Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....13

  • Thread Author
அத்தியாயம்…13

ஜெயேந்திரன் சொன்னது போல அவனுக்கு எப்போதும் போல் அந்த வாரம் ரொட்டினாக தான் சென்றது.. ஆனால் பெண்ணவளுக்கு தான் அந்த வாரம் முழுவதும் சாதாரண வேலைகள் கூட ஒரு பெரிய டாஸ்க்காக இருந்தது… வேலைகள் கடினம் என்றால் அது தான் இல்லை…

அவளின் ஒரவத்தி, ஏன் அவளின் மாமியாரே … இந்த வயதில் சட்டென்றும் மிக எளிதாகவும் செய்யும் வேலைகள் எல்லாமே… இவள் செய்ய மிகவும் திணறி போனாள்..

இன்னும் கேட்டால், அவளுக்கு மிக கடினமான வேலைகளை எல்லாம் கொடுக்கவில்லை… மிக எளிதான வேலைகளை தான்… சுருக்க சொன்னால் எடு பிடி வேலைகளை கூட இவளுக்கு செய்ய தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

இதில் ஒரு நாள் கெளசல்யா.. “வெளியில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுட்டியா….?” என்று தன் இரண்டாம் மருமகளை பார்த்து கேட்டார்..

பாவம் அவள் அப்போது தான் கீரையை கல் சட்டியில் போட்டு கடைந்து கொண்டு இருந்தாள்.. அன்று கணவன் “ஆபிசுக்கு அரை மணி நேரம் முன்பே செல்ல வேண்டும்…” என்று காலை இவள் எழும் சத்தம் கேட்டு கண் முழித்த கணவன் சொல்ல…

“ இதை நேத்தே சொல்ல என்ன…. கொஞ்சம் சீக்கிரம் எழுந்து இருப்பேன் லே….” என்று கணவனிடம் சத்தம் போட்டாலுமே, கணவனுக்கு உணவை கட்டி கொடுக்க வேண்டி அவசர அவசரமாக நேராக சமையல் கட்டில் புகுந்து விட்டாள்..

இதில் இந்த வாரம் அவள் தான் தண்ணீர் தெளித்து கோலம் போட வேண்டும்… ஆம் இதற்க்குமே கெளசல்யா நாளை பின்னே பிரச்சனை வந்து விட கூடாது என்று ஒரு வாரம் மூத்த மருமகள் என்றால் அடுத்த வாரம் இரண்டாம் மருமகள் கோலம் போட வேண்டும்..

கெளசல்யா கேட்டதற்க்கு. “ அச்சோ. இல்ல அத்த. இவர் காலையில் தான் அத்த சீக்கிரம் போகனும் என்று சொன்னார்.. அந்த பதட்டத்தில் நேரா கிச்சனுக்கு வந்துட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே தான் செய்யும் கீரை கடைந்து கொண்டு இருப்பதை விட்டு எழ பார்த்தவளை.

“இல்ல நீ அத பாரு..” என்று அவளை தடுத்து நிறுத்தி விட்டுயவர்… நம் வசீகராவை பார்த்து..

“நீ கோலம் போட்டு வந்துடும்மா…” என்று சொல்ல பாவம் தன் அத்தை என்ன மொழி பேசுகிறார்கள் என்பது போல் முழித்து நின்று விட்டாள் பெண்ணவள்..

காரணம் அவளுக்கு கோலம் போட தெரியாது… ஜெயந்தி வசீகரா நின்ற விதம் பார்த்தே புரிந்து கொண்டு விட்டாள் போல்.. அதனால்..

“தோ சட்னி தாளித்து கொட்டி விட்டேன் அத்த.. என் வேலை முடிந்து விட்டது.. நானே போய் போடுறேன்…” என்று சொல்லி ஜெயந்தி கோலம் போட சென்று விட… வசீராவுக்கோ… தன் பார்வையை யாரின் மீதும் செலுத்த முடியாதது போல் தலை குனிந்து கொண்டாள்..

அவளின் அந்த நிலையை பார்த்து கெளசல்யா என்ன நினைத்தாளோ….

