அத்தியாயம்….3
மணிமேகலை சொன்ன … “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்ற அவளின் பேச்சில், அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை விட, ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அவ்வீட்டில் அவள் இது வரை, இது வேண்டும். இது வேண்டாம். என்று சொன்னது கிடையாது. சொல்லும் அளவுக்கு அவளிடமும் இது வரை அவளின் விருப்பத்தை கேட்டதும் கிடையாது.
அதே போல் தான் இந்த திருமண பேச்சும் அவளிடம் கேட்காது, பெரியவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, தானே முன் வந்து எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னதும், அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
யார் என்ன பேசுவது என்று தெரியாது முழித்திருந்தனர். கமலக்கண்ணன் தன் மனைவியின் கை அசைவில் தன் மகளின் திருமண பேச்சை கேட்டவர் தான்.
எப்போதும் போல் அமைதியாக அனைவரின் முகபாவத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு, மகள் பேசும் போது அவள் முகத்தை பார்க்க தவறியதால், தன் மகள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை என்றாலும்,
அங்கு நிலவிய சூழ்நிலையை பார்த்து, ஏதோ இவர்கள் விருப்பத்திற்க்கு எதிராக சொல்லி இருக்கிறாள், தன் மகள் என்று மட்டும் புரிந்தவராய் தான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தவர், தன் மகளின் அருகில் போய் நின்று தன் கை பிடியில் மகளின் கை பற்றியவர், அதில் ஒரு அழுத்தத்தை கொடுத்ததும், தன்னை பார்த்த மகளிடம் கண் மூடி திறந்தவரின் செயல், மணிமேகலைக்கு தைரியமாக இரு. உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது.
இது அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. இதை பார்த்த தெய்வநாயகிக்கு என்ன தோன்றியதோ… எப்போதும் பேசாதவள் பேசியதால், எப்போதும் திக்காத தெய்வநாயகியின் பேச்சு...திக்கி திணறி…
“எ...ன்...ன…? சொ..ன்ன எ..னக்கு பு..ரியல. எ…துக்கு விரு…ப்பம் இல்லே…ன்னு சொ…ன்ன.”
ஒரு சமயம் மணிமேகலை தாங்கள் என்ன பேசுகிறோம் என்று கவனிக்காது, ஏதோ ஒரு நினைப்பில் பதில் அளித்து விட்டாளா…? என்று கொஞ்சம் தடுமாற்றத்தோடு தான் தெய்வநாயகி கேட்டார்.
அப்போதும் அவர் மனதில் ஒது தான் ஓடிக் கொண்டு இருந்தது. ‘ஏதோ நிமைப்பில், ஏதோ அர்த்தம் கொண்டு சொல்லி இருந்தாலுமே… எப்படி விருப்பம் இல்லை என்ற பதில் அவளிடம் இருந்து வரலாம், என்று தான் எண்ண தோன்றியது அவருக்கு.
இப்போது கூட தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி இருக்க மாட்டாள் என்றே நம்பினார். ஆனால் இவன் ஏன் மகள் பக்கத்துல போய் நின்னான். தன் மகனையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே தான் மணிமேகலையிடம் கேட்டார்.
தெய்வநாயகியின் கேள்விக்கு திரும்பவும் நிறுத்தி நிதானமாக… “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்ல அப்பத்தா. நான் மேலே படிக்கனும்.நான் கல்யாணம் ஒரு ஐந்து வருடம் கழிச்சி செஞ்சிக்கிறேன்.”
மணிமேகலை முதலில் சொன்ன போதாவது, கொஞ்சம் பேச்சு தடுமாறி குரல் மெலிந்து தான் கேட்டது. ஆனால் இரண்டாம் முறையாக அவள் அளித்த பதில், சும்மா நறுக்கு தெரித்தார் போல் இருந்தது.
முதன் முதலில் எதிர்த்து பேசும் போது தான், என்ன ஆகுமோ...?ஏது ஆகுமோ…? என்ற பதட்டம், பயம், எல்லாம். பின் இவர்கள் என்னை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில், அடுத்து அடுத்து அவர்கள் பேச தயங்க மாட்டார்கள். அந்த நிலைக்கு தான் மணிமேகலை வந்து விட்டாள்.
