அத்தியாயம்….19
“இந்த புடவை எடுத்துக்க...இது நல்லா இருக்கும். இதை பார்.” என்று வகை வகையாக..எண்ணற்ற கலரில் குவிந்து கிடந்த புடவையில் இருந்து, தனக்கு பிடித்த புடவைகளை வசுவின் மீது போட்டு பார்த்த வாசுதேவன் அவன் கண்களுக்கு திருப்தியாய் பட…
விற்பனை பெண்ணிடம்… “ம் இதை எடுத்து வைங்க..ஆ அது வேண்டாம்.” என்று சொல்லிக் கொண்டு இருந்த வாசுதேவன் மருந்துக்கும் வசுவிடம்..
“இது உனக்கு பிடித்து இருக்கா…?வரவேற்ப்புக்கு எந்த கலரில் எடுக்கலாம் என்று நினச்சி இருந்த…? இந்த டிசைன் வேண்டுமா…?” என்று எதையும் கேளாது, தனக்கு பிடித்தது மட்டுமே வாங்கி வசுந்தராவின் கையில் திணிதிருந்தான்.
வசுந்தராவுக்கு ஏனோ இன்று காலையில் வாசுவுடனான இந்த ஷாப்பிங்குக்காக ஆவளோடு எதிர் பார்த்ததிற்க்கு, நேர் மாறாய்...மாலையில் வாசுதேவன் வந்து…
“மணியும் ,வீராவும் போகலாம் என்றாங்க..நீ என்ன பண்ற மணி கிட்ட தனியா பேச சான்ஸ் கிடச்சா...பேசிடு. அவ வீட்டில் நம்ம பத்தி உலறி வெச்சிட போறா...அப்புறம் என் நிலமை என் வீட்டில் அவ்வளவு தான். அதுவும் நீ இப்போ இருக்கும் நிலை மட்டும் என் வீட்டுக்கு தெரிஞ்சது ரொம்ப அசிங்கமாயிடும்.”
வசுந்தராவை இந்த வார்த்தைகள் எவ்வளவு பாதிக்கும் என்று நினைத்து கூட பாராது, தன் வீடு. தன் நிலை என்று மட்டும் பேசியதோடு அல்லாது.
இப்போது நான் இருக்கும் நிலை தெரிந்தால், அவமானம் என்று வாசு சொன்னதை கேட்டு, மனதளவில் வசுந்தரா மரித்து தான் போனாள்.
இதை பற்றி ஏதாவது கேட்டால்...மதியம் சொன்னது தான் சொல்வான். நான் என்ன உன்னை கட்டாய படுத்தினேனா…?என்று. வாய் கொடுத்து ஏன் நம் மனதை புண்ணாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்து, வசுந்தரா அமைதியாக கிளம்பி விட்டாள்.
ஆனால் என்ன தான் தன் மனதை தேற்றிக் கொண்டு இங்கு வந்து இருந்தாலும், வாசுதேவன் தன் விருப்பம் கேளாது, தன் பாட்டுக்கு புடவை எடுத்ததை பார்த்து கோபத்தோடு ஆதாங்கம் தான் வந்தது.
அதுவும் மணிமேகலைக்கு வீரா புடவை எடுப்பதில் காட்டும் கவனம் அக்கறையை பார்த்து, வசுந்தராவுக்கு பெரியதாய் இழந்த ஒரு உணர்வு மனதில் எழுவதை அவளாள் தடுக்க முடியாது மணிமேகலை வீரேந்திரனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அதுவும் தங்கள் முன் பரப்பி இருந்த புடவையில், வீரேந்திரன் தனக்கு பிடித்த புடவையை மணிமேகலையின் மீது போட்டு பார்க்காது.
மணி எந்த புடவையின் மீது ஆர்வமாக பார்வை செலுத்துகிறாளோ அதை கையில் எடுத்து ,அவளிடம் ….
