அத்தியாயம்…1
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
என்ற பக்தி பாடல் கிருஷ்ணகிரி டவுனில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீராழ்பட்டியில்(கற்பனை ஊர்) அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், கடவுள் முன் நாப்பத்தியெட்டு வயதிலும் மிக இளமையுடன் இருக்கும் அந்த வீட்டின் மூத்த மருமகள் வரலட்சுமி தன் இனிமையான குரலில் கடவுள் முன் பாடி கண் மூடியவளின் கண்ணோரம் இரு சொட்டு கண்ணீர் வர…
சட்டென்று தன் கண்ணீரை யாரும் பார்த்து விட்டார்களோ என்று சுற்றியும், முற்றியும் பார்த்துக் கொண்டே அவசர அவசரமாய் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவளின் காதில்…
“என்ன இன்னுமா உன் வேண்டுதல் முடியல…? சீக்கிரம் உன் பிராத்தனை முடிஞ்சுடுச்சினா… அவங்க அவங்க அறைக்கு காப்பிய அனுப்புற சோலிய பாரு. அதுக்கு முன்ன என் கையில்ல காபி தண்ணிய கொடுத்துட்டு போ…” என்று அதிகாரம் செய்தவர் வேறு யாரும் இல்லை. வரலட்சுமியின் மாமியார் தெய்வநாயகி.
தெய்வநாயகியின் சொல்லுக்கு ஏற்ப, அவர் கையில் காபியை கொடுத்து விட்டு, அந்த வீட்டின் இரண்டாம் மகன் சஞ்ஜீவரத்தினம், மூன்றாம் மகன் தில்லை நடராஜனின் அறைக்கு தயாரித்த காபியை அந்த வீட்டில் மேல் வேலை பார்க்கும் குந்தாணியிடம் கொடுத்த வரலட்சுமி, தனக்கும் தன் கணவருக்கும் இரு காபியை கையில் எடுத்தவள் வரண்டாவில் அமர்ந்து இருந்த தெய்வநாகியை கடந்து செல்லும் போது தன் மாமியார் சொன்ன…
“ஊமையனுக்கும் காபியை குந்தாணி கிட்டவே கொடுத்து விடுறதுக்கு என்ன…?அந்த அறைக்கு போனாலே நேரம் சென்டு தான் வர…” என்ற மாமியாரின் பேச்சில் அடுத்த அடி எடுத்து வைக்கலாமா…? என்று வரலட்சுமி யோசித்து கொண்டே தயங்கி நின்று விட்டாள்.
“சரி சரி வெரசா உன் புருஷனுக்கு காபி தண்ணிய கொடுத்துட்டு, நீயும் வாயில ஊத்திட்டு வேலய பாரும். இன்னிக்கு பத்திர பதிவு ஒன்னு இருக்கு. வூட்டு ஆம்பிளைங்க வெளி சோலிக்கு போகனும்.” என்று தன் இரண்டரை கட்டை குரலில் தன் மூத்த மருமகளுக்கு அதிகாரம் செய்து விட்டு , தான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழும் போது கூட தன் முன் இருந்த க்ளாஸை காண்பித்து…
“போகும் போது இந்த லோட்டாவையும் எடுத்துட்டு போ.” என்று தன் கடைசி கட்டளையும் பிறப்பித்து விட்டு தான் தெய்வநாயகி அந்த இடத்தை விட்டு அகன்றார்.
இப்போது தெய்வநாயகி ஊமை என்று சொன்னாரே...அது வேறு யாரும் இல்லை. சங்கரலிங்கத்திற்க்கும், தெய்வநாயகிக்கும் பிறந்த அவ்வீட்டின் மூத்த மகன் கமலக்கண்ணன் தான். மூன்று வயது வரை கமலக்கண்ணனுக்கு உள்ள குறை யாருக்கும் தெரியவில்லை. தெரிந்த பின் விட்டு விலகவில்லை என்றாலும், அனைவரிடமும் ஒரு ஒதுக்கம் தானாக தோன்றி விட்டது.
