்வேறு இலக்கணங்கள் இல்லையே.
தன்னை பார்த்ததை மட்டும் கேட்டிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. இப்போழுது தேவையே இல்லாத மண்டை குடைச்சல்!
கொடிமலர் இப்படி பொறுமிக் கொண்டிருக்க, அவளுக்கு சற்றும் குறையாமல் தன் மனதில் தன்னையே திட்டிக் கொண்டிருந்தான் கதிரவன்.
‘ஒரு வார்த்தை சொல்லிட்டான்னு ஓவரா பேசிட்டோம். என்ன இருந்தாலும் நான் பார்த்ததும் தப்பு தான? அதை கேட்டதுக்கு தாங்காம…. வேற பொண்ணுன்னு பேசினதும் கடகடன்னு பொரிஞ்சிட்டேன். இருந்தாலும் நமக்கு ஓவர் கொழுப்பு தான். அவ டீசண்டா என்கிட்ட தான் கேட்டா. இதையே நிலா கிட்ட சொல்லிருந்தா? ஹ்ம்ம்ம்ம், இதெல்லாம் இப்போ தான் தோனுது, என்ன செய்ய?’
இருவரும் அவர்களையே மனதிற்குள் வஞ்சித்துக் கொண்டாலும், வெளியே எதுவும் பேசாமல் பாவனையாக இருந்தனர். தங்களின் இரவுணவை முடித்துக் கொண்டதும், தன் பெற்றோர் தாத்தாவை ஃபங்ஷன் நடக்கும் இடத்தில் உட்கார வைத்து, பிரியங்காவுடன் சேர்ந்து தன் வேலையை கவனிக்கச் சென்றாள்.
நேரமும் செல்ல, மலரும் தன் முறை வந்ததும் பிரியங்காவுடன் சேர்ந்து “கனக்ஷன்ஸ்” என்னும் படத்தை சேர்த்து வார்த்தைகளை கண்டு பிடிக்கும் போட்டியை நடத்தி முடித்தாள். அப்போதே மணி பதினொன்றை நெருங்க, விளையாட்டு போட்டிகள் எல்லாம் முடிந்து, விதவிதமான கலைகள் வெளிக்காட்ட போடப்பட்டிருந்த சமூகக் கூடத்திற்கு மக்கள் சென்றனர்.
மெஹெந்தி, ஓவியம், கைவினைப் பொருட்கள் என ஒரு பக்கம் கலைமையமாக இருக்க, மறுப்புறம் மேடையில் குழந்தைகளுக்கு பாடல் ஒளிக்க, அவர்களின் ஆட்டம் கலைக் கட்டியது!
கொடிமலரின் தாத்தா நடேசன் தன்னால் மேலும் முழித்திருக்க முடியாதென வீட்டிற்கு செல்ல, தன் பெற்றோருடன் அங்கே சுற்றினாள் மலர். மெஹெந்தி போடும் இடம் வந்ததும், அங்கே இருந்தவர்களில் வென்னிலாவை தேடியது மலரின் கண்கள். அவளைக் கண்டதும், தன் தாய் கவிதாவை அவளிடம் கூட்டிச் சென்றாள்.
“ஹாய் நிலா, இவங்க தான் என்னோட அம்மா. அம்மா, இவ தான் வென்னிலா நான் சொன்னேன்ல?”
மலரின் குரலைக் கேட்டதும் மெஹெந்தி போடுவதை நிறுத்தி, முகமலர்ச்சியுடன், “ஹாய்க்கா, ஹாய் ஆன்டி! அக்கா உங்க சேலை ரொம்ப அழகா இருக்கு.” என்று வென்னிலா கூறினாள். “நீயும் ரொம்ப அழகா இருக்கம்மா. மெஹெந்தியும் சூப்பரா போடுற.”
“ஆமா நிலா, ரொம்ப நல்லாயிருக்கு. நீ கண்டிப்பா இதை வெளில போடலாம்.”
