Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Minnalin Kathire - 6

  • Thread Author
மின்னலின் கதிரே – 6

வாழ்க்கை பல விசித்திரிங்கள் கொண்டது, உலகம் மிகச் சிறியது என பிறர் சொல்ல கேள்விப்பட்டுருப்போம். ஆனால், அது நமக்கு நடக்கும் போது தான் இது உண்மையா, மாயையா என்று வியப்போம்.

அது போன்றதொரு நிகழ்வு தான் நிச்சயதார்த்த மேடையில் அரங்கேரியது அன்று. கவிதாவை பின் தொடர்ந்து ராஜனும் சென்றதும், மலரும் அனிச்சை செயலாக அவர்களின் பின் செல்லப் போனாள்.

அவளின் கையை பிடித்து இருக்க வைத்த கதிரவன், தன் மாமனின் முகம் பார்க்க, அவர் குரல் செருமியபடி கூறிய வார்த்தைகளை அவன் முதலில் நம்பவில்லை. ஆனால், அவரின் குரலிலும், கண்களிலும் கண்ட உறுதியும் தான் அவனை மட்டுமல்லாது பிறரையும் நம்ப வைத்தது.

“அவங்க என்னோட ஃபர்ஸ்ட் ஃவைப், மலரோட அப்பா நான்.”

கொடிமலருக்கு அவளின் பூமி கீழே தவறுவது போல் இருந்தது. நிஜமாக நிற்க முடியாமல் தடுமாற, கதிரவன் அவளை கை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்து தன் பெற்றோரை பார்க்க, எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

வென்னிலா தான் முதலில் சுதாரித்து, “அண்ணி நீங்க கொஞ்சம் ரூம்ல இருங்க, ஆர்த்தி நீங்க கூட்டிட்டு போங்க.” என்று பெரியவளாக சொல்ல, எதையோ கூற வந்த தன் அன்னையையும் அடக்கினாள். பின், புகைப்படம் எடுப்பவரிடம் திரும்பி, “சார், எல்லோரும் கொஞ்சம் ரெஃபெரிஷ் ஆகிட்டு வரோம். திரும்ப சொல்லும் போது ஃபோட்டோஸ் எடுங்க போதும்.” என்று கூறினாள்.

அதிர்ச்சியில் உரைந்திருந்த தன் குடும்பத்தினரை என்ன செய்வது என பார்வையால் தன் தந்தையிடம் வினவ, அவரும் உடனே, “ஈஸ்வர் நீங்க எல்லாம் போய் உட்காருங்க. நாங்க கொஞ்சம் பேசிட்டு வரோம். வெயிட் பண்ணுங்க.” என்று தெளிவாக சொல்ல அவரும் தன் அன்னை, மனைவியுடன் மேடையை விட்டு இறங்கினார்.

மாலதிக்கு அதிர்ச்சியையும் மீறி சட்டென்று கோபம் பொங்க, “இப்போ எதுக்கு அவங்கள போக சொல்றீங்க? நலங்கு வைக்கனும், இவங்க என்ன எல்லாரும் உள்ளே போயிட்டாங்க?! நான் போய் கூப்பிடுறேன்.” என்று மேடை என பாராமல் கோபத்துடன் பேசியவரை சுகுமாரன் வெட்டவா குத்தவா என கண்களால் முறைத்தார்.

பின் மனைவியை மேடைக்கு மறுப்புறம் திருப்பி, “கொஞ்சமாவது மனச்சாட்சி ஓட நடந்துக்கோ. அவங்க முகத்த பார்த்தல? எவ்வளோ பெரிய விஷயம் இது? நீ இங்கயே இரு. மத்தது எல்லாம் நானும் கதிரும் பார்த்துக்கறோம். கதிர் வாடா.” என்று மனைவியிடம் கோபத்தை கொட்டிவிட்டு மகனுடன் மலர் குடும்பம் இருக்கும் அறைக்கு சென்றார்.

