மின்னலின் கதிரே – 5
ஆயிற்று... கதிரை சந்தித்து பேசி முழுதாக மூன்று மாதங்கள் ஆயிற்று! இந்த மூன்று மாதங்களில் நடந்தவற்றை நினைத்தாலே மலருக்கு தலை சுற்றியது! எவ்வவளவு சண்டைகள், எவ்வளவு விவாதங்கள், எவ்வளவு அழுகைகள்? இந்த கலபரத்தின் ஊடே வளர்ந்த தங்களின் காதலும் புரிதலும்!
கதிருடன் அன்று மலர் பேசி முடித்ததும் நிலாவும் இவர்களுடன் இணைந்துக் கொள்ள, பேச்சு இவர்களின் காதலை வீட்டில் ஏற்பது பற்றி நகர, நிலாவும் தமயனை போலவே வீட்டில் பிரச்சனை ஆகும் என பயந்தாள்.
“அப்பாகிட்ட கூட ஓர் அளவுக்கு சமாளிச்சிடலாம். பட், அம்மாவ சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். என்ன தான்னா செய்ய போற?”
நிலாவின் கேள்வியில் கதிருக்கு குடித்துக் கொண்டிருந்த காபி புரை ஏறியது. “என்ன செய்ய போறேன்னா? என்ன செய்ய போறோம்னு கேளு…. என்னை தனியா இதுல விட்டுடாத, சொல்லிட்டேன்!”
கதிர் நினைத்தார் போல, அவன் வீட்டில் இதை சொன்னதும் மிகப்பெரிய பிரச்சனை ஆகியது. கதிரின் சொல் பேச்சுபடி நிலாவும் அவளின் தமயனுக்கு உதவி செய்யத் தான் முயன்றாள். ஆனால், அவளின் அம்மா அதையே வேறு ஒரு பிரச்சனையாக கருத, நிலாவாலும் மேலே ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.
கொடிமலரை சந்தித்து வந்ததும் சில நாட்கள் கழித்து தன் பெற்றோரிடம் மெதுவாக பேச்சை துவங்கினான் கதிர். அலுவகம் முடிந்து வந்ததும் எல்லோரும் இரவு உணவும் உண்டவுடன், “ம்மா, அப்பா கொஞ்சம் உட்காருங்க பேசனும். “ என்று எச்சரிக்கை குரலில் கூறினான்.
சமையலறையில் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்த மாலதி கையை துடைத்து கொண்டே, “என்னடா?” என கேட்டுக் கொண்டே சோபாவில் அமர, தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த சுகுமாரனும் அதை அணைத்து கவனத்தை தன் மகனிடம் திருப்பினார்.
நிலா என்னவென்று அறிந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர, கதிர் குரலை செருமிக் கொண்டு பேசத் துவங்கினான்.
“இந்த பி பிளாக்ல புதுசா ஒரு ஃபாமிலி குடி வந்திருக்காங்கலப்பா? ராஜன் சார்னு நீங்க கூட பேசுவீங்களே. அவங்க குடும்பம் தான். அவரோட பொண்ணு கொடிமலர், பி.இ. முடிச்சிட்டு ஒரு ஐ.டி. கம்பெனில வொர்க் பண்றாங்க.
நான் ஜிம் போகும் போது அவங்களோட பேசி…. இந்த நியூ இயர் ஈவண்ட்ல எல்லாம் பழக்கமாச்சு. எனக்கு அவங்கள பிடிச்சிருக்குமா…. உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்…. என்னம்மா?”
மாலதிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ச்சி அப்பட்டமாக முகத்தில் அடித்தாலும், நெஞ்சம் அதை ஏற்க மறுத்தது. இல்லை, இல்லை தன் மகன் இப்படி எல்லாம் பேச மாட்டான். அவனின் போக்கு தனக்கு தெரியாதா என்ன? இவன் விளையாடுகிறான்!
“டேய் சும்மா தான சொல்ற? உன்னை பத்தி எனக்கு தெரியாதா, சொல்லுடா?”