அதுவும் அடுத்து அடுத்து தெய்வநாயகியின் கருவறையில் உதித்த சங்கரி,சஞ்ஜீவரத்தினம், தில்லை நடராஜன் வரவுகளின் மூலம். கொஞ்சம் தள்ளி நிறுத்தியவர்கள். ஒரே அடியாக ஒதுக்கி விட்டனர்.
இந்த உரையாடல்கள் அனைத்தும் வரண்டாவில் நடந்ததால், மச்சி வீட்டில் மேல் மாடியில் தன் அறையில் இருந்து வெளி வந்து காலை நேரக்காற்றை அனுபவிக்கும் பொருட்டு தன் இரு கண்ணையும் மூடி, மூச்சை இழுத்து பிடித்து தன் சுவாசத்திற்க்கு, தூய்மையான காற்றை அனுப்பிக் கொண்டு இருக்கும் போதே…
இடையில் செவிக்கு முதலில் தன் அன்னை பாடிய பக்தி பாடலும், அடுத்து அடுத்து தன் அப்பாத்தா பேசிய விரும்பதகாத வார்த்தைகளும் விழ…
சட்டென்று தன் கண்ணை திறந்த நம் கதையின் நாயகி மணிமேகலைக்கு, தன் அன்னையை நினைத்து கோபம் கோபமாய் வந்தது.
இவங்க நான் வாய் திறப்பதே காலையில் சாமிக்கு முன்னாடி பாட மட்டும் தான், என்று ஏதாவது சபதம், எடுத்து இருக்காங்கலோ…என்று தினம் தினம் தன் அன்னை பேச்சு வாங்கும் போது எல்லாம் நினைப்பதையே இன்றும் நினைத்துக் கொண்டாள்.
அதுவும் தன் தந்தையை ஊமையன் என்று சொல்லும் போது... சொல்லும் அந்த வாயை அப்படியே கிழித்தால் என்ன…? என்று தோன்றுமே தவிர, இவளும் இது வரை வாய் திறந்து யாரையும் எதிர்த்து பேசியது கிடையாது.
இந்த ஊமையன் என்ற பட்ட பெயர் தன் தந்தையோடு நின்று போகாது...தங்களையும் ஊமையன் மகள். ஊமையன் மனைவி என்று ஊரில் சொன்னால் கூட பரவாயில்லை, வீட்டு ஆட்களே சொல்லும் போது தான் அவளுக்கு கை அறுந்த நிலை என்பார்களே அது போல் இருக்கும் தன் நிலையை அறவே வெறுத்தாள்.
முதலில் தான் நன்கு படித்து நல்ல வேலையில் அமர வேண்டும். அதுவும் இந்த ஊரிலோ...இந்த நாட்டிலோ இல்லாது வெளிநாட்டில் வேலைக்கு அமர்ந்து, அங்கு இருக்கும் வெளிநாட்டவனை மணந்து தனக்கு க்ரீன் கார்ட் கிடைத்ததும், தன் தந்தையையும் தாயையும் தன்னோடு அழைத்துக் கொள்ள வேண்டும்.
தான் பிறந்ததில் இருந்து கேட்டு வரும் ஊமையன்,ஊமையனின் மனைவி, ஊமையனின் மகள் என்ற வார்த்தைகள் காதில் விழாது தூர தேசத்திற்க்கு போக வேண்டும்
நம் நாயகி மணிமேகலைக்கு இது தான் வாழ்வின் லட்சியம். லட்சியம் என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கையின் வசந்தத்தை அனுபவிக்காது வாழ்பவள் இல்லை.