மணிமேகலையின் திருமண பேச்சை அப்பத்தா எடுத்ததும், ஏதோ ஒரு தைரியத்தில் … “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.” என்று சொல்லி விட்டவளுக்கு, உள்ளுக்குள் கொஞ்சம் என்ன ரொம்பவே பயம் இருக்க தான் செய்தது.
ஆனால் தான் சொன்னதில் அங்கு இருந்தவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி, ஆச்சரியத்தை பார்த்து, அட இது கூட நல்லா இருக்கே, என்று தான் மணிமேகலை நினைத்தாள்.
அதுவும் தன் அப்பா தன் பக்கத்தில் நின்று அவர் கை அழுத்தத்திலும், அவர் பார்த்த பார்வையிலும், ஏதோ மனதிற்க்குள் ஒரு திடம் உண்டாகியது.
அதன் எதிரொலி தான்...தெய்வநாகியின் கேள்விக்கு எந்த வித தயக்கமும் இல்லாது, தன் விருப்பத்தை சொல்ல வைத்தது.
மணிமேகலையின் இந்த பதிலில்… “என்ன சொன்ன…?என்ன சொன்ன…?விருப்பம் இல்லையா…?” என்று கேட்ட தெய்வநாயகி…
“உனக்கு எங்கு இருந்து இவ்வளவு தைரியம் வந்தது…? உன்னை எல்லாம் குச்சி கட்டுன உடனே, பந்தலும் கட்டி இருக்கனும். ஏதோ வூட்டு ஆம்பிள்ளைங்க சொன்னாங்களேனு பக்கத்து டவூனுக்கு படிக்க அனுப்பிச்சா...நீ என் கிட்டியே வியாக்கியனம் பேசுற…” என்று பேத்தியிடம் எகிறிய தெய்வநாயகி, தன் கணவன் பக்கம் திரும்பியவர்…
“ஏனுங்க முதல்ல அந்த பரந்தாமன் குடும்பத்துக்கு போன போடுங்க. நாளு நல்லா இருந்தா இன்னைக்கே பொண்ணு பார்த்துட்டு போகட்டும்.” என்று சொன்னவற்க்கு, பதிலாய் தன் கணவனிடம் இருந்து எதுவும் வராது போக…
“என்னங்க…” என்று ஏதோ சொல்ல வந்த தெய்வநாயகியை, கை காட்டி எதுவும் பேசாதே என்பது போல் சைகை செய்த சங்கரலிங்கம்...
மணிமேகலையை பார்த்து… “எதுக்கு நீ வேண்டாமுன்னு சொல்ற…?” என்று காரணம் கேட்டார்.
“நான் மேலே படிக்கனும்.” என்று மணிமேகலை எந்த உறவு முறையும் வைத்து அழைக்காது, வெறுமையாக தான் பேசினாள்.
தெய்வநாயகி திட்டவாவது மணிமேகலையிடம் பேசி இருக்கிறாள். அதனால் அவருக்கு பதில் சொல்ல… “சரி அப்பத்தா...இல்ல அப்பத்தா.” என்று பேச உறவு முறைக் கொண்டு அழைத்து இருக்கிறாள்.
ஆனால் சங்கரலிங்கம் தன்னை அழைத்து பேசியது எப்போது…? என்று யோசித்தவளுக்கு அது எப்போது என்று நியாபகத்திலேயே இல்லை. அப்படி பட்ட உறவு முறையில் இருப்பவரை இப்படி தானே அழைக்க முடியும்.
அது என்னவோ சங்கரலிங்கத்திற்க்கு, இன்று தன் பேத்தியிடம் அமைதியாக பேச வேண்டும் என்று நினைத்து பேசினாரா...இல்லை தன் மகன் எப்போதும் யார் முன்நிலையிலும் எதிர் வராது, எதிர்த்து நிற்க்காது, ஒதுங்கி செல்பவன். இன்று தன் மகள் என்று வரும் போது நான் உனக்கு துணையாக இருப்பேன் என்று மணிமேகலையின் பக்கத்தில் சென்று நின்றது அவருக்கு என்ன உணர்த்தியதோ…
நிதானமாகவே… “இந்த கல்யாணத்தால் உன் படிப்பு கெடாது. உன் காலேஜ் இருக்கும் இடம் தான் அவங்க ஊரே...பரந்தாமன் பொண்ணு கேட்கும் போதே நான் மேல படிக்க வைக்கிறேன் என்று சொல்லி தான் கேட்டார்.” என்று பேசிய அய்யனை அவரின் இரு மகன்களும் அதிசயத்து தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களுக்கு தெரிந்து இவர் யாரிடமும் இது போல் மிக பொறுமையாக பேசி அவர்கள் பார்த்தது கிடையாது. அப்படி இருக்க அந்த வீட்டில் இது வரை ஒரு பொருட்டாகவே மதிக்காத மணிமேகலையிடம், தன் அப்பா அமைதியாக பேசியதை வாய் பிளந்து கேட்டுக் கொண்டு இருந்தனர்.