“பிடித்து இருக்கா…?” என்று கேட்டு விட்டு, அவள் மீது போட்டு பார்த்து விட்டு...தன் கண்ணுக்கு அழகாக இருப்பதை அவளும் பார்க்க வேண்டும் என்று நினைத்து அங்கு இருக்கும் கண்ணாடி முன் நிற்க வைத்து…
“உனக்கு பொருத்தமா தெரியுதா சிட்டு …?” என்று வீரேந்திரன் கேட்க…
“உங்களுக்கு பிடிச்சி இருக்குங்களா…?” என்று வீரேந்திரன் கண்ணுக்கு அழகாய் தெரிவது தான் முக்கியம் என்பது போல் மணிமேகலை கேட்க…
“உனக்கு என்ன சிட்டு எந்த கலரிலும் நீ அட்டகாசமாய் இருப்ப...எந்த கலரில் நீ ரொம்ப ரொம்ப அழகா இருப்ப...இப்போ அதுக்கு தான் பார்த்து எடுப்பது.” என்ற வீரேந்திரனின் வார்த்தையில், மாநிறம் கன்னமான மணிமேகலையின் கன்னமே, சிவந்து போகும் அளவுக்கு வீரேந்திரனின் பார்வை இருந்தது.
இது போல் நான்கு புடவைகளையும் மணியின் விருப்பம் கேட்டு எடுத்தவன்.. ஒரு புடவையை மட்டும் கையில் எடுத்து…
“மூன்று வருடம் முன் தீபாவளிக்கு உனக்கு எடுத்த பட்டு புடவை கூட இதே கலர் தான். டிசைனும் ஏறத்தாழ இது போல் தான் ஒத்து இருக்கும்.” என்று மணிமேகலைக்கு பிடித்த புடவையை வேண்டாம் என்று நேரிடையாக கூறாமல் வீரேந்திரன் சொன்ன விதம்.
அதுவும் மூன்று வருடம் முன் அவள் கட்டிய புடவையை இன்றும் வீரேந்திரன் நியாபக அடுக்கில் இருக்கிறது என்றால்...எந்த அளவுக்கு வீரேந்திரன் மணிமேகலையை கவனித்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் வசுந்தரா…
மணிமேகலையும் அப்போது தான் வீரேந்திரன் கையில் இருந்த புடவையை வாங்கி பார்த்தவளுக்கு, சரியாக நியாபகம் இல்லாது…
“அப்படியா…?” என்பது போல் கேட்டு வைத்தாள்.
தன் கையில் உள்ள பேசியின் மூலம் மூன்று வருடம் முன் தீபாவளி அன்று எடுத்த புகைப்படத்தை மணிகேகலையிடம் காட்டிய வீரா…
“நீயே பார்.” என்று காட்டினான்.
மணிமேகலை அவன் நீட்டிய பேசியை வாங்காது… “நீங்க தீபாவளி அன்னைக்கி அப்பத்தா வீட்டுக்கு வரலையே…?” என்ற கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்த வீரேந்திரன் பின்…
“அம்மா வந்தாங்கலே...அவங்க தான் எடுத்தாங்க. அம்மா பேசியை மாத்தும் போது, அவங்க பேசியில் உள்ள போட்டோவை எல்லாம் என் போனுக்கு ஏத்திக்கிட்டேன். அது தான் இது.” என்று தன் நீண்ட விளக்கத்தை கொடுத்த வீரேந்திரன்…
‘யப்பா…’என்பது போல் ஒரு பெரும் மூச்சி விட்டு தன் பேசியை மணிமேகலையிடம் கொடுத்தான்.
அந்த புகை படத்தில் தான் அணிந்திருந்த புடவையும், தன் கையில் உள்ள புடவையும் வீரேந்திரன் சொன்னது போல் ஒரே மாதிரியாக இருக்க… அதை எடுக்காது வேறு புடவையை மணிமேகலை எடுத்துக் கொண்டாள்.