லட்சியம் அது ஒரு பாட்டுக்கு இருந்தால், தான் எப்போதும் செய்யும் காலை காற்றை சுவாசித்ததும் தன் பைனாகுலோர் வழியாக பின் கட்டில் பால் கரக்கும் செஞ்கோடையனை சைட் அடிக்க அரம்பித்தால், காலேஜ் போகும் வழியில் இருக்கும் டீ கடை மாஸ்ட்டர் சேட்டன் விஜயனை அவ்வழியாக செல்லும் போது அவன் டீ ஆத்தும் அழகை பாராது காலேஜ் சென்று விட்டால், அன்று முழுவதும் அவளுக்கு ஏதோ இழந்தது போலவே இருக்கும்.
“படிக்கும் வயதில் படிப்பு எவ்வளவு முக்கியமோ… அதே போல் தான் சைட் அடிக்கும் வயதில் சைட் அடிக்காது குழந்தை குட்டி பெற்ற பிறகு தன் மகளோடவா சைட் அடிக்க முடியும்…?”
தன்னுடன் படிக்கும், தன் ஊரே ஆன, ஒரே உற்ற தோழியான வசுந்தரா “ஏன்டி அவன் நம்ம காலேஜ் ப்யூனுடீ. அவன கூட விட்டு வைக்க மாட்டியா…?” என்று கேட்கும் போது எல்லாம் இப்படி தான் சொல்வாள்.
படிப்பில் கெட்டி, வீட்டு வேலையிலும் கெட்டி, வீட்டில் உள்ளவர்களிடம் வாய் திறந்து எதிர்த்து ஒரு வார்த்தை இது வரை அவள் பேசியது கிடையாது. இனியும் பேச மாட்டாள் தான். அவள் அம்மா பேச விட மாட்டாள்.
ஆனால் மனதில் பல ஆண்டாக…. ‘நான் பேச மாட்டேன் செயல்ல நான் யாருன்னு உங்களுக்கு காட்டுறேன்.’
“தோசை மெலிசா சுட தெரியாதா…? நீ என்ன செஞ்சு என்ன கிழிக்க போறியோ…?போ.” என்று தன் சித்திமார்கள் திட்டும் போது எல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள்.
பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு என்பார்கள். இவர்களோடு உறவாடி நான் இவர்களை கெடுக்க போவது கிடையாது. ஆனால் தன் அம்மாவையும் அப்பாவையும், தன்னையும் இவர்கள் படுத்தியதற்க்கு தக்க பதிலடிக்க கொடுத்து விட்டு தான் இந்த நாட்டை விட்டு போவேன்.
காலையில் எப்போதும் போல் தன் அன்னை வாங்கிய பேச்சில் தன் சூடான மனதை குளிர்விக்க கைய்யோடு எப்போதும் வைத்துக் கொண்டு இருக்கும் பைனாக்குலோர் வழியாக நம் செங்கோடையன் பால் கரக்க ஏதுவாய் தன் வேஷ்டியை ஒன்று சேர்த்து இடுக்கில் சொருகி விட்டு, குத்துக்கால் இட்டு அமர்ந்தவன், பால் கரக்க ஏதுவாய் தன் இரு தொடை நடுவில் பால் பாத்திரத்தை அழுத்தி பிடித்த வாறே…
பசுவின் காம்பில் நீரை வாரி இறைத்துக் கொண்டே...பாலை கரந்துக் கொண்டு இருந்தான்.
அதுவும் அவன் ஒவ்வொரு தடவையும் நீரை பசுவின் காம்பில் அடிக்கும் போது… அவன் ஓசை எழுப்பும் உஸ்ஸிலும், பசுவின் மடியில் இருந்து பாலை கரக்கும் போது வரும் அந்த சத்தமான சர்...சர் என்ற சத்தத்திலும் இது வரை விழுந்த வார்த்தைகள் மறைந்து மனதில் அமைதி பெற்றது என்றால்,
செங்கோடையன் இழுத்து சொறுகிய வேஷ்ட்டியின் இடையில் தெரிந்த அவன் சதைப்பற்றான தொடையையும், பால் கரக்கும் போது அவன் கையின் வனப்பிலும் கண் குளிர அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் போது… யாரோ மாடி படி ஏறி வரும் பாத சத்தத்தில், கீழ்நிலையில் பிடித்துக் கொண்டு இருந்த பைனாக்குலோரை மேல் நோக்கி உயர்த்தியவள்…
“பறவை என்னம்மா சொய்யிங்குன்னு பறக்குது.” என்று சொன்னளின் தலை தட்டியது ஒரு கை.