அம்மாவிற்கு எப்படி புரிய வைப்பது என யோசனையில் விழுந்த மகனை, தந்தையின் குரலே மீட்டெடுத்தது. “ராஜன்னா நியூ இயர் அன்னிக்கு என்கிட்ட பேசிட்டு இருந்தாரே அவராடா? உன்னை கூட இண்ட்ரோடியூஸ் பண்ணேன்னே?”
“ஹ்ம்ம்ம் ஆமாப்பா.”
கணவனின் பேச்சை கேட்டு எரிச்சல் அடைந்த மாலதி, “அவன் தான் சும்மா சொல்றான்னு சொல்றேன்ல? எனக்கு தெரியாதா அவனை பத்தி?” என்று சுகுமாரன் மேல் கோபத்தை இறக்க, அவரோ பதிலுக்கு, “ஆமா, உனக்கு தெரியாது அவனை பத்தி” என்று கூறி மனைவியை மடக்கினார்.
அவ்வளவு தான் வந்ததே கோபம் மாலதிக்கு! இருக்கையை விட்டு எழுந்து, “என்ன எல்லாரும் விளையாடுறீங்களா? டேய் நீ என்ன நிஜமாவா சொல்ற அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு?” என்று கத்தினார்.
தாயின் உச்சக்குரலில் மகனுக்கு நாக்கு தழுதழுத்தது. அதற்குள் தந்தை இடையில் குதித்தார். “ஹே நீ இப்போ எதுக்கு கத்துர? கதிர் நீ தெளிவா சொல்லு, என்னன்னு…”
சுகுமாரனின் அழுத்தமான குரலுக்கு கட்டுப்பட்ட கதிர், மலரை பார்த்தது முதல் அவளுடன் பேசி முடித்தது வரை அனைத்தையும் கூற, வீட்டில் நிசப்தம் குடியேறியது. மாலதி ஒரு புறம் அதிர்ச்சியில் உரைந்திருந்தார் என்றால், சுகுமாரன் மகனின் வாழ்க்கையை எண்ணி யோசனையில் விழுந்தது.
சில நோடிகள் அமைதிக்குப் பின், நிலா தன் அன்னையை தோள்களை தொட, மாலதியிடமிருந்து ஒரு கேவல் வெடித்தது. ‘ஆஹா டிராமா ஸ்டார்ட் ஆகிடுச்சு’ நிலா மனதில் நினைத்ததை தான் கதிரும் நினைத்து கவலையுடன் தன் அன்னையிடம் நெருங்கி அமர்ந்தான்.
மாலதியின் தோள்களை தொட்டதும், உடனே அதை தட்டிவிட்டார் அவர். “போடா இப்போ எதுக்கு என்கிட்ட வர? நீ தான் எல்லாமே பார்த்துக்கிட்டியே? உன்னை எவ்ளோ நம்பி இருந்தேன். இனிமே பேச ஒண்ணும்மில்ல, போடா” மகனை திட்டிவிட்டு திரும்பியும் பாராமல் தன் அறைக்கு அழுகையுடன் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
கவலையுடன் இப்போது பயமும் சேர்ந்து கொள்ள நிலாவும் கதிரும் கதவை தட்டியும் மாலதி கதவை திறக்கவில்லை. இவர்களும் விடாது தட்ட, பல நிமிடங்கள் கழித்து திறந்தவர், அழுகையில் தோய்ந்த முகத்துடன், “இவள பத்தி கூட நீ நினைக்கலைல? நமக்கு ஒரு தங்கச்சி இருக்காலே கல்யாணம் ஆகாம, அவளுக்கு நாளைக்கு எப்படிடா மாப்பிள்ளை பார்ப்பேன்?” என்று படபடவென பொரிய, “அம்மா, இப்போ எதுக்குமா என்னோட கல்யாணம் பத்தியெல்லாம் இழுக்குறீங்க? அண்ணாவும் பாவம்மா, இப்போலாம் லவ் மேரேஜ் ரொம்ப சாதாரணமா பண்றாங்கமா.” என்று நிலாவும் பரிந்து பேச அதுவே வினையாகி போனது.
