Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் நினைவுகளில் நானிருக்க....2

  • Thread Author
அத்தியாயம்….2

மணிமேகலையும், வசுந்தராவும் பழைய நினைவுகளில் பாதியும், நிகழ்வில் மீதியுமாய் நேரம் கடத்திக் கொண்டு இருந்தனர். விட்டால் இன்று முழுவதுமே கதை அளந்துக் கொண்டு தான் இருப்பர்.

ஆனால் கீழ் கட்டில் இருந்து கேட்ட, “ஏன்டி வெள்ளன வந்து உன் ஆத்தாவுளுக்கு ஒத்தாசை செய்யலாம்லே... நல்லா வாச்சீங்க ஆத்தாலும், மவளும்.” என்று கத்திய அப்பத்தாவின் கத்தலில்…

“இனி நான் இங்கு இருந்தா, அவங்க வால்யூம் இன்னும் தான் ஏறும். நீ வந்த வேலைய கவனி.” என்று சொல்லி விட்டு செல்ல பார்த்தவளின் கை பிடித்து தடுத்து நிறுத்திய வசுந்தரா…

“நான் மட்டும் இங்கு இருந்தா சந்தேகம் வரும்டி.” வசுந்தரா தயங்கித் தயங்கி அவர்கள் வீட்டின் முன் பகுதியில் அமைந்திருந்த தோட்டத்தில், ராஜபாளைய நாயின் கழுத்துப் பகுதியை தடவிய வாறே, மேல் நோக்கியே பார்வை இட்டுக் கொண்டு இருந்த மணிமேகலையின் பெரிய சித்தப்பா மகன் வாசுதேவனை, இவளும் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டு இவளிடம் சொன்னாள்.

“அதுக்கு…” என்று கேட்டுக் கொண்டே மணிமேகலை வாசுவை பார்க்கும் வேளை, சட்டென்று தன் பார்வையை மாற்றிக் கொண்ட வாசுவை கிண்டலாக பார்த்துக் கொண்டே,

“என்னை கூட நம்பலாம்டி. ஆனா உங்க மாதிரி ஆளுங்கல தான் நம்பவே கூடாது. உன் அம்மா உன்னை ஏன் திட்டம் பண்ணாங்கன்னு இப்போ தான் தெரியுதுடி.” என்று சொன்னவள்.

“ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம். அவன் வருவதை தெரிஞ்சி நீ இங்கு வர்றியா? இல்ல நீ வருவேன்னு அவன் வர்றானா?” என்று மணிமேகலை தன் நீண்ட நாள் சந்தேகத்தை கேட்டாள்.

“ஏய் உனக்கு தெரியாம நான் என்னடி செஞ்சி இருக்கேன். நான் அவங்க கிட்ட பேசுனதே இல்லேன்னு உனக்கு தெரியாதா?” என்று வசுந்தரா பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அது தான்டி எனக்கு சந்தேகமே. நான் சும்மா பாக்குறதை கூட உன் கிட்ட சொல்லிடுவேன். நீ சீரியசா வாசுவை பார்த்துட்டு இருந்து இருக்க. அதுவும் எனக்கு தெரியாம. அன்னிக்கு மட்டும் நான் உன்னை கவனிக்கலேன்னா நீ இன்ன வரைக்கும் என் கிட்ட சொல்லி இருப்பியா இல்லையான்னே எனக்கு தெரியல.” இதை மணிமேகலை கொஞ்சம் ஆதங்கமாய் தான் சொன்னாள்.

ஒரு வருடம் முன் இதே போல் மாடியில் தான், வசுந்தரா மணியை பார்க்க வந்த போது, எப்போதும் போல் பைனாகுலர் வழியாக இயற்கை கொடுத்த பேரழகை மணிமேகலை ரசித்துக் கொண்டு இருந்தாள்.

வசுந்தராவின் வருகை அறிந்துக் கொண்ட மணிமேகலை… “என்னடி விஷயம்?” என்று கேட்டாள்.

வசுந்தரா எப்போதும் காரணம் இல்லாமல் வரமாட்டாள். அதனால் என்ன விசயம்…? என்று கேட்டதற்க்கு,

“நேத்து கம்பியூட்டர் சையின்ஸ் நடத்துனது எனக்கு சுத்தமா புரியலடி.” என்று வசுந்தரா சொன்னதும், மணிமேகலை தன் பார்வையை அவள் பக்கம் திருப்பியவள்.... “கம்பியூட்டர் சையின்ஸா…?” என்று சந்தேகத்துடன் கேட்டாள். மணிமேகலை இப்படி சந்தேகத்துடன் கேட்பதற்க்கும் காரணம் இருக்கிறது.

மணிமேகலை அனைத்து பாடத்திலும் முன்நிலையில் தான் இருப்பாள். இது வரும் இது வராது என்று எல்லாம் இல்லை. ஆனால் வசுந்தரா அப்படி இல்லை.

ஒரு சில பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பாள். ஒரு சில பாடத்தில் கொஞ்சம் என்ன ரொம்பவே மணிமேகலை அவளை தேத்த கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

வசுந்தராவுக்கு வரும் பாடத்தில் சேர்த்தி தான் இந்த கம்பியூட்டர் சையின்ஸ். அந்த சப்ஜெக்ட்டில் மட்டும் வகுப்பில் இவளுக்கு அடுத்து வசுந்தரா தான் நல்ல மதிப்பெண் எடுப்பாள்.

அதுவும் அவர்கள் பயிலும் கல்லூரியில், கம்பியூட்டர் சார் புரியாதவற்க்கும் புரியும் படி எடுக்கக் கூடியவர். அதனால் தான் அந்த சப்ஜெக்டா, என்று கேட்டாள். சப்ஜெக்டை மாத்தி சொல்கிறாளோ என்ற சந்தேகத்துடன் கேட்டாள்.