இதை எல்லாம் பார்த்திருந்த வசுந்தரா தன்னால் திரும்பி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த வாசுதேவனின் பக்கம் பார்வையை செலுத்தினாள்.
இவனுக்கு நான் நேற்று என்ன உடுத்தி இருந்தேன் என்றாவது நினைவு இருக்குமா…?என்று யோசிக்கும் போதே...தன்னால் நேற்று இரவின் நினைவு அவள் நினைவடுக்கில் வந்தது.
அதில் உணர்ந்த...அவன் தன் உடையை பார்க்கவில்லை. உடயை தான்டிய உடலை நேற்று இரவு தழுவியதை மனதில் உணர்ந்த தருணம்..வசுந்தராவுக்கு தானும் அப்போது அந்த தழுவலின் கூடலை ஏற்றுக் கொண்டதும் வசுந்தரா உணர்ந்த சமயம், நேரம் அனைத்தும் காலம் கடந்து விட்டதை வசுந்தரா நன்கு உணர்ந்தாள்.
தன்னையே வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்த வசுந்தராவை பார்த்த வாசுதேவன்.. “ஏய் வசு இது கடைடீ இங்கு ஒன்னும் பண்ண முடியாது. என்ன மாமாவை பார்த்தாலே மூடு ஏறுதா…?” என்ற வாசுதேவனின் பேச்சில் வசுந்தரா மரித்தே விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்து அடுத்து வாசுதேவன் இது போல் பொருள்படும் வார்த்தைகளை தான் கோர்த்து தன் வாய் மூலம் விட..எப்போதும் இது போல் வாசுதேவன் பேசினால், இவனுக்கு என் மீது எவ்வளவு ஆசை என்று அவன் கோர்க்கும் வார்த்தைகளை மூத்துக்கள் போல் கோர்த்து தான் தலையில் கிரிடம் போல் அலங்கரித்துக் கொள்பவள்...இன்று அவன் பேசும் பேச்சில் வாடை அதுவும் கூவம் வாடை வீசுவது போல் உணர்ந்தாள். இத்தனை நாள் அந்த கூவத்தில் தான் புரண்டோம் என்பதையும் வசுந்தரா மறக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.
கடைசியாக வாசுதேவன் பேசிய.. “இன்று அவங்க மட்டும் ஊருக்கும் போகட்டும். நாம இரண்டு நாள் இங்கு இருந்துட்டு போகலாம். என்ன…?” என்று அவன் கேட்ட விதத்திலேயே அவன் எதற்க்காக இங்கு இருக்க நினைக்கிறான் என்று அரிந்தவளாய்…
“இல்ல. இன்னைக்கே ஊருக்கு போயிடலாம். அம்மா போகும் போதே சீக்கிரம் வான்னு சொல்லி தான் அனுப்பினாங்க.” என்று வசுந்தரா சொன்னாள்.
“இது எப்போத்திலிருந்து…?” என்று வாசுதேவன் கேட்ட வார்த்தையின் அர்த்தம் புரியாது… “எது…?” என்று வசுந்தரா திரும்பவும் கேட்கவும்…
“அதான் பொண்ணை அக்கறையா சீக்கிரம் வான்னு சொல்றதை தான். பெண் ஆறுமாசம் ஊரு பக்கம் வரலேன்னாலும் என்ன என்று கேட்டுக்க மாட்டாங்க...இப்போ என்ன புது அக்கறை…?” என்ற வாசுதேவனின் வார்த்தைகள் ஒவ்வொன்னும் ஈட்டியாய் குத்தி வசுந்தராவை பதம் பார்த்தது.