“என்னது சாதாரணமா? ஏன் நீயும் யாரயாவது லவ் பண்றியா? இப்போவே சொல்லுடி. நம்ம குடும்பத்துல இதுலாம் சாதாரணமா?”
மாலதி உரத்த குரலில் வினவ, நிலா தன் தலையில் அடித்துக் கொண்டு தொய்ந்து சோபாவில் அமர்ந்தாள். மகளின் முகத்தை பார்த்து சுகுமாரனுக்கும் கோபம் ஏறியது. “இங்க பாரு திட்டுறதா இருந்தா பையனை திட்டு. அத விட்டுட்டு எதுக்கு பொண்ணை பேசுற? அவ என்ன தப்பு பண்ணா?”
சுகுமாரனின் வார்த்தைகள் என்னவோ சிறு சலிப்பும், கோபமும் கலந்து ஒலித்தது தான். ஆனால், மாலதியிடம் அவை கொண்டு வந்த கோபமும், எரிச்சலும் மிக அதிகம்! அதன்பின் மகனை விட்டு, தங்களுக்குள் சண்டையிட்ட பெற்றோர்களை அவர்களின் அறையில் அடைத்து உறங்க செல்வதற்குள் நிலாவும் கதிரும் துவண்டு விட்டனர்.
பின் வந்த இரண்டு வாரங்களில் மாலதி தன் மகனிடமும், தன் வீட்டாரிடமும் மகனின் காதலைப் பற்றி கூறிய சிறப்புரை பின்வருபவை….
“மூனு வருஷமா நானும் பொண்ணு பார்க்கிறேன். எந்த பொண்ணையும் பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு சொல்லல! அப்போலாம் வராத லவ்வு, இப்போ ரெண்டு மாசத்துல வந்துடுச்சா?”
“ஏய் நிலா! நீயும் இவனுக்கு கூட்டு தான? எனக்கு தெரியும் உன்கிட்ட சொல்லாம அவன் இருந்துருக்க மாட்டான்.”
“எங்கக்கா, தங்கச்சிகிட்ட நான் என்னடா சொல்லுவேன்? உன்னை பத்தி எப்படியெல்லாம் பெரும பேசியிருக்கேன். என் பையன் லவ் பண்றான்னு எப்படி சொல்லுவேன்?”
“இவரு வீட்டு சைட்ல தான் லவ் மேரேஜ்லாம் சாதாரணம். என்ன பார்க்கறீங்க? உங்கக்கா நாத்தனார் பையன் லவ் மேரேஜ் தான? எங்க வீட்டுல இந்த மாதிரி கேள்விப்பட்டது கூட இல்லை!!”
“நான் வேணும்னா உனக்கு பிடிச்ச மாதிரி, அதே மலரு மாதிரி, நல்ல பொண்ணா பார்க்கறேன்டா…. அம்மா சொல் பேச்சை கேளுடா!”
மாலதியின் ஒவ்வொரு பாலுக்கும் கதிரால் சிக்ஸர் அடிக்க முடியவில்லை என்றாலும் கூட, அதை டொக்கு வைத்து காதல் களத்தில் அவுட் ஆகாமல் தப்பித்தான். மாலதியின் புலம்பல்களை ஒருப்புறம் ஒதுக்கிய சுகுமாரன், சில நாட்கள் கழித்து தன் மகனை தனியே அழைத்தார்.
“நீ கொடிமலரை கல்யாணம் பண்றதுல முடிவா இருக்கியா?” தந்தையின் நேரடி கேள்விக்கு திடமாக முடிவு சொன்னான் மகன்.
“ஆமாம்பா, எங்க ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்குப்பா.”
மகனின் முகத்தில் தெரிந்த திடத்தில் ஒரு நிமிடம் செலவழித்து, பின் குரலை செருமிக் கொண்டு பேசினார்.
