அத்தியாயம்….6
அந்த கல்லூரியில் அனைத்து நாட்டு மாணவ மாணவியர்களும் கல்வி கற்க வருவர் என்று தெரியும். தெரிந்தே தான் தன்னை அதற்க்கு தயார் செய்துக் கொண்டு தான் மணிமேகலை கலிபோனியாவில் கல்வி கற்க வந்தது.
ஆனால் மணிமேகலை அந்த வகுப்பறையில் நுழைந்ததும், அங்கு காணப்பட்ட பலதரப்பட்ட முக அமைப்பையும், அவர்கள் உடையில் தெரிந்த கலாச்சாரத்தையும் பார்த்து, ஒரு புது உலகத்திற்க்குள் வந்து விட்டது போல்…மிரண்டு போன மணி சோனாலியை பார்த்தாள்.
சோனாலி மணிமேகலை போல் பயம் கொள்ளாது, ஆர்வத்துடன் அங்கு அமர்ந்து இருப்பவர்களை பார்த்தவள் அங்கு இருந்த காலி இருக்கையை காண்பித்து…
“வா மணி அங்க போய் உட்காரலாம்.” என்று சொன்னதும் தான் மணிமேகலைக்கு…
‘நாம் மட்டும் ஏன் பயப்பட்ட வேண்டும். இங்கு இருப்பவர்கள் அனைவரும் என்னை போல் தானே … அவர்களுக்கும் இது புது இடம். புது சூழல். அவர்கள் எப்படி புதியதாய் கத்துக் கொள்ளும் ஆர்வத்துடன் அமர்ந்து இருக்கிறார்கள்.
நான் மட்டும் ஏன் தொட்டதிற்க்கு எல்லாம் பயப்பட வேண்டும். நானும் எதிலும் குறைந்தவள் இல்லை.’ என்பதை மணிமேகலை தனக்கு தானே சொல்லிக் கொண்டவளாய் சோனாலி பக்கத்தில் அமர்ந்தாள்.
முதல் வகுப்பே ஜான் வகுப்பு போல்..ஒரு சில மாணவிகள் ஆர்வத்துடன் வகுப்பறையின் வாசலை பார்த்திருந்தனர். அவர்களுக்கு இது முதல் வகுப்பு இல்லை போல்…
அந்த ஒரு சில மாணவிகள் எதிர் பார்த்தது போல் ஜான் விக்டர் அந்த வகுப்பறைக்குள் நுழைந்ததும், அனைவரும்… “குட் மார்னிங் சர்.” என்று சொல்லும் போதே பெண்களின் கண்ணில் மின்னல் வந்தது என்றால்… உதடு தன்னால்… “வாவ்…” என்று உச்சரித்தது.
ஆனால் நம் மணிமேகலையோ ஜான் வகுப்பறைக்குள் நுழையும் போது மிக மும்முரமாக… “சாரி நான் க்ளாசுக்கு வரும் போது தான் லாலி சிம் கொடுத்தாங்க...” என்று மணிமேகலை சொன்னதற்க்கு, அழைப்பின் அந்த பக்கம் இருந்தவர் என்ன கேட்டார்களோ…
மணிமேகலையின்… “ஆ லாலி கொடுத்த சிம்மை என் செல்லில் போட்டுட்டேன்.” என்ற பதிலில்...
அந்த பக்கம் திட்டிய திட்டலில்… “சாரி சாரி…இல்ல க்ளாசுக்கு டைமாச்சி அது தான். க்ளாஸ் வந்து உங்களுக்கு நம்பர் கொடுக்கலாம்.” என்ற மணிமேகலையின் எண்ணில் அடங்கா மன்னிப்பில் அந்த பக்கம் இருந்த வீரா… மனம் இறங்கினான் போல்…
“சரி..எனக்கு இனி வாரத்துக்கு ஒரு தடவையாவது போன் போடு. வீட்டுக்கு தினம் பேசு.” என்ற அதிகாரத்தோடு அந்த பக்கம் கைய் பேசி அணைத்த பின் தான் மணிமேகலைக்கு அப்பாடா...என்று இருந்தது.