கவிதா மற்றும் கொடிமலரின் பாராட்டை கேட்டு வென்னிலாவும், “தாங்க்ஸ் ஆன்டி. அக்கா, எங்கம்மா காதுல விழற மாதிரி சொல்லிடாதீங்க. உங்க கூட சண்டைக்கு வந்திருவாங்க.” என்று மெல்லிய சிரிப்புடன் கூறி, “சரி, உங்களுக்கும் ஆண்டிக்கும் போட்டு விடுறேன், வெயிட் பண்ணுங்க.” என்று அழைப்பும் விடுத்தாள்.
“ஹய்யோ அதெல்லாம் வேண்டாம்மா. கையில மெஹெந்தி போட்டா எந்த வேலையும் பண்ண முடியாது. மினு நீ வேணும்னா போட்டுக்கோ.”
தாய் கூறியதை கேட்டு அவரை முறைத்தாள் கொடிமலர்.
“ஏன்மா, நடுராத்திரி உங்களுக்கென்ன வேலை இருக்குது? வீட்டுக்கு போயிட்டு தூங்க தான போறோம்? லெஃப்ட் கையில மட்டும் சின்னதா போட்டுக்கலாம். நிறைய பேர் வெயிட் பண்றாங்க வேற, வென்னிலா நினைச்சாலும் பெருசா போட முடியாது.”
கொடிமலர் கூறியதை கேட்டு கவிதாவும் சம்மதிக்க, வென்னிலாவோ அவர்களின் கைகளில் அழகாக மருதாணியிட்டாள். இருவரின் முறை முடிந்ததும் அவளிடமிருந்து விடைப்பெற்று பன்னிரெண்டு மணிக்கு இன்னமும் முப்பது நிமிடங்களே இருக்க, கேக் வெட்டும் இடத்திற்கு சென்றனர். அங்கே ஏற்கனவே தன் தந்தை ராஜன் இருப்பதை பார்த்ததும் அவரிடம் சென்றாள்.
“மனு இங்க வா, இவ தான் என்னோட பொண்ணு கொடிமலர். ஐ.டி.ல வொர்க் பண்றா. இவங்க என்னோட வைப்ஃ கவிதா. ஸ்கூல் டீச்சரா இருக்காங்க.” மனைவி மகளை அறிமுகம் செய்ததும், மறுபுறம் திரும்பி, “இவரு சுகுமாரன் சார். அப்பார்மெண்ட்டோட வைஸ் பெரிசிடெண்ட்.” என்று பேசி முடித்த ராஜன் அருகில் இருந்தது கதிரவனின் தந்தை சுகுமாரன் தான்.
மலருக்கு தெரிந்தது இவர் தான் கதிரவன், வென்னிலாவின் தந்தையென. பிரியங்கா ஏற்கனவே சொல்லியிருக்கிறாள் இவளிடம்.
சுகுமாரனும், “வணக்கம்மா, நீ நடத்துன கேம் ரொம்ப நல்லா இருந்துச்சு. சார் போன வாரமே சொன்னாரு, நீ ஈவண்ட்ல கலந்துக்கறேனு. இப்படி தான் நீங்களா முன் வந்து செய்யனும், குட்!” என்று சுகுமாரன் மனதார கூறினார்.
“தாங்க்ஸ் அங்கிள். வென்னிலா போட்ட மெஹெந்தி தான் இது. ரொம்ப நல்லா பொட்டுருக்கா.” மலரும் தன் கைகளை காட்டி அவரிடம் பேசத் துவங்கியதும், அவளின் கைப்பேசியும் சினுங்கியது. பிரியங்கா தான் தன் சேலையை சரி செய்ய கழிப்பிடத்திற்கு அழைத்தாள். பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு, தோழியிடம் விரைந்து, ஒற்றை கையை வைத்து எப்படியோ அவளின் உடையை சரி செய்து நிமிர்ந்தால், பிரியங்கா அவள் கணவன் அழைக்கிறான் என அவனிடம் சென்றுவிட்டாள்.
‘இதுக்கு தான் சிங்கிள்ளா இருக்க பொண்ணுங்களோட சுத்தனும். ஹ்ம்ம்ம், நம்ம எப்போ இப்படி ஜோடியா சுத்தப் போறோமோ!’