“ஜெய் எழுந்து வர நேரம் ஆகிடுச்சி அவனுக்கு காபி கலக்கு..” என்றவர் பின்..

“நீ குடிச்சியா …?” என்று கேட்க..

“ம் குடிச்சிட்டேன் அத்தை…” என்று சொன்னவள்.. இந்த ஒரு வாரத்தில் நன்றாக காபி கலக்க கத்து கொண்டதால், அதை சரியாக கலக்கி இந்தி ட்யூஷன் எடுக்க கிளம்பி வந்தவன் கையில் கொடுத்தவள்.

கணவன் ஏதோ பேச வருவதை கூட கவனிக்காது மீன்டும் சமையல் அறைக்குள் சென்றவள்..

கோலம் போட்டு விட்டு மீண்டும் சமையல் அறைக்கு வந்த ஜெயந்தி அப்போது தான் தோசை சுட. தவ்வாவை ஸ்டவ் மீது வைக்க.

“அக்கா நான் எல்லோருக்கும் சுடுறேன் க்கா….” என்று சொன்னாள்..

ஜெயந்தி… “ உன் பெரிய மாமாவுக்கு வசீ….” என்று சொன்னதில்..

“தெரியும் அக்கா.. நானே சுடறேன்.. தீபக் மாமாவுக்கு மட்டும் இல்ல… எல்லோருக்குமே நானே சுடுறேன் அக்கா….” என்று சொன்னவளிடம்..

“ம் சரி…” என்று விட்டாள் ஜெயந்தி..

ஜெயந்திக்கு தெரிந்தது வசீகரா ஏன் சொல்கிறாள் என்று.. இந்த பத்து நாளாக அவளுமே தானே வசீகராவை கவனித்து கொண்டு இருக்கிறாள்.. தாங்கள் வேலை செய்வதை பார்த்து.. தன்னால் முடியவில்லையே என்று தயங்கி நிற்பதும்.. இதனால் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து இருப்பதுமே அவளின் முகத்தை பார்த்தே ஜெயந்தி கண்டு கொண்டாள்..

தன் அத்தையிடம் சொல்ல வேண்டும் வசீகரா மெல்லவே வேலை பழகட்டும் என்று… இந்த பத்து வருடத்தில் ஜெயந்திக்கு ஒரளவுக்கு தன் அத்தையை பற்றி தெரியும்… அவள் வேலை செய்யாது இருந்தால், தாங்கள் தவறாக நினைத்து விடுவோம் என்று தங்கள் அத்தை நினைப்பது….

வசீகரா பணத்திமிறில் வேலை செய்யாது போனால் கண்டிப்பாக பிரச்சனை வரும் தான்.. ஆனால் வசீகரா அப்படி இல்லையே… வேலை செய்ய தெரியவில்லையே என்று தானே வருந்துக்கிறாள்..

அதோடு சமையல் முடியும் வரை தங்களோடோவே தானே இருக்கிறாள்..

இவளே புதியதாக திருமணம் ஆனவள் என்ற எண்ணத்தில் ஜெயேந்திரன் ட்யூஷன் முடித்து அவர்கள் அறைக்கு சென்றதை பார்த்து விட்டு..

“தம்பி கீழே வந்துட்டான் வசீ. நீ போ ரூமுக்கு…” என்று சொன்னாலுமே போகாது தங்களுடனே இருக்கும் பெண்ணை வேலை செய்யவில்லை என்றோ… வேலை தெரியவில்லை என்றோ எப்படி கோபித்து கொள்ள முடியும்…?

திருமணம் முடிந்து மூன்றாம் வாரத்தில் தான் புது மணதம்பதியர் தேன் நிலவுக்கு சென்றது.. இந்த இடைப்பட்ட நாட்களில் வசீகராவின் அன்னை பெண்ணிடம் பேசும் போது..

“என்ன வசீ இன்னுமே ஹனி மூன் போகலையா….?” என்று கேட்டு கொண்டு இருந்தவரிடம் வசீகரா..