‘இந்த வட்டிக்காரனுக்கு கோபம் ரொம்ப தான் வருது.வட்டிக்காரன் வெளிநாட்டு பறவையிடம் தினம் பேசுவானோ...அப்படி பேசும் போது தான் இந்த பறவை என் செல் நம்பர் கொடுத்து இருக்குமோ…” என்று மணிமேகலை மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள்.
அது அவள் வகுப்பறைக்குள் நுழையும் போது, பக்கத்தில் அமர்ந்தவர்களிம் பேசிக் கொண்டு இருந்ததால், அந்த இடம் ஏதோ ஒரு சின்ன சின்ன சத்தத்தை எழுப்பிக் கொண்டு இருந்தது.
ஆனால் இப்போது என்ன ரொம்ப அமைதியா இருக்கு...என்று நினைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தவளுக்கு, தன்னையே தன்னை மட்டுமே உற்று பார்த்துக் கொண்டு இருந்த ஒரு வெளிநாட்டுக்காரனை பார்த்ததும்…
‘இவன் ஏன் நம்மை முறைக்கிறான்…?” என்று தான் நினைத்தாளே...ஒழிய. அவன் தான் தன் ஆசிரியர் என்று நினைக்காது மட்டும் அல்லாது தன் ஊரில் பால்காரனில் இருந்து, டீக்காரன் வரை சைட்டோ சைட் அடித்துக் கொண்டு இருந்த மணிமேகலைக்கு ஜான் விக்டரின் அழகோ...ஆளுமையோ...கண்ணில் படாது ஏன் நம்மை முறைக்கிறான் என்ற எண்ணத்தோடு மட்டுமே நினைத்து தன் முதல் பார்வையை ஜான் விக்டரை பார்த்து வீசினாள்.
****************************************************
ஜான் விக்டர் தன் அறை நுழைவாயில் நின்றுக் கொண்டு தன்னையே தன் தந்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார், என்று கூட உணராது விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜான் விக்டர்.
தன் மகன் தன்னை கவனிப்பான் என்று கை கட்டி கதவு மீது சாய்ந்து நின்றுக் கொண்டு இருந்த வில்சன் விக்டருக்கு, நேரம் தான் சென்றதே ஒழிய...மகன் தான் அவரை கவனிக்கவில்லை.
பின் வில்சன் விக்டரே… “ஜான்...ஜான்…” என்று இரண்டு முறை அழைத்தும் தன்னை பார்க்காது, ஏதோ யோசனையில் இருந்த மகன் அருகில் சென்ற வில்சன் விக்டர்…
மகனின் கை தொட்டு … “ஜான்…” என்று அழைத்ததும் தான், அவசரமாய் எழுந்து அமர்ந்தான்.
“டாட்...” என்று அழைத்த ஜான், தந்தையை என்ன…? என்பது போல் பார்த்தான்.
“அதே தான் என்ன…?ஜான். ஏதாவது பிரச்சனையா…?” என்று மகனின் தெளிவில்லாத முகத்தை பார்த்து கேட்டான்.
“ஐம் ஆல்ரைட் டாட்.” என்று தன் முகத்தை சாதரணமாக மாற்ற முயன்ற வாறே தன் தந்தையிடம் பேசினான்.
“நோ..நோ...ஏதோ ப்ராப்ளம் இருக்கு. டாட் கிட்ட சொல்லனும் என்று நினச்சா சொல்.ஆ சொல்ல கூடிய விசயமா இருந்தா மட்டும்.” என்று வில்சன் விக்டர் சொல்லி விட்டு, அந்த அறையை விட்டு போக பார்த்தவரின் கை பிடித்து தடுத்து நிறுத்தினான் ஜான் விக்டர்.
தன் மகன் பிடித்த கையையும் ஜானையும் மாறி மாறி பார்த்த வில்சன், ஒன்றும் சொல்லாது அமைதியா இருந்தார். தன் மகன் தன்னிடம் பேச தடுமாறுகிறான். அதுவும் முதன் முதலாய்..