அங்கே சென்றால் மலர் தன் அம்மாவின் மேல் கைகளை போட்டு கேள்வி வினவியப்படி இருந்தாள். “அம்மா என்னம்மா சொல்லுங்க? உங்களுக்கு கதிர் அம்மாவை பார்த்தது ஞாபகம் இல்லயா? அவங்களும் உங்களை தெரியாத மாதிரி தான் இத்தன நாள் இருந்தாங்க.”

கவிதாவின் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியவில்லை. பாரை போல் கடிந்திருந்த முகத்திலிருந்து எதையும் சுகுமாரனால் கண்டறிய முடியவில்லை! ராஜனும் திகைப்பிலிருந்து மீண்டார் போல் தெரியவில்லை. அப்போது தான் கவிதாவின் அண்ணன் மோகன் உள்ளே நுழைந்து, “கவி அங்க வெளிய….” என சொல்ல வந்தவர் அங்கே நிலவிய இருக்கமான சூழலை புரிந்துக் கொண்டு தன் மகள் ஆர்த்தியை ஓரமாக அழைத்து நடந்தவற்றை அறிந்துக் கொண்டார்.

பின் திரும்ப எல்லோரிடமும் வந்தவர் நேராக சுகுமாரனை பார்த்து, “சார் உங்களை முன்னாடி அப்போ பார்த்த ஞாபகமே இல்லையே எனக்கு. உங்களுக்கும் ஞாபகம் இல்லையா?” என்று கேட்டார்.

சுகுமாரனுக்கு எப்படி விளக்குவது என யோசனை ஓடியது. பின் தயக்கமான குரலில், “கதிர் பொறந்து காது குத்தும் போது மாலதி குடும்பத்துல கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு. அதனால மாலதியோட அம்மாவும், பெரியம்மாவும் கொஞ்ச வருஷம் பேசாம கொள்ளாம இருந்தாங்க. அப்போ தான் ஈஸ்வர் கல்யாணமும் ஆச்சு, அதுக்கு கூப்பிடுவாங்க, திரும்ப ஒண்ணா சேர்ந்திடுலாம்னு இருந்தாங்க மாலதி அம்மா. ஆனா, அவங்க எங்க குடும்பத்துல யாரையுமே கூப்பிடல, அதுல கோவப்பட்டு எதுக்குமே கூப்பிடாம விட்டுட்டாங்க என்னோட மாமியார். ஒரு ஏழு, எட்டு வருஷம் கழிச்சு என்னோட மாமியார் இருந்தப்போ தான் எல்லாம் திரும்ப ஒன்னா பேச ஆரம்பிச்சாங்க. ஈஸ்வருக்கு கல்யாணமாச்சு, டைவோர்ஸ் ஆச்சுன்னு தெரியும், ஆனா எதுக்குமே நாங்க போகல. அதனால அப்போ நம்ம பார்க்கல.” என்று விளக்கினார்.

இதில் யார் என்ன சொல்ல முடியும்? விதி வலியது என்பதை தவிர. சுகுமாரனின் விளக்கத்தை கேட்டு, சில நொடிகள் யோசனையில் விழுந்த மோகனின் முகம் பின் முதலில் பார்த்தது தன் மச்சினன் ராஜனின் முகத்தை தான். அவரின் கண்களில் நிஜமான வலியும், வேதனையும் தெரிந்தது. ராஜனும் அப்போது தான் கவிதாவின் முகத்தை பார்த்து, “கவி, மேல ஆக வேண்டியதை பார்ப்போம். இப்போ நம்ம லேட் பண்ணா வந்தவங்க எல்லாம் பேச ஆரம்பிச்சுடுவாங்க. கவி, கவிம்மா எழுந்துரு. நமக்காக எல்லோரும் இங்க இருக்காங்க, பாரு.” என்று மனைவியை உசுப்பி எழுப்ப, கவிதாவிற்கு அப்போது தான் தன் வாழ்க்கை பின்னுக்கு சென்று, மகளின் வாழ்வு முன்னுக்கு வந்தது.