“அதே சப்ஜெக்ட் தான்டி.” என்று எப்போது இல்லாது வசுந்தரா எரிந்து விழுந்தாள்.

சரி அவள் அம்மா இங்கு போக திட்டி இருப்பாங்க போல. அது தான் அந்த கோபத்தை தன்னிடம் காண்பிக்கிறாள் என்று நினைத்து, எதுவும் சொல்லாது அவள் முன் தன் கையை நீட்டினாள்.

“என்னடி என்ன வேணும்…?” என்று வசுந்தரா கேட்டாள்.

அப்போது தான் மணிமேகலை, வசு கையில் எதுவும் எடுத்து வராததை பார்த்து, “இல்ல புக் வாங்க தான் கை நீட்டினேன்.” என்று மணிமேகலை சொன்னதும், வசுந்தரா தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

“அவசரத்துல எடுத்துட்டு வரலடி.” என்று ஏதோ பெரிய குற்றம் செய்தவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

“இது என்னடி பெரிய விசயமா...? நானும் நீயும் ஒரே க்ரூப் தானே... இரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்.”

சொன்னது போல் தன் அறையில் இருந்து அவள் சொன்ன பாடப்புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தவள்…

“என்னைக்கு நடத்துனது புரியலடி…?” என்ற மணியின் கேள்விக்கு,

“ஆ...ஆ.” என்று திணறிய பின், “நேத்து… நேத்து நடத்துனது தான் புரியல.” என்று சொன்னவளை, மணிமேகலை திரும்பவும் சந்தேகத்துடன் பார்த்தாள்.

“எனக்கு நீ நடந்துக்குறது தான்டி புரியல.” என்று சொன்னாலுமே... வசு சந்தேகம் என்று சொன்ன பகுதியை, மணிமேகலை நிறுத்தி நிதானமாக புத்தகத்தை பார்த்து சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

அதற்க்கு வசுவிடம் இருந்து… “ம்.” என்ற பதிலே தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. இவள் நாம் சொல்வதை கவனிக்கிறாளா…?இல்லையா…? என்ற சந்தேகத்தில் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

பார்த்தவள் கண்ணுக்கு தெரிந்தது தாங்கள் மொட்ட மாடியில் அமர்ந்து இருந்தாலும், தோட்டத்தை பார்க்க ஏதுவாய் மாடியில் கைப்பிடிக்கு பதிலாக, கம்பிவளையத்தை பொறுத்தி தன் தாத்தா கட்டியதற்க்கு, இன்று தான் அதன் உண்மையான பலன் இருப்பது போல், வசுந்தரா அமர்ந்த வாக்கிலே அந்த கம்பி வழியாக தன் சகோதரன் வாசுவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வாசுவும் இன்று போல் அன்றும் ராஜபாளையத்தின் கழுத்தை நீவி விட்ட வாறே வசுவை பார்த்துக் கொண்டு இருந்தான். இதனை பார்த்த மணி வசுவின் தலையை தட்டி… “உனக்கு கம்பியூட்டரில் சந்தேகம் இல்லடி. கெமிஸ்ட்ரியில் தான் சந்தேகம்.” என்று சொன்னவளிடம், மாட்டிக் கொண்டது போல் முழி முழித்த வசுந்தரா…

“அது..அது..அது தான்டி.” என்று திக்கி திணறிக் கொண்டு இருந்தவளிடம்… “என்னடி அது இதுன்னு. இது எத்தனை நாளா நடக்குது…? முதல்ல நீ ப்ரப்போஸ் செஞ்சியா இல்ல அவனா…?”என்று மணிமேகலை கேட்டாள்.

தன் சித்தப்பா மகன் வாசுதேவன் தன்னோடு எட்டு வயது பெரியவன் என்றாலும், அவள் மனதில் வாசுவை நினைக்கும் போது, ஒருமையில் தான் நினைத்துக் கொள்வாள்.

வசுவிடம் இது வரை தன் அண்ணன்களை பற்றிய பேச்சி எழுந்தது இல்லை. இப்போது வாசுவை பற்றி வசுவிடம் பேசும் சூழ்நிலையில் எப்போதும் மனதில் நினைப்பதையே கேட்டாள்.

“ஏய் என்னடி உன்னோட எட்டு வயசு பெரியவரை மரியாதை இல்லாம அவன்னு சொல்ற…?” தாலி கட்டிய மனைவி போல் வசு, வாசுவுக்கு பரிந்துக் கொண்டு பேசினாள்.

“ஏன்டி நான் என் அப்பத்தாவையே, சமயத்துக்கு கிழவின்னு உன் கிட்டயே சொல்லி இருக்கேன். அப்போ இந்த மரியாதை கிளாஸ் எடுக்காது இப்போ என்னடி புதுசா…” என்று கேட்டவள்..

“அத விடு. நான் கேட்டதுக்கு பதில் சொல். அவன் தன் விருப்பத்தை சொன்னானா...இல்ல நீயா…?” என்று கேட்டவளுக்கு, அதிர்ச்சி தகும் வகையாய், “நாங்க இது வரை பேசினதே கிடையாதுடி.” என்று வசு சொன்னதும்,

“ஓ அப்போ நீயும் சைட்டிங் தானா…? அப்போ சரி.” என்று மணிமேகலை மிகக் கூலாக சொன்னாள்.

“ஏய் நீ நினைப்பது போல இது சைட்டிங் இல்ல. அதுக்கும் மேல.” என்று வசு தன் பேச்சை இழுத்து நிறுத்துனாள்.

“அதுக்கும் மேலேன்னா. இது புனிதமான காதலுன்னு சொல்ல வர்றியா?” என்று மணிமேகலை நக்கலாக கேட்டாள்.

அதற்க்கு வசு… “ஆம்.” என்ற தலையாட்டலில், மணிமேகலையின் முகத்தில் சிந்தனையின் சாயல் தெரிந்தது.