அந்த தலை தட்டலிலேயே வந்தது யார்…? என்று புரிந்துக் கொண்ட மணி மேகலை… “ஓ...நீ தானா…?” என்று வசந்தராவை பார்த்து சொன்னவள்…பின் பைனாக்குலோரை எப்போதும் பிடிக்கும் வாட்டில் பிடித்துக் கொண்டாள்.
“சொய்யூங்கா சொய்யூங்…இருக்குடீ உனக்கு என்னைக்காவது இருக்கு. உன் தில்லாலங்கடி வேலை வீட்ல தெரிஞ்சது...இந்த சொய்யூங் கொய்யூங் ஆக போகுது பாரு.” என்று சொன்னவளின் பேச்சில் பைனாக்லோரை தன் கண்ணில் இருந்து எடுத்தவள் அவளை பார்த்து…
“நான் யார்…?எப்படி பட்டவள் என்று தெரிவதற்க்குள்.” கையை பறப்பது போல் பாவனை செய்தவள் … “ஓடி போயிடுவேன்.”
“என்னவோ போடி. உனக்கு ஏற்கனவே வீட்டில் பிரச்சனை. நீயா ஏதாவது எழரைய கூட்டிக்க போறையோன்னு தான் சொன்னேன்.”
ஆம் வசுந்தரா எப்போதும் மணிமேகலையிடம் கூறும் வார்த்தை இது தான். இந்த வார்த்தையை வசுந்தரா மணிமேகலையிடம் எப்போது இருந்து கூற ஆரம்பித்தால் என்றால்…
அவளின் பதினான்காவது வயதில் இருந்து. அதாவது அம்மணி வயதிற்க்கு வந்த அன்றிலிருந்து மணிமேகலையை பார்க்கும் போது எல்லாம் வசுந்தரா கூறும் அறிவுரைகள் இது தான்.
இருவருக்கும் அந்நாள் இப்போது நினைவுக்கு வந்து விட்டது போல்… இருவரின் நினைவலைகளும் அந்நாளில் மூழ்கி விட்டது. அன்று தான் அவளின் ஒன்பதாம் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவள்…
எப்போதும் போல் அம்மா எங்கு இருப்பார்கள் என்று தேடாது நேராக சமையல் கட்டுக்குள் நுழைந்தவளின் மூக்கில் நெய் வாசம் தூக்கலாய் நுழைய… “அம்மா இன்னைக்கு என்னம்மா விசேஷம் பணியாரம் சுடுறிங்க…?” என்று அன்னையிடம் கேட்டுக் கொண்டே அங்கு தட்டில் சுட்டு போட்ட சூய்யத்தை வாயில் போட்டுக் கொண்டவள் அன்னை சொன்ன…
“உன் சித்தியோட தம்பி பட்டணத்தில் இருந்து வர்றாங்க.”
வரலட்சுமி மகளிடம் கூட பேச்சை அளந்து தான் பேசுவாள். மகளிடம் பேசும் இந்த ஒன்று இரண்டு வார்த்தைகள் கூட மற்றவர்களிடம் பேச மாட்டாள். அந்த மற்றவர்களில் கணவரும் அடக்கமே….
வாயில் சூய்யத்தை அரைத்தவள், தன் அன்னையிடம் பேச்சில் தன் சித்திமார்களை அரைத்து தள்ளிக் கொண்டு இருந்தாள்.