எது என்றாலும், இது தான் எனக்கு பிடிக்கிறது. இது தான் செய்வேன் என்று ஆணித்தரமாக சொல்பவனுக்குள், ஏன் இந்த தடுமாற்றம் என்று வில்சன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே…
“டாட் நான் அழகா தானே இருக்கேன்.” என்று கேட்ட ஜான் விக்டர். பின் அவனே… “அழகுன்னா சும்மா இல்ல..எல்லோரும் பார்க்கும் படியா ஹன்சமா தானே இருக்கேன்.” என்று சம்மந்தம் இல்லாது கேள்வி கேட்ட மகனை குழப்பத்துடன் பார்த்தார் வில்சன் விக்டர்.
வில்சன் விக்டருக்கு குழப்பம் இருந்தாலும், தன் மகனுக்கு பதிலாய்… “நீ ஹான்சம் என்று நான் சொல்லி தான் உனக்கு தெரியுமா...? நீ படிக்கும் போதே பெண்கள் கிட்ட இருந்து ஏகாப்பட்ட டேட்டிங்கு அழைப்பு வந்ததேடா...நீ தான் எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணிட்ட…” என்று தந்தை சொன்னதும், அவர் கை பற்றிக் கொண்ட ஜான் விக்டர்…
“அதே தான் டாட். அதே தான். படிக்கும் போது மட்டும் இல்ல டாட். இப்போ நான் காலேஜ் போற க்ளாஸ் மொத்த பொண்ணுங்களும் என்னை பார்ப்பாங்க. அவங்க பார்வையே சொல்லும், நான் ரொம்ப அழகா இருக்கேன்னு.” என்று ஜானின் பேச்சில் இன்னும் குழம்பி தான் போனார் வில்சன் விக்டர்.
“அதான் நீயே சொல்றியே பெண்கள் எல்லோரும் உன்னையே பார்க்குறாங்கன்னு…?அப்புறம் என்ன கேள்வி நீ அழகா இருக்கியான்னு…”
தன் மலர் கீழே சாப்பிடாது தங்களுக்காக காத்துக் கொண்டு இருப்பாள். மனைவியை அதிக நேரம் காத்திருக்க வைக்கிறோமே என்ற ஆதாங்கத்தில் தன் மகனிடம் பேசினார்.
“ஆனா அவ பார்க்களையே டாட்.” என்ற ஜானின் பேச்சில், தன் மனைவி கீழே சாப்பிடாது காத்திருப்பாளே என்று அவர் எண்ணம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்த மனைவி மறந்து போய்...தன் மகன் முகத்தையே கூர்ந்து பார்த்தவர்…
“அந்த பெண்ணை உனக்கு பிடிச்சி இருக்கா ஜான்…?” என்ற வில்சன் விக்டரின் கேள்விக்கு…
“தெரியல டாட். பட் அந்த பெண் பாக்க என் அம்மா போல் இருக்காங்க.” என்ற மகனின் பேச்சை… “என் மனைவி.” என்று தன் உரிமையை நிலை நாட்டினார் வில்சன் விக்டர்.
இது எப்போதும் நடப்பது தான். ஜான் விக்டர் மலரை என் அம்மா என்னும் போது எல்லாம், வில்சன் விக்டர்… “என் மனைவி ஆன பின் தான் அவள் உனக்கு அம்மாவா ஆனா.”
வில்சன் விக்டர் எப்போதும் எந்த நிலையிலும் தன் மனைவி மீது இருக்கும் உரிமையை விட்டு கொடுக்க மாட்டார். எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலுமே...அதே போல் தான் ஜான் விக்டரும்…
ஒரு பெண்ணுக்கு கணவர் உயர்ந்தவனா...மகன் உரிமையானவனா… என்று ஒரு பட்டி மன்றம் நடப்பது போல் தான் தந்தையிடம் வாதாடுவான்.
அதே போல் இப்போதும் தன் மகனிடம் இருந்து அவனின் வாத திறமையை எதிர் பார்த்தார்.
ஆனால் அவர் மகனோ அவர் எண்ணத்தை பொய்யாகும் வகையாக, அவர் நினைத்ததிற்க்கு எதிர் பதமாய்…
“ஓகே… ஒகே… உங்க மனைவியை நினைவூட்டினாள் அந்த பெண். போதுமா….” என்ற மகனின் பேச்சில் அனுபவம் வாய்ந்தவருக்கு தெரிந்து விட்டது, முதல் பார்வையிலேயே அந்த பெண் தன் மகனை வீழ்த்தி விட்டாள் என்று.