“என்ன மணி உனக்கு பிடிக்கலையா…?” என்று சோகத்துடன் கேட்ட வசுவின் கன்னம் பற்றிய மணிமேகலை…

“எனக்கு பிடிக்கலேன்னு இல்லடி. அவனுக்கு உன்னை பிடிச்சி இருக்கனும்.” வாசுவை அவன் என்ற சொன்னதில் வசு முறைத்து பார்த்தாள்.

“நான் என்னை மாத்திக்க மாட்டேன். எப்போவும் நான் அவன் என்று தான் சொல்லுவேன்.” என்று திட்ட வட்டமாக சொன்னவள்…

பின் “அவனுக்கு உன்னை பிடிச்சி இருக்கான்னு தெளிவு படுத்திக்க வசு. ஏன்னா என் வீடு அது மாதிரி.”

மணிமேகலை அன்று சொன்ன அந்த தெளிவை, வசு இன்று வரை தெளியவைக்காது. இது போல் பார்த்துக் கொண்டு மட்டும் தான் இருக்கிறாள்.

ஏனோ மணிமேகலைக்கு இது நல்லவிதமாக தெரியவில்லை. மற்ற வீடு போல் ஒரே வீட்டில் வளந்த சித்தப்பா மகன்களை பற்றி அவளுக்கு அந்த அளவுக்கு தெரியாது.

பெரிய சித்தப்பா மகன் வாசுதேவன் ஆகட்டும். சின்ன சித்தப்பா மகன் வசீகரன் ஆகட்டும். இருவரை பற்றியும் ஒன்றும் தெரியாது. இன்னும் கேட்டால் அனைவரும் ஒற்றை வாரிசோடு தான் நிறுத்திக் கொண்டனர்.

ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் இது வரை சகஜமான பேச்சு என்பது அவ்வீட்டில் இருந்தது இல்லை. இவர்களையாவது மணிமேகலை தன் அன்னை கொடுத்து விட்ட காபி, பணியாரம் கொடுக்கும் போது அவர்கள் முகத்தை பார்த்து இருக்கிறாள்.

அவள் அத்தை சங்கரி பெற்ற ஒரே ரத்தினமான வீரேந்திரனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை. அனைவரையும் ஓர பார்வை பார்க்கும் மணிமேகலை, இவனை மட்டும் ஓர் பார்வை கூட பார்த்தது கிடையாது.

அதுவும் பார்ப்பதற்க்கு அவ்வளவு அழகாக தான் இருப்பானாம். இந்த ஊரிலே அவன் தான் ஆண் அழகனாம். மாநிறத்தில் ஆறடி உயரத்திலும், கிராமத்துக்கே உரிய உடல் உழைப்பில் முறுக்கேறிய புஜமாய் கலையாக இருப்பான் என்று வசுந்தரா சொல்வாள்.

அதுவும் “நீ பார்க்கும் அந்த செங்கோடையன், அப்புறம் அந்த டீ மாஸ்ட்டர் இவங்களோட உன் அத்தை மகன் நல்லா இருப்பான்டி. பக்கத்துலேயே உறவு முறையில் சூப்பரா முறை பையனை முறைக்காம, இப்படி வெளியில் வந்தது போனதை எல்லாம் பார்த்துட்டு இருக்கியேடி” என்று சொன்னவளுக்கு பதில் ஏதும் சொல்லது அமைதியாகி விடுவாள்.

அனைத்தும் தன் தோழியிடம் பகிர்ந்த மணிமேகலை. தன் பன்னிரெண்டாம் வயதில் பட்ட அந்த ரணத்தை தன் உற்ற தோழியான வசுவிடம் கூட இது வரை சொன்னது இல்லை. சொன்னால் அந்த ரணம் ஆறிவிடும். ஆறக்கூடாது… என் ரணம் ஆறக்கூடாது என்று தான், திரும்ப திரும்ப அந்த நாளை நினைவில் கொண்டு வந்து ரணத்தை கீறி இன்னும் ரணப்படுத்திக் கொண்டு இருப்பாள்.

அதனால் வீரேந்திரனை நிமிர்ந்து கூட பாராது கடந்து விடுவாள். அதாவது சொந்தம் என்று தான் பெயர். இவர்கள் இப்படி என்று அவளால் சொல்ல முடியாது. அதற்க்கு காரணம் அவர்களை பற்றி அவள் நினையாது இருப்பது கூட காரணமாய் இருக்கலாம்.

இதை வசுவிடம் சொன்னால்… “அவள் அது அப்படி இல்ல. உங்க அண்ணன்கள் படித்ததும் சென்னையில். இப்போ வேலையில் இருப்பதும் சென்னையில்லே… அது தான் அவங்கள பத்தி உனக்கு தெரியல.” என்று வசுந்தரா மணிமேகலையை சமாதானம் செய்வாள்.

“என்னை நீ சமாளிக்க வேண்டாம்டி... இந்த வீட்டில் இருக்குறவங்களை சமாளிக்கனும். அதுக்கு அவன் உன் மேல உண்மையான காதலில் தான் பார்க்கிறானா…? என்று பேசி தெளிவு படுத்திக்க. நான் அவ்வளவு தான் சொல்லுவேன்.”

அவள் வாசுவை பார்க்க இங்கு வரும் போது எல்லாம் மணிமேகலை இது தான் சொல்வாள். “பேசுறேன். பேசுறேன்.” என்று சொல்லும் வசுந்தரா இன்று வரை பேசியது கிடையாது.

இன்றும் அதே போல் அவர்கள் பார்வை பறிமாற்றத்தை பார்த்தவள்… “நீங்க எப்படியாவது ஒழிங்க. நான் கீழே போறேன்.” என்று சொல்லிக் கொண்டு கீழே இறங்கியவளின் பின் வசுவும் அவளுடன் இறங்கி வந்தவள்…

“நான் வர்றேன். நான் வர்றேன்.” என்று வசுந்தரா சத்தமாக சொன்னாள்.