“நான் மேலே படிக்கிறேன் என்று சொன்னது. இப்போ நான் படிக்கும் B.E COMPUTER SCIENCE கிடையாது. அடுத்து நான் படிக்கும் P.G படிப்பை சொல்றேன். அதாவது நான் P.G அமெரிக்கா, இல்லேன்னா ஆஸ்திரேலியாவில் படிக்க விருப்பம்.” என்று சொன்னவள்.
தொடர்ந்து… “அதுக்கு உண்டான பயிற்ச்சி நம் ஊரில் பக்கத்து டவுனிலேயே இருக்கு. இந்த வருஷம் தான் அதுக்கு உண்டான தேர்வு எழுதி வெச்சா நான் இந்த படிப்பு முடிஞ்சதும், அந்த வருடமே நான் அங்கு போய் படிக்கலாம். நான் இந்த மாதம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நினச்சி இருந்தேன். ” என்று அவள் சொன்ன விதத்திலேயே, இந்த எண்ணம் அவளுக்கு இன்று நேற்று வந்தது கிடையாது.
வருட கணக்கில், இதை தான் படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறாள், என்று அங்கு இருந்த அனைவருக்கும் தெரிந்தது.
தெரிந்த விசயம் அங்கு இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள கூடியதாய் இல்லை போல். அதுவும் மணிமேகலையின் இரு சித்தப்பா மார்களுக்கு, ஆண் பிள்ளை தங்கள் மகன்களே இங்கு இருக்கும் சென்னையில் தான் படித்தார்கள். பெண்பிள்ளைக்கு அமெரிக்கா..ஆஸ்திரேலியா…கேட்குதோ என்ற பொறாமையில் கொதித்து இருந்தாலும், வாய் திறக்கவில்லை.
அவர்களுக்கு தெரியும். மணிமேகலை தன் ஆசை கனவு லட்சியம் என்று என்ன தான் சொன்னாலும், தன் அன்னை தெய்வநாயகி இதற்க்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்று.
எதற்க்கு...நாம் கேட்டு நம் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைதியாக அங்கு நடப்பதை பார்க்க தொடங்கினர். இதன் நடுவில் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாது இருந்த கமலக்கண்ணனுக்கு மணிமேகலை தான் படிக்கும் படிப்பை பற்றி சொன்னாள்.
அதை கேட்ட கமலக்கண்ணனுக்கு குழப்பமாக இருந்தது. அவருக்கு வெளி அனுபவம் என்பது கிடையாது. அதோடு அவர் சுயமாய் இது வரை எந்த முடிவும் எடுத்தது கிடையாது என்பதை விட, எடுக்க விட்டது கிடையாது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
மற்றவர்களின் விருப்பத்தின் படியே நடந்துக் கொண்டு வந்தவருக்கு, தன் மகள் விஷயம் என்றதும், நாம் அப்படியே இருக்க கூடாது என்று தன் மகளுக்கு பக்க பலமாய் இருக்க வேண்டும் என்று நினைத்து தான் தன் மகளின் கை பற்றியது.
ஆனால் இந்த வெளிநாட்டு படிப்பு என்று சொன்னதும், அவருமே என்ன பொம்பள பெண்ணை அவ்வளவு தூரம் சென்று படிப்பதா…? இப்படி தான் நினைத்தார் அவர்.
தந்தையான கமலக்கண்ணனுக்கே அவ்வளவு தூரம் செல்வது நல்லதா…?கெட்டதா…?என்று யோசிக்கும் போது. பெண் என்பவள் அடுப்பாங்கரையில் ஆக்கி போடவும், கணவன் சொல்லுக்கு கீழ் பட்டு நடக்கவுமே படைக்கப்பட்டவள் என்று கருத்தில் கொண்டுள்ள தெய்வநாயகி இதற்க்கு எப்படி ஒத்துக் கொள்ளவாள்.