அதனால் அப்பெண்ணை அறியும் ஆவளில்… “அந்த பெண் யார் ஜான்…? எங்க ஹான்சம் மகனை கூட சட்டை செய்யாத அளவுக்கு அழகா…? என்று கேட்ட வில்சன் விக்டர்.
தொடர்ந்து… “உன் கூட ஒர்க் பண்றாளா…?” என்ற தந்தையின் கேள்வியில்..
கொஞ்சம் தயங்கி தயங்கி தான்… “ஸ்டுடண்டு டாட்.” என்று மகன் தந்த தகவலில், அந்த தந்தையும் கொஞ்சம் யோசித்தார் தான்.
தன் மகன் முகத்தை பார்க்கும் போது அவன் முகத்திலும், அதே சிந்தனை சாயல் தெரிந்தது. பின் வில்சன் விக்டர் என்ன நினைத்தாரோ…
“காதலுக்கு ஜாதி இல்லை. மதம் இல்லை. தேசம் இல்லை என்று சொல்றாங்க. அப்போ காதல் ஒன்று மனதில் எழுந்தா...அதாவது உண்மையான காதல் மனதில் தோன்றினா… எதுவும் தப்பு இல்ல ஜான்.”
தந்தையின் பேச்சில் … “நான் அதை பற்றி யோசிக்கல டாட். அவ ஏன் என்னை ஆர்வமா பார்க்கல…” என்ற மகனின் கேள்வியில்..
“ஜான் உனக்கு அந்த பெண்ணை பிடிச்சி இருக்கா…?” என்று முதல் கேட்ட கேள்வியையே வில்சன் விக்டர் கேட்டார்.
“ம் பிடிச்சி இருக்கு. அதான் நான் பார்த்தேன். ஆனா அவ என்னை பார்க்கலை… நான் வந்தது கூட தெரியாது போனில் பேசிட்டு இருந்தா…” என்ற மகனின் பேச்சி தந்தைக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
ஒரே மகன் பிறக்கும் போதே செல்வ நிலையில் பிறந்தவன். எப்போதும் எங்கும் அவன் தான் முதன்மையில் இருப்பவன். இருந்து ஆக வேண்டும் என்ற எண்ணமும் தன் மகனுக்கு இருக்கிறது என்று ஒரு தந்தையாய் தன் மகனை பற்றி தெரிந்து வைத்திருந்தார் வில்சன் விக்டர்.
ஆனால் இப்போதும் ஒரு பெண் மனதுக்கு பிடித்த பெண்ணை பற்றி பேசும் போதும் மகனின் இந்த பேச்சு...அவருக்கு பிடித்தமானதாய் இல்லை.
“ஜான் பிடித்த பெண்ணுக்கு நம்மை பிடிக்குமா என்று தான் தெரியனுமே தவிர... பிடிச்சி தான் ஆகனும் என்று எந்த வித கட்டாயமும் இல்லை. அதுவும் இந்த பெண் தான் உனக்கு எல்லாம் என்ற அந்த எண்ணம் உனக்கு வந்தா...முதல்ல இது போல் பேசுறது என்ன… மனசுலேயும் நினைக்க கூடாது.” என்று சொன்னவரின் பேச்சில்…
“என்னது அவளுக்கு என்னை பிடிக்காம போகுமா…? அது எப்படி பிடிக்காதுன்னு பார்க்குறேன்.” எப்போதும் இருக்கும் அந்த திமிர் தனம், ஜான் விக்டரை இவ்வாறு பேச வைத்தது.
வில்சன் விக்டருக்கு மகனின் இந்த போக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஒரு தந்தையாய் தன் மகன் ஆசைப்பட்ட பெண்ணுக்கு இவனை பிடிக்க வேண்டும் என்று கடவுளுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.
தான் வளர்ந்த நாட்டில், இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுகள் எல்லாம் இல்லை என்ற போதும்… தங்கள் காதல் வாழ்க்கையை பார்த்து அது போல் அவன் வாழ நினைக்கிறான் என்று ஒரு மகனை பற்றி அனைத்தும் தெரிந்தவராய் இருந்தவருக்கு…
அதனால் தான் அந்த பெண்ணை பற்றி மகன் சொன்ன… “அந்த பெண் அம்மா போல் இருக்கா…” என்ற வார்த்தையில் என்னில் அவனாகவும், அந்த பெண்ணை தாயாகவும் வைத்து பார்க்கிறான் என்பதை அறிந்துக் கொண்டவருக்கு, கூடுதலாய் காதலில் இந்த தான் என்ற கர்வம் இருக்க கூடாது என்ற எண்ணமும் வந்தது.