மணிமேகலைக்கு இது யாருக்கானது என்று தெரிந்ததால், ஒன்றும் சொல்லாது ஒரு சிரிப்புடனே அங்கு சாப்பிடும் அறைக்கு சென்றாள். அங்கு எப்போதும் போல் சித்தப்பாக்கள், சித்திமார்கள், அப்பத்தா சாப்பிட ஏதுவாக அமர்ந்து இருந்தனர். இன்றைக்கு கூடுதலாய் அத்தை சங்கரியும், அவர் பக்கத்தில் அவர் மகன் வீரேந்திரனும் அமர்ந்து இருப்பதை பார்த்துக் கொண்டே சமையல்கட்டுக்குள் சென்றவளின் கையில், வரலட்சுமி ஒரு தட்டில் தான் ஊத்தின ஆப்பத்தையும், மறுகையில் தேங்காய் பாலும் கொடுத்த வாறே…

“கொஞ்சம் வெல்லனவே வந்து இருக்கலாம்.” என்று சொன்ன அன்னைக்கு எந்த பதிலும் சொல்லாது, தன் இரு கையிலும் இருக்கும் பொருளை கீழே விழாது ஜாக்கிரதையாக சாப்பிடும் டேபிளில் வைத்து விட்டு, திரும்பவும் அன்னை ஏதாவது கொடுப்பார்கள் என்று சமையல்கட்டை நோக்கி மணிமேகலை நகர பார்த்தாள்.

அப்போது அப்பத்தா மணிமேகலையிடம் “இதெல்லாம் உன் ஆத்தா பார்த்துப்பா… நீ முதல்ல உன் அப்பனை வரச்சொல்.” என்று சொன்னவரை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே தன் பெற்றோர் அறை நோக்கி சென்றாள்.

அவள் அவ்வாறு தயங்கித் தயங்கி செல்வதற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவோ தன் தந்தையை பார்த்து விட்டு போனால், அன்று ஏதாவது ஒரு தடை வருகிறது என்று அவள் நினைவு தெரிந்த நாள் தொட்டு தன் அப்பத்தா சொல்ல கேட்டு இருக்கிறாள்.

அதனால் தானோ என்னவோ, தன் தந்தையும் வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு தான் சாப்பிடும் அறைக்கே வருவார். அவர் இந்த நேரம் தான் சாப்பிடுவது என்பது எல்லாம் கிடையாது. அவரின் குறைத்தொட்டு சின்ன வயதில் இருந்தே படிக்க பள்ளிக்கு அனுப்பாது வீட்டிலே இருந்ததாளோ?

இல்லை அவருக்கு அடுத்து பிறந்த குழந்தைகளை முதலில் பள்ளிக்கு அனுப்பும் பொருட்டு அவர்களுக்கு முதலில் குளிப்பாட்டி சோறு ஊட்டி என்று அவர்களுக்கு நேரத்துக்கு பார்த்ததினாளோ…

கமலக்கண்ணன் அனைவரும் சென்ற பின் தான் பத்து மணிக்கு மேல் காலை உணவை உட்கொள்வார். இன்று ஏன் அப்பத்தா அப்பாவை அழைக்கிறார். அதுவும் அத்தையோடு அத்தை பையனும் வந்து இருக்காங்க. ஏதாவது முக்கியமான விஷயமா…? என்று யோசனையுடன் அறைக்கு வந்தவள் அங்கு அப்பா எப்போதும் போலவே தன் கை மூலமே தன் கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தார்.

தான் வந்ததின் ஓசை கேட்க முடியாததால், அவர் அப்படியே படுத்து கொண்டு தான் இருந்தார். மணிமேகலை கண் மூடிக் கொண்டு இருந்த அவர் கை மீது அவள் கை வைத்ததும் பதட்டத்துடன், தன் கை எடுத்து யார் என்று பார்த்தார்.

தன் எதிரில் மகள் இருக்கவும், அவர் பதட்டம் மறைந்தோட ஒரு புன்னகையுடன்… தன் கை அசைவில்… “என்னம்மா?” என்று கேட்டார்.

சிறுவயது முதலே தன் தந்தையின் மொழியை மணிமேகலையும் அறிந்திருந்தாள். அதனால், அவர் மொழியிலேயே… “அப்பத்தா உங்களை கூப்பிடுறாங்கப்பா.” அவரை போலவே மணிமேகலை கை சைகையில் சொன்னாள்.

திரும்பவும் அப்பாவின் முகத்தில் பதட்டத்தோடு, குழப்பமும் காணப்பட, மணிமேகலையின் மனமோ… ‘அப்பா இன்னும் கொஞ்ச நாள் தான். அப்புறம் உங்க முகத்தில் இந்த பதட்டமோ... குழப்பமோ இருக்காது.’ என்று நினைத்தவளாய் அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

மகள் கவலையுடன் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து, தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவர் தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டு, “நீ போ. நான் வர்றேன்.” என்று சைகை செய்தவர். தான் போக பார்க்கும் போது, தன் கை பிடித்து… “சாப்பிட்டியா…” என்று அதே சைகை மொழியில் கேட்க… தான் சொன்ன,

“இல்லை.” என்ற பதிலில் அவர் முகம் காட்டிய வேதனையில் “பசிக்கலேப்பா. காலையில் சத்துமாவு கஞ்சி குடிச்சது திம்முன்னு இருக்கு.” என் வயிற்றில் கை வைத்து சொல்லியும் கூட அவர் முகத்தில் தெளிவு பெறவில்லை.