வசுந்தரா தான் பேசிய வார்த்தைகளால் எவ்வளவு காயப்படுகிறாள் என்று கூட உணராது வாசுதேவன் தொடர்ந்து…
“நீ என்னை பாத்த பார்வையில் தான் சரி பொண்ணு ஆசை படுதேன்னு இரண்டு நாள் தங்கலாமுன்னு இருந்தேன். உனக்கு வேண்டாமுன்னா எனக்கு ஒன்னும் இல்லை.” என்று சொன்னவன்…
“ஆ மறக்காம மணி கிட்ட பேசிடு. அப்புறம் அவ வீட்டில் ஏதாவது ஏடா கூடமாய் பேசிட்டா அவ்வளவு தான்.”என்று தன் காரியம் மட்டுமே கண்ணாய் பேசியவனுக்கு பதிலாய் …
“பேசிடறேன்.” என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்து முடித்தாள்.
அடுத்து அவர்கள் போன நகை கடையிலும் இதே தான் தொடர்ந்தது. இங்கு வீரேந்திரனோடு அவன் அம்மாவும் சேர்ந்து தான் மணிமேகலைக்கு நகைகளை தேர்ந்தெடுத்து கொடுத்தார்கள்.
அதை பார்த்த வசுந்தரா சும்மா இல்லாது… “உங்க அம்மாவும் வந்து இருக்கலாம் வாசு.” என்று கேட்டு வைத்ததில்…
“அவங்க நம்ம கல்யாணத்தை ஏத்துக்கினதே பெரிய விசயம்.” என்று வாசுதேவன் சொன்னதில்...வசுந்தாவுக்கு தான், ஏன் கேட்டோம் என்று ஆகி விட்டது.
இப்படியாய் இரு ஜோடிகளும் திருமணத்திற்க்கு தேவையானதை வாங்கிக் கொண்டு அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தனர்.
மணிமேகலைக்கு அமமெரிக்காவில் இருந்து கிளம்பும் போது இருந்த மனநிலை இப்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் தன்னை பார்த்ததும் தன் அம்மா… அப்பா… முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில், மற்றதை எல்லாம் மறந்தவளாய் அவர்களை அணைத்துக் கொண்டாள்.
அதுவும் அப்பத்தா சொன்ன… “படிச்சாலே முகத்தில் ஒரு பொலிவு தானா வந்துடும் போல…” என்று சொன்னதோடு வரலட்சுமியியிடம்…
“என்ன மச மசன்னு நின்னுட்டு இருக்க…பொண்ணுக்கு ஆராத்தி எடுக்க ரெடி பண்ண சொன்னேன். பண்ணியா…? போய் எடுத்துட்டு வா…” என்று எப்போதும் போல் தான் தெய்வநாயகி வரலட்சுமியை வேலை செய்ய ஏவினார்.
ஆனால் எப்போதும் மற்றவர்களுக்காக அதாவது… இரு சித்தப்பா… இரு சித்திமார்களுக்கும். தனக்கும் தன் கணவருக்கு ஏதாவது வேண்டும் என்றால், வேலைக்காக ஏவும் அப்பத்தா...இன்று தனக்காக ஏவுவது அவளுக்கு புதியதாக இருந்தது.
“அப்போவே எல்லாம் எடுத்து வெச்சிட்டேன் அத்தை. இதோ எடுத்துட்டு வர்றேன்.” என்று சொல்லிக் கொண்டு போகும் அம்மாவின் பேச்சும் இன்று மணிமேகலைக்கு புதியதாக தான் தெரிந்தது.
அப்பத்தா வேலை ஏவும் போது எல்லாம் ஒன்றும் பேசாது, அமைதியாக சொன்னதை செய்யும் அம்மாவை தான் இது வரை மணிமேகலை பார்த்து இருக்கிறாள்.
இன்று “அத்தை…” என்று அழைத்துக் கொண்டு சென்ற அன்னையின் முதுகையே பார்த்திருந்தவளின் பக்கத்தில் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பி பார்த்தாள்.