“ஏன் அவங்க வீட்டு ஆளுங்க தானே வர்றாங்க. இதை அவங்க செய்ய மாட்டாங்கலா...சரி செய்ய தான் முடியாது. உங்களுக்கு கூட மாட ஒத்தாசையாவது செய்ய வரலாம்லே…?”
மணிமேகலைக்கு தன் அன்னையிடம் மட்டுமே வாய். மற்றவர்கள் முன் மிக மிக பதிவிசாக தான் நடந்துக் கொள்வாள். அது கூட வயது கூட கூட அன்னையுடனான பேச்சு குறைந்து விட்டது.
அவளின் பேச்சில் அன்னை போட்ட… “உஸ்ஸில்.” அமைதியானவள் பின் வாய் திறக்கவில்லை.
மகளின் அமைதியை பார்த்த வரலட்சுமி கையில் சூய்யத்தை ஒன்றை எடுத்து… “இத சாப்பிடுடா...இத சுட்டு முடிச்சதும் காபி தண்ணி கலக்குறேன்.” என்ற அன்னையின் பேச்சில் காதில் வாங்காது முகம் கசங்கலோடு தன் அறைக்கு சென்றவளுக்கு, தன் உடம்பில் தெரிந்த மாற்றங்களும், தன் பள்ளி ஆசிரியர் சொல்லிக் கொடுத்த சொல்லும் ஒத்து போக… தான் பெரிய மனிஷியாகி விட்டோம் என்று தெரிந்து விட்டது.
தெரிந்த விசயத்தை இதை நாமே அம்மா கிட்ட சொல்லனுமா…?இல்ல அவங்கலே கண்டு பிடிச்சி நம்ம கிட்ட கேட்கும் போது தெரியாத பிள்ளை போல நடந்துக்கனுமா…? அவள் மனதில் சிறு குழப்பம்.
இந்த குழப்பத்தை நீக்க என அங்கு வந்து சேர்ந்தாள் வசுந்தரா… “என்னடீ பரிச்சை முடிஞ்சதும் துள்ளி குதிச்சிட்டு என் வீட்டுக்கு ஓடி வருவ. இன்னைக்கு என்ன என்னை வர வழச்சிட்ட…?” என்று கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அப்போது தான் தன் தோழியின் மக மாறுதல் கண்ணில் பட்டது.
“என்ன மணி...என்ன ஆச்சு…?”என்று கலக்கத்துடன் கேட்டாள்.
“வயிறு வலி வசு.” என்று மணிமேகலை சொன்னதுமே… இதில் சீனியரான வசுந்தரா…
“ஏய் எழுந்துடு பார்க்கலாம்.”
இப்போதே அவளை எழுப்பி அவளிடம் கரையை பார்த்து விட்டால் போதும், என்ற சந்தோஷத்தோடு அவளை எழுப்ப முயற்ச்சித்தாள்.
பின் இருக்காதா...? தான் மட்டும் இரண்டு வருடம் முன்னவே பெரிய மனிஷியாகி, அதன் சட்டதிட்டங்கள், கஷ்ட நஷ்டங்களை தான் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது, தன் வயதை ஒற்ற இவள் மட்டும் சுதந்திரமாய் இருந்தாள்.
மணிமேலைக்கு வயிறு வலி என்றால், வசுந்தராவுக்கு வயிற்று எரிச்சலில்… “சனியனே எழுந்துடுடீ…” கொஞ்சம் பூசியவாகில் இருந்த மணிமேகலையை அவளால் எழுப்ப முடியாத எரிச்சலில் கத்தினாள்.
“ஏய் விடுடீ எனக்கே தெரியும்.” என்று அசால்ட்டாய் சொன்னவளின் பேச்சில்…
“என்ன தெரியும்…?” தான் நினைத்ததை தான் சொல்கிறாளா என்று பர பரத்து கேட்டாள்.
“நீ எத நினச்சி என்னை எழ சொன்னியோ...அது தான். நான் வயசுக்கு வந்துட்டேன்.” என்று அவள் காதில் கத்தினாள்.