“நானும் அந்த பொண்ணு குடும்பத்தை பத்தி விசாரிச்சேன். எல்லாம் நல்ல மாதிரியா தான் கேள்விப்பட்டேன். நான் பேசுன வரைக்கும் ராஜன் சாரும் நல்ல மாதிரியா தான் இருக்காரு. நீ இன்னும் கொஞ்ச நாள் பொறு. அம்மாகிட்ட நிலாவ விட்டு பேச சொல்றேன். நான் பேசுனா அவ கேக்க மாட்டா…”
“உங்களுக்கு ஓகே வாப்பா?” முகத்தில் சந்தோஷம் எட்டி பார்க்க கேட்ட மகனை பார்த்த சுகுமாரன், ஒரு புன்னகை சிந்தி, “ஹ்ம்ம்ம்…. நாங்களும் நிறைய பொண்ணு பார்த்தோம், எதுவும் செட் ஆகல! உனக்கும் வயசு ஆகுது, அடுத்து நிலா வேற இருக்கா… நல்ல குடும்பம், வாழப் போற உங்களுக்கு பிடிச்சிருக்கு, வேற என்ன? உங்கம்மா அப்படித்தான் ஏதாவது பேசிட்டுயிருப்பா. அவளை தான் சமாளிக்கனும்.” என ஒப்புதல் அளித்தார்.
“தாங்க்ஸ்பா… ரொம்ப தாங்க்ஸ்!” கதிருக்கு சந்தோஷம் பொங்கினாலும் அதை அடக்கி, “மலர் ஃபாமிலி பத்தி உங்ககிட்ட கொஞ்சம் சொல்லனும்பா.” என்று மேலே தன் தந்தையிடம் பேசினான்.
அவன் பேசிய விஷயங்களும் சுகுமாரன் கேள்விப்படாதவை. எல்லாம் கேட்டதும் அவரின் முகத்தில் கவலைரேகைகள் ஓடத் துவங்கியன!
******************************************************************************************
கதிரவன் வீட்டில் கலேபரம் வெடித்தது என்றால், மலரின் வீட்டில் மௌனமாக யுத்தம் நடந்தது. கதிருடன் பேசி முடித்து வந்ததும், வீட்டில் அன்றிரவே ஆரம்பித்தது பிரச்சனை. கவிதாவையும் மலரின் தாத்தா நடேசனையும் அமர வைத்து, தந்தையிடம் கூறியது போல அவர்களிடமும் விஷயத்தை சொல்ல, கவிதாவிற்கு கோபத்தை விட ஆற்றாமை பொங்கியது.
“என்னடி புதுசா வந்து இந்த பையனை பிடிச்சிருக்குன்னு சொல்ற? எப்படி ரெண்டு மாசத்துல உனக்கு எல்லாம் தெரிஞ்சு பிடிச்சு போச்சு?
சரியா பேசிக் கூட பழகாத பையனை எந்த நம்பிக்கையில உனக்கு கல்யாணம் பண்ணி குடுக்கறது?”
கவிதாவின் கேள்வி நியாயமானதே, ஒரு தாயின் பார்வையில்! ஆனால், அதற்கும் ஒரு பதிலை வைத்து இருந்தாள் மகள்.
“ஏம்மா பொண்ணு பார்க்கரப்போ எனக்கு அந்த பையனை முன்னாடியே தெரியுமா? உங்களுக்கு கூட அந்த பையனை பத்தி பேஸிக் டீடேயில்ஸ் தான் தெரியும். அப்போ மட்டும் பார்த்துட்டு உடனே பிடிச்சிருக்குன்னு நான் சொல்லனும்! இப்போ என்னையும் பிடிச்சிருக்குன்னு ஒரு பையன் வரான் அவனையும் என்ககு பிடிச்சிருக்குன்னு சொல்றேன். எப்படி கல்யாணம் பண்ணி குடுக்கறதுன்னு கேக்கறீங்க….”