வீரேந்திரன் சிரித்த முகத்துடன்… “நமக்கு திருமணம் என்று முடிவான பிறகு வீட்டுக்கு போறோம் ஒன்னா போகலாமே…” என்று சொல்லிக் கொண்டு தனக்கு மட்டுமே சுற்ற வேண்டிய ஆராத்தியை அவனுக்கும் சேர்த்து சுற்ற வைத்து, இருவரும் ஒன்றாய் தான் அந்த வீட்டில் அடி எடுத்து வைத்தனர்.
அதுவும் இருவரும் ஒரு சேர வாசல் படியில் வலது காலை எடுத்து வைக்கும் போது, மணிமேகலையின் பக்கம் தன் கையை நீட்டினான்.
மணிமேகலையும் அவனின் மனது உணர்ந்து தன்னால் அவன் கைய்யோடு தன் கையை பிணைத்துக் கொண்டு அந்த வீட்டில் உள் நுழையும் போது… மணிமேகலையின் உடல் தன்னால் சிலிர்த்துக் கொண்டது.
தெய்வநாயகி கூட வீரேந்திரனிடம்… “ஏற்கனவே மணிய பார்த்துட்டு ஊரே கண்ணு பட்டு இருக்கு. இதில் ரெண்டு பேரும் சோடியா வேற வீட்டில் நுழையுறிங்க...ஊரு மொத்தமும் இங்கு தான் கூடி இருக்கு. ஒருத்தர் கண்ணு போல ஒருத்தர் கண்ணு இருக்காது. அதனால இனி ரெண்டு பேரும் சோடி போட்டு நிக்காதிங்க..நான் அம்புட்டு தான் சொல்வேன்.” என்று சொன்ன அப்பத்தா தாங்கள் வெளியில் நின்றுக் கொண்டு இருந்த இடத்தில் இருந்து, குனிய முடியாது குனிந்து மண்ணை எடுத்து வந்தவர்…
“இதில் துப்புங்க.” இவ்வீட்டில் பெண்ணாய் பிறந்து, அப்பத்தாவின் கைய்யால் திருஷ்ட்டி சுத்தப்படுவது மணிமேகலைக்கு இது தான் முதல் முறை.
அனைத்து பேரன்களையும் உட்கார வைத்து திருஷ்ட்டி சுத்தும் போது, ஏதோ ஒரு ஆசையில் தானே போய் அமர்ந்தாலும், தனக்கு சுத்தாது எழுந்துடு...என்று சொன்ன அப்பத்தாவின் அன்றைய செயலும் பேச்சும் நியாபகத்தில் வர…
இது வரை இருந்த இதமான சூழ்நிலை மறைவது போல் ஆனாது. மூன்று முறை… “மணி துப்பு.” என்ற அப்பத்தாவின் பேச்சு காதில் விழுந்தாலும், அதை உடனே செயல் படுத்த அவளாள் முடியவில்லை.
வீரேந்திரன் தான்,அவன் பிடித்து இருந்த கையில் அழுத்ததை கொடுத்து… “சிட்டு துப்பு.” என்று சொன்ன வீரேந்திரனின் குரலில், இது வரை இருந்த இலகு தன்மை மறைந்து, அங்கு கடுமை குடியேற சொன்னவனின் பேச்சில் அவனை திரும்பி பார்த்தாள்.
“ஊரே நம்மை தான் பார்த்துட்டு இருக்கு. அம்மத்தா எவ்வளவு நேரம், நம் முன் கை நீட்டி நின்னுட்டு இருப்பாங்க. துப்பு.” என்று வீரேந்திரன் அதட்டி சொல்லவும்…
அந்த மண்ணில் மேல் துப்பி விட்டு...தன் அன்னையிடம்… “ரொம்ப டையாட இருக்கும்மா. நான் போய் ரெஸ்ட் எடுக்கட்டுமா…” என்று கேட்டவள் மறந்தும் மற்றவர்கள் பக்கம் தன் பார்வையை திருப்பவில்லை. மற்றவர்கள் என்பதில் நம் வீரேந்திரனும் அடக்கம்.