‘இப்போதைக்கு அப்பாவின் முக வாடலை போக்க முடியாது. அவருக்கு தெரியும். அனைவருக்கும் நான் தான் பரிமாற வேண்டும். அதனால் எப்போதும் அனைவரும் சாப்பிட்ட பின் தான் நான் சாப்பிடுகிறேன் என்று. தெரிந்தவரிடம் இன்னும் எதை சொல்லி ஏமாற்றுவது.’

இங்கு இருந்து தான் சீக்கிரம் சென்றால், தான் அப்பாவும் சீக்கிரம் வருவார். குறைந்த பட்சம் அப்பத்தாவின் பேச்சில் இருந்து தானும் தப்பித்து, தன் தந்தையையும் தப்பிக்க வைக்கலாம் என்று நினைத்து சென்ற போதும்...

அப்பத்தா, “போனா போன இடம், வந்தா வந்த இடம். நீ அப்படியே உங்க ஆத்தாளே தான்.” என்று சொன்ன தெய்வநாயகியின் பேச்சில் எது உண்மையோ இல்லையோ...நீ அப்படியே ஆத்தா போல் இருக்கிறாய் என்றதில், தோற்றத்தில் வரலட்சுமியின் மறுபிம்பமாக தான் மணிமேகலை இருந்தாள்.

பதினைந்து வயது வரை கொஞ்சம் பூசியது போல் இருந்த மணிமேகலையின் உடல் வாகு. வயது ஏற ஏற மெலிந்து கோயில் சிற்பம் போல் வரிவடிவமாய் மாறியது. இளைத்ததாளோ இல்லை பதினைந்து வயதுக்கு பின், அவள் உயரத்தில் அசாதாரண வளர்ச்சி ஏற்பட்டதாளோ… கொஞ்சம் குள்ளமாக இருந்த அவளின் உயரம், இப்போது ஐந்தரையடி உயரத்திலும், மாநிறம் என்றாலும் கலையான முக அமைப்பிலும், பார்ப்பதற்க்கு மிக அழகாகவே காணப்பட்டாள்.

வேலை என்றால் தன் அம்மாவை போல் மிக சுறு சுறுப்பே... பேச்சிலும் தன் அன்னையை பின் பற்றியே வீட்டில் அமைதி காத்துக் கொண்டு இருக்கிறாள். இந்த சைட்டு மட்டும் தான், கொஞ்சம் மாறுப்பட்டு வளர்ந்து விட்டாள்.

தன் அப்பத்தாவின் திட்டை காதில் வாங்காது தன் அன்னை எடுத்து வைத்ததை, அனைவருக்கும் பறிமாறிக் கொண்டு இருந்தவளுக்கு, தன் தந்தை சாப்பிடும் தட்டும் அங்கு இருப்பதை பார்த்து இதில் பறிமாறலாமா, வேண்டாமா என்று யோசிக்கும் போது…

“அதிலும் வை.” என்ற அப்பத்தாவின் ஆணையில், தன் தந்தையின் தட்டிலும் வைத்து விட்டு அனைவரையும் குழப்பத்துடன் பார்த்திருந்தாள்.

அவள் நினைவு தெரிந்து இது வரை இது போல் இவ்வீட்டில் நடந்து இல்லை. இது நல்லதிற்க்கா? கெட்டதிற்க்கா? தெரியாது குழம்பி போய் நின்றிருந்தாள்.

கமலக்கண்ணன் வந்ததும், தன் தட்டில் உணவு பறிமாறி இருப்பதை பார்த்து அவரும் குழப்பத்தோடே தன் அன்னையை பார்த்தார். “சாப்பிடு நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்.” என்று அவருக்கு தெரிந்த சைகை மொழியில் சொல்ல…

பாவம் தெய்வநாயகி எப்பொழுதாவது தான், இது போல் பேசுவார். அதனால் தன் மகனுக்கு புரியும் படி அவரால் சைகை செய்ய இயலாது போனது. தன் தந்தைக்கு அப்பத்தா சொன்னது புரியவில்லை என்பதை தன் தந்தையின் குழப்ப முகபாவனையில் புரிந்துக் கொண்ட மணிமேகலை தன் தந்தைக்கு புரியும் படி சொன்னாள்.

“ஆ...ஆ…” புரிந்தது என்பது போல் கமலக்கண்ணன் தலையாட்டியவருக்கு, மேலும் குழப்பமே... இது வரை இந்த வீட்டில் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று யாரும் இது வரை தன்னிடம் சொன்னது இல்லை. இது முதல் முறை என்பதால் என்ன, ஏது என்று தெரியாத குழப்பத்திலேயே அவரும் உண்டு முடித்தார்.

சாப்பிடும் அறையில் இவ்வளவு நடந்தும், எப்போதும் அனைவருடனும் உணவு உண்ணாத கணவர் உணவு உண்ண வந்த பிறகும், அந்த சமையல்கட்டில் இருந்து வெளிவராது எப்போதும் செய்வது போல் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய உணவை அடுத்து அடுத்து சமைத்துக் கொண்டு இருந்தார் வரலட்சுமி.

‘இவங்க இப்படி இருப்பதால் தான், எல்லோரும் தங்களை இளக்காரமாய் பாக்குறாங்க. இவங்களும் பேச மாட்டாங்க. நம்மையும் பேசாதே பேசாதேன்னு வாயை அடைத்து விடுவாங்க’, என்று எப்போதும் போல் மணிமேகலை மனதில் தான் முனு முனுத்துக் கொண்டு இருந்தாள்.

என்ன, ஏது என்ற குழப்பத்தை தீர்க்க தெய்வநாயகி… “வரா அந்த அடுப்பை அணைச்சிட்டு இங்க வா…” என்று முதல் முறையாக அவர் வாயில் இருந்து தன் அன்னையை சமையலறையில் இருந்து வெளியே வா என்று அழைத்திருந்தார்.