கையில் இருந்த மருதாணியை பார்த்து, பெருமூச்சுடன் நடந்தவளின் எதிரே தென்பட்டான் கதிரவன். பேசலாமா வேண்டாமா, என யோசித்த வண்ணம் மெதுவாக நடையைப் போட்டவளின் எண்ணங்களை தான் கதிரும் கொண்டிருந்தான். அவனும் யோசனையில் தத்தளித்து, பின் தெளிந்து இவளின் முன் வந்தான்.
எதிரே வந்து நின்றவனை ஏறேடுத்து பார்த்தவளை சில நொடிகள் கண்ணிமைக்காமல் நோக்கினான் கதிரவன். கொடிமலர் சேலையில் இருந்ததை அப்போது தான் கவனித்தான். மெரூன் வண்ணத்தில் சிறிய ஜரிகையோடிய சேலை மலருக்கு அழகாக பொருந்திப் போக, கதிரின் கண்களை வேறுப்புறம் திருப்ப கஷ்டப்பட்டான்.
எல்லாம் ஒரு சில பல நொடிப் பொழுதுகளே. பின் தலையை சிலுப்பி, “உங்க கிட்ட சாரி சொல்லனும்னு தான் இப்போ பேச வந்தேன். ரொம்ப சாரி, நான் யாரையுமே அந்த மாதிரி கோபமா பேசினதில்ல. யோசிச்சு பார்த்தா என் மேல தான் தப்பும் கூட! அதனால ரொம்ப ஃபீல் பண்ணேன். சோ, சாரி ஒன்ஸ் அகெயின்.” என்று எவ்வித தடங்களும் இல்லாமல் கோபமாக வந்த வார்த்தைகள் போலவே, மன்னிப்பும் வந்தது கதிரவனிடமிருந்து.
கொடிமலருக்கோ ஆச்சரியம்! அவன் தயங்கி நின்றதும் காலையில் நிறுத்திய வசையை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறானோ என நினைத்தவளுக்கு முற்றிலும் மாற்றாக வந்தன கதிரவனின் மன்னிப்பு.
மலரின் மனதின் ஓரம் ஒரு சிறு சலனம் தெளித்து, மலர்ந்து போன வேளையும் அதுவே! தானாக தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்கும் ஆண்மகன்கள் மிகவும் குறைவு நம் நாட்டில். அதிலும் மன்னிப்பு கேட்க எந்த அவசியமுமில்லை எனும் பொழுது, வந்த மன்னிப்பு பெரிதாகவே பட்டது மலருக்கு.
மலரும் கதிரவனை நோக்கி ஒரு முறுவலுடன், “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லை. நானும் உங்க கிட்ட சாரி கேட்டுக்கறேன். அப்படி பேசினது தப்பு தான். என்னை யாராவது அப்படி பேசிருந்தா உங்களுக்கு மேல கோபப்பட்டுருப்பேன்… சோ, நீங்க பேசினது கூட கரக்ட் தான். சாரி, உங்கள காயப்படுத்தினதுக்கு.” என்று பதில் மன்னிப்பை வேண்டினாள்.
இப்போழுது ஆச்சரியப்படும் முறை கதிரவனுக்கானது. தன்னையும் அவளையும் சமமாக மதித்து தன் தவறுக்கு மன்னிப்பை வேண்டும் பெண்ணை முதல் முறை சந்திக்கிறான் அவன்! ‘என்ன பொண்ணுடா….’ கதிரின் எண்ணவலைகள் எங்கெங்கோ செல்ல, மலரின் கையசைப்பே அவனை நிஜ உலகிற்கு இழுத்து வந்தது.
“உங்க தங்கச்சி தான் போட்டு விட்டா, நல்லா இருக்குல?”
அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தபடியே, “ரொம்ப நல்லாருக்கு” என்று புன்னகை மன்னனாக மாறி கூறினான். “சார் உங்க பேருக்கேத்த மாதிரி தான் இருப்பீங்களோ, பகல்ல ரொம்ப சூடா. இப்போ நைட் டைம்ல கூல்லா சாரி எல்லாம் கேக்குறீங்க? மத்தவங்கன்னா அப்படியே விட்டுட்டு அடுத்த வேலைய பார்க்க போயிடுவாங்க… பட், நீங்க கொஞ்சம் டிஃப்ரெண்ட் தான்.”