“நாங்க பார்க்குற மாப்பிள்ளைய பத்தி நாங்க நல்லா விசாரிப்போம்….”
“இப்போவும் விசாரிங்க, அப்பா ஆல்ரெடி நானும் விசாரிக்கறேன்னு சொல்லிட்டாரு. நீங்களும் விசாரிங்கம்மா.”
உடனடியாக வந்த பதிலை கேட்டு கணவனை திரும்பி முறைக்க மட்டுமே முடிந்தது கவிதாவால். இதுவரை அமைதியாக இருந்த நடேசன், “சரி இங்க பேசுறது எல்லாம் இருக்கட்டும், பையன் வீட்டுல என்ன சொல்றாங்க? அவங்க ஒத்துப்பாங்களா?” என்று முக்கியமான விஷயத்தை கேட்க கொடிமலர் அப்போது தான் அமைதியானாள்.
“என்ன மினு அமைதியா இருக்க? அவங்க வீட்டுல என்ன சொல்றாங்க?”
ராஜனும் கேட்க, மலர் அமைதியை கலைத்து, “இல்லப்பா இன்ன்னிக்கு பேசிட்டு போறப்போ கூட அவரு கொஞ்ச நாள் கழிச்சு வீட்டுல பேசுறேன்னு சொல்லிருக்காரு. ஒரு வாரம் கழிச்சு கேக்கறேன்பா. அதுக்குள்ள பேசிடுறேன்னு சொல்லிருக்காரு.” என்று பதிலளித்தாள்.
ஒரு சில நொடிகள் தன் மகளின் முகத்தை உற்று நோக்கிவிட்டு, ராஜனும் குரலை செருமி, “சரி அவரும் வீட்டுல பேசட்டும், அவங்க என்ன சொல்றாங்கன்னும் பார்க்கலாம். அதுக்குள்ள நாமளும் அவங்க வீட்டை பத்தி எல்லாம் விசாரிக்கலாம். என்ன கவி ஓகே தான?” என்று வினவ, முழு ஒப்புதல் கிடைக்கவில்லை மனைவியிடமிருந்து.
அரை மனதாக தலையசைத்த கவிதாவின் கைகளை பிடித்து, “அம்மா உங்களுக்கு பிடிக்காம, உங்க விருப்பமில்லாம நானும் இந்த கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்மா. நீங்க விசாரிச்சுட்டு பிடிக்கலனா ஏன்னு சொல்லுங்க. நம்ம பேசிக்கலாம்….” என்று மலரும் வெகுவாக தாழ்ந்த குரலில், மனதில் உள்ள வலியுடன் கூறினாள்.
“எனக்கும் தெரியும் மினு. எங்க எல்லாருக்குமே கல்யாணம் முடிஞ்சு நீ சந்தோஷமா இருக்கனும். அது தான் முக்கியம். லவ் மேரேஜ் பண்றதுனால நான் ஒத்துக்காம இல்ல. எனக்கு பையன் நல்லவனா, உன்னை நல்லா பார்த்துப்பானா? அவங்க குடும்பம் எப்படி? இது எல்லாம் தான் மனசுல ஒடிட்டே இருக்கு! பார்க்கலாம், அப்பா சொன்ன மாதிரி நாங்களும் விசாரிப்போம். அதுக்கப்புறம் முடிவு செய்யலாம்.”
மகளின் கவலையை போக்கவும், தன்னையே சமாதானப்படுத்திக் கொள்வளும் கவிதா மேற்சொன்னது. ஆனால், இரவில் மிகவும் புலம்பித் தள்ளி விட்டார் தன் கணவரிடம். அவரின் புலம்பல்களை கேட்டு ராஜனும் முடிவாக, தெளிவாக தன் மனதில் இருந்ததை கூறினார்.