“ஏய் மெல்லடீ மெல்ல.” என்று மணிமேகலை அதட்டிய வசுந்தரா…
“அம்மா தான் உன்னை இங்க உட்கார சொன்னாங்கலா…?” என்று கேட்டுக் கொண்டே அவளை விட்டு கொஞ்சம் தள்ளி சென்றவள்…
‘அய்யோ இவளை தொட்டுட்டனே என்னையும் குளிக்க சொல்லுவாங்கலோ…’ தன் கவலை தனக்கு என்பது போல் இருந்தவளின் நினைவில்…
“இன்னும் யாருக்கும் தெரியாது.” என்ற மணிமேகலையின் பேச்சில்…
“ஏய் அப்போ ஏன்டி இங்க உட்கார்ந்து இருக்க வா...அம்மா கிட்ட சொல்லலாம்.” என்று சொல்லிக் கொண்டே அவளின் கை பற்ற சென்றவள் பின் தன் கையை இழுத்துக் கொண்டே…
“வாடி.” என்று அழைத்தவளை பார்த்து… “நீ போய் சொல்.” என்று சொன்னவள் பின் எதையோ நினைத்தவாறு…
“ஏய் இதை நானே கண்டு பிடிச்சி சொன்னேன் சொல்லாதே...நீ பார்த்ததா சொல்.” என்று கண்ணடித்து சொன்னவளின் திருட்டு தனம் அன்று அப்போது ஆராம்பித்தது..
பின் அவள் அத்தை சங்கரி பெத்த சீமந்த புத்திரன் வீரேந்திரன் சென்னையில் M.B.A படித்துக் கொண்டு இருப்பவனுக்கு அப்போது தேர்வு சமயம் என்பதால் ஊருக்கு வர இயலாது என்ற காரணத்தால் பக்கத்து ஊரில் அவளுக்கு மாமன் மகனாய் தூரத்து உறவாகும் ஒருவன் அவளுக்கு குச்சி கட்டி மாலை போட்டு சந்தனம் வைக்கும் வேளயில், அவள் கன்னத்தில் பட்ட ஜில் என்ற உணர்வில் அவனை மேல் நோக்கி பாராது கீழ் கண்ணோக்கி அவனை பார்த்து விட்டு மனதில் பையன் சும்மா நச்சுன்னு தான் இருக்கான்.
நினைத்ததை “அவன் என் கன்னத்துல கை வெச்சப்பா சும்மா ஜூல்லுன்னு இருந்ததுடீ… “ என்று வசுந்தாராவிடம் சொன்னாள்.
“அவன் இல்லடீ. இப்போ நான் சந்தனத்தை வெச்சி உன் கன்னத்த தொட்டா கூட ஜூல்லுன்னு தான் இருக்கும்.”
அப்போது அந்த வழியே போகும் ஒரு வயதானவரைய் காட்டி… “அந்த தாத்தா சந்தனம் பூசுனா கூட தான்டீ ஜூல்லுன்னு இருக்கும்.” என்று அன்று ஆராம்பித்த வசுந்தரா மணிமேகலையின் பேச்சு இதோ இன்றும் தொடர்கிறது.
மணிமேகலையின் இந்த வீர தீர செயல் எல்லாம் வெறும் பேச்சு அளவோடு மட்டும் தான். அதுவும் தான் பார்ப்பது பார்ப்பவருக்கு கூட தெரியாது தான் பார்ப்பாள்.
வீட்டில் வேலை செய்ய துப்பு இல்லை என்று சித்திமார்கள் திட்டினாலும், இது போல் ஒழுக்க விசயத்தில் திட்டியது கிடையாது. ஊரிலும் அப்படியே தான். அம்மணிக்கு அவ்வளவு நல்ல பெயர்.
பழைய நினைவுகளில் இருந்து வெளியில் வந்தவர்கள் என்ன நினைத்தார்களோ இருவரும் ஒரு சேர சிரித்து விட்டனர்.