இது வரை வாய் திறவாது ஊமை போல் இருந்தவளுக்கு இப்போது இந்த வாய் எங்கு இருந்து வந்தது. அதுவும் பெரியவங்க பேசும் போது அது என்ன நடுவாப்பல வந்து அவள் விருப்பத்தை சொல்வது என்ற ஆத்திரத்தில், அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தவர், சாப்பிட்ட கை கூட கழுவாது எச்சை கையிலேயே மணிமேகலையின் கூந்தலை பற்றி ஆட்டிய வாறே…
“என்னடி பேச்சு எல்லாம் ஒரு தினுசா இருக்கு. மேல படிக்கனுமா..?.அதுவும் வெளிநாட்டுக்கு போய் படிக்கனுமா...? பணம் என்ன மரத்துலயா காய்க்குது.” என்று வெறி வந்தது போல் கத்திக் கொண்டு இருந்தவரை வீரா வந்து அவர் கை பிடியில் இருந்து மணியின் கூந்தலை விடுவித்து விட்டு…
“என்ன அம்மத்தா…? என்ன இது..?எதுன்னாலும் பேசுங்க. இப்படி எல்லாம் செய்யிறது நல்லாவா இருக்கு.” என்று சொல்லிக் கொண்டே தெய்வநாயகியை கை அலும்பும் இட்த்திற்க்கு கொண்டு சென்றவன் அவர் கை கழுவியதும் அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு…
“எதுன்னாலும் பொறுமையா பேசுங்க.” என்று சொன்னவன் தன் தாத்தாவுக்கு கண் காட்டினான்.
“தெய்வா நான் பேசுறேன்.” என்று தன் கணவர் சொன்னதும், தெய்வநாயகிக்கு வாய் மூடி அமைதி காத்து இருப்பதை தவிர வேறு வழி இல்லாது போய் விட்டது.
பெண்கள் ஆண்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தப்பவருக்கு, அதை நடை முறையிலும் கடைப்பிடித்துக் கொண்டு இருப்பவர் தான் தெய்வநாயகி.
சங்கரலிங்கம் வீட்டு விசயம் என்பது பெண்கள் முடிவு செய்ய வேண்டியது. வீணாக நாம் தலையிட்டு வீட்டில் பிரச்சனை ஏற்படுத்த கூடாது என்று வீட்டு விசயம் எதிலும் அவர் தலையிட மாட்டார்.
அதானால் அந்த வீட்டு ராஜங்கம் மொத்தமும் தெய்வநாயகி வசம் தான்.ஆனால் தான் பேசும் போது… “தெய்வா நீ பேசாதே.” என்று சொன்னால் அடுத்த வார்த்தை தெய்வநாயகியிடம் இருந்து வராது.
அதன் தொட்டு மனதில் பேத்தியின் மீது ஆத்திரம் இருந்தாலும் கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதி காத்தவருக்கு மனது அமைதி காக்க முடியாது போனது.
‘அமெரிக்கா போய் படிக்கனுமா. அதுக்கு எவ்வளவு பணம் ஆகுமுன்னு எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினச்சிட்டாளா…போன வருஷம் என் அண்ணன் பேரன் படிக்க வைக்க அறுபது லட்சம் கொட்டு கொடுத்து விட்டது மட்டும் இல்லாம.
இப்போவும் அப்போ அப்போ பணம் அனுப்பிட்டு தான் இருக்கான். பொட்ட கழுதைக்கு அமெரிக்கா படிப்பு கேட்குதா…?’ என்று தெய்வநாயகி மனதில் தன் பேத்தியை திட்டி தீர்த்துக் கொண்டு இருக்கும் வேளயில்…
சங்கரலிங்கம்… “இது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது.எனக்கு கல்யாணம் இப்போ வேண்டாம் என்று சொன்னா அதுக்கு உன் அப்பனும், ஆத்தாலுமே ஒத்துக்கிட்டா எனக்கு ஒன்னும் இல்ல. வேண்டாம். நான் பரந்தாமன் கிட்ட பேசுறேன்.