“இங்க பாரு கவி. குறை சொல்லனும்னா ஆயிரத்தெட்டு குறை சொல்லலாம்! நிறை பார்க்கனும்னா அதே மாதிரி ஆயிரத்தெட்டு நிறை பார்க்கலாம். நம்ம எதை பார்க்க போறோம்னு, அது தான் முக்கியம்…. நம்மளும் மூணு வருஷமா மாப்பிள்ளை தேடுறோம். எதுவும் அமையலை…. இப்போ நம்ம வீட்டுக்கு ரெண்டு பிளாக் தள்ளியே பையன் பிடிச்சிருக்குன்னு சொல்றா. இதுவும் நல்லது தான், நமக்கும் நம்ம பொண்ண ரொம்ப தூரமா கட்டிக் கொடுத்து, எப்போ பார்ப்போம்னு இருக்கத் தேவையில்லை.
பையனும் நல்லா படிச்சு, நல்ல வேலையில இருக்காப்ல. நான் பேசுன வரைக்கும் பையன் குடும்பமும் நல்ல மாதிரி, முக்கியமா அவங்க அப்பா! சோ, அவ பையனை கூட்டிட்டு வந்த ஒரே காரணத்துக்காக நல்ல சம்பந்தத்தை விடனுமா, சொல்லு? அவங்க வீட்டுலயும் ஒத்துக்கிட்டா மேல பேசலாம். இப்போ இதை நினைச்சு கஷ்டப்படாம தூங்குற வழிய பாரு!”
ராஜன் கூறுவதும் சரியாக பட, கவிதா மனதை ஒரு நிலை படுத்தி தூங்க முயன்றார். விதி வலியதாக தன் விளையாட்டை ஆட காத்திருந்தது!
******************************************************************************************
கடந்த மூன்று மாதங்களில் நடந்தவை மனதில் ஓடினாலும் அதை எல்லாம் முகத்தில் காட்டாமல் சிரித்த முகமாக இருக்க முயன்றாள் கொடிமலர். ஏனென்றால் அவள் இப்போழுது இருப்பது அவளின் நிச்சயத்தார்த்த படலத்தில்.
சிறிது நேரத்தில் அவளை மேடை ஏற்றி, கதிரவன் பக்கத்தில் அமர வைத்து, இரு வீட்டாரும் உற்றார் உறவினர் முன்பு தாம்பூலம் மாற்றப் போகின்றனர். இரு வீட்டாரும் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் சமூகக் கூடத்திலேயே இந்நிகழ்வை வைத்திருந்தனர். சமூகக் கூடத்தின் அருகில் தயாராகும் அறையில் அமர்திருந்த மலருக்கு ஒரு பக்கம் சந்தோஷம், மறுப்பக்கம் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற வேண்டுதல்!
“ஏன்டி முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் வைச்சுக்கோடி, அப்போ தான் ஃபோட்டோ எல்லாம் நல்லா இருக்கும்.”
பிரியங்காவின் அதட்டலை கண்டு முகத்தில் ஒரு சிரிப்பை கொண்டு வந்த மலரை கண்டு அவளின் மாமா மகள் ஆர்த்தி தலையில் அடித்துக் கொண்டாள். “இந்த மூஞ்ச பார்த்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ற மாதிரியா இருக்கு? ஏதோ வீட்டுல கம்பெல் பண்ணி வைக்குற மாதிரி இருக்கு!”
மலரை விட மூன்று வயது சிறியவள் ஆயினும் ஆர்த்தியின் பேச்சு எப்போதும் சரவெடி தான், அவளின் தந்தையை போலவே! அவளின் பேச்சை கேட்டு எரிச்சல் முகத்தில் எட்டிப் பார்க்க சிடுசிடுத்தாள் விழாவின் நாயகி.
“ஹே நீ கொஞ்சம் சும்மாயிருடி, எனக்கே அவங்க அம்மா, பெரியம்மா, சித்தி எல்லாம் ஒன்னா இருக்காங்க… என்ன பிரச்சனை பண்ணுவாங்களோன்னு கவலையா இருக்கு! இதுல நீ வேற!!”