“எனக்கு ரொம்ப கில்டியா குற்றயுணர்ச்சியா இருந்தது. அதான், உங்க கிட்ட வந்து பேசிட்டேன். மத்தபடி வேறோம்னுமில்ல. நீங்களும் எல்லா பொண்ணுங்க மாதிரி அவன் தப்பு பண்ணிட்டு நம்மல திட்டிடான்னு கோபப்படாம, என்கிட்ட சாரியும் கேட்டீங்க. அதுவும் பெரிசு தான்.”
“நம்மலே இப்படி ஒருத்தர ஒருத்தர் புகழ்ந்துட்டே இருக்க வேண்டியது தான். ஆமா, நீங்க ஏன் அன்னிக்கு என் கூட ஈவன்ட்ல சேரலன்னு சொன்னீங்க? நான் இருக்கேன்னா? இல்ல வேற எதும் காரணமா?”
கொடிமலருக்கே உரிய உதட்டு சுழிப்புடன் கூடிய மென்னகையுடன் அவள் கேட்டதும், அவளின் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான் கதிரவன். இப்பேச்சு எங்கு கொண்டு செல்லும்? இவளை நினைத்து, இவளை தன் இணையாக ஆக்க முடியாததை நினைத்து, தனக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சுமிடத்தில் விட்டுவிடும்… தேவையில்லாத இப்பேச்சை முடிப்பதே சரி.
“அப்படியெல்லாம் இல்லீங்க. சரி, டைம்மாச்சு. நான் போகனும்.” கூறிவிட்டு மலரின் பதிலையும் எதிர்பாராமல் முன்னால் நகர்ந்தான் கதிரவன். இல்லை நகரப்பார்த்தான், ஆனால் அடுத்து மலர் கேட்ட கேள்வி அவனை அங்கேயே கட்டிப் போட்டது!
“ஒரு நிமிஷம். காலையில பேசும் போது உங்களுக்கும் எனக்கும் சரிவராதுனு சொன்னீங்க. எதை வைச்சு அப்படி முடிவு பண்ணீங்க?”
மலரின் கேள்விக்கு அவளின் பக்கம் திரும்பி நின்ற கதிரை நோக்கி மீண்டும், “இல்ல, முதல்ல பிடிச்சிருக்குன்னு பார்த்தீங்க, அப்புறம் நீங்களாவே செட்டாகாதுன்னு முடிவு பண்ணீங்க. ஏன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான்.” என தன்னிலை விளக்கத்தை அளித்தாள்.
“உங்களுக்கு நிஜமாவே தெரியலயா?” கொடிமலர் விளையாடுகிறாளோ என அவளின் முகத்தை ஆராய்ந்த படி கேட்ட கதிரவனை விசித்திரமாக பார்த்தாள் மலர்.
“தெரிஞ்சா ஏன் உங்ககிட்ட கேட்கப் போறேன்? எனக்கு தெரியல!”
கதிருக்கும் இதற்கு மேல் தயங்காமல் எல்லாவற்றையும் பேசிவிடுவது என முடிவெடுத்தான்.
“ஆனா எனக்கு தெரியும், உங்களுக்கு நான் செட் ஆக மாட்டேன்னு தெரியும்.”
“அதான் ஏன்னு கேக்கறேன்?”
மலரின் பிடிவாதத்தின் முன் கதிரின் தயக்கம் உடைத்தெரியப்பட்டது.
“நீங்க ஸூம்பா கிளாஸ் போயிட்டு சிலிம்மா இருக்கீங்க. நான் கஷ்டப்பட்டு ஜிம்ல வொர்க்கவுட் பண்ணியும் இப்படி தான் இருக்கேன். உங்களுக்கும் எனக்கும் எப்படி ஒத்து வரும்?”
கதிரவன் சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் திகைத்தாள் கொடிமலர். இந்த கோணத்தில் சிந்திக்காமல் விட்டதே மனது. ஒரு சில நிமிடங்கள் அங்கே மௌனம் மட்டும் சூழ, பின் முடிவாக கதிரவனை நோக்கினாள் மலர்.