“என்னடி அதிசயமா காலையிலேயே உன் காத்து இந்த பக்கம் வீசுது. உங்க அம்மா எப்படி விட்டாங்க…?என்ன விசயம் என்பது போல் கண் சிமிட்டி வசுந்தாராவை பார்த்து மணிமேகலை கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லடீ.” என்று சொன்னவளின் கன்னக்கதுப்பு சிவப்பில்… “ஒன்னும் இல்லேன்னு சொல்லும் போதே ஓராயிரம் இருப்பது போல இருக்கேடீ...சொல்லு உங்க அம்ம கண்ணுல மண்ணை தூவிட்டு எப்படி வந்த…?” என்ரறு கேட்டாள்.
வசுந்தாராவும் மணிமேகலையும் சிறுவயது முதலே எப்போதும் ஜோடி போட்டுக் கொண்டு தான் சுற்றுவார்கள். சிறுவயதில் அவள் இவள் வீட்டுக்கு போவதும், அவள் இவள் வீட்டுக்கு வருவதும் எப்போதும் நடப்பது தான்.
ஆனால் அந்த எப்போதும் நடக்கும் விசத்தில், இரண்டு வருடம் முன் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தாள் வசுந்தாராவின் அம்மா சுந்தரி…
“மணி நீ எப்போன்னாலும் இங்கு வாம்மா...ஆனா இனி வசு அங்க வர்றது அவ்வளவு நல்லா இருக்காது.”
இதை ஒரே தடவை தான் சுந்தரி சொன்னாள். “ஏன்…?எதுக்கு…?” என்று கேளாது … “சரி அத்தை.” என்று சமத்து பிள்ளையாய் ஒத்துக் கொண்டாள்.
“ஏன்டி நீ மட்டும் என் வீட்டுக்கு வரலாம். நான் போக கூடாதுன்னு சொல்றாங்க… இது எந்த வகையில் நியாயம்…”
பன்னிரெண்டாம் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் சும்மா இருக்க முடியாது, மார்க்கெட் ரோடில் இருக்கும் கணினி வகுப்புக்கு செல்லும் போது, மணிமேலையிடம் வசுந்தரா நியாயம் கேட்டாள்.
“அது என்ன நியாயம் என்றால் உன் வீட்டில் இருக்கும் ஆண்பிள்ளை உன்னோட தம்பி. அதாவது என்னோட சின்னவன். என் வீட்டில் இருக்கும் ஆண்பிள்ளைகள் என் சித்தி மகன்கள் என்னோட அண்ணன். அதாவது உன்னோட பெரியவன். புரியுதா...இப்போ உங்க அம்மாவோட நியாயம்.”
சும்மா நம்ம மணிமேகலை கோடு போட்டால் போதும். அதில் ரோடு போட்டதோடு மட்டும் இல்லாம அதில் வண்டியே ஒட்ட விட்டுடுவா….
அதற்க்கு வசுந்தரா…. “ஓ…” என்று புரிவது போல் தலையாட்டியவளின் முகம் திரும்பவும் குழம்ப…
“இப்போ என்னடி உனக்கு நியாயம் தெரியனும்…? கொஞ்சம் கொஞ்சுனுடு அறிவாளியா பிறந்தது என் குத்தமா…? கேளு கேளு….உன் சந்தேகத்தை மொத்தமும் நான் தீர்த்து வைக்கிறேன்.”
“இல்ல உங்க அப்பா தான் பெரியவர். ஆனா உங்க சித்தப்பா பசங்க உன்னோட எட்டு ஏழு வயசு பெரியவங்கலா இருக்காங்க…?” என்று வசுந்தரா கேட்டது நியாயமான கேள்வி தான்.
ஆனால் அனைத்திற்க்கும் சட்டென்று பதில் சொல்லும் நம் மணிமேகலை, இதற்க்கு மட்டும் பதில் சொல்ல முடியாது அமைதியாகி விட்டாள்.