“திரும்பவும் பிரச்சனை பண்ணுவாங்களா? ஏன் இது வரைக்கும் பண்ணதுலாம் பத்தாதா அவங்களுக்கு?! அப்படியே அவங்க ஏதாவது பண்ணினா நம்மலும் ஏதாவது பண்ணலாம். நீ டென்ஷன் ஆகாத…”
ஆர்த்தியின் பேச்சை கேட்டு இன்னமும் முகம் வாடியது கொடிமலருக்கு. சின்னவள் புரியாமல் பேசுகிறாள் என புரிந்துக் கொண்ட பிரியங்காவும், மலரின் கையை பிடித்து நம்பிக்கை ஊட்டினாள். அப்போது கதவை தட்டி திறந்து வந்தாள் வென்னிலா.
“ஹே சூப்புரா இருக்கீங்க அண்ணி! அண்ணா பார்த்தான்னா அவ்வளோ தான்! நீங்க ரெடி ஆகிட்டீங்களான்னு பார்க்கத் தான் வந்தேன். ஹாய் ஆர்த்தி, எப்படி இருக்கீங்க?”
அண்ணியிடம் ஆரம்பித்து ஆர்த்தியிடம் நலம் விசாரித்து, வந்த வேலையை செவ்வனே செய்ய, தன் அன்னையிடம் மலர் தயாராக இருப்பதாக கூறினாள். ஆனால், அதை கேட்ட மாலதிக்கோ முகம் ஒன்றும் நன்றாக இல்லை. மனதில் இருப்பது தானே வரும் முகத்திலும்?
உறவினர்களின் கேள்விகளுக்கு ஆளாகி இருந்தவரின் மன பாரத்தை மேலும் கூட்டவே அவரின் தங்கையும் அக்காவும் குறைகளை மட்டும் கூறியபடி இருந்தனர்!
அவரின் மனதை திசைதிருப்பவென ஐயரும் அப்போது, “பொண்ணை கூட்டிட்டு வாங்கோ” என்று கூற, கொடிமலரும் அவளின் தாய்மாமன் மனைவியுடன் வந்து மேடை ஏறி எல்லாருக்கும் வணக்கம் வைத்தாள். கதிரவனுக்கு மலரிடமிருந்து கண்களை திருப்புவது கடினமாக இருந்தது. ஏற்கனவே அவனின் நண்பர்கள் சீண்டிய வண்ணம் இருக்க, இதில் இவளையே பார்த்தால், அவ்வளவு தான்!
மலரும் கதிரவனை ஒரக் கண்ணால் பார்த்து நிமிர்ந்து, கதிரவனின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி, தனக்கு குடுக்கப்பட்ட புடவை நகையுடன் அறைக்கு விரைந்தாள். நல்ல நேரம் முடியும் முன்னே நிச்சயதார்த்த நலங்கு வைத்தாக வேண்டும் என அவளின் மாமியும் அவளை அவசரப்படுத்த, மேக்கப் ஆர்டிஸ்ட் உதவியுடன் சீக்கிரமாக புடவை மாற்றி, மேடைக்கு மீண்டும் விரைந்தாள்.
கொடிமலர் தயாராகி வந்தவவுடன் கதிரவனுடன் அனைவரையும் வணங்கி எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கினர். கவிதா நல்ல வாழ்வு தன் மகளுக்கு அமைய வேண்ட, ராஜனும் சுகுமாரனும் தங்களுக்குள் கை கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
மாலதி இதில் எதையும் கலந்துக் கொள்ளாமல், ஒதுங்கியும் நில்லாமல் தன் மகனின் அருகில் நின்றார். அதன்பின், நிச்சயதார்த்த மடல் வாசிக்கப்பட்டு, இருவரும் நலங்கு படலத்திற்கு தயாராகினர்.