“இந்த விஷயத்தை தவிர உங்களுக்கு வேற ஏதாவது ரீஸன் இருக்கா?”
‘இது என்ன கேள்வி?’ எனப் பார்த்தவனின் தலை தானாக இல்லை என ஆட்டியது.
“அப்போ எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை.”
மலரின் வார்த்தைகள் அவளையே ஒரு நிமிடம் வியப்பில் ஆழ்த்த, கதிரவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ‘இப்போ என்ன சொல்ல வரா?’
“அப்படின்னா என்ன சொல்றீங்க?”
“ஹ்ம்ம்ம், சொரக்காய்க்கு உப்பில்லைன்னு சொல்றேன்.”
கடுப்பாக பதிலளித்தவளை இன்னமும் குழப்பத்துடன் பார்த்தான் கதிரவன். மலரின் பாட்டி அடிக்கடி இப்படி பதிலளிப்பதை கேட்டிருக்கிறாள். அதையே இப்போது சொன்னதும், கதிர் முழுவதுமாக குழம்பி, முழிப்பதை கண்டு உதடுகள் தானாக மலர்ந்தன.
“என்ன புரியலயா? அப்படியே இருங்க.”
சொல்லிவிட்டு முன் நடந்தவளின் வேகத்திற்கு இணையாக கதிரும் நடந்தான். “ஹலோ ஒழுங்கா சொல்லிட்டு போங்க. இல்லனா எனக்கு தூக்கமே வராது.”
“ஹலோ, உங்கள தான், ப்ளீஸ், கொஞ்சம் கிளியரா சொல்லுங்க.”
கதிரவன் விடாமல் கெஞ்ச, மக்களின் கூட்டம் அருகே வந்ததும், “நீங்களே நான் சொன்னதை யோசிச்சு பாருங்க. அப்புறம் என்ன அர்த்தம் எடுத்துக்கறீங்களோ அதான்.” என மலர் சொன்னதும் கோடி மலர்கள் பூத்தன கதிரவனின் மனதில்.
நேரம் பண்ணிரெண்டாக சில வினாடிகளே இருக்க, “ஹாப்பி நியூ இயர் கதிர்!” என புன்னகையுடன் வாழ்த்து கூறி தன் பெற்றோரிடம் சென்றாள் மலர்.
அவள் செல்லும் திசையையே பார்த்த வண்ணம் கனவில் மிதந்தான் பகலவன்!
******************************************************************************************
“ஏண்டி கோவிலுக்கு போலாம்னு சொன்னது ஒரு குத்தமா? எல்லாத்துக்கும் இப்போ நல்லா கத்த கத்துக்கிட்ட!”
மலரும் கனவுகளோடு சயனித்திருந்தவன், மாலதியின் உயர்ந்த குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் கதிரவன். அவரின் குரலுக்கு மறுப்புறம் ஒலித்த தங்கையின் குரலும் காதில் விழ, கண்களை துடைத்து கட்டிலில் எழுந்தமர்ந்தான்.
“கோவிலுக்கு போலாமான்னு கேட்டது தப்பில்லை. தூங்கிட்டு இருந்தவள எழுப்பியா கேப்பீங்க? நேத்து நைட் எல்லாம் முடிச்சுட்டு வந்து படுக்கவே ரெண்டு மணிகிட்ட ஆகிடுச்சு. இப்போ காலையில எட்டுக்கே எழுப்பலைன்னு யார் அழுதா?”
வென்னிலாவின் ஆதங்கத்தை கேட்டு அவளை சமாதானப் படுத்தினார் சுகுமாரன். “நீ திரும்ப போய் தூங்குமா, யாரும் டிஸ்டெர்ப் பண்ணாம நான் பார்த்துக்கறேன்.”
“இல்லப்பா தூக்கம் போயிடுச்சு. கதிரையும் கோவில் போக கூப்புட்டீங்களாமா? ஏன் என்னை மட்டும் எழுப்புனீங்க?” தந்தையிடம் ஆரம்பித்தாலும் மீண்டும் தாயிடமே முறனுக்கு நின்றாள்.