தன் முந்தியில் ஈர கையை துடைத்துக் கொண்டே அந்த இடத்துக்கு வந்த வரலட்சுமியின் முகத்தில் இவர்களுக்கு இருந்த குழப்பம் இல்லை போல். எப்போதும் இருப்பது போல் அமைதியாக அவர்கள் முன் வந்து நின்றார்.

தெய்வநாயகி வரலட்சுமியையும், கமலக்கண்ணனையும் பொதுவாக பார்த்துக் கொண்டே… “மணிக்கு ஒரு இடம் வந்து இருக்கு. ரொம்ப நல்ல இடம். நாங்க அந்த இடத்தையே முடிச்சிடலாமுன்னு இருக்கோம்.” என்ற தன் அப்பாத்தாவின் பேச்சில் மணிமேகலை அதிர்ச்சியாகி அவர் முகத்தை பார்த்தாள் என்பதை விட வெறித்து நின்று விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

‘யார் பெண்ணின் திருமணத்தை யார் முடிவு செய்வது…?’ முதலில் மணிமேகலைக்கு இது தான் தோன்றியது. இந்த திருமணப்பேச்சில் தன் அன்னை தந்தையை நம்பிக் கொண்டு இருந்தால் அவ்வளவு தான்! தன் கழுத்தில் தாலி ஏறி, எப்போதும் போல், இது போல் ஒரு இழிவு வாழ்வு தான் வாழ வேண்டி இருக்கும் என்று அவள் நினைத்து முடிப்பதற்க்குள், தெய்வநாயகி வரலட்சமியிடம்… “நான் உன் கிட்ட சொல்வதை ஊ…” ஊமை என்று சொல்ல வந்தவர் என்ன நினைத்தாரோ… ஊ என்பதை, “உன் புருஷன் கிட்ட அவனுக்கு புரியராப்பல சொல்லு.” என்று தொடங்கியவர் பின்… “உன் பொண்ணை கேட்டது லேசு பாசான இடம் கிடையாது. நம்ம பக்கத்து ஊரில் ரைஸ் மில் வெச்சிட்டு இருக்காங்கல பரந்தாமன் குடும்பம். அந்த வூட்டு பையனுக்கு தான் உன் மவள கேக்குறது. நீ செஞ்சதிலேயே உருப்படியான விசயம் உன் பொண்ணை அழகா பெத்தது தான்.” என்ற அப்பத்தாவின் பேச்சில்…

“இது எப்போத்திலிருந்து?” என்பது போல் தான் தன் அதிர்ந்த தோற்றத்தை மாற்றிக் கொள்ளாது அப்பத்தாவை பார்த்திருந்தாள்.

பின் இருக்காதா? தன்னோடு பெரியவனுக்கு எல்லாம் சுத்தி போடும் இந்த அப்பத்தா, தன்னை ஒரு தடவை கூட சுத்தாதது மட்டும் இல்லாது, சிறுவயதில் தானே அப்பத்தா திருஷ்ட்டி கழிக்கும் போது…

“அப்பத்தா என்னையும் சுத்துங்க. நானும் தூ துப்புறேன்.” என்று அவர் கையில் இருக்கும் உப்பு மிளகாயை பார்த்து சொன்னதற்க்கு, இதே அப்பத்தா “உன்னை யார் கண் வைக்க போறாங்க.” என்று சொல்லிக் கொண்டே அங்கு அமர்ந்திருந்த இந்த இரு தீவட்டி தடியன்களுக்கு மட்டும் சுற்றி போட்டவர் கண்ணுக்கு, எப்போதிலிருந்து நான் அழகானவளாய் தெரிய ஆரம்பித்தேன், என்று மணிமேகலைக்கு நினைக்க தோன்றியது.

பின் தொடர்ந்து தன் அப்பத்தாவின் பேச்சை கேட்க ஆரம்பித்தவளின் மனதில், ‘எப்படி இவர்களை எதிர்த்து பேசுவது. முதல் முறை அவர்கள் ஒன்று சொல்லி. நான் வேண்டாம் என்று மறுப்பது. ஆனால் இதில் அவர்கள் சொன்னதற்க்கு நான் தலையாட்டினால், பின் என் தலை நான் ஆட்டாமலேயே அதுவே தன்னால் ஆட ஆரம்பித்து விடும். அவர்கள் சொல்வதை நடக்க விட கூடாது. எதிர்த்து பேசியே ஆகவேண்டும்’ என்று மனதில் நினைத்தாலுமே, தன்னால் அப்பத்தாவின் பேச்சையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

அதுவும் அப்பத்தா சொன்ன… “மணி படிக்கும் காலேஜ் பக்கத்தில் தான், அந்த பெரிய வூட்டு மவன் அரிசி மண்டி வெச்சி இருக்கான். இவ காலேஜ் போகும் போது பார்த்து பிடிச்சி அவன் வூட்ல சொல்லி இருக்கான்.

அவங்களும் யார் வூட்டு பொண்ணுன்னு விசாரிச்சி இருக்காங்க. விசாரிச்சதில் நம்ம வூட்டு பொண்ணுன்னு தெரிஞ்சதுல அவ்வளவு சந்தோஷமா அவங்களுக்கு.” என்று பெருமையுடன் சொன்ன அப்பத்தா…

தொடர்ந்து “பின் இருக்காதா? நம்ம பரம்பரையில் பொண்ணு எடுக்கவும், பொண்ணு கொடுக்கவும் எப்போவும் போட்டி தானே நடக்கும்.” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் மணிமேகலையின் தந்தையை பார்த்து ஒரு பெரும் மூச்சு விட்ட வாறே…

“இவன் மட்டும் ஒழங்கா பிறந்து இருந்தா… நான் ஏன் அன்னக்காவடி வூட்ல இருந்து பொண்ண கூட்டிட்டு வரப்போறேன்.”