ஆம் வசுந்தரா கேட்ட இந்த கேள்வி...மணிமேகலையின் மூளை தன் பன்னிரென்டாம் வயதில் இருந்தே கேட்க ஆராம்பித்து விட்டது.
ஆனால் தன் சந்தேகத்தை கேட்க தான் அந்த வீட்டில் ஆள் இல்லை. ஒரு சில ஆண்கள் வெளியில் வீரமாய் நடந்துக் கொள்வார்கள். வீட்டில் அமைதியின் சொரூபமாய் காட்சி தருவார்கள்.
அது தான் வெளியில் புலி. வீட்டில் எலி என்பது. ஒரு சில ஆண்கள் வீட்டில் தான் தன் தைரியம் எல்லாம். வெளியில் சும்மா பம்மிக் கொண்டு இருப்பார்கள்.
அப்போ அந்த ஆண்களின் உண்மையான சுயரூபம் என்ன…? யாரும் இது தான் என்று சொல்ல முடியாது. அது போல் தான் நம் மணிமேகலையும்.
வீட்டில் எதுவும் வாய் திறக்க மாட்டாள். யார் என்ன சொன்னாலும் பேசாது போய் விடுவாள். இந்த குணம் சின்ன வயதில் தன் சித்தியின் மகன்கள் இவளிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை பறித்துக் கொள்ளும் போது…
இவள் அவர்களிடம்… “தா…” என்று அவர்கள் பின்னே ஓடும் போது தன் அன்னை தன்னை பிடித்துக் கொண்டு… “அவர்கள் எதை எடுத்தாலும் கேட்காதே…” என்று தன்னை அடக்கியதாலோ…
அல்லது சித்திமார்களும், சித்தப்பாமார்களும் ஒரு சின்ன விசயதுக்கு எல்லாம் தன்னை திட்டும் போது… “நான் ஒன்னும் செய்யல…” என்று கோபத்தோடு சொல்ல வாய் எடுக்கும் போது எல்லாம் தன் அன்னை… “மணி பெரியவர்கள் எது சொன்னாலும் பதில் பேச்சு பேசாதே…” என்று அடக்கியதோ…
அப்பாத்தா பேரன்களை ஒரு மாதிரியாகவும், தன்னை வேறு ஒரு மாதிரியாக நடத்தும் போது… “அந்த காலத்து ஆளுங்களுக்கு ஆம்பிளை பசங்க தான் உசத்தி.” பாட்டியை நான் ஏதாவது கேட்டு விடுவேனோ என்று பயந்து தன் வாயை அன்னை அடைத்ததோ …என்னவோ… மணிமேகலை வீட்டில் வெளிப்படையாக என்ன வாய் திறந்தே பேச மாட்டாள்.
அடக்கி அடக்கி தன் அன்னையிடம் கூட ஏதாவது கேட்பதற்க்கு மட்டுமே பேசுவாள். அதே போல் தன் அன்னை தன்னிடம் ஏதாவது கேட்டால் ஆம் இல்லை என்று ஒரிரு வார்த்தையில் முடித்துக் கொள்வாள்.
அப்படி பட்ட மணிமேகலை இது போல் பெரிய விசயமான சித்தப்பாக்கு பிள்ளைகள் என்னோடு ஏன் பெரியவங்கலா இருக்காங்க…? என்று யாரிடம் கேட்பாள்.
அவள் வாய் திறப்பதும் மனம் திறப்பதும் அவள் அவளாய் இருப்பதும் வசுந்தராவிடம் மட்டுமே...
மனஅழுத்ததிற்க்கு ஒரு சிலர் தம் அடிப்பாங்க. தண்ணி அடிப்பாங்க. நம்ம மணி சைட் அடிக்கிறா அவ்வளவு தான். ஆனாலும் நம்ம மணி நல்ல மணி தான்.