இருந்தும் இதை பற்றி தன் மகனிடம் பேசவில்லை. தன் மகனிடம் இதை பேசினாலும் கேட்க கூடியவன் கிடையாது என்பதை நன்கு அறிந்தவராய்…
“கடவுளிடமே என் மகன் ஆசைப்பட்ட பெண்ணுக்கும் என் மகனை பிடித்து விட வேண்டும்.” என்று வேண்டுதல் வைத்தார்.
“அம்மா நமக்காக சாப்பிடாம காத்திருப்பா வா... “ தான் எதற்க்கு வந்தோமோ அதை சொன்னார்.
“டாட் எனக்கு பசிக்கல. நீங்க போய் சாப்பிடுங்க.” என்ற மகனிடன் பேச்சிக்கு… “சரி.” என்று தான் அந்த தந்தையால் சொல்ல முடிந்தது.
சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதுமே மகன் விருப்பம் தான். மலர் விழியால் கூட அவனை சாப்பிட வைக்க முடியாது என்று தெரிந்தவராய்…
கீழே சென்று தன் மனைவியிடம்… “அவன் பிரண்ஸ் கூட சாப்பிட்டு தான் வந்தானாம் மலர்.” என்ற சொல்லோடு தனக்கும் தன் மனைவிக்கும் சாப்பிடும் மேசையில் தட்டை வைக்க மலரோ இருவருக்கும் அதில் உணவை இட்ட வாறே…
“அவன் சாப்பிட்டான்னா நீங்க உடனே வர வேண்டியது தானே...நேரம் கழிச்சி சாப்பிட கூடாதுன்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.”
சிறு குழந்தையை திட்டம் செய்வது போல், வளர்ந்த அந்த தொழில் அதிபரை கண்டித்துக் கொண்டு இருந்தால் மலர்விழி.
தன் மனைவி தன்னை சிறு பிள்ளை போல் நடத்துக்கிறார் என்று என்னாது, தன் உடல் நலம் பேணும் மனைவி மீது காதல் ஊற்று எடுக்க…
“மலர் நான் உடம்ப பார்த்துப்பேன்டா...அதுவும் என் மனைவி இவ்வளவு இளமையா இருக்கும் போது...அந்த அளவுக்கு இளமையா நான் இல்லேன்னாலும், ஏதோ மேனஜ் செய்யும் அளவுக்காவது நான் இருக்க வேண்டாமா… அதுவும் வயசு ஏற ஏற இன்னும் அழகு கூடிட்டு போகும் மனைவியை சைட் அடிக்க வேண்டும் என்பதற்க்காவது, நான் என் உடம்பை நல்லா பார்த்துப்பேன் செல்லம்.” என்று கீழ் தளத்தில் வில்சன் விக்டர் தன் மனைவியை கொஞ்சிக் கொண்டு இருக்கும் வேளயில்…
முதல் தளத்தில் தன் அறையில் கட்டில் மேல் கண் மூடி படுத்துக் கொண்டு இருந்த ஜான் விக்டர்… தான் அவளிடம் பேசிய பேச்சை மனத்திரையில் கொண்டு வந்தான்.
ஜான் விக்டர் தான் வகுப்பு எடுக்கும் அந்த அறைக்குள் நுழையும் போதே, கீழ் குனிந்த வாறு பேசிக் கொண்டு இருந்த மணிமேகலையின் நீள முடியே அவன் கவனத்தை ஈர்க்க போதுமானதாய் இருந்தது.
அனைவரும் தன்னை பார்க்க, அவன் பார்வை மட்டும் அவளிள் மட்டுமே நிலைத்து நின்றது.
பின் அவன் கவனித்ததில் அவள் பேசியில் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்ற தெரிந்த கணமே...யாருடன் இருக்கும். அதுவும் ஒருவன் நுழைவதை கூட கவனிக்காத அளவுக்கு முக்கியமானவர்கள் யார்…?