இந்த வார்த்தைக்கு மட்டும் சங்கரலிங்கம் தெய்வநாயகியின் நாயகன்… “என்ன பேச்சோ அது மட்டும் பேசு.” என்று சொன்னார்.

சங்கரலிங்கம் எப்போதும் வள வள என்று பேசிக் கொண்டு இருக்க மாட்டார். வீட்டு விஷயம் பெண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் தலையிட்டால் வீண் குழப்பங்கள் தான் ஏற்ப்படும். அதே போல் வெளிவிஷயத்தில் ஆண்கள் முடிவு செய்தால் அதை பெண்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இது தான் அவர் கொள்கை. அந்த கொள்கையில் இது போல் மனைவியோ, மருமகள்களோ தேவையில்லாது பேசினால், இன்று சொன்னது போல் ஒரு வார்த்தையில் பேசினது போதும் என்று சொல்வார்.

கேட்டால் பிரச்சனை இல்லை. கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் அந்த சூழ்நிலையை இது வரை யாரும் அவருக்கு கொடுத்தது கிடையாது.

தன் கணவனின் குணம் அறிந்த தெய்வநாயகி… “பரந்தாமன் குடும்பம் அவங்க மவன் ஆசப்பட்டது நம்ம வூட்டு பொண்ணுன்னு தெரிஞ்சதும், நம்ம அய்யன் கிட்ட(சங்கரலிங்கம் தான் அய்யன்) பேசி இருக்காங்க. நம்ம அய்யனுக்கும் விசாரிச்சதில் பையன பத்தி ஒரு குறையும் சொல்லாத அளவுக்கு இருக்கு.” என்று சொன்ன தெய்வநாயகிக்கு தொண்டை வரண்டு போய் விட்டது போல் பக்கத்தில் இருக்கும் சொம்பை கூட எடுக்காது எப்போதும் போல்,

“அத எடு.” என்று தன் மருமகளை ஏய்த்து விட்டு, தன் தொண்டை தாகத்தை தணித்த பின் ஆசுவாசமாய் மீதி பேச்சை தொடர்ந்தார்.

“நான் தான் உங்க அய்யன் கிட்ட அந்த வூட்லயும் இரண்டு பொண்ணுங்க இருக்கு. நம்ம இரண்டு பசங்களுக்கு அந்த பொண்ணுங்களையே எடுக்கலாம் என்று சொன்னேன். உங்க அய்யனும் சரி பாக்கலாமுன்னு சொல்லிட்,டு பரந்தாமன் கிட்ட சொல்லி இருக்கார். அவருக்கு ரொம்ப பிடிச்சி போய் கையோட எல்லாருடைய ஜாதகத்தையும், கொடுத்து விட்டார். அத நேத்து தான் நம்ம ஜோசியர் கிட்ட காமிச்சேன்.” என்று சொல்லி விட்டு கொஞ்சம் நிறுத்துயவர்…

தன் சின்ன பேரன் வசீகரனை பார்த்து… “இவனுக்கு மாமனார் இல்லாத இடமா தான் கட்டனுமாம்.” என்று சொன்னதும், வசீகரன்… “அப்படி மாமனார் இருக்கும் இடம் கட்டுனா என்ன ஆகுமாம் அப்பத்தா…?”

அந்த வீட்டில் பேரன்களுக்கு மட்டுமே பேசும் உரிமையும், தன்னை கேள்வி கேட்கும் உரிமையும் கொடுத்து இருக்கும் தெயநாயகி தன் பேரன் கேட்ட கேள்விக்கு, “கட்டுனா உன் மாமியாரை மூலையில் உட்கார வெச்சுடுமாம்.” என்று பதில் சொன்னவர்.

தான் விட்ட பேச்சை தொடரும் விதமாய், “அதான் அந்த இரண்டாம் பெண்ணோட ஜாதகத்தை நம் வீராவோட ஜாதகத்தோடு பார்த்ததில், பத்துக்கு ஒன்பது பொருத்தம் அப்படியே பொருந்தி இருக்கு. இவங்களுக்கு கல்யாணம் செஞ்சி வெச்சா அமோகமா இருப்பாங்கன்னு அந்த ஜோசியர்காரர் சொன்னார்.”

முதலில் பயத்தோடு தன் அப்பாத்தாவின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த மணிமேகலை அவர் சொன்ன விஷயத்தில், முதலில் குழம்பி, பின் அதிர்ந்து, இறுதியில் அருவெறுத்து போய் விட்டாள். பின் இருக்காதா? மாமனும், மச்சானும் ஒரே வீட்டில் பெண் எடுப்பாங்களா?

‘காசு பணம் இருந்தா போதும், முறை எல்லாம் பாக்க தேவையில்லை. இதே என்னை ஆசைப்பட்டு கேட்டான்னு சொல்றாங்களே... அந்த பையன் சாதாரண வீட்டு பையனா இருந்தா. நிலைமை இப்படியா இருக்கும். தன் அன்னையிடம்… “கண்டவங்க வந்து பொண்ணு கேட்கும் நிலையில் வளத்து வெச்சி இருக்க உன் பொண்ணை.” என்று இந்த தெய்வநாயகி திட்டி இருக்க மாட்டாங்க?

பெரிய இடம் என்றதும் பொண்ணை கொடுக்குறதோட பொண்ணையும் எடுப்பாங்க. அதுவும் ஒரு பையனுக்கு ஜாதகம் செட்டாகலேன்னா முறை கூட பார்க்காது இன்னொரு பேரனுக்கு முடிப்பாங்க. யப்பா... என்ன ஜென்மங்க?’ என்று திட்டிக் கொண்டு இருந்தாலும் ஒர பார்வையில் வாசுவையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

முதலில் தான் வாய் திறந்து தான் ஆகவேண்டும் என்று நினைத்திருதவளுக்கு, இந்த கல்யாண பேச்சு தனக்கு உண்டானது மட்டும் இல்லை. இதில் வாசுவும் இருக்கான் என்று தெரிந்ததும். பேச்சு முதலில் அங்கு இருந்து வரட்டும். இப்போ தெரிஞ்சிடும் இவன் வசுவை எந்த நோக்கத்தில் பார்வையிடுறான் என்று மணிமேகலை ஒரு பார்வையாளராய் மட்டும் பார்த்திருந்தாள்.