“ம்மா அவருக்கு இந்த வீக் முழுவதும் வேலைம்மா. நெக்ஸ்ட் வீக் போகலாம் என்று சொன்னார்..” என்று சொல்ல..

ஒரு வாரம் பொருத்து போன சுபத்ரா.. அடுத்த வாரம் மகள் இதே காரணம் சொல்லவும்… எப்போதும் போல் ஜெயேந்திரனை தன் மூத்த மாப்பிள்ளை கூட கம்பேர் செய்வது போல்…

“ மூத்த மாப்பிள்ளை லட்சத்தில் சம்பளம் வாங்குறார்… அவரே ஒன் மந்த் லீவ் எடுத்துட்டு உன் அக்காவை ஹாங்காங்க் கூட்டிட்டு போனாரு… உன் வீட்டுக்காரர்.. ஒரு மாதம் எல்லாம் வேண்டாம்… ஒரு பத்து நாள் ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு மூத்த மாப்பிள்ளை போல் வெளி நாடு வேண்டாம்… குறைந்த பட்சம் இங்கு பக்கத்துல இருக்க இடத்துக்காவது கூட்டிட்டு போகலாம் லே…” என்று சொன்னவர்..

பின்… “ காசு இல்ல என்று வேலை என்று சொல்றாரோ…. நான் வேணா…” என்று சுபத்ரா சொல்லும் போதே அவர் பேச்சை முடிக்க விடாது வசீகரா..

“அது எல்லாம் வேண்டாம்மா….” என்று விட்டாள்..

சொல்லி இருப்பாள்.. இங்கு ஒன்றும் அந்த அளவுக்கு என்ன எந்த அளவுக்குமே இங்கு பணம் பிரச்சனை கிடையாது… தன் கணவனின் வருமானம் இந்த இடைப்பட்ட நாட்களில் எவ்வளவு என்பதை பெண்ணவள் தெரிந்து கொண்டு விட்டாள்..

முதலில் தன் புகுந்த வீட்டவர்களை எப்போது பார்த்தாலும் பணத்தை வைத்து அவமதிப்பது போல் பேசுவதை நினைத்து . அதை சொல்ல நினைத்தாள் தான்..

ஆனால் சொல்லவில்லை… சொல்ல தோன்றவில்லை.. கணவன் சொன்னது போல் ஒருவரின் மதிப்பு பணத்தை வைத்து இருக்க கூடாது. என் கணவருக்கு உண்டான மரியாதையை அவர்கள் அவருக்காக தான் கொடுக்க வேண்டுமே தவிர… அவர் மாதம் இத்தனை சம்பாதிக்கிறார் என்பதை வைத்து கொடுக்க கூடாது.. என்று நினைத்து சொல்லாது விட்டாள்…

இதோ ஜெயேந்திரன் தன் வேலைகளை முடித்து விட்டு இந்தி ட்யூஷன் பிள்ளைகள் தேர்வு எழுதி விட்டதால், எப்போதும் போல் ஒரு வாரம் விடுமுறை கொடுத்து விட்டு கொடைக்கானலுக்கு தன் மனைவியோடு தேன்நிலவுக்கு வந்து விட்டான்… தன் வேலையை மட்டும் கருத்தில் கொள்ளாது இந்தி ட்யூஷனையும் மனதில் வைத்து கொண்டு தான் தன் தேன் நிலவை தள்ளி வைத்தது..

இந்த பத்து நாட்கள் அவனுக்கு மட்டுமே உரிய நாட்கள்… எந்த தொந்தரவும் இனி இல்லை என்று ஆணவனுக்கு தெரியும்.. பெண்ணவள் தன்னுடன் நேரம் செலவிட விரும்புக்கிறாள் என்று… ஆனால் அவனுக்கு மனைவியின் அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை…

அவனுக்குமே மனைவியுடன் இருக்க தான் கொள்ளை ஆசை.. அதுவும் ஒவ்வொரு இரவும் கூடி களித்த பின் மனைவியுடன் பிணைந்து உறங்கியவனின் விடியல் அவளின் வாசனையோடு தான் விடியும்.