நாற்காளிகள் மாற்றப்பட்டு இருந்த நேரத்தில், மேடையை நோக்கி புதிதாக சிலர் வர, மாலதி அவர்களை கண்டதும், “ஹே ஈஸ்வர் மாமாடா! நான் போய் கூப்பிட்டு வரேன். என்னங்க, உங்களை தான்! அண்ணா, பெரியம்மா, அண்ணி எல்லாம் வந்துருக்காங்க. போய் கூப்பிடலாம் வாங்க.” என்று கணவரையும் உடன் அழைத்து செல்ல, அவர்களை பின் தொடர்ந்து சென்றன மேடையில் இருந்தவர்களின் கண்கள்.
மலரின் தலையில் சிக்கி இருந்த அட்சதை அரிசை எடுத்துவிட்டுக் கொண்டிருந்த கவிதாவும், சம்பந்தி யாரை இப்படி அழைக்க போகிறார் என்று ஆவலுடன் பார்க்க, அவரின் கண்கள் பேயை கண்டது போல குத்திட்டு நிற்க, கைகள் இயங்குவதை நிறுத்தியது!
கொடிமலர் ஒன்றும் புரியாமல் இதை எல்லாம் பார்த்திருந்தவள், தாயின் அதிர்ச்சியடைந்த முகத்தை கண்டு, “என்னம்மா?” என்று உலுக்கி கேட்க அப்போதும் கவிதாவிடமிருந்து ஒன்றும் அறிய முடியவில்லை. வந்தவர்களிடமிருந்து தான் அவர் கண்களை திருப்பவே இல்லையே!
எதுவும் விளங்காமல் தன் தந்தையை அருகே கூப்பிட்டு, தாயை பற்றி சிறிய குரலில் கூறினாள் மலர். ராஜனும் மிக மெல்லிய குரலில் மனைவியிடம், “கவி என்ன அங்கயே பார்த்துட்டு இருக்க? எல்லாரும் பார்ப்பாங்க, ஃப்போட்டோஸ் எடுக்கறாங்கமா.” என்று சொல்ல, அப்போதும் அதே உயிரற்ற முகத்துடன் இருந்த மனைவியை பார்த்தவருக்கு என்னவோ செய்தது!
இது சிறிய விஷயம் அல்ல! எதுவோ பெரியதென கருதி, வந்தவர்களிடம் பார்வையை திருப்பினார். அதற்குள் அவர்கள் மேடை ஏறி வர, கதிரும் அவர்களை ஆவலுடன் வரவேற்க, அருகில் வந்ததும் தான் ராஜனுக்கும் அவர்கள் யார் என புரிந்தது!!
புரிந்ததும் அவரின் வாயும் ஒட்டிக் கொள்ள, கொடிமலருக்கு பெற்றோர்களின் அதிர்ச்சியை உள்வாங்குவதற்குள் அவரிடம் வந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தார் கதிரவனின் அன்னை மாலதி.
“இவங்க தான் என்னோட பெரியம்மா, அவங்களோட பையன், இவங்க அவங்களோட ஃவைப். பசங்க கீழ இருக்காங்க.”
இப்போழுது அதிர்ச்சியை கவிதா, ராஜனிடம் கடன் வாங்கி அதை உள்வாங்கினர் வந்தவர்கள். “என்ன எல்லாரும் ஷாக்கா பார்க்கறீங்க? உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” எல்லார் மனதில் உள்ள கேள்வியை எதார்த்தமாக கேட்டான் கதிரவன். பின்விளைவுகளை அறியாமல்.
கதிரவனின் கேள்விக்கு பதில் அளிக்காமல் கவிதா மேடையை விட்டு இறங்கி தயாராகும் அறைக்குச் செல்ல, ராஜனும் அவரை பின் தொடர்ந்தார். மலர் திகைத்து நிற்க, இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியான கதிரவனின் மாமா தொண்டையை செருமிக் கொண்டு பதிலளித்தார்.
அந்த பதிலில் இருந்த ஆழத்திலும், அது கூறிய உண்மைகளும் கொடிமலருக்கு தன் உலகமே இருண்டு போனது என்றால், கதிரவனுக்கு அவனின் உலகமே புறட்டிப் போட்டது!!!