ஆனால் அவள் நினைத்ததிற்க்கு எதிர் பதமாய் வீராவிடம் இருந்து, “என்ன அம்மத்தா இந்த வீட்டில் சம்மந்தம் செஞ்சா அந்த வீட்டு பெண் எனக்கு என்ன முறையாகும்.” மணிமேகலை நினைத்ததையே தான் அவனும் சொன்னான்.

பரவாயில்ல இந்த கந்து வட்டிக்காரனுக்கும், முறை எல்லாம் தெரிஞ்சி இருக்கு. என்று நினைத்தாலும் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை. பேச்சு மட்டுமே காதில் வாங்கி கொண்டாள்.

தெய்வநாயகி “என்ன வீரா இப்படி சொல்ற. அந்த இரண்டாம் பொண்ணு அவ்வளவு அழகா இருக்கா. அவங்கல உனக்கு தர்றேன்னு சொல்லும் போது உனக்கு என்ன?” என்று பேரனிடம் நியாயம் கேட்ட தெய்வநாயகி, “என்ன சங்கரி அமைதியா இருக்க. உன் மவன் கிட்ட நீயாவது சொல்ல கூடாதா…” தன் மகளை தன்னோடு கூட்டு சேர்க்க முயன்றார்.

“நான் இதுல சொல்றதுக்கு எதுவும் இல்ல ஆத்தா. அவனுக்கு பிடிக்கலேன்னா விட்டுடலாம்.” என்ற சங்கரி அத்தையின் பேச்சில், மணிமேகலை ‘பார்றா... இந்த வீட்டிலும், மத்தவங்க சொல்லுக்கும் மரியாதை கொடுக்கிறவங்க இருக்காங்க’ என்று நினைத்துக் கொண்டாள்.

தன் மகளின் பேச்சை ஏற்றுக் கொள்ள மனம் வராது தெய்வநாயகி மீண்டும் ஏதோ சொல்ல தொடங்கியவரின் பேச்சை, “பெத்தவங்களுக்கு விருப்பம் இல்லேன்னா விட்டுடனும் தெய்வா.” என்று சொன்ன சங்கரலிங்கத்தின் பேச்சு தனக்கும் பொருந்துமா என்று நினைத்த மணிமேகலை, பார்க்கலாம் என்று நினைத்து வாசு வாய் திறக்க காத்துக் கொண்டு இருந்தாள்.

மனமே இல்லாத தெய்வநாயகி “சரி அப்போ வாசு, மணியோட கல்யாணத்தையாவது முடிச்சிடலாம்“ என்று தன் அப்பத்தா சொல்ல சொல்ல அவர் முகத்தை கூட பாராது, வாசு ஏதாவது சொல்வான் என்று அவன் முகத்தையே ஒரு எதிர்பார்ப்போடு மணிமேகலை பார்த்திருக்க…

“பரந்தாமன் பெண் இந்த வீட்டுக்கு மருமகளா ஆகமுடியாது அம்மத்தா.” என்று திரும்பவும் வாசுவுக்கு பதிலாய் வீரா தான் வாய் திறந்தான்.

இப்போது வாசுவை பார்ப்பதற்க்கு பதிலாய் தன் அத்தை மகனை முதன் முதலாய் தலை நிமிர்த்தி அவனை நேர்க் கொண்டு பார்த்தாள். ஆனால் வீரா எப்போதும் போல் தன் நோக்கமே மட்டுமே தன்னோட குறி என்பது போல்,

“ஏன்?” என்று கேட்ட தன் அம்மாத்தாவின் மீதே பார்வையை செலுத்தியவாறு… “ஏன்னா அந்த பெண் என் சேக்காளி ஒருத்தனை விரும்புறா” என்ற வீராவின் பதிலில்…

“என்ன காதலிக்கிறாளா? அந்த பரந்தாமனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா சொத்த கத்திரிக்காய நம்ம கிட்ட தள்ள பார்ப்பான்?” என்ற தெய்வநாயகியின் ஆவேசமான பேச்சில் ..

முகம் சுழித்த வீரா… “என்ன அம்மத்தா பேச்சு இது? பொண்ணுங்க ஒண்ணும் கத்திரிக்கா இல்ல. அந்த பெண் விரும்புறது அவங்க அப்பாக்கு தெரியாம கூட இருக்கலாம். அதுவும் இல்லாம நீங்க தான் பெண் கேட்டீங்க. இது போல் மத்த பெண்ணை தப்பா பேசாதீங்க.” என்ற வீராவின் பேச்சில் அனைவரும் அமைதி காத்தாலும், அவர் அவர் எண்ணத்திற்க்கு ஏற்ப அவர் அவர் நினைத்துக் கொண்டனர்.

நம் மணிமேகலையோ… ‘அட பாருடா! பெண்களை பத்தி தப்பா பேச கூடாதாம். இவன் கண்ணுக்கு நானும் என் அம்மாவும் பொண்ணுங்களா தெரியலையா?’ என்று எப்போதும் போல் அவர்கள் பேச்சில் தன் நினைவுக்கு போவது வருவதுமாய் இருந்தவளின் காதில் அப்பத்தா சொன்ன,

“சரி நம்ம மணியோட கல்யாணத்தையாவது பண்ணலாம்.” என்று அவர் சொன்ன பேச்சுக்கு பதிலாய் மணிமேகலை… “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்ற அவளின் பதிலில் அனைவரும் அவளின் முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
 
Top