இந்த படிப்பு இங்கே இருந்தா போல ஏதாவது படிப்பு இருந்தா படி. அதுவும் இப்போ இருக்க படிப்போடு இரண்டு வருஷம்னா பரவாயில்ல. அதுக்கு மேல எல்லாம் நம்ம சாதி ஜனத்து பொம்பள பெண்ணை கட்டி கொடுக்காது வீட்ல வெச்சிக்கிறது இல்ல.” என்று பொறுமையுடன் சொன்னவரிடம்..
“இல்ல நான் M.S அமெரிக்கா போய் படிக்க தான் ஆசை.” என்று மணிமேகலை அழுத்தம் திருத்தமாய் தன் விருப்பத்தை தன் தாத்தனிடம் சொன்னாள்.
“அடிச் செருப்பால. அய்யன் இவ்வளவு சொல்றப்பல. நீ என்னன்னா நான் சீமையில போய் தான் படிப்பேன்னு நின்னுக்கிட்டு இருக்க. பணம் என்ன மரத்துல காய்க்குதா...இல்ல உன் ஆத்தா சீதனமா கொண்டு வந்தது அள்ள ஆள் இல்லேன்னு நீ அள்ளி சீமையில கொடுக்க நினைக்கிறியா…?” என்று தெய்வநாயகி திட்டியதும் மணிமேகலை அமைதியாகி விட்டாள்.
இது வரை என்ன ஆனாலும் சரி. தன் விருப்பத்தை செய்து முடிக்க என்ன அடி திட்டு வாங்கினாலும் சரி நாம் மேல் படிப்பு படிக்க வெளிநாடு சென்றே ஆகவேண்டும் என்று நினைத்தவள் பணம் விசயத்தை நினைக்க மறந்து விட்டாள்.
அவ்வீட்டில் தன் தந்தைக்கு அனைத்து உரிமை இருந்தும், தான் என்பதை விட தன் அன்னையும் அமைதியாக இருக்க காரணம் தன் தந்தை அவ்வீட்டுக்கு வருமானம் ஈட்டி தராது இருப்பது தான்.
தாத்தாவின் சொத்தை இரு சித்தாப்பாக்களும் இரு மடங்காய் ஆக்கி விட்டனர் என்று அய்யன் சொன்னால் அப்பத்தா என் இரு மருமகள் எடுத்து வந்த சீதனத்தை பார்த்து இந்த ஊரே மூக்கின் மீது விரல் வைத்துக் கொண்டது என்று பெருமை பட்டுக் கொள்வார்.
பின் இருக்காதா...எந்த வயதானாலும் தன் தாய் வீட்டை எப்போதும் விட்டுக் கொடுக்காது பெருமையாக தானே பேசுவார்கள் . தன் வீட்டுக்கு மருமகளாய் வந்த இருமருமகள்களும் தன் அண்ணன் பெத்த மகள்கள் ஆயிற்றே…
இப்படி அய்யன் அப்பத்தாவின் மூலம் தெரிந்துக் கொண்டவளுக்கு, அவளை அறியாது பணம் என்று வரும் போது தன் தேவைக்கு தயங்கி தயங்கி தான் கேட்பாள்.
இப்போது அதே பணத்தை வைத்து மணிமேகலையின் அப்பத்தா பேசவும், அதற்க்கு அடுத்து ஒன்றும் பேச முடியாது அமைதியாகி விட்டாள்.
அதை பார்த்த தெய்வநாயகி… “அது தான் யார் யாரு எதுக்கு ஆசை படனுமோ அதுக்கு தான் ஆசைப்படனும். என் நேரம் நல்ல இட்த்து சம்மந்தம் வந்து இருக்கு ஒழுங்கு மரியாதையா அவனை கட்டிட்டு பொழைக்கிற வழிய பாரு.” என்று சொன்னவர்.
பின் அனைவரையும் பார்த்து… “என்ன மச மசன்னு நின்னுட்டு, அவ எல்லாம் ஒத்துப்பா போய் வேற வேலை பாருங்க.” என்று இதோடு முடிந்தது இந்த விசயம். மணிமேகலைக்கு இந்த சம்மந்தம் முடித்தே தீருவேன் என்பது போல் பேசி முடித்தார்.
“விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணா அப்புறம் பிரச்சனையில் தான் முடியும் அம்மத்தா…” என்று சொன்ன வீரா.
மணிமேகலையை பார்த்து… “எல்லா விசயமும் சேகரிச்சியே, இந்த எஜூகேஷன் லோன்னு ஒன்னு இருக்கே அதை பத்தி ஏதாவது விசாரிச்சி வெச்சியா…?” என்று வீரா தன்னிடம் கேட்டதும் தான் அவளுக்கு அந்த நினைவே வந்தது.
அவளுக்கும் கல்வி கடன் உதவி தொகையை பற்றி தெரியும். ஆனால் வெளிநாட்டு படிப்புக்கு எவ்வளவு கொடுப்பார்கள். அதற்க்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்ற முழுவிவரமும் தெரியாது.
அதோடு அல்லாது அப்பத்தா சொன்ன பணம் என்ற வார்த்தையே அவள் அடுத்து என்ன என்று யோசிக்காது மூளை சண்டி தனம் செய்து அப்படியே நின்று விட்டது.
வீரா இப்படி சொன்னதும் அவனை பார்த்தவளுக்கு அந்த நேரத்திலும் இவன் ஏன் அப்போதையில் இருந்து எனக்கு சாதகமாகவே பேசிட்டு இருக்கான்.
இதில் ஏதாவது உள்குத்து இருக்குமா…? என்று மனது யோசித்தாலும் வாய் தன்னால் அவனுக்கு பதில் சொன்னது.
“எஜூகேஷன் லோன் பத்தி தெரியும். ஆனால் வெளிநாட்டு படிப்புக்கு என்ன என்ன ப்ராஸஸ் அது தான் தெரியாது.”
இத்தனை ஆண்டில் அதே ஊரில் வசிக்கும் அத்தை மகனிடம் இப்போது தான் நேருக்கு நேர் பேசிக் கொள்கிறாள். இவனிடம் பேசவே கூடாது என்ரு தான் அவள் மனதில் வைராக்கியம் வைத்திருந்தாள்.
ஆனால் இந்த வைராக்கியத்தோடு தன் லட்சியமான வெளிநாட்டு வாழ்க்கை என்று வரும் போது, இது போல் ஒரு சிலதை தளர்த்திக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைத்தாள். கூடவே இவன் நமக்கு ஏதாவது உதவி செய்வானா…? என்ற ஒரு ஆசையிலும், மணிமேகலை அவனிடம் பேசினாள்.
“நான் அதுக்கு உதவி செய்கிறேன்.” என்ற வீராவின் பேச்சில், தெய்வநாயகி… “வீரா என்ன நான் என்ன சொன்னா நீ என்ன செய்துட்டு இருக்க.” என்று தன் பேரனை திட்டம் செய்ய பார்த்தவரை…
“தெய்வா படிப்பு பத்தி நமக்கு எதுவும் தெரியாது. தெரிஞ்ச வீரா பேசுறான் விடு.” என்று சொன்ன சங்கரலிங்கம்.
மணிமேகலையிடம்… “நான் உன் விருப்பத்துக்கு படிப்பு படிக்க விடுறேன். நீ என் விருப்பத்துக்கு தான் கல்யாணம் கட்டனும். நான் எதை சொல்றேன்னு தெரியுதா…?” என்ற சங்கரலிங்கத்தின் பேச்சுக்கு, மணிமேகலையின் மனசாட்சி குத்தினாலும், அதை ஓரம் கட்டி விட்டு மணிமேகலை தன் மண்டையை பலமாகவே ஆட்டினாள்.
பின் சங்கரலிங்கம் அந்த வீட்டின் தலைவனாய், தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவர், அங்கு இருக்கும் ஆண்களை பார்த்து…
“பத்திர பதிவுக்கு நேரம் ஆயிடுச்சி.” என்று சொன்னவர் தன் மனைவியை பார்த்து…
“இதோடு இந்த பேச்சை எடுக்க கூடாது.” என்று சொல்லி விட்டே சென்றார்.
எப்போதும் தன் வேலை முடிந்ததும், மேல் மாடியில் இருக்கும் தன் அறைக்குள் தன்னை புகுத்திக் கொள்ளும் மணிமேகலை, இன்று ஏதோ பிரம்மை பிடித்தது போல் அப்படியே நின்று இடத்தை விட்டு அகலாது இருந்தாள்.
அந்த பிரம்மையிலும், நாம் கனவு ஏதாவது காண்கிறோமா…? என்று தன்னையே கிள்ளியும் பார்த்துக் கொண்டாள். அந்த கிள்ளலில் வலித்தும் தான் மேல் படிப்பு பட்டிக்க வெளிநாடு செல்ல வீட்டில் அனுமதி கிடைத்து விட்டதை அவளாள் நம்பவே முடியவில்லை.
அதிலும் தான் மேல் படிப்பு படிக்க அனுமதி வாங்கி கொடுத்த்தில் வீராவின் பங்கு அதிகம் என்பதை அவள் அறிவாள். அதை தான் அவளாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இது எப்படி…?என்று அவள் யோசனையில் மூழ்க. மூழ்கியவளை மீட்டெடுக்கும் விதமாய்…
“எப்போவும் இது போல் தரையிலேயே கண்ணு பதிச்சிட்டு இருக்காதே..அதோடு ஆம்பிள்ளைங்க ஒன்னும் பேயோ பிசாசோ இல்ல. அவங்களை நிமிர்ந்து பார்க்கலாம். வெளிநாடு போய் படிக்க ஆசை பட்டா மட்டும் போதாது. அதுக்கு உண்டான தைரியமும் இருக்கனும். நீ ஏன் ஆண்களை பார்க்க மாட்டேங்குற…” என்று சொல்லி சென்ற வீராவின் முதுகை பார்த்துக் கொண்டு இருந்த மணிமேகலைக்கு, சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது.
மணிமேகலைக்கு தன்னுடைய இந்த சந்தோஷத்தை, யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மூலை வெடித்து விடும் போல் இருக்க...அவளுக்கு இருக்கும் ஒரே தோழியான வசுந்தராவின் வீட்டை நோக்கி ஓடினாள்.
அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த வசுவின் தட்டை பறித்து அதை கீழே வைத்தவள், சாப்பிட்ட கை என்று கூட பாராது, வசுந்தாரவின் கையை பற்றிக் கொண்டு ராட்டிணம் போல் சுற்றியவள்…
“ஏய் ஏய் எனக்கு மயக்கம் வருதுடி. நிறுத்துடி போதும்.” என்று இரண்டு மூன்று தடவை கத்திய பிறகே அவளை விட்ட மணிமேகலை ஆசையோடு தோழியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
பின் இன்று தன் வீட்டில் நடந்ததை வசுவிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வாசு கல்யாணத்திற்க்கு எந்த மறுப்பும் சொல்லாது அமைதியாக இருந்தது மணிமேகலையின் மனதை உறுத்தினாலும் அதை வசுவிடம் சொல்லாது விட்டு விட்டாள்.
அவளுக்கே வீரா பேசாது இருந்து இருந்தால் வாசு தன் எதிர்ப்பை தெரிவித்து இருப்பானோ...இது தான் என்று தெரியாத ஒன்றை வசுவிடம் சொல்லி அவள் மனதை நோகடிக்க அவள் விரும்பவில்லை. அதோடு தன் வாழ்க்கையிலேயே இன்று தான் அவள் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா...அதை தன் தோழியுடன் கொண்டாட நினைத்து அதை விடுத்து அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு தோழியின் முகத்தை பார்த்தாள்.
தான் சொன்னதில் வசுந்தராவின் முகத்தில் மகிழ்ச்சியோடு கூடவே ஒரு குறு குறுப்பும் இருந்தது.
அவளின் முகத்தையே பார்த்திருந்த மணிமேகலை.. “என்னடி என்ன …?” என்று கேட்டதற்க்கு, “ஒன்னும் இல்லடி...உங்க வீட்ல உன்னோட மேல் படிப்புக்கு ஒத்துனது ரொம்ப சந்தோஷம்” என்று சொன்னவள் ஏதோ சொல்லாது விட்டது போல் தெரிந்த்து மணிமேகலைக்கு…
“ஏய் என்ன விசயம் உன் பார்வையே சரியில்லையே…?” என்று மணேகலை மீண்டும் மீண்டும் கேட்டாள்.
“இல்ல ஊரில் இருக்க பசங்க எல்லோரையும் நீ பாக்குற..உன்னை யார் பாக்குறான்னு பாக்காம்ம விட்டுட்டியே...அத நினச்சி தான் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதுடி.” என்று வசுந்தரா சொன்னது மட்டும் அல்லாது, அடக்க மாட்டாது சிரித்தும் விட்டாள்.
“ஏய் சீ லூசு மாதிரி சிரிச்சி தொலையாதே...என்னை யாரு பார்த்தா…?அது முதல்ல சொல்லு.
இது வரை மணிமேகலை தான் பார்க்கும் பைய்யனுங்களுக்கு கூட தெரியாது தான், தன் சைட்டை வைத்திருந்தாள். அதனால் ஒரு பையனும் இவளை தப்பான கண்ணோட்டத்தோடு பார்த்தது கிடையாது.
அதுவும் இல்லாது பெரிய வீட்டு பெண்ணை பார்க்கும் அளவுக்கு அந்த ஊரில் தைரியச்சாலி யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் போது யார் என்னை பார்ப்பது…?அதுவும் எனக்கு தெரியாது என்று நினைத்து கேட்டாள்.
வசுந்தரா தன் சிரிப்பை விடாது… “எல்லாம் உங்க வீரா மச்சான் தான் புள்ள…” என்று சொல்லி விட்டு மீண்டும் தன் சிரிப்பை தொடர்ந்தவளை…
“தோ பாருடி என் மேல ஏதாவது கோபம் இருந்தா இரண்டு அடி கூட அடிச்சிடு. ஆனா இந்த விசயத்தை விளையாட்டுக்கு கூட சொல்லாதே...அவ்வளவு தான் சொல்லுவேன்.”
வசுந்தராவின் பேச்சில் இருந்த சந்தோஷம் பறந்தோட பேசியவளின் கை பற்றிய வசுந்தரா…
“ஏய் இல்லடி நீ சொன்னியே உன் படிப்புக்கு வீரா தான் காரணமுன்னு அது தான்.” என்று இழுத்து நிறுத்தியவளின் பேச்சில்…
“நான் யாரை பாக்குறோன்னா அது இல்ல விசயம். என்னை பாக்குறவன் இந்த ஊரை சேர்ந்தவன் என்ன இந்த நாட்டை சேர்ந்தவனா கூட இருக்க மாட்டேன்.” என்று மணிமேகலை சொல்லு அதே வேளயில்…
கலிபோனியாவில் இரண்டு அடுக்கு, ஸ்வும்மிங் புல் வசதியோடு அமைந்திருந்த அந்த மாளிகையில் தன் சட்டையை டக் செய்து விட்டு, கட்டிய டையை சரி செய்துக் கொண்டு இருந்த நம் ஜான் விக்டர்.
கண்ணாடி முன் அப்படியும் இப்படியும் சுற்றி ஒரு முறை தன்னை சரிப்பார்த்துக் கொண்டவன், தன் சிவந்த நிறத்தில் சர்மம் வரண்டு விடாது இருக்க ஏதோ லோஷனை தடவிக் கொண்டே தன் குறுந்தாடியை நீவி விட்ட வாறே தன்னை முழுவதும் ஒரு முறை மீண்டும் தன் எதிரில் இருக்கும் கண்ணாடியில் தன் முழு உருவத்தை பார்த்தவனின் மனதில் தன்னால் ஒரு பெருமை வந்து ஒட்டிக் கொண்டது.
பின் பெருமை இருக்க தானே செய்யும். கலிபோனியாவில் வெற்றிகரமாய் தொழில் செய்யும் வில்சன் விக்டருக்கும், மலர் விழிக்கும் பிறந்த ஒரே மகன்.
பணத்தில் மட்டும் அல்லாது ஆறடி உயரமும், சிவந்த நிறமும் கொண்டு ஆண் அழகனாய் அமைந்ததால், அந்த நாட்டு பெண்கள் இவன் மீது விழுந்து பழகினாலும், அவர்களை எட்டி நிறுத்தி இன்று வரை சுத்த பிரம்மச்சரிய விரத்தை கடைபிடித்து தன் மனமுன் உடலும் ஒருத்திக்கு மட்டும் தான் என்று நினைக்கும் நேர்மையானவனுக்கு இருக்கும் அந்த நிமிர்வோடு திமிரும் இருக்க, ஒரு வித கர்வத்தோடு தன் குறுந்தாடியை மீண்டும் தடவிக் கொண்டே சாப்பிட வந்து அமர்ந்தான்.
அவன் பக்கத்தில் வந்து அமர்ந்த வில்சன்… “உன் முடிவு இது தானா …?” என்று கேட்டவர் மகனின் அமைதியில் அவன் தன் முடிவில் இருந்து மாற்றிக் கொள்ள மாட்டான் என்று தெரிந்தவராய் அடுத்து எதுவும் பேசாது அமைதியாகி விட்டார்.