மாலையும் கழுத்துமாக மகள் கவலையுடன் தன் முகத்தை நெரிட்டது பெத்த மனதை பதைபதைக்க வைக்க, “சாரிடா, ஒரு ஷாக்ல அப்படியே உட்காந்துட்டேன், நீ மேடைக்கு போ. நாங்க பின்னாடியே வரோம்.” என்று மகளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்ப முயன்றார். மகள் செல்வாளா என்ன? பெற்றவர்களின் மனது அவளுக்கு தெரியாதா?

“அம்மா, உங்களுக்கு நிஜமாவே பிராப்ளம் இல்லயாமா? அப்பா உங்களுக்கும் தான். நீங்க என்ன சொல்றீங்களோ அப்படி செய்யலாப்பா. சொல்லுங்க.”

ராஜன் அதுவரை கவிதாவின் முகத்தில் கவனமாக இருந்தவர், அப்போழுது தான் மலரின் கேள்வியில் மகளின் முகத்தை கூர்ந்து பார்த்தார். கொடிமலரின் தவிப்பும், கவலையும் அவரின் மனதையும் பிசைய உடனே மலரின் தோளில் தட்டி திட மூட்டினார்.

“மினு என்ன ஓகேவான்னு கேட்டுட்டு இருக்க? எல்லாம் அப்போவே ஓகே சொல்லியாச்சுல? எதையாவது யோசிச்சு குழப்பிக்காதடா. நீ எப்போவுமே எங்க பொண்ணு! என்னோட பொண்ணு, யாரும் அத மாத்த முடியாது!! புரியுதா? ஃப்ரீயா இரு, மேடைக்கு போ. நானும் அம்மாவும் பின்னாடியே வரோம்.”

அதுவரை அமைதியாக இருந்த கதிரவன், ராஜனின் முன் சென்று, “மாமா நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க, எங்க சைட்ல இருந்து எந்த பிராப்ளமும் வராம நாங்க பார்த்துப்போம். என்னப்பா?” என தன் தந்தையும் துணைக்கு அழைக்க, சுகுமாரனும் சிறிது திடுக்கிட்டு பின் உடனே சுதாரித்து, ஒப்புக் கொண்டார்.

“ஆமா சார், நாங்க பார்த்துக்கறோம்.” சுகுமாரனின் பதிலில் கவிதாவின் முகம் சற்றே தெளிந்தது. ராஜனும் கவிதாவின் கையில் கதிரவனின் கைகளை சேர்த்து, மேடைக்கு அழைத்து செல்லும் படி மோகனிடம் சொல்ல, அவரும் அப்படியே செய்தார்.

எல்லோரும் சென்றதும் ராஜன், கவிதா மட்டும் அறையில் தனித்திருக்க, கவிதா பொங்கி விட்டார். “என்னங்க இது? யார பார்க்கவே கூடாதுனு இருந்தோமோ அவங்கள எல்லாம் பார்க்குற மாதிரி ஆகுது. அது மட்டுமா, கதிரோட அம்மா சைட் ரிலேஷனா வேற இருக்காங்க…. எனக்கேன்னவோ அவங்கம்மா இத வைச்சு பிரச்சனை பண்ணுவாங்களோன்னு இருக்குங்க.”

“கவி அதான் மாப்பிள்ளையும், அவரோட அப்பாவும் சொல்லிருக்காங்கல, அவங்க பார்த்துப்பாங்க. நீ எல்லார் முன்னாடியும் தைரியமா இருக்கனும். எல்லோமே ஃபேஸ் பண்ண கத்துக்கனும்னு இன்னுமும் கடவுள் நினைக்குறாரு போல. இங்க நம்ம பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம், அவளுக்கு எது நல்லதோ அதை பண்ணுவோம்.”