படுக்கையை விட்டு எழ மனதே வராது…இன்னுமே மனைவியின் அருகாமையில் இருக்க தான் அவன் மனது ஏங்கும்.. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் படிக்கும் பிள்ளைகள் வர தொடங்கி விடுவார்கள்..

ட்யூஷனுக்கு வரும் பிள்ளைகள் அனைவரும்.. டீன் ஏஜ் பிள்ளைகள்… இவனுக்கு புதியதாக திருமணம் நடந்து இருப்பது அவர்களுக்கு தெரியும்.. அதன் தொட்டே. அவர்கள் வருவதற்க்கு முன்பு இவன் அங்கு போய் நின்று விடுவான்.. காரணம் லேட் ஆனால் இந்த காலம் பிள்ளைகளுக்கு அதற்க்கு காரணம் என்ன என்பதை எளிதாக யூகித்து விடுவார்களே… அதற்க்கு தான்..

நேரத்தோடு சென்றால் கூட ஒரு சில பிள்ளைகள் தன்னை குறு குறு என்று பார்ப்பதை அவன் உணர்கிறான் தான்.. ஆனால் ஒரு சிலதில் பார்த்தும் பார்க்காதது போல் கடந்து விடுவது தான் அவனுக்கு மரியாதை.. அதன் தொட்டே கூடிய மட்டும் வசீகராவை மாடிக்கு வராது பார்த்து கொள்ளுவான்… காரணம் தன் மனைவியின் மீது இது போலான யோசனை என்ன எது போலான யோசனையோடும் கூட மற்றவர்கள் பார்ப்பதை அவன் விரும்பவில்லை…

அதனால் மனைவியோடு தனிமை என்பது அவனுக்கு கிட்டுவது என்பது இரவில் மட்டும் தான்.. இரவில் இளம் மனைவி.. புதியதாக திருமணம் ஆனவர்கள் என்ன செய்வார்கள்.. அதே தான் அங்கு நடந்ததே தவிர.. பேச்சுக்கள் என்பது குறைவு என்பதை விட இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை…

அதனால் இந்த தேன் நிலவை மனைவியுடன் செலவிட அவனும் ஆவலாக தான் காத்து கொண்டு இருந்தவன். அதை சரியாகவும் பயன் படுத்திக் கொண்டான். மோகம் இல்லாத தேன் நிலவு என்பது ஏது… அதனால் மோகம் காமம் கலந்து இரவு பொழுது இருவரையும் ஆக்கரமித்து கொண்டாலும்.. பகல் பொழுதை… ஜெயேந்திரன் மட்டும் அல்லாது வசீகராவும் பேசி பேசி.. அத்தனை தீர்த்து கொண்டனர்..

வெளியில் எங்காவது செல்வார்கள் கடை வீதி… பூங்கா என்று… ஆனால் இருவரும் அதை பார்க்க மாட்டார்கள்.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு தான் கதை அலப்பார்கள்.. பேசும் போது வார்த்தைகள் சொல்ல முடியாத ரகசியத்தை கூட கண்களும் முக பாவனையும் அவர்கள் இருவருக்கும் அத்தனை சொன்னதில், அந்த தேன் நிலவை மிக நிறைவுடனும் மன மகிழ்ச்சியுடன் தான் முடிந்து வீடு வந்தனர்…

அந்த தேன் நிலவு நாட்கள் அவர்களுக்கு உணர்த்தியது இது தான்…. எப்போதும் ஒட்டி இழைந்து இருந்தால் தான் காதல் என்பது கிடையாது…. எப்போதாவது கிடைக்கும் சமயத்தில் செய்யும் அந்த காதல் உடல் அளவில் மட்டும் இல்லாது உள்ளத்து அளவிலும் இருப்பது தான் காதல் என்பதை தான்..

இதோ வீடு வந்த பின் எப்போதும் போல் இருவருக்கும் நாட்கள் சென்றது… மிக மிக அழகாக சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் எந்த படிப்பு அவளின் தாய் வீட்டில் தாழ பார்த்ததோ அந்த படிப்பில் பி.எட் படி என்றதோடு அதற்க்கு உண்டான வேலைகளையும் அவளின் மாமியார் வீட்டவர்கள் செய்தனர்..