“தாயே தெரியாம எழுப்பிட்டேன். புது வருஷம் அதுவுமா சண்டைய காலையிலேயே ஆரம்பிக்காத!”
மாலதி முடிவாக சொன்னதை கேட்டு, தன் அறைக்கு பல் விளக்கச் சென்றாள் வென்னிலா.
கதிரவன் எழுந்து வந்து ஹாலின் ஒரு மூலையில் நின்று இவையனைத்தையும் ஒரு பயம் கலந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட சுகுமாரன், தன் புருவங்களை தூக்கி ‘என்ன’ என்பது போல் ஜாடையில் வினவ, மறுப்பாக தலையசைத்து ‘ஒன்றுமில்லை’ என உரைத்தான் மகன்.
நேற்றிரவு முதல் கண்ட கனவுகளும், ஆசைகளும் பஞ்சாய் பறந்துப் போக, நிதர்சனம் முகத்தில் அறைந்தது. கொடிமலருடன் தன் எதிர்காலத்தை நினைத்து பார்க்கும் போது ஏகப்பட்ட சிக்கல்கள் தோன்ற, அன்று காலை முழுவதும் அதையே நினைத்து மூளை சூடாகியது.
இப்படியே விட்டால் தன்னை சரியாக இயங்க முடியாதென நினைத்து, மலரை கூப்பிடுவது என முடிவெடுத்து அவளின் கைப்பேசிக்கு அழைத்தான்.
கதிர் கூப்பிடும் போது கொடிமலரும் கிட்டத்தட்ட அவனின் நிலையில் தான் இருந்தாள். கதிரவனை பிடித்திருந்தது என்றாலும், தன் குடும்பம் அவனின் குடும்பம் இருவருக்கும் ஒத்துவருமா என பெரிய கேள்வி எழும்பியது.
அவளும் ஒன்றும் பதின்பருவ பெண்ணில்லையே கனவிலேயெ மிதப்பதற்க்கு. தன் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை அவளையும் ஆக்கிரமிக்க, பகல் ஒரு மணி அளவில் கதிரவன் அழைத்தான். புது எண்ணாக இருக்கவே யோசனையாக எடுத்து, “ஹலோ” என்றவள், மறுப்புறம் “மலர், நான் கதிர் பேசறேன்.” என்றதும் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்தவள், “சொல்லுங்க” என்று படபடத்த நெஞ்சை ஒரு நிலைப்படுத்தி பேச முயன்றாள்.
“இன்னிக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு நம்ம மீட் பண்ணலாமா?”
“இன்னிக்கு ஈவ்னிங்கா? ஏன் திடீர்னு?”
மலரின் குழப்பம் கலந்த திகைத்த குரலில், கதிரவன் விளக்கமளித்தான்.
“இல்ல இன்னிக்கு ஞாயித்திக்கிழம, இன்னிக்கு விட்டா ரெண்டு பேரும் வீக்டேஸ்ல ஆபிஸ் போறதுன்னு பிஸியா இருப்போம். அப்புறம், சனிக்கிழமை தான் பேச முடியும். அதுக்கு தான் இன்னிக்கே பேசனும்னு சொல்றேன். எனக்கும் கொஞ்சம் முக்கியமா உங்ககிட்ட ஃப்ரியா பேசனும்.”
கதிரவனின் கோரிக்கை மலருக்கும் நியாயமாகப் பட்டது.
“ஹோ எனக்கும் உங்ககிட்ட பேசனும். சரி மீட் பண்ணலாம். எங்க வரனும்னு எனக்கு மெசேஜ் பண்ணுங்க. டைம் நான் சொல்றேன்.”
மலருக்குமே இன்றே பேசுவது சரியென்று பட்டது. இல்லையென்றால் தூக்கமே வராது இதை நினைத்து… கைப்பேசியை அணைத்ததும், கொடிமலர் சென்றது அவள் தந்தை ராஜனிடம்!
நம் நாயகன் சென்றது என்னவோ அவன் தங்கை வென்னிலாவிடம்!
இருவருக்கும் பற்பல அதிர்ச்சிகள் அன்று காத்திருக்கின்றன என தெரியவில்லை….