இதை எல்லாம் ஜான் விக்டர் நினைக்கும் போது, மணிமேகலையின் முகம் கூட அவன் ஒழுங்காக பார்க்கவில்லை. பக்க வாட்டில் சரிந்து விழுந்த அவளின் முடியின் நீளத்தையும், குனிந்து இருந்து பேசியில் பேசியதால், நெற்றியை மட்டுமே பார்த்திருந்தவன் அவள் பேசியில் பேசி முடித்து விட்டு நிமிர்ந்து காட்டிய அவள் முகத்தை பார்த்ததும்…
‘எந்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ… என்று எண்ணும் அளவுக்கு, அவள் கண்ணில் தீட்டி இருந்த அந்த கண்மையில் இருந்து, அவள் மூக்கில் இடம் பெற்று இருந்த அந்த மூக்குத்தி தொடங்கி… நெத்தியில் நடுவில் ஸ்டிக்கர் பொட்டும். பொட்டுக்கு மேல் இடம் பெற்றிருந்த திருநீறும்...பொட்டுக்கு கீழ் இடம் பெற்றிருந்த குங்குமமும்…. கழுத்துக்கு கீழ் அவன் பார்வை போகும் முன்னே அவள் தன் முகத்தை பார்த்ததும்…
அவள் தன் முகத்தை நன்றாக பார்க்க வேண்டும் என்று நினைத்து தான்… “என்ன போனில் பேசிட்டியா…?” என்று கேட்டான்.
தன்னை பார்க்கும் பெண்கள் ஒரு நிமிடம் தன் கண்ணை விழி விரித்து பார்த்து தான் செல்வர். அந்த மைய்யிட்ட கண்கள் அவ்வாறு தன்னை பார்க்க வேண்டும் என்று கருதியே...அவன் கேள்வி கேட்டது…
ஆனால் அதற்க்கு எதிர்வினை தான் மணிமேகலையிடம் இருந்து அவன் எதிர்ப்பாக்காது தன்னை ஆர்வத்தோடு விழிவிரித்து பார்ப்பதற்க்கு பதில்…
அவள் விழி சுருக்கி யோசனையுடன் தன்னை பார்த்த அந்த பார்வையில், லேசாக அவன் கர்வம் கொஞ்சம் அசைத்து பார்த்தது.
பின் தானும் அவளை… அமரும் மாறு பணித்தவன்… “புது மாணவி.. மாணவர்கள் உங்கல அறிமுகப்படுத்திக்கோங்க…” என்று ஜான் விக்டர் சொன்னதும்…
ஒருவர் பின் ஒருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். யாரின் பெயரும் அவன் மனதில் பதியவில்லை.
அப்பெண் நீள முடியும்...நீல சுடியும் அப்பெண்ணின் பெயரை கேட்க ஆவளோடு காத்துக் கொண்டு இருந்தவன்…
அவள் எழுந்து நிற்கவும்...உடல் பர பரத்தது தான். ஆனால் அதை ஒரு துளியும் காட்டிக் கொள்ளாது. நின்றவளை பார்த்தான்.
மணிமேகலை எழுந்து நிற்க்கும் போது அவள் கண் முன், லாலி கையில் வைத்திருந்த தன் பெயர் பலகை நியாபகத்திற்க்கு வந்தது.
கூடவே சோனாலி சொன்ன நீ நீயாக இரு என்ற வார்த்தை மனதில் தோன்றியதும் தன்னால்…. “என் பெயர் க. மணிமேகலை.” தூய தமிழில் சொன்னாள். ஜான் விக்டருக்கு தமிழ் தெரியும்.
அது என்னவோ ஜான் விக்டர் அம்மா மலர் விழிக்கு தமிழ் மீது தீராத காதல். வில்சன் விக்டருக்கு மலர் மீது தீராத காதல். அதன் எதிரொலி எப்போதும் வீட்டில் தமிழ் தான் பேசுவது.
அதனால் ஜான் விக்டருக்கு, தமிழ் நன்றாகவே தெரியும். இருந்தும் அவள் பேசிய இந்த தூய தமிழ்...இவளுக்கு தமிழ் பிடிக்குமோ...அப்போ இந்தியாவையும் பிடிக்கும் தானே...இங்கயே இருக்க விரும்ப மாட்டாளா…?