அதே போல் கெளசல்யா வசீ சமையல் அறையில் எப்போதும் ஒரு மாதிரி இருப்பதை பார்த்து விட்டு.

மூன்று மருமகளையும் அழைத்தவர்… பொதுவாக தான்.. “ வசீ மெல்ல தான் வேலை செய்யிறா. இதனால உங்களுக்கு ஏதாவது வேலையில் பளுவா..?” என்று கேட்டதில் இரு மருமகள்களும் ஒன்று போல்..

“வேலை செய்ய கூடாது என்று நினைத்தா தான் பிரச்சனை அத்தை.. பாவம் அவளுக்கு தெரியல.. பழக்கமும் இல்ல.. அதனால செய்ய முடியல. அதனால எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது அத்தை.. வேலைகள் மெல்லவே கத்துக்கட்டும்.. இதோ இப்போ எங்களை விட அவள் நல்லா கோலம் போடுறாலே…” என்றார்கள்..

ஆம் இப்போது வசீகரா தான்.. தினம் கோலம் போடுவது.. கற்றுக் கொண்டு விட்டாள்.. இப்போது தான் நெட்டை திறந்தால் அத்தனையும் கொட்டி கிடக்கிறதே… கற்றுக் கொண்டு நாளை போட வேண்டிய கோலத்தை முன் தினமே போட்டு பார்த்து விடுவாள்… அதனால் அழகாக வருகிறது அவளுக்கு கோலம் போடுவது…

கெளசல்யாவும்.. இரு மருமகள்களின் பேச்சை ஒத்து கொண்டவர்.. இருந்தாலுமே.. வசீகராவிடம்…

“நீ அந்த பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடு வசீ… “ என்றதும்..

வசீகராவுக்கு ஒரு மாதிரியாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. அவளுக்கே ஆங்கிலம் அந்த அளவுக்கு வராது.. மூத்தார் இரண்டு பிள்ளைகளும் ஆங்கில வழி கல்வி தான் படிக்கிறார்கள் தான் எப்படி என்று யோசிக்கும் போதே.. மருமகள்களின் முகத்தை பார்த்து கண்டு கொண்டு விட்ட

கெளசல்யா. “ இந்த காலத்து பிள்ளைகளுக்கு தமிழ் தான் வசீ வர மாட்டேங்குது நீ அதை சொல்லி கொடு போதும்…” என்று விட ..

வசீகராவுக்கு அத்தனை சந்தோஷம்.. இதோ தன் மூத்தார் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதை கவனித்த அவளின் மாமனார்..

“பின் பக்கம் இடம் இருக்கு அதுல ஷெட் கட்டி கொடுக்கிறேன்.. நீ அங்கு தமிழ் ட்யூஷன் எடுக்கிறியாம்மா. உனக்கும் விருப்பம் இருந்தால் தாம்மா…” என்று சொல்ல.. பெண்ணவள் உடனே ஒத்து கொண்டாள்..

மகிழ்ச்சியாக இருந்தாலுமே, தன்னால் முடியுமா என்ற தயக்கமும் ஒரு பக்கம் பெண்ணவளுக்கு இருந்தது…. அதுவும் தனக்காக பணம் செலவு செய்து ஷெட் எல்லாம் கட்டிய பின்… தன்னால் முடியாது போனால் என்ன ஆவது.. இதில் அவள் தயங்கி நின்றவளை நம் ஜெயேந்திரனின் தந்தை தான்…

“ஆரம்பம் தான் கொஞ்சம் தடுமாற்றமா இருக்கும் ம்மா. போக போக உனக்கே தெளிவு மட்டும் கிடையாது.. தைரியமே வந்துடும்… தமிழ்.. உண்மையில் நீ படித்த படிப்பு கேட்டு எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்ததும்ம.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு எண் கூட தமிழியில் சொல்ல தெரியலேம்மா….ஆங்கிலத்தில் தான் தெரியுது… உன்னால் முடியும்..” என்று சொல்லவும் ..