எப்போதும் இது போல் அனைவரும் கூடி இருக்கும் போது மணி இது போல் நான் போகிறேன் என்று எல்லாம் சொல்ல மாட்டாள். அம்மா அனைத்தும் தனியாக செய்கிறார்களே என்று வரலட்சுமிக்கு உதவிகள் செய்துக் கொண்டு இருப்பாள்.
இப்போது மணிமேகலையின் இந்த பேச்சில் தெய்வநயகி… “நம்ம உறவு இங்கு தான் சனமே கூடி இருக்கு.இப்போ போய்…” அடுத்து அவர் என்ன பேசி இருப்பாரோ…
இடையில் வீரேந்திரன்… “டையாட இருக்குன்னு தானே சொல்றா அம்மத்தா. விடுங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தான் அவ கொஞ்சம் சரியா ஆவா…” என்று தெய்வநாயகியிடம் பேசிய வீரேந்திரன்..
மணிமேகலையை பார்தது… “சரி ஆயிடுவே தானே...” என்ற அவன் கேள்வியே சொன்னது நீ சரியாகி விட வேண்டும் என்று.
“ம்...சரி ஆயிடும்.” என்று மணிமேகலை சொல்லும் போது வீரேந்திரனின் முகத்தை பார்த்து தான் சொல்லும் படி ஆனது.
“ம்.. உன் ரூமுக்கு போ…நான் இதை எல்லாம் பிறகு வேலையாள் மூலம் உன் ரூமுக்கு கொண்டு வந்து வெச்சிடுறேன்.” என்று சொல்லி மணிமேகலையை அனுப்பி வைத்தான்.
அந்த வீட்டில் ஊரே கூடி இருக்க...அனைவரையும் பொதுவாக பார்த்த தெய்வநாயகி… “எல்லோருக்கு சாப்பாடு இங்கன தான். எல்லோரும் சாப்பிட்டு தான் போகனும்.” என்று சொல்லி விட்டு தன் மகளை தனியாக அழைத்து சென்றவர்…
தன் மகளிடம்… “தோ பார் சங்கரி. மணிய இப்பவே இழுத்து பிடிச்சா தான் உண்டு.இப்போ விட்டா பொரவு நீ தான் அவளுக்கு ஆக்கி கொட்ட வேண்டி இருக்கும். பாத்து சூதனமா நடந்துக்க..
என்னால அம்புட்டு தான் சொல்ல முடியும்.” என்று தன் மகளிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த இடத்திற்க்கு வந்த வீரேந்திரன்…
தெய்வநாயகியிடம்… “எந்த அளவுக்கு இழுத்து பிடிச்சிக்கனும் அம்மத்தா…?” என்று கேட்டவன்...பின் அவனே…
“எதுக்கு இழுத்து கிழுத்து பிடிச்சி நாம கஷ்ட்ட படுவானே...பேசாம நம்ம மாட்டு கொட்டாயில் கட்டி வெச்சிடலாம…” என்று தன் பேச்சில் நக்கல் கூட்டி கேட்க…
“புது ஜோரு. இப்படி தான் பேச வைக்கும் அப்பூ...அனுபவஸ்த்தி சொல்றேன் கேட்டுக்கோ… எனக்கு என்னவோ மணி போனப்பலே திரும்பி வரலேன்னு தான் எனக்கு படுது.
இப்படியே விட்டா… பொரவு அவ படிச்ச திமிரை உனக்கே காமிப்பா… அம்புட்டு தான் என்னால சொல்ல முடியும்.” என்று முதலில் படித்த பல்லவியையே தெய்வநாயகி திரும்ப படித்தார்.
“இப்போ கொஞ்ச நேரம் முன்ன தான் ...சிட்டுவ படிச்சாலே தேஜஸ் வந்துடுமுன்னு சொன்னிங்க...இப்போ அதை திமிருன்னு மாத்தி சொல்றிங்க…” என்று வீரேந்திரன் எடக்காக கேட்டான்.
“என்ன இருந்தாலும், ஊரு சனம். உறவு சனத்துக்கு முன்னாடி அவள நானே தப்பா பேசிட கூடாதுல்ல...அதுவும் இல்லாம முதல்ல அவ என் பேத்தி மட்டும் தான். இப்போ என் பேரனின் பெண்சாதியாவும் ஆக போறவ...அவளுக்கு கொடுக்கும் மருவாதை கொடுத்து தானே ஆகனும்.”
இந்த வரவேற்ப்பு...இந்த மரியாதை எல்லாம் அவளுக்கு உண்டானது கிடையாது. உனக்கு அவள் மனைவியாய் ஆக போவதால் தான் கொடுக்கிறேன் என்று தெய்வநாயகி சொல்லாமல் சொன்னார்.
வீரேந்திரனோ… “உங்க பேத்தி ஆன பின் தான் அவ எனக்கு பொஞ்சாதியா ஆக போறா...இங்கு நீங்க கொடுக்கும் மரியாதை தான் காலம் முழுசுக்கும் அவளுக்கு தொடரும்.
என்ன தான் புகுந்த வீடு ஒரு பெண்ணுக்கு நல்ல படியாக அமஞ்சாலும், பிறந்த வீடு சரியில்லேன்னா...அதாவது அவளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடிக்கலேன்னா…
ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் புகுந்த வீட்டு சனம்… உன் போஷி தான் தெரியுமே…பொறந்த வீட்டில் நாதி இல்லாத போதே உனக்கு இவ்வளவு திமிரா…? என்று கேட்பாங்கன்னு சொல்லலே கேட்க கூடுமுன்னு தான் சொல்றேன்.” என்று இருக்கும் நிதர்சனத்தை தெய்வநாயகியிடம் பேசினான்.
அதற்க்கும் தெய்வநாயகி என்னவோ சொல்ல வந்தார்கள் தான். ஆனால் அதற்க்குள் சங்கரி… “ஏன்டா என்னை பாத்தா உனக்கு வில்லி போல தெரியுதா...நான் ஏன்டா என் மருமகள அப்படி பேச போறேன்.
நம்ம வீடே...அவளுக்கு அம்மா வீடாகவும், புகுந்த வீடாகவும் ஆக்கிடுவேன்டா…” தன்னை பார்த்து வில்லி தனம் செய்வது போல் தன் மகனே பேசி விட்டானே என்ற ஆதாங்கத்தில் சங்கரி இப்படி சொன்னார்.
“அம்மா வில்லிக்கு எல்லாம் தனி திறமை வேண்டும். கூடவே மூளையும். அதனால நீங்க வில்லின்னு நினச்சி எல்லாம் நான் பேசல. பொதுவா அப்படி நடக்குமுன்னு தான் சொன்னேன்.
ஆ அப்புறம் என்ன சொன்னிங்க. நம்ம வீட்டையே சிட்டுக்கு பிறந்த வீடாகவும், புகுந்த வீடாகவும் மாத்திடுவேனா…
எதுக்கு…?அது எதுக்குன்னு கேட்கிறேன்…? என் சிட்டுக்கு என்ன அப்பா இல்லையா…?அம்மா இல்லையா…? அப்பத்தா...தாத்தா...சித்தப்பா...சித்தின்னு இவ்வளவு பெரிய சொந்தங்கள் இருக்கும் வீட்டில் பிறந்துட்டு...புகுந்த வீடே பிறந்த வீடா சீராடனும் என்று அவளுக்கு என்ன தலை எழுத்து...?
என் சிட்டுக்கு, பிறந்த வீட்டில் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும் கிடைத்தே ஆகவேண்டும்.” என்று பேசினான்.
அதே சமயம் தன் அறையில் படுத்திருந்த மணிமேகலைக்கும் இதே எண்ணம் தான். என்ன கொஞ்சம் மாறி யோசித்திக் கொண்டு இருந்தாள்.
குழந்தை பருவத்தில் சுற்றி போடும் போது என்னை விரட்டியவர்கள்...இன்று ஏழு கழுதை வயதான பிறகு சுற்றுகிறார்கள்.இது யாருக்காக…?எல்லாம் தன் பேரனுக்காக...அதாவது நான் அவர் பேரனின் மனைவியாக போகிறேன். அதான் எனக்கு இந்த மரியாதை எல்லாம்.
தன் மகனோட மகளாய்...தன் பேத்தியாய் இந்த வீட்டில் எனக்கு கிடைக்காத மரியாதை...அவரோட பேரனின் மனைவியாய் எனக்கு கிடைக்கிறது. அப்படி பட்ட மரியாதையே எனக்கு வேண்டாம்...என்ற எண்ணம் மணிமேகலையின் மனதில் எழுந்தது.
இதோ அதோ என்று காத்துக் கொண்டு இருந்த பெரிய வீட்டில் திருமணம் ஊரே வளைத்து போட்டு பந்தல் கட்டி விழா கோலம் பூண்டது போல இருந்தது.அந்த ஊரில் இருக்கும் பெரிசுகளில் ஒருவர்…
“அவுகளுக்கே சொந்தமா கல்யாணம் சத்திரம் இருக்கும் போது...எதுக்கு ஊரையே வலச்சி போட்டு பந்தல் போட்டு கல்யாணம் செய்யிறாங்க…?” என்று கேட்க…
அதற்க்கு மற்றொருவரோ… “ஏன்டாப்பா அது நம்மை போல சாமனியங்களுக்கு, அந்த கல்யாணம் மண்டபம் பத்தும். இது பெரிய வூட்டு கல்யாணம். அதுலேயும் ஒன்னுக்கு இரண்டா பண்றாங்க…
பெரிய வூட்டு மனுஷாளோட அந்த வீரா தம்பி தான் பார்த்த இடத்தில் எல்லாம் பணம் கொடுத்து வெச்சி இருக்காரே…அவருக்கு நம்ம ஊரில் இருந்தும், அடுத்த ஊரில் இருக்கும் சனமும் வந்து நேத்தே வந்துடுச்சே…” என்று வியாக்கணம் பேசினார் என்றால்..
அதை கேட்ட மற்றொருவரோ… “நீ வேறு அப்பூ...நீ என்னவோ பக்கத்து ஊரை பேசுறே...நேத்து வெளிநாட்டுக்காரி ஒருத்தி வந்து இருக்கா...என்னம்மா இருக்கா தெரியுமா…? ஏதோ பாட்டுல வருமே, உன்னை வெள்ளாமை வெச்சி தான் வெளுத்தாங்கலா…?வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களான்னு...அது கணக்கா இருக்குப்பூ அந்த புள்ள…” என்று நாப்பதின் தொடக்கத்தில் இருக்கும் ஒருவன் பேசினான்.
அதற்க்கு பதில்… “அந்த புள்ள எப்படி இருக்குமுன்னு நான் பாக்கலே பங்காளி... ஒரு சமயம் அதோ உன் பக்கத்தில் இருக்குறவங்க பார்த்து இருந்தாலும் பார்த்து இருக்கலாம்.” என்று சொன்னதும்…
அந்த அழகியைய் பற்றி பேச ஆள் கிடைத்த சந்தோஷத்தில் யாரு அது என்பது போல் திரும்பி பார்த்தவனின் கண்ணில் அகப்பட்டது என்னவோ அவனுடைய மனையாள்…
“அட பங்காளி உன் புத்திய காட்டிட்டியே…” என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டே ஓடி விட்டார். வாங்கும் அடியை யாரும் பார்க்காது வாங்க வேண்டும் அல்லவா…
இப்படி கிண்டலும் கேலியுமாய் அந்த கல்யாணத்தின் இனிதே தொடங்கிய தொடக்கம்...முடியும் போதும் இருக்குமா….?