அவள் தன்னை ஆர்வமாக பார்க்கவில்லை. மேலும் அனைவரும் ஆங்கிலத்தில் தங்களை அறிமுகப்படுத்த இவள் மட்டும் தமிழில்.. நிரந்தரமாய் இங்கு இருக்க பிடிக்காதோ… தன் படுக்கையில் கண் மூடி படுத்திருந்தவன் மனது முழுவதும் இதுவே ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது.
****************************************************
இந்தியாவில்…
சங்கரி வீராவின் அம்மா அவன் தட்டில் உணவை பரிமாறிய வாறே… “வீரா நீ மணிக்கிட்ட ஊருக்கு போகும் முன்னவாவது உன் விருப்பத்தை சொல்லி இருக்கலாம்.” என்று தன் ஆதாங்கத்தை தன் மகனிடம் சொன்னவர். இதை எத்தனை முறை தன் மகனிடம் சொல்கிறார் என்று அவருக்கே தெரியாது.
சங்கரிக்கு என்னவோ மணிமேகலையை அவ்வளது தூரம் படிக்க வைக்க விரும்பவில்லை. அவள் தன் அண்ணா பெண் மட்டுமாக இருந்தால், அவர் இவ்வாறு கருதி இருக்க மாட்டார்.
ஆனால் தன் மகனுக்கு பிடித்தமான பெண்ணாகவும், அண்ணன் மகள் இருந்து விட்டமையாலும்...இப்போது தன் மகனின் வயது இருபத்தியெட்டு முடிந்து இருபத்தி ஒன்பதில் அடுத்த மாதம் அடி எடுத்து வைக்க காத்துக் கொண்டு இருக்கும் வேளயில்…
இன்னும் தன் மகனுடைய திருமணம் காண, இரண்டு வருடம் காத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கவலை ஒரு பக்கம் என்றால், விசேஷத்திற்க்கு போகும் இடம் எல்லாம்…
“என்ன சங்கரி உன் மகனோட சின்ன பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தையும் பிறந்துடுச்சி...இன்னும் நீ பெண்ணே பாக்க ஆராம்பிக்கல போல…” என்று கேட்டால் பரவாயில்லை…
கூடுதலாக… “என்ன உன் மவனை அடுத்தவளுக்கு விட்டு கொடுக்க மனம் இல்லையா…?” தன்னை வில்லி மாமியார் போல் பேசியதை கேட்க கேட்க அவர்கள் மீது வரும் கோபத்தோடு தன் மகன் மீது தான் அதிகம் கோபம் வந்தது.
தன் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும்… உன் திருமணத்தை மணிமேகலையோடு முடித்து கொடுத்து விடுவேன் என்று சங்கரி சொன்னதற்க்கு…
வீரா சொன்ன… “அம்மா என்னை அவங்க சொன்னாங்க. இவங்க சொன்னாங்கன்னு எல்லாம் கட்ட கூடாது. அவள் மனசு சொல்லி என்னை கட்டனும்.” என்று வசனம் பேசும் மகனிடம்…
“சரிடா அவ மனசு என்னத்தை சொல்றது அதையாவது கேட்டு சொல்லுடான்னா…”
“அதற்க்கு இது நேரம் இல்லை.” என்கிறான்.
தன் ஆதாங்கத்தை சாப்பாடு பரிமாறிக் கொண்டு தீர்த்து விட்டு செல்பவருக்கு, எந்த பதிலும் சொல்லாது தன் அறைக்கு சென்ற வீராவுக்கு அங்கு இருந்த தன் உடற்பயிற்ச்சி செய்யும் கருவியை பார்த்ததும் வீராவின் முகத்தில் தன்னால் புன்னகை வந்தது.
பத்து வருடம் முன்...அனைவரும் ஒரே வீட்டில் தான் இருந்தார்கள். மூன்று மாமன் அத்தைகள் அத்தை பிள்ளைகள் என்று இருந்த போதும், இவன் அனைவரிடமும் அளவோடு தான் பேசுவான்.