ஏதோ ஒரு தைரியம் பெண்ணவளுக்கு சரி என்று விட்டாள்.. அதோடு அடுத்து தன் மாமியார் பேச்சு வாக்கில் சொன்ன…

“உன் புருஷன் இந்த இந்தி படிப்பு மீது ஆசை வந்தது எதனால எல்லாம் அவங்க அப்பா எடுத்த இந்தி ட்யூஷனை பார்த்ததினால் தான்…”

பெண்ணவளுக்கு இதுவும் புதிய செய்தி தான்… அதில்.. “ மாமாவும் இந்தி ட்யூஷன் எடுப்பாரா….?” என்று ஆச்சரியமாக கேட்டவளிடம்..

“எடுத்தார்… அவர் மிலிட்டிரியில் வேலை செய்யும் போது பல தரப்பட்டவங்க கிட்ட பழகவும் பேசவும் நிலை.. அதுல முக்கால் வாசி இந்தி தான்…” என்ற மாமியார் இந்த பேச்சுக்கும்..

வசீகரா…. “ என்ன மாமா இராணுவத்தில் வேலை பார்த்தாரா….?” என்று இதற்க்கும் அதிர்ந்து கேட்க.

பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இஞ்சி விழுதுக்கு பூண்டு உரித்து கொண்டு இருந்த ஜெயந்தி தன் கையில் இருந்த அந்த பூண்டை வசீகராவின் மடி மீது போட்டவள்..

“என்ன இது …? எதுக்கு எடுத்தாலும் காந்தி செத்துட்டாரா என்பது போல இந்த ரியாக்ஷன் காட்டுற…. மாமா எக்ஸ் மிலிட்டிரி மேன் என்பது உனக்கு தெரியாதா….?” என்று கேட்டவளிடம்…

தன் மீது விழுந்த அந்த பூண்டை உரித்து கொண்டே வசீகரா …. “எனக்கு தெரியாது அக்கா….பி.எஸ்.என்.எல்லில் வேலை பார்த்தார் என்று மட்டும் தான் எங்க வீட்டிற்க்கு தெரியும்..” என்று சொன்னவள் பின் தன் கணவனின் பேச்சுக்கள் நியாபகத்தில் வர பெண்ணவள் அமைதியாகி விட்டாள்..

அவளின் மாமியார் கெளசல்யாவுக்கு புரிந்து போனதில்…. “உன் மாமனாரை நான் கல்யாணம் செய்யும் போது அவர் பட்டாளத்தில் தான் வேலை பார்த்துட்டு இருந்தார்… என் வீட்டில் இவருக்கு பெண் கொடுக்க ஒத்துக் கொள்ளவில்லை…” என்றதும் மருமகளுக்கு ஆவலாக இருந்தது..

தன் மாமியார் இது வரை இப்படி இலகுவாக பேசியது கிடையாது.. அதோடு தன் மாமியார் அம்மா வீட்டில் ஒத்துக்ககொள்ளவில்லை பின் எப்படி மாமாவை அத்தை கல்யாணம் செய்ய முடிந்தது என்பதை தெரிந்து கொள்ள ஆவலும்..

அதில்… “ பின் எப்படி உங்களுக்கு மாமாவை கல்யாணம் செய்து கொடுத்தாங்க அத்தை….?” என்று கேட்டு விட்டாள்..

“நான்… கட்டினா இவரை தான் கட்டிப்பேன் என்று சொன்னேன்…” என்ற பேச்சில் வசீகரா…

“அப்போ உங்களுது லவ் மேரஜா அத்தை….?” என்று கேட்டவளின் குரலில் அத்தனை துள்ளல்…












 
Active member
Joined
May 12, 2025
Messages
30
வாங்க விஜி சிஸ். கொஞ்சம் ரெகுலரா யூடி தாங்களேன்.

நல்ல பழக ஆரம்பிச்சுட்டாங்க வீட்டுல. இவ வீட்டுல ஏதாவது குறுக்க பூராம இருக்கணும்
 
Top