ராஜன் சொல்லிய சொற்கள் யாவும் கவிதாவிற்கு புரிந்தாலும் மனம் அதை ஏற்க மறுத்தது! நமக்கு மட்டும் ஏன் ஒன்றின் பின் ஒன்றாக சோதனை? இவ்வளவு நாட்கள் காத்திருந்து மகளுக்கு ஒரு நல்லது நடக்கிறது என சந்தோஷம் கூட முழுதாக அனுபவிக்க முடியவில்லை…

நமக்கான காலம் எப்போழுது வரும்? இவ்வளவு வருடங்கள் கழித்து இவர் தான் நம் கணவன், தன் தந்தை என தானும், மகளும் ஏற்றுக் கொண்ட பிறகு இவருக்கு ஏன் இந்த சூழ்நிலை? கணவனை வலியுடன் கண்களால் வருடிய கவிதாவை, ‘என்ன?’ என அதே கண்களால் வினவினார் ராஜன்.

“உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே? யார் என்ன சொன்னாலும், நீங்க தான் மினுவோட அப்பா! நீங்க எதுவும் கஷ்டப்படாதீங்க!”

கவிதாவின் கூற்றை கேட்டு ராஜன் ஒரு கணம் அனைத்தையும் மறந்து சிரித்தார், மனதார. பின், கவிதாவின் தோளை லேசாக அணைத்து, “மடச்சி, இது நீ சொல்லனுமா, நானே மினுகிட்ட சொன்னேன் தான? நான் எதுவும் கஷ்டப்படல, எனக்கு கவலை எல்லாம் உன்னையும், மினுவையும் நினைச்சு தான்!” என்று உறுதியாக கூற, கவிதாவின் முகத்திலும் அது குடியேறியது.

தங்களுக்குள் சமாதானம் செய்து மேடைக்கு வர, அங்கே நலங்கு வைக்கும் நிகழ்வும் துவங்க, எல்லாவற்றையும் மறந்து அங்கே மகளின் நிகழ்வில் முழுதாக ஈடுப்பட்டனர். கொடிமலருக்கும் பெற்றோர்களின் தெளிந்த முகம் சற்றே தைரியத்தை குடுத்தது என்றால், மணாளன் கதிரின் “ஹே எதுவும் டென்ஷன் ஆகாத, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.” என்ற சொற்களும், உள்ளங்கை அழுத்தமும் வெகுவாக மனதை ஒரு நிலைப் படுத்தியது!

ஆனால், இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாலதியின் முகம் அவ்வளவாக சரியாக இல்லை என்றே கூற வேண்டும். மனதில் ஓடிய பலத்தரப்பட்ட யோசனைகள் அவரின் முகத்திலும் அவ்வப்போது தெரிந்தது!

“ம்மாமா ஏன்மா ஒரு மாதிரி இருக்கீங்க? கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருங்க.” என்று வென்னிலா சில சமயம் கூற, முகத்தை சரி பண்ணுவார். பின் மீண்டும் அதே குட்டையில் ஊறிய மட்டை கதை தான்!

மாலதியின் குழப்பத்தை சரியாக கவனித்தவர் அவரின் கணவன் சுகுமாரனே. ‘இவ என்னத்த யோசிக்கிறான்னு தெரியலையே? பிரச்சனை பண்ணாம ஃபங்ஷன் முடிஞ்சா சரி!’ சுகுமாரனின் எண்ணம் தான் வென்னிலா மற்றும் கதிரவனுக்கும். அவர்களின் வேண்டுதல்கள் பலித்தனவோ என்னவோ நிச்சயதார்த்த நிகழ்வும் நல்லபடியாக முடிந்தது.

ஆனால், மாலதியின் முகம் சரியாக இல்லை என அனைவரும் அறிந்தனர். கதிரவனுக்கு தான் மனதில் பாரம் ஏறியது. நண்பர்கள் முன், மலரின் முன் எல்லாம் சிரித்தபடி காட்டிக் கொண்டாலும் இதை எல்லாம் பின் தள்ளி அன்றிரவு அவன் தூங்க செல்லும் போது மனதில் அவன் தாயின் நினைவே மேலோங்கியது!

எத்தனை எத்தனை தடங்கல்கள்? எல்லாவற்றையும் தாண்டியாயிற்று என நினைத்த போது, புதிதாக பிரச்சனை வரவும் மனம் தாங்கவில்லை! ‘நமக்கு மட்டும் தான் டிஸைன் டிஸைன்னா பிரச்சனை வரும் போல…. அம்மா அப்போவே அப்படி பேசுனாங்க. இப்போ இன்னும் என்னலாம் நடக்க போகுதோ?’

கதிரவன் நினைத்த போதே நினைவலைகள் பின் நோக்கி இழுத்துச் சென்றது!

******************************************************************************************

மலருடன் அன்று தனித்து பேசும் போது அவள் சொல்லிவிட்டாள் அவளின் குடும்பத்தை பற்றி.

“உங்ககிட்ட முக்கியமா நான் பேசனும்னு நினைச்சது, என்னோட ஃபேமிலி பத்தி. நான் கை குழந்தையா இருந்தப்போவே என்னோட அம்மா டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டாங்க. அவங்களுக்கும் அவங்க எக்ஸ்-ஹஸ்பென்ட்க்கும் எனக்கு ஒரு வயசு இருக்கும் போதே டிவோர்ஸ் ஆகிருச்சு. அப்புறம், அம்மாவும் நானும் என்னோட தாத்தா பாட்டி வீட்டுல தான் இருந்தோம்.

மாமாக்கும் மேரேஜ் ஆச்சு, அம்மாவும் வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க. எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போது தான் திரும்ப மேரேஜ் பண்றத பத்தி பேசிருக்காங்க.

அம்மா எனக்காக யோசிச்சாங்க, கொஞ்ச நாள் கழிச்சு தான் எங்கப்பாவோட சம்பந்தம் கிடைச்சிருக்கு. அப்போ என்கிட்ட கேட்டு தான் மேரேஜ் பண்ணாங்க. எங்க தாத்தா, எங்கப்பாவோட அப்பா தான். என்னை எந்தவித பாராப்பட்சமும் இல்லாம நல்லா பார்த்துப்பாரு. எங்கப்பா எங்களுக்கு கிடைச்ச வரம், எனக்கு எல்லாமே அவரு தான். உங்ககிட்ட முதல்லயே சொல்லனும்னு தோணுச்சு சொல்றேன்.”

கேட்ட கதிருக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நீங்களே சொல்லிட்டீங்கல, அவரு தான் உங்கப்பான்னு. இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு? எனக்கு இதுலாம் பெரிய விஷயமா தெரியல.”

கதிரின் சாதாரண பேச்சில் கொடிமலர் சற்று விரக்கத்தியாக சிரித்தாள். “ஏன் சிரிக்குறீங்க?”

அவனின் கேள்விக்கு பதிலாக ஒரு பெருமூச்சை முதலில் விட்டு பின், “உங்களுக்கு சாதாரணமா தெரியலாம். பட், நிறைய பேர் இதையே பெரிய விஷயமா பார்ப்பாங்க. முக்கியமா வீட்டு பெரியவங்க பார்ப்பாங்க.” என்று தெளிவாக சொன்னாள்.

“இதுல அவங்க சொல்ல என்ன இருக்குன்னு புரியல…. இது உங்க அம்மா, அப்பாவோட லைப்ஃ. நீங்க எல்லாருமே ஒண்ணா, சந்தோஷமா இருக்கீங்க, அப்போ இது ரொம்ப பெரிய விஷயமா என்ன?”

கதிருக்கு உண்மையிலேயே புரியவில்லை தான், அவன் வீட்டில் இந்த விஷயத்தை சொல்லும் வரைக்கும்… அதன்பின் எல்லாம் புரிந்தது, புரிய வைக்கப்பட்டது என கூற வேண்டும்!

முதலில் அவன் தந்தை இந்த திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கும் போது தனியாக அவருடன் இருந்ததால் அப்போதே சொன்னான் இவ்விஷயத்தை. முற்போக்குவாதியான தந்தையே சில நிமிடங்கள் ஆழ்ந்த யோசனையில் இருந்ததை பார்த்து தான் அவனுக்கு பெரிதும் மலைப்பாக போயிற்று.

“அப்பா என்னப்பா யோசிக்கறீங்க? நமக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லையே, நான் இத பெருசாவே எடுத்துக்கல. மலர் எனக்கு சொன்ன விஷயத்தை உங்களுக்கு சொன்னேன் அவ்வளவு தான்.”

மகனை நேராக நோக்கி சுகுமாரன், “நமக்கு பிரச்சனையில்லை தான். ஆனா, உங்கம்மா அவங்க ஃபேமிலி பத்தி தான் நமக்கு தெரியுமே. எதுவும் பிரச்சனை பண்ணாம இருக்கனுமே. அதான், யோசிச்சுட்டு இருந்தேன். நீ ஒன்னு பண்ணு. உங்கம்மா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குர வரைக்கும் இந்த விஷயத்தை அவகிட்ட சொல்லாத. அவ ஃபெர்ஸ்ட் ஓகே சொல்லட்டும். அப்புறம் மேல இத பத்தியெல்லாம் பேசிக்கலாம்.” என்று முடிவாக கூற, கதிரும் இதை பற்றி தாயிடம் உடனே சொல்லவில்லை.

ஆனால், அப்படியே சொல்லாமலே விடவும் அவனுக்கு மனசில்லை. இயல்பிலேயே தாயிடம் கொஞ்சம் பாசமும், ஒட்டுதலும் உடைய மகனுக்கு தாயை மீறி எதுவும் செய்யவும் மனதில்லை. மாலதியின் ஒப்புதல்காக காத்திருந்தவனை பார்த்து தாயுக்கும் சற்றே மனம் இறங்கியது.

வார இறுதியில் வெறுப்பாக தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்த மகனின் பக்கத்தில் அமர்ந்து குரலை செருமியபடி பேச்சை துவங்கினார் மாலதி. “என்னடா அந்த பொண்ணு வீட்டுல என்ன சொல்றாங்க?”

கரார்ரான குரலில் வந்த வார்த்தைகளை கேட்டு முதலில் சற்று திகைத்தான் கதிரவன். ‘பொண்ணு வீடு’ என்பதை காதில் ஓரமாக வாங்கிய வென்னிலா, சுகுமாரனையும் அவரின் அறைக்குச் சென்று அழைத்து வந்தாள் ஹாலுக்கு. தங்களுக்கு தெரியாமல், தாயும் மகனும் முக்கிய பேச்சுகளை முடித்து விட்டால்?

“பொண்ணு வீட்டுல நம்ம என்ன சொல்லுவோம்னு தான் வெயிட் பண்றாங்கமா.”

கதிரின் தாழ்ந்த குரலில் மாலதிக்கு லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. “நம்ம என்ன சொல்றோம்னு இருக்காங்களா? அப்போ அவங்களுக்கு ஓகேவா இல்லயான்னு இன்னும் சொல்லலையா?”

“அப்படி இல்லமா, ஓகே தான்னு நினைக்கிறேன். பட், அவளும் பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கா… அதான்….”

“ஹ்ம்ம்ம் இன்னும் எவ்வளவு நாள்பா எடுத்துப்பாங்க? உன்னை மாதிரி மாப்பிள்ளை கிடைக்க அவங்களுக்கு குடுத்து வச்சுருக்கனும்!”

மாலதியின் பெருமையை கண்டு, ‘ஷப்பாபாபா முடியல’ என உச்சுக் கொட்டினாள் வென்னிலா. “அவங்க பையனை பத்தி விசாரிக்க மாட்டாங்களா? உடனே சரின்னு சொல்லி பொண்ணை கட்டிக் குடுப்பாங்களா?”

சுகுமாரன் உண்மையை உரக்க கூற, மாலதி அவரை லேசாக முறைத்து, கதிரிடம் திரும்பி, “என்னடா உன்னை பத்தி, நம்மள பத்தி விசாரிக்குறாங்களா? அதுக்கு தான் இன்னும் ஓகே சொல்லலையா?” என வினவ, மகனும் மனம் தளராமல் பொறுமையை கடைப் பிடித்து பதிலளித்தான். “எனக்கு தெரியலம்மா. பட், கண்டிப்பா விசாரிப்பாங்க தானமா? அப்பா கூட அவங்க ஃபாமிலி பத்தி விசாரிச்சாரு. அதே மாதிரி தான இதுவும்.”

போகிற போக்கில் ஒரு குண்டை மகன் போட, மாலதிக்கு தான் அதை தாங்கும் மனமில்லாது போயிற்று. தன்னிடம் சொல்லாது மலரின் குடும்பத்தை பத்தி விசாரித்ததிற்கு கணவனிடம் சண்டைக்கு ஆயித்தமானார். சுகுமாரன் கூறுவதை காது கொடுத்து கேட்கவும் மாலதி தயாராகயில்லை!

“ஏன் என்கிட்ட சொல்லாம போயிட்டு விசாரிச்சீங்க? இன்னும் எனக்கு தெரியாம என்னலாம் பண்றீங்க, அப்பாவும் பையனும், சொல்லுங்க?”

“அம்மாமாமாமா” கதிரின் ஓங்கிய குரலில் சற்று நேரம் அமைதி காக்க, “அப்பா விசாரிச்சது மட்டும் தான் நடந்திருக்கு, வேற ஒண்ணுமே நடக்கல. நான் சொல்றேன்மா, என்னை நம்ப மாட்டீங்களா?” என்று வேதனையுடன் கேட்க, மாலதி உடனே கனிந்து பனிந்தார். “ஏன்டா நீ டென்ஷன் ஆகுற? சரி விடு, அந்த பொண்ணு குடும்பத்தை பத்தி எனக்கு முழுசா சொல்லு. அன்னிக்கு நீ சொல்லும் போது கவனிக்கல….”

கதிரும் தந்தையை ஒரு முறை பார்த்து பின் மீண்டும் தாயிடம் திரும்பி, கொடிமலரின் குடும்பம் பற்றி மேலோட்டமாக சொன்னான். மலரின் தாயின் விவாகரத்தை பற்றி சொல்லவில்லை. அவனின் கூற்றுக்கு நடுவே மாலதியின் குறுக்கு விசாரனைகள் வேறு!

சரி, எல்லாம் சொல்லி முடித்தாயிற்று என நினைத்து நிமிர்ந்து அமர்ந்த போது தான் மாலதியின் அடுத்த குண்டு கதிரின் மேல் பாய்ந்தது.

“அவங்க என்ன ஆளுங்க?” மூன்றே வார்த்தையில் ஒருவரின் தரம் தாழ முடியுமா? “ம்மாமா என்னம்மா நீங்க?” வென்னிலா தாங்காமல் சட்டென்று கேட்க, மாலதியும் விடவில்லை.

“என்னடி, என்ன தப்பா கேட்டுட்டேன்? இதே நாங்க பார்க்குற பொண்ணு வீடுன்னா எங்களுக்கு தெரியும். இவங்க என்ன மாதிரின்னு தெரியல, அதான் கேட்டேன். தப்பா?”

“ஆமா தப்பு தான்!” சுகுமாரன் ஒரே அடியாக சொல்ல, மாலதி சரிக்கு சரியாக இறங்கினார். “என்ன தப்பு, நீங்க முதல்ல பொண்ணு பார்க்கும் போது இதை எல்லாம் தெரியாம தான் பார்த்தீங்களா?”

“அப்போவும் நான் இத எல்லாம் பார்க்க வேண்டாம்னு தான் சொன்னேன், நீ தான் கேக்கல. இப்போ இது நம்ம பார்த்தது கூட இல்ல. லவ் மேரேஜ்ல இப்போ எதுக்கு உனக்கு இதுலாம்? அடுத்து என்ன, ஜாதகம் பார்க்கனும்னு சொல்ல போறியா?”

‘ஹய்யோ இவரே அடுத்த டைம் பாம் எடுத்துக் குடுக்குறாரே!’ கதிர் நொந்து போன முகத்துடன் தங்கையை பார்க்க, அவளோ தலையில் அடித்துக் கொண்டாள். பசங்களின் எதிர்பார்ப்பையை பொய் ஆக்காமல், மாலதியின் பதிலும் வந்தது.

“ஆமா, கண்டிப்பா ஜாதகம் பார்க்கனும்! பார்க்காம கல்யாணம் பண்ணிட்டு என் பையன் கஷ்டப்படுறதுக்கா? டேய் முதல்ல அந்த பொண்ணோட ஜாதகம் வாங்கிக் குடுடா!”

மாலதியின் அராஜகமான குரலைக் கேட்டு கதிரவன் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான். பின் முடிவாக எழுந்து நின்று, “அவங்க என்ன ஆளுங்க, அவளோட ஜாதகம் எல்லாம் அப்புறமா பேசிக்கலாம்மா. முதல்ல உங்களுக்கு இந்த கல்யாணத்துக்கு ஓகேவா, அதை சொல்லுங்க?” என்று நேரடியாக கேட்க, மகனின் இந்த கேள்வியை எதிர்பாராமல் திருதிருவென விழித்தார் மாலதி.

“ஆமா, மத்தது எல்லாம் நம்ம பேசிக்கலாம். ஃபெர்ஸ்ட் உனக்கு ஓகேவா இல்லையா அதை சொல்லு!” சுகுமாரனும் கேட்க, வென்னிலாவும், “அண்ணா பாவம்மா, ஓகே சொல்லு!” என்று தன் பக்கம் முயல, மாலதியின் ஒப்புதல் ஒருவழியாக கதிரின் திருமணத்திற்கு கிடைத்தது!!

அது கொடுத்த சந்தோஷத்தில் சில நிமிடங்கள் கூட இருக்கவிடாமல், “உனக்காக தான்டா ஓகே சொல்லிருக்கேன். எனக்கு எப்போ இந்த சமந்தம் சரியாபடலயோ அப்போவே வேணாம்னு சொல்லிடுவேன். அப்போ என்னை கோச்சிக்காத. இன்னும் முழுசா முடிவாகல, ஜாதகம் பார்த்து, நம்ம அவங்க வீட்டுக்கு போயிட்டு எல்லாம் பேசனும். அப்புறமா மேல ஆகுறத பார்க்கலாம்!” என்று விட்டேத்தியாக கூறி மாலதி எழுந்து தன் அறைக்குள் செல்ல, மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், புரியாமல்.

“இப்போ ஓகே சொன்னாங்கலா இல்லையா, எனக்கு புரியல, உனக்கு புரிஞ்சுதா?” கதிரின் கேள்விக்கு வென்னிலா இல்லை என தலையாட்ட, சுகுமாரனோ, “ஃபர்ஸ்ட் லேவல் ஓகே மட்டும் தான் சொல்லிருக்கா. இன்னும் போகப் போக நிறைய பண்ணுவா பாரு. எல்லாத்துக்கும் தயாரா இருக்கனும்!” என்று எச்சரிக்கை குரலில் கூற, கதிரவனின் முகம் குழப்பத்தை காட்டியது.

அதே குழப்பங்கள் செல்லும் நாட்களில் மலரும் தானும் வாழும் வாழ்க்கையிலும் பரிதிபலிக்கப் போகிறது என தெரியாமல்!
 
Top