அதே போல் தான் அத்தை மகன் இருவரும் கேட்டால் பதில் என்ற முறையில் மட்டும் தான் பேச்சு இருக்கும். ஆனால் மணிமேகலை…
அவளை நினைக்கும் போதே அவன் உதட்டில் தழுவிய சிறிய புன்னகை பெரிதாக விரிந்தது. வீரா அப்போது தன் முதல் வருட கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த சமயம் தன் பரந்த தோள்களை பார்த்து உடன் படிக்கும் பசங்க…
“பெண்களுக்கு இது போல் ஷேல்டர் ப்ராடா இருந்தா தான் பிடிக்கும். உன்னை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் பார்.” என்ற பேச்சில் அந்த வயதிற்க்கு உறிய ஒரு கிளர்ச்சி...ஆர்வம்… ஏதோ ஒன்று தன் உடலை இன்னும் பேணுவதில் வீராவுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அதன் விளைவு சென்னையில் அதற்க்கு என்று இருக்கும் உடல் பயிற்ச்சி மைய்யத்தில் தன் உடலுக்கு மேலும் வலுக்கூட்ட தன் பயிற்ச்சியை செய்பவன்..
தன் ஊரில் தன் வீட்டிலேயே அதற்க்கு உண்டான கருவியை வாங்கி உடல் பயிற்ச்சி செய்வான்…
சில சமயம் மொட்டை மாடியில் உடல் பயிற்ச்சி செய்யும் போது, பத்து வயதான மணிமேகலை எப்போதும் தன்னை “அத்தான்.. அத்தான்…” என்று சுற்றி வருபவள் அவனின் இந்த உடல் வளர்ச்சியை பார்த்து..
“எப்படி அத்தான் இங்கு எல்லாம் இப்படி வீங்கு போய் இருக்கு…”
ஆசையோடு தன் ஹாம்சை பிடித்து பார்த்து மகிழ்ந்தவளுக்கு, மேலும் தன் உடல் வளர்ச்சியை காட்ட எண்ணி…
தன் மார்பின் பகுதியில் தசை பிண்டங்களை கொண்டு வந்து சேர்த்து அதை அசைத்து அசைத்து காட்டவும், அதை தொட்டு தொட்டு பார்த்து…
“அத்தான் நல்லா இருக்கு அத்தான்.” அந்த சிறுபெண்ணின் இந்த ஆச்சரியம் அவனுக்கு ஒரு பெருமையை கூட்டியது.
இன்னும் இன்னும் என்று… தன் இருகையையும் மடக்கி தன் காதை தொடும் படி செய்து மணிமேகலை ஊஞ்சாடுவற்க்கு ஏதுவாய் வழி வகுத்து…
“இதில் நீ தொங்கேன்…” என்று சொல்லி அவளை ஊஞ்சல் ஆட்டுவான்.
ஒரு சில பயிற்ச்சிக்கு வெயிட்டுக்கு பதிலாய் அவளை உபயோகிப்பான். அதாவது அவன் மல்லாக்காக படுத்துக் கொண்டு, தன் இரு கையையும் தூக்கி அவளை அதில் பிடித்து கொண்டு இருகையையும் கீழே விடாது பயிற்ச்சி செய்வான். அவன் அவ்வாறு செய்யும் போது அதுவும் தன் கைய்யோடு அவளையும் தன் முன் கொண்டு வந்து பின் மேல் தூக்கி என்று செய்யும் போது அவளுக்கு அவ்வளவு குஷியாக இருக்கும்.
அதனால் அவன் எப்போது ஊருக்கு வந்தாலும், அவனுக்கு முன் இவள் எழுந்து அவனிடம்… “அத்தான் எப்போ எக்ஸைஸ் செய்வீங்க…?”ன்று கேட்டுக் கொண்டே வீராவின் பின்னே சுற்றி திரிவாள்.
வீராவும் தன் அறையில் பயிற்ச்சி செய்யாது மொட்டை மாடிக்கு வந்து உடற்பயிற்ச்சி செய்வபன் மறக்காது மணிமேகையையும் அழைப்பான்.
அப்போது மணிமேகலைக்கு பன்னிரெண்டு வயது. வீராவுக்கு பத்தொன்பது வயது. வீரா மணி மேகலையை குழந்தையாய் குழந்தையாக மட்டுமே பார்த